தமிழி எழுத்துடன் முத்திரை மோதிரம்

கரூரில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துடன் கூடிய முத்திரை மோதிரம்

சங்க கால சேர அரசர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரில் பல அரிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. சேரர்களின் செப்பு நாணயங்கள், அவர்களின் சமகாலத்திய ரோமானியரின் நாண யங்கள் பல கிடைத்துள்ளன. கரூருக்கு அருகில் உள்ள புகழுரில் சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அக்காலத்தைச் சார்ந்த எழுத்துகளுடன் கூடிய முத்திரை மோதிரம் கரூரில் கிடைத்துள்ளது.

இதில் காணப்படும் எழுத்துக்கள் ‘தமிழ் பிராமி’ எனச் சொல்லப்படும் எழுத்து வகையை சார்ந்தது. ‘சாத்தன சாத்தவேகி’ என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கருதலாம். திரு.ஐராவதம் மாகாதேவனும் அவ்வாறே கருதுகிறார். சங்க இலக்கியங்களிலும் சாத்தன், கீரன், ஆதன் போன்ற பெயர்கள் பரவலாகக் காணப்படுகின்றன. குன்னக்குடி, அரச்சானூர் போன்ற ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் ‘ஆதன்’ ‘சாத்தன்’ ‘தேவன்’ என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒருவன் ‘மணி வண்ணகன்’ எனக் குறிப்பிடப்படுகிறான். புகழூரிலுள்ள ஒரு கல்வெட்டு, கரூரைச் சேர்ந்த ஒரு பொன்வணிகன் சமணப்படுக்கையை தானமாக கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.

1806முதல் 1904ஆம் ஆண்டு வரை ஏராளமான ரோமானிய தங்க, வெள்ளி நாணயங்கள் கரூரில் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் ஆராயும்பொழுது,இந்த முத்திரை மோதிரம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் உள்ள சொற்கள் நிதி காப்பாளர் (Banker)- வணிகர் (Trader) இவை இரண்டையுமே குறிக்கின்றன.

சாதவாகனர்களின் மற்றும் குப்தர்களின் காலத்திய கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் “சாதவாகா” என்ற சொல்லும் ‘சாதவேகா’ என்ற சொல்லும் ஒரே பொருளில் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. நெடுந்தூரம் சென்று வெளியூர் களில் வியாபாரம் செய்தவர்களையும் வணிகர் குழுக்களில் (merchant-guilds) அங்கத்தினராக இருந்தவர்களையும் இப்பெயரால் குறிப்பிடுகின்றனர். ‘நிகமம்’ என்ற சொல்லும் வழக்கத்தில் இருந்துள்ளது. (அமரகோசம் II Sec. 2514) ‘சிரேஷ்ட்டி’ ‘குளிகர்கர்”, ‘சாதவாகர்’ ஆகிய பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

மதுரைக்கருகிலுள்ள மாங்குளம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டில் “வெள்ளை நிகமத்தோர்” என்ற சொல் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் சேர்த்து ஆராயும்பொழுது தற்போது கிடைத்துள்ள முத்திரை மோதிரம், அக்காலத்தைச் சேர்ந்த சாத்தன் என்ற வணிகன், வணிகக் குழுதலைவனாக சாத்தவேகி/ நிகமத்தோர் உபயோகித்த முத்திரை மோதிரம் என அறியலாம்.

தகவல்: தொல்லியல் ஆய்வுகள் கே.வி. இராமன்