வெங்கனூர் ஸ்ரீ சமுத்திரத்து அம்மன் கோவில் (சமுத்ர கன்னி அம்மன்)

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் இயற்கை எழிலில் அமைந்துள்ள சமுத்திரத்து (சமுத்ர கன்னி) அம்மன் கோவிலில், சப்த கன்னியர் திருவுருவக் கற்கள், பாப்பாத்தி அம்மன் திரு உருவங்கள், மதுரை வீரன் உருவங்கள் உள்ளன. சமுத்திர அம்மன் என்பது நீரில் வந்த தெய்வம் என்பது இதனை வழிபடும் மக்களின் கருத்தாக உள்ளது.  இதனை கடல் தெய்வம் என்றும், கடலின் மூலம் செல்வம் பெறுவதால் இதனை இலட்சுமி (கடலோன் என்ற வருணனின் மகள்) எனவும் கூறுகின்றனர். இக்கோவிலில் வழிபடும் மக்களின் முன்னோர்கள் தமிழக வணிகத்திலும், கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள். எனவே, வணிகக் குழுவோடு தொடர்புடைய இக்கோவிலில் அமைந்துள்ள, இந்த சமுத்திர கன்னி அம்மனின் தொன்மம், சங்க இலக்கியம் கூறும் கடல் தெய்வம் சிலப்பதிகார கால  மணிமேகலையோடு தொடர்புடையதாக இருக்கலாம். இந்தத் தெய்வம் ‘சமுத்திர மணிமேகலை’ என்றும் கூறப்படும்.

இக்கோவில் பற்றி மேலும் தகவல் தெரிவிக்க அழைக்கவும்: +91-9786068908

மணிமேகலை:

மணிமேகலை காப்பியத்தில் கடலில் வணிகம் செய்ய சென்ற கோவலனின் முன்னோர் ஒருவரை இத்தெய்வம் காத்ததால் தான் கோவலனின் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரான மணிமேகலை எனும் பெயர் சூட்டபட்டது.

இதனை பற்றி தமிழ் இணைய கல்வி கழத்தில் உள்ள கட்டுரை பின்வருமாறு.

கடற்காவல் தெய்வம் மணிமேகலை.

சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப்பற்றித் ‘தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.

இந்த மணிமேகலையைக் கதைத்தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச்சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் ‘மணிமேகலை’ என்பது பெயர். இந்த நூலினைப்பற்றித் ‘தமிழ்ப்பௌத்த நூல்கள்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். *

இங்கு ‘மணிமேகலை’ என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி ஆராய்வோம். இந்தத் தெய்வம் ‘சமுத்திர மணிமேகலை’ என்றும் கூறப்படும். ‘முது மணிமேகலை’ என்றும் கூறுவர். இது பௌத்தர்களுக்குரிய சிறு தெய்வங்களில் ஒன்று. இதன் வரலாறு வருமாறு :

பௌத்தர்களுக்குரிய ஆறு தெய்வலோகங்களுள் ‘மகாராஜிக லோகம்’ என்பது ஒன்று. இந்த உலகத்தின் குணதிசையைத் ‘திருதராட்டிரர்’ என்பவரும், குடதிசையை ‘விரூபாக்ஷர்’ என்பவரும், தென்றிசையை ‘விரூளாக்ஷர்’ என்பவரும், வடதிசையை ‘வைசிரணர்’ என்பவரும் ஆட்சி செய்துவருகின்றார்கள். இவர்களுக்குச் ‘சாதுர்மகாராஜிகர்’ என்பது பெயர். துடிதலோகத்தில் வீற்றிருக்கும் போதிசத்வர் மாயாதேவியின் திருவயிற்றில் கருத்தரித்து மண்ணுலகிற் பிறந்து வாழ்ந்து இறுதியில் நிர்வாணம் அடைகின்ற வரையில், அவருக்கு யாதொரு இடையூறும் நேரிடாவண்ணம் காப்பதாக மேற்சொன்ன நான்கு தெய்வ அரசர்களும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அன்றியும், பௌத்த தர்மத்தைப் பின்பற்றியொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர் முதலியவரை வழிபட்டொழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின், அவற்றினின்று அன்னவரைக் காப்பாற்றவும் இவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்கே சிறுதெய்வங்களை இருக்கச்செய்து, நல்லோருக்கு நேரிடும் துன்பத்தைத் தீர்க்கும்படி அச்சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு இருத்தப்பட்ட தெய்வங்களில் மணிமேகலையும் ஒன்று. கடலில் கப்பல் யாத்திரை செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், அன்னவரின் துயர்தீர்த்து உதவி செய்வது மணிமேகலைத் தெய்வத்தின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும்.

இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட மணிமேகலை, தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள் கருதுகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந் தருவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த நூல்களில் கூறப்பட்டுள்ளன. மிகப் பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகளில் இரண்டு இடங்களில் இத்தெய்வத்தைப்பற்றிய வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அவற்றின் சுருக்கமான வரலாற்றினைக் கீழே தருகின்றோம் :

சங்கஜாதகம் : ‘மோலினி’ என்னும் பெயருடைய காசிமாநகரத்தில், சங்கன் என்னும் அந்தணன் செல்வத்திற் சிறந்தவன். இவன் காசி நகரத்தின் நான்கு கோட்டை வாயிலிலும், நகரத்தின் நடுவிலும், தனது இல்லத்திலும் ஆக ஆறு அறச்சாலைகள் அமைத்து, நாள்தோறும் அறவினையை முட்டின்றிச் செய்துவந்தான். ஒருநாள், இவன், ‘குன்றத்தனை செல்வமும் ஒரு காலத்தில் குன்றும். அக்காலத்து அறம் செய்யப் பொருள் முட்டுப்படுவதற்கு முன்னரே யான் மேன்மேலும் பொருள் ஈட்டுவேன்’ என்று சிந்தித்துத் தேர்ந்து, மனைவியை அழைத்து அவளுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து, ‘யான் திரும்பிவருமளவும் நான் செய்துவரும் இவ்வறச்சாலைகளைச் செவ்வனே நடத்திக் கொண்டிரு’ என்று கட்டளையிட்டு, ‘சொர்ணபூமி’ என்னும் பர்மா தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டான். ஏவலாளர் தன் பின்னர் வர, இவன் காலில் செருப்பணிந்து, குடைப்பிடித்துச் செல்லும்போது, நண்பகல் ஆயிற்று. அப்போது கந்தமானத மலையில் வீற்றிருந்த பாச்சகபுத்தர் என்னும் போதிசத்வர் இந்தச் சங்கன் என்னும் அந்தணன் போவதையறிந்து, ஒரு மனிதனாக உருக்கொண்டு, அனல் வீசும் மணல்வழியே செருப்பும் குடையுமின்றி இவன் எதிரில் தோன்றினார். ஓர் ஆள் வெயிலில் வாட்டமுற்று வருந்திவருவதைக் கண்ட சங்கன், அந்த வழிப்போக்கனை அருகில் அழைத்து, ஒருமரநிழலில் அமரச்செய்து, காலை நீர்கொண்டு கழுவி, தான் அணிந்திருந்த செருப்பைத் துடைத்து எண்ணெயிட்டு அவருக்குக் கொடுத்ததுமன்றி, தன் குடையினையும் கொடுத்துதவினான். இவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஆள் தமது உண்மை உருவத்தோடு வானத்தில் பறந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்.

பிறகு சங்கன் துறைமுகம் அடைந்து, கப்பலேறிக் கடல் யாத்திரை புறப்பட்டான். கப்பல் கடலில் ஏழு நாட்கள் சென்றன. ஏழு நாட்களுக்குப் பின்னர், புயலடித்துக் கப்பல் பாறைமேல் மோதி உடைந்துவிட, பிரயாணிகள் மூழ்கி இறந்தனர். சங்கனும் அவனது வேலையாள் ஒருவனும் உயிருடன் கடலைக் கையினால் நீந்திக்கொண்டிருந்தனர். ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது கடற்றெய்வமாகிய மணிமேகலை அங்கு வந்து சங்கன் கண்களுக்குமட்டும் தோன்றி, தங்கத்தட்டில் அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து, ‘இன்று உபவாச நாள், ஆகையால் இன்று நான் உணவு உட்கொள்ளேன்’ என்றான். சங்கன் தனக்குள் ஏதோ உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக்கொண்டிருந்த வேலையாள் கருதி, ‘ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?’ என்றான். சங்கன், ‘நான் பிதற்றவில்லை; என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்’ என்றான். ஏவலாளன், ‘அங்ஙனமாயின், அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோக தெய்வமா என்பதைக் கேளும். அன்றியும், இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்யமுடியுமா என்றும் கேளும்’ என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள், ‘நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம். நீ செய்த நற்செயலுக்காக உன்னைக் காப்பாற்றவேண்டுவது எனது கடமையாதலால், நான் இவ்விடம் வந்தேன். நீ இப்போது எங்குச் செல்ல விரும்புகின்றாய்?’ என்று கேட்க, அவன், ‘எனது காசிமாநகரம் செல்லவேண்டும்’ என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய கப்பல் ஒன்றனைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச் சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திக் காசிமாநகரம் கொண்டுபோய்விட்டது.

‘மகாஜனக ஜாதகம்’ என்னும் கதையிலும் இந்தத் தெய்வம் உதவி செய்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் பின் வருவது :

மிதிலை தேசத்து அரசன் ஜனகன் என்பவனுக்கு அரிட்டஜனகன், பொலஜனகன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் இறந்த பின்னர், மூத்தவனான அரிட்டஜனகன் அரசனானான். இப்போது இளையவனான பொலஜனகன் தமையன்மேல் பகைகொண்டு, படைதிரட்டிவந்து சண்டைசெய்தான். சண்டையில் அரிட்டஜனகன் இறக்க, அவன் தம்பி அரசனானான். இறந்த அரிட்டஜனகனின் மனைவி, அப்போது வயிறு வாய்த்திருந்தவள், பெருஞ் செல்வத்தை எடுத்துக்கொண்டு, ஒருவருமறியாமல் சண்பை நகரம் சென்று, அங்கு ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு மகாஜனகன் என்று பெயர் இடப்பட்டது. குழந்தையாகிய மகாஜனகன் பெரியவனாக வளர்ந்த பிறகு, தனது சிற்றப்பன் தனது நாட்டைக் கவர்ந்து ஆள்கிறான் என்பதறிந்து, தன் நாட்டை மீட்கக் கருதி, அதன்பொருட்டுச் செல்வம் தேட உறுதி கொண்டான். இக்கருத்தைத் தன் தாய்க்குத் தெரிவித்து, அவள் உத்தரவு பெற்றுக் கப்பல் ஏறிச் சுவர்ணபூமிக்குப் புறப்பட்டான். இடைவழியில் நடுக்கடலில் புயலடித்துக் கப்பல் உடைந்துவிட, மற்றவர் மூழ்கி இறந்தனர். மகாஜனகன் முயற்சியை விடாமல் கையினால் கடலை நீந்திக் கொண்டிருந்தான். ஏழாம் நாள், மணிமேகலை அவன் முன் தோன்றி, ‘இப்பெரிய கடலைக் கையினால் நீந்திக் கடக்க முடியுமா?’ என்று கேட்க, ‘கரை சேர்வது கூடுமா கூடாதா என்பதைப்பற்றிக் கவலையில்லை; ஆனால், முயற்சி செய்யவேண்டுவது என் கடமையல்லவா’ என்று விடையிறுத்தான். இவனது ஊக்கத்தை மெச்சிய மணிமேகலை, இவன் செய்துள்ள நற்கருமங்களுக்காக இவனது இடுக்கண்ணைத் தீர்க்கக் கருதி, தான் யார் என்பதை அவனுக்குத் தெரிவித்து, அவன் போக நினைத்த இடம் யாது எனக் கேட்டது. மகாஜனகன் தான் மிதிலை நகரஞ்செல்ல விரும்புவதாகச் சொல்ல, மணிமேகலை, தாய் குழந்தையைத் தூக்குவது போல, அவனை இருகைகளாலும் தூக்கிக் கொண்டு வானத்தில் எழுந்து பறந்து சென்று, மிதிலை நகரத்து மாஞ்சோலையில் விட்டுவிட்டுச் சென்றது.

இதற்குள் மிதிலை நகரத்தை ஆண்ட பொலஜனகன் இறந்துவிட, அவனது ஒரே மகளாகிய ‘சீவாலீதேவி’ என்பவளை மகாஜனகன் மணந்துகொண்டு அரசனானான். அவளை மணப்பதற்குமுன், ஆயிரம் வீரராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்தல் முதலியவற்றைச் செய்தான். பிறகு இவன் தன் பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான்.

பௌத்தக் கதைகள் அடங்கிய இரசவாகினி என்னும் நூலிலும், பலக கண்ட தின்னஸ்ஸ வத்து என்னும் தூண்டுப்பலகை கொடுத்தவன் கதையில், மணிமேகலை கடலில் ஒருவனைக் காப்பாற்றிய செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் இது :

வரட்சி மிக்க வேனிற் காலத்தில், தென்னாட்டினின்றும் வட நாட்டிற்கு யாத்திரை சென்ற ஒருவன், நீர் வேட்கைகொண்டு, எங்கும் நீர் கிடையாமல் வருந்தி, ஒரு மரநிழலில் அமர்ந்து, தன்னிடமிருந்த இரண்டு வெற்றிலைகளையாவது மென்று சாற்றினை விழுங்கி, வேட்கை தீர்க்கலாம் என்று எண்ணினான். அவ்வமயம், அவனைப் போலவே வட நாட்டினின்று தென்னாட்டிற்கு யாத்திரைவரும் ஒருவன், நீர் வேட்கை மிக்கவனாய், பருக நீர் கிடையாமல் வருந்தி, அதே மரத்தடியில் வந்து அமர்ந்தான். வந்தவன் முன்னவனைப் பார்த்து, ‘ஐயா, எனது நீர் வேட்கை தீர ஒரு வெற்றிலையையாவது கொடும்’ என்று இரந்து வேண்டினான். அதற்கு அவன், ‘எனக்கும் நீர் வேட்கை மிகுதியாயிருக்கின்றது. என்னிடமுள்ளது இந்த இரண்டு வெற்றிலைகளே ; ஒன்றை உமக்குக் கொடுத்துவிட்டு யான் என் செய்வது?’ என்று சொல்லி மறுத்தான். பின்னவன், ‘என்னிடம் காசு இருக்கிறது, தருகிறேன், ஒரு வெற்றிலை தாரும்’ என்று கேட்க, அதற்கும் அவன் மறுத்தான். பின்னர், பெருந்தொகை கொடுப்பதாகச் சொன்னபோது, அவன் அப்பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றிலையைக் கொடுத்தான். இருவரும் ஒவ்வொரு வெற்றிலையை மென்று ஒருவாறு நீர்வேட்கையைத் தீர்த்துக்கொண்டனர்.

பின்னர், இருவரும் புறப்பட்டு வெவ்வேறு வழியே சென்று, கடைசியாக ஒரு துறைமுகத்தை அடைந்து, மரக்கலம் ஏறிக் கப்பல் யாத்திரை புறப்பட்டனர். ஆனால் அக்கப்பலில் இருவரும் ஒருங்கே யாத்திரை செய்வது அவர்களுக்குத் தெரியாது. சிலநாள் சென்றபின், நடுக்கடலில் புயல் அடிக்க, மரக்கலம் உடைந்துவிட்டது. கப்பல் யாத்திரிகரில் சிலர் மூழ்கி இறந்தனர்; சிலர் தம் உயிரைக் காக்கக் கடலில் நீந்திக்கொண்டிருந்தனர். அவ்வாறு நீந்தியவர்களில் வெற்றிலையைப் பெரும்பொருள் கொடுத்து வாங்கியவன் ஒரு மரப்பலகையைப் பற்றிக்கொண்டு அதன் உதவியினால் நீந்திக்கொண்டிருந்தான். வெற்றிலையை விற்றவனோ யாதொரு பற்றுக்கோடுமின்றி அப்பெருங் கடலினைத் தன் வெறுங்கைகளால் நீந்தித் தவித்துக்கொண்டிருந்தான். அப்போது பலகையுள்ளவன் அவனைக்கண்டு, பெருந்தொகை பெற்றுக்கொண்ட போதிலும், தக்க நேரத்தில் ஒரு வெற்றிலையையாவது கொடுத்து உதவி செய்த அவனது நன்றியை நினைவு கூர்ந்து, தன்னிடமிருந்த ஒரே மரப்பலகையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வெறுங்கைகளால் நீந்தத் தொடங்கினான்.

அப்போது மணிமேகலை இவனது இரக்கமுள்ள மனப்பான்மையினையும், தன்னல மற்ற உதவியையுங் கண்டு மெச்சி, இத்தகைய நன்மகனைக் காப்பாற்றவேண்டுவது தனது நீங்காக் கடமை எனக் கண்டு, அவன்மீது அருள் கூர்ந்து, அவன் கண்களுக்குத் தோன்றாமலே அவனை ஒரு கரையிற் கொண்டுபோய் விட்டது. பின்னர், நெடு நேரஞ் சென்று, தனக்குக் கிடைத்த மரப்பலகையின் உதவியினால் மற்றவன் கடலை நீந்நி அதே கரையையடைந்தான். அடைந்தவன், தனக்கு முன்னே தனது நண்பன் வந்திருப்பதைக் கண்டு வியப்புற்று, ‘ஐயா, வெறுங்கையினால் இப்பெரும் கடலை நீந்தி எனக்கு முன்னரே எவ்வாறு வந்தீர்? பலகையுள்ள எனக்குக் கரைசேர இவ்வளவு நேரம் சென்றதே! கையினால் கடலை நீந்தியதோடு, களைப்பின்றியும் காணப்படுகின்றீரே!’ என்று வினாவினான். அதற்கு மற்றவன், ‘நான் இங்கு வந்த விதம் எனக்குத் தெரியாது’ என்று சொன்னான். அப்போது, அதுவரையில் அவர் கண்களுக்குப் புலப்படாதிருந்த மணிமேகலா தெய்வம் அவர் கண் முன்னர் தோன்றி, ‘நானே உன்னை இங்குக் கொண்டு வந்தேன். பெற்றோரைப் பேணி ஒழுகுகின்றவர்களையும், புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணடைந்து ஒழுகுகின்றவர்களையும், பஞ்சசீலம், அஷ்டாங்க சீலம், பிரதிமோக்ஷ சம்வரசீலம் என்னும் சீலங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களையும், மெய் மொழி மனங்களால் பிறருக்கு நன்மை செய்கின்றவர்களையும், செய்ந்நன்றி அறிந்து உதவி செய்கின்றவர்களையும் துன்பத்திலிருந்து தேவர்கள் காப்பாற்றுவார்கள்’ என்று சொல்லிற்று.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் பலகை கொடுத்துதவியவன், ‘தாங்கள் சொல்லிய தர்மங்களில் ஒன்றையேனும் நான் செய்தவனல்லவே. அப்படியிருக்க, என்னைக் கடலினின்றுங் காப்பாற்றிய வகை என்ன?’ என்று வியப்புடன் வினாவினான். அதற்கு அத்தெய்வம், ‘உனக்கு ஒரு வெற்றிலை கொடுத்து உதவிய நன்றியை நினைத்து, நடுக்கடலில் உன் உயிரையும் பாராமல் மற்றவனுக்கு உன் பலகையைக் கொடுத்து உதவினாய். இந்த நன்றியறிதல் என்னும் உனது நற்குணத்துக்காக உன்னை நான் காப்பாற்றினேன்’ என்று சொல்லி, அக்கடற்றெய்வம் மறைந்துவிட்டது.

கம்போடியா தேசத்திலும், சீயாம் தேசத்திலும் மணிமேகலையைப்பற்றிய கதைகள் வழங்குகின்றனவென்று திரு. சில்வன் லீவி என்னும் ஆசிரியர் (The Indian Historical Quarterly, Vol. VII, Page 371.) எழுதியிருக்கின்றார். அதன் சுருக்கம் இதுவாகும் :-

கம்போடியா தேசத்து இராமாயணத்தில் கீழ்க்கண்ட பகுதி காணப்படுகின்றது : தேவர்களும் தெய்வமகளிரும் ஒரு அரங்கத்தில் கூடி நடனம் செய்கிற வழக்கப்படி, மேற்படி அரங்கத்தில் ஒரு நாள் தேவர்கள் கூடியிருந்தார்கள். அக்கூட்டத்தில் கலந்துகொள்ள மணிமேகலா தெய்வம் தனது ஒளிவீசும் அணிகளை அணிந்து, கையில் மாணிக்கக் கல் ஒன்றனை எடுத்துக்கொண்டு சென்றது. செல்லும் வழியில் ‘ராமசூரன்’, அல்லது ‘ராம பரசு’ என்னும் பெயருள்ள அசுரன் அவள் கையில் உள்ள ஒளிவீசும் மாணிக்கக் கல்லைப் பிடுங்கிக்கொள்ள விரும்பி அவளைத் தொடர்ந்தான். அதனை அறிந்த மணிமேகலை மேகத்தில் மறைந்தொளிந்தாள். அசுரன் அங்கும் அவளைத் தொடர, அவள் தன் கையிலிருந்த மாணிக்க நகையை அவன் கண்முன் காட்ட, அதன் ஒளியினால் கண் கூசி, அவ்வரக்கன் திகைத்து நின்றான். அப்போது மணிமேகலை அவனிடமிருந்து தப்பி ஓடினாள். அவ்வமயம் தெய்வங்களின் அரங்கத்திற்குச் செல்லுவதற்காகப் போய்க்கொண்டிருந்த வீர மிக்க ‘வர்ஜூன்’ என்னும் தேவன், ராமபரசு என்னும் அசுரன் மணிமேகலையைத் துரத்துவது கண்டு, அவ்விடம் வர, அவனுக்கும் ராமசூரனுக்கும் பெரும் போர் நடந்தது. கடைசியில், வர்ஜூன் என்பவனை ராமசூரன் தன் பரசு என்னும் ஆயுதத்தினால் கொன்று வென்றான். இந்தக் கதை கம்போடியா தேசத்து அரண்மனையில் நாடகமாக நடிக்கப்பட்டுவருகின்றது.

சீயாம் தேசத்து இராமாயணத்திலும் இதே கதை கூறப்பட்டிருக்கின்றது. கி. பி. 1783 முதல் 1806 வரையில் அரசாண்ட சீயாம் தேசத்து அரசன், ‘முதலாவது ராமன்’ என்பவன் காலத்தில், இந்த இராமாயணம் எழுதப்பட்டது. இதுவும் கம்போடியா தேசத்து இராமாயணம் போன்றதே. இதில் காணப்படும் சிறு மாறுபாடு என்னவென்றால், ‘வர்ஜூன்’ என்னும் தேவன் பெயர் ‘அர்ஜூனன்’ என்று காணப்படுவதுதான். மேற்படி கம்போடியா, சீயாம் தேசத்துக் கதைகளும் மணிமேகலை சமுத்திரத்தில் வாழ்வதாகவும், அது கடற்றெய்வம் என்பதாகவும் கூறுகின்றன.

‘ச-கேச-தாது வம்சம்’ என்னும் (Cha-Kesa-Dhatuvamsa) பிற்காலத்துப் பாளிமொழிப் பௌத்த நூலில், புத்தர் தமது ஆறு சீடர்களுக்கு ஆறு உரோம தாது கொடுத்ததாகவும், அவர்கள் அவற்றைக் கொண்டு தென்னாட்டிற்கு வந்தபோது, கடலால் சூழப்பட்ட ஒரு அசோக வனத்துக்கு வந்ததாகவும், அப்போது அந்தத் தாதுவை வைக்கத் தூபி கட்டுவோரைக் காணாமல் அச்சீடர்கள் வருந்த புத்தர் கட்டளையினால் மணிமேகலா தெய்வம் அவர்களுக்குத் தோன்றி, ஒரு தூபியைக் கட்டியதாகவும் காணலாம். (‘மணிமேகலைப்பாசாத’ என்னும் பெயருள்ள பௌத்தப்பள்ளி ஒன்று இலங்கையில் இருந்ததென்பதும், அதனை ‘இரண்டாவது சேனன்’ என்னும் அரசன் பிற்காலத்தில் பழுது பார்த்துப் புதுப்பித்தான் என்பதும் தெரிகின்றன. இந்தப் பள்ளி மணிமேகலை கட்டியதாகக் கூறப்படும் தூபி அன்றென்பது உறுதி.)

இலங்கையில் சிங்களவர் வழங்கும் கதை சிலவற்றிலும் மணிமேகலையைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதவேண்டுவதில்லை. ஆனால், அக்கதைகள் ஒன்றில் தமிழருக்கு வியப்பைத் தருவன எவையென்றால், ‘பாலங்கா’ என்பவன் தன் மனைவி ‘பத்தினி’ என்பவளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில், ‘வைத’ என்னும் ஆறு குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி ஆற்றில் எறிய, அந்த ஆற்றுநீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும், அக்கரையையடைந்த பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து ஆற்றில் எறியப்பட்ட மோதிரத்தை எடுத்துப் பத்தினியிடம் கொடுத்தது என்பதுவுமே. இங்கே பாலங்கா என்பவன் கோவலன், பத்தினி என்பவள் கண்ணகி, வைத, என்பது வைகை ஆறு.

மணிமேகலைத் தெய்வத்தின் உருவப்படம் சீயாம் (Siam) நாட்டில் இருக்கின்றது.
_____________________________________________________________________
* இலங்கையில் உள்ள ‘மகாவலி கங்கை’ என்னும் ஆற்றில் ‘மணிமேகலை’ என்னும் பெயருடைய அணைக்கட்டு ஒன்று உண்டு. இந்த அணைக்கட்டினை இலங்கையை ஆண்ட முதலாவது ‘அக்கபோதி’ என்னும் அரசன் கட்டினான். பிற்காலத்தில் இந்த அணைக்கட்டினை ‘இரண்டாவது சேனன்’ என்னும் அரசன் பழுது தீர்த்துப் புதுப்பித்தான்.

இலங்கையில், ‘மணிமேகலை’ என்னும் பெயருடன் ஓர் ஊரை ‘மாகன்’ என்னும் அரசனுடைய சேனைத்தலைவன் உண்டாக்கினான் என்பதும் தெரிகின்றது.