சோழர் கால நீர் மேலாண்மை – சோழர் 1000

             
தமிழ்நாட்டை ஆண்ட  அரசுகளுள் மிகவும் பெருமைமிக்க பேரரசாகக் கருதப்படுவது சோழப்பேரரசு ஆகும். கி.பி 8-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சிபுரிந்த சோழர்கள் கலை, கட்டடக்கலை, நிர்வாகம் மற்றும் வணிகம் எனப் பலவகையில் சிறந்து விளங்கினர்.
 
 
விசயாலயன் காலத்திலிருந்து சோழர்கள் வளர்ச்சி தொடங்கினாலும் முதலாம் இராசராசன் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது. ‘நீர் மேலாண்மை” என்பது சங்க காலத்திலிருந்து அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே கரிகால பெருவளத்தான் ஆட்சியில் உருவானது எனலாம்.
 
கரிகாலன் காவிரிக்கு இருபுறமும் கரை எழுப்பி (கல்லணை எழுப்பினான் எனவும் கூறப்படுகிறது) திருச்சி மற்றும் தஞ்சை பகுதிகளை வளப்படுத்தினான் மற்றும் இதனை கரிகால சோழன் இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட 12,000 அடிமைகளைக் கொண்டு கட்டி முடித்தான். இந்த கல்லணை பல ஏக்கர் நிலங்களுக்கு நீர் வளத்தை அளித்து கொண்டு இருக்கிறது. சோழர்களின் நீர் மேலாண்மைக்குச் சான்றாய் கல்லணை திகழ்கிறது. சங்க காலத்திற்குப் பின் வந்த சோழர்கள் ( விசயாலயன் வழி வந்தவர்கள்) நீர் மேலாண்மை மற்றும் பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். 
 
இவர்கள் குறிப்பாக முதலாம் இராசராசன் அவரது மகன் இராசேந்திரன் காலத்தில் ஏரிகள்,வாயக்கால்கள்,குளங்கள் மற்றும் கண்ணாறுகள் அதிகம் வெட்டப்பட்டன. அவர்களது நீர் பாசனத்தகவல்களை கல்வெட்டுகளிலோ அல்லது செப்பேடுகளிலோ குறித்து வைத்திருப்பர். ஏரிகள் மற்றும் வாயக்கால்களுக்கு அரசர்கள் மற்றும் அரசிகள் திருநாமங்களைச் சூட்டும் வழக்கம் இச்சோழர்கள் காலத்திலிருந்துதான் உருவானதா? நிச்சயமாக இல்லை என்றுதான் கூறுவேன்.ஏனெனில் நீர்நிலைகளுக்கு அரசர்களது பெயர்களைச் சூட்டும் பழக்கம் பல்லவர்கள் காலத்திலிருந்தே தோன்றியது.
 
எடுத்துக்காட்டாக சித்திரமாகத் தடாகம்,வைரமேக தடாகம் போன்ற ஏரிகள் பல்லவர்கள் காலத்தில் ஏறப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஏரிகள் சோழர்கள் காலத்தில் தான் வெட்டப்பட்டது. சோழர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் ஏரிகள் மற்றும் வாயக்கால்கள் வெட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதற்கு ஏற்றாற் போலவே வேளாண்மையும் சிறந்து விளங்கியது. ஏரிகள் மற்றும் வாயக்கால்கள் விவசாயத்திற்கு நன்கு உதவும் என நினைத்தனர் போலும் உண்மையும் அதுவே. அணைகளை விட இவையே வேளாண்மைக்கு கைகொடுக்கும் எனக்கருதி ஏரிகளை வெட்டவும் பின் அவற்றைத் தூர்வாரி பராமரிப்பதற்கும் சோழ அரசர்கள் கொடுத்த தானங்கள் ஏராளம்.
 
சோழர்கள் கால ஏரிகளில் சிறந்ததாகக் கருதப்படுவது  “வீராணம்” என்று அழைக்கப்படும் வீரநாராயண ஏரியாகும்.இது முதலாம் பராந்தகனின் பட்டப்பெயராகும். அது போல மதுராந்தகத்தில் அமைந்துள்ள பெரிய ஏரியும் சோழர்கால ஏரியாகும். முதலாம் இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைத்த ‘சோழ கங்கம்” என்னும் ஏரி வரலாற்றுச் சிறப்புமிக்க ஏரியாகும். இதற்கான மதகுகளையும் அவனே கட்டினான். குந்தவை பேரேரி மற்றும் திரிபுவன மாதேவி பேரேரி போன்றவை அரசிகளின் பெயரில் அமைந்த ஏரிகளாகும். இந்த ஏரிபாசனங்கள் மூலமாகச் சோழ நாடு செழிப்புற இருந்து இருக்கலாம்.
 
நீர் நிலைகளை மேலாண்மை செய்வதற்காக ஏரிவாரியம் கிராம சபை மூலமாக அமைக்கப்பட்டது. உத்திரமேரூர் கல்வெட்டு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஏரிகளைத் தூர்வாரி பராமரிக்க ‘ ஏரி ஆயம்” என்ற வரி விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்டது.  வேளாண்மை நிலங்களுக்குக்  குறிப்பிட்ட வாயக்கால்கள் மூலமாக நீர் செல்ல வேண்டும் என்பதைக் கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.சில நேரங்களில் சாதாரண மக்கள் கூட நீர் நிலைகளைச்  சீரமைத்த செய்தியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்போரூர் வட்டம் ஆமூரில் உள்ள விக்ரம சோழனின் கல்வெட்டு ஒன்று ‘சாத்தன் குமணன்” என்பவன் ஏரியினை பழுதுபார்த்த செய்தி கூறுகிறது.
 
தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் சோழர்களின் பெயரில் அமைந்த வாயக்கால்களைக் காண்கிறோம். அவற்றில் சில  உய்யக்கொண்டான் வாய்க்கால்,அருமொழி தேவ வாயக்கால்,கரிகால பெருவளத்தான் வாயக்கால், சிங்களாந்தக வாயக்கால்,மும்முடி சோழ பேரேரி,தேவ வாயக்கால், உத்தம சோழ வாயக்கால்,திரிபுவன மாதேவி வாயக்கால் போன்றவை ஆகும். சோழர்களது நீர் மேலாண்மை தொடர்பான வரலாற்றை அறிய அவர்களது  கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளே போதுமானது. நிச்சயமாகத் தமிழகத்தின் நீர் நிலைகளைச் சீரமைத்த பெருமை சோழர்களையே சாரும். அதைப் போன்றே நாமும் செவ்வனே பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது தலையாய கடமையாகும்.
 
#சோழர்
 
மூலம்: சோழர்கள்,K.A.NILAKANDA SASTHRI
சோழர் காலத்தில் அரசும் மதமும், முனைவர் ஆ.பத்மாவதி
கரந்தை செப்பேட்டுத் தொகுதி, சி.கோவிந்தராசன்,சி.கோ. தெய்வநாயகம்
 

Leave a Reply