ஆதி இந்தியர்கள் யார்?

“சிந்துவெளியின் மொழிவளம்

தென்னிந்தியர்களிடமே உள்ளது!”
‘எர்லி இந்தியன்ஸ்’ நூல் ஆசிரியர்
டோனி ஜோசப் நேர்காணல்

சந்திப்பு:
ஆதி வள்ளியப்பன்
சு. அருண் பிரசாத்

‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள்-தமிழர்கள் யார்?’ என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பல காலமாக விவாதிக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியான ‘எர்லி இந்தியன்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் அவர் ஆன்ஸெஸ்டர்ஸ் அண்ட் வேர் வீ கேம் ஃப்ரம்’ (Early Indians: The Story of Our Ancestors and Where We Came From) நூல் இந்தக் கேள்விகள் பலவற்றுக்கு ஆதாரபூர்வமான பதில்களைத் தந்தது. வாசகர் மத்தியில் வரலாற்று, அறிவியல் ஆர்வங்களைக் கிளர்த்திய இந்தப் நூலை எழுதிய டோனி ஜோசப், 30 ஆண்டுகளாக இந்தியாவின் முன்னணி வணிக இதழாளர்களுள் (Business journalist) ஒருவர் என்பது சுவாரசியமான முரண். இந்திய வரலாற்றுப் பின்னணியில் சர்ச்சைக்குரிய, நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் பல கேள்விகளுக்குத் தொல்லியல், மரபணுவியல் ஆதாரங்கள் அடிப்படையில் திட்டவட்டமான பதில்களை இந்த நூல் வழங்குகிறது.

அல்புனைவு நூல்களுக்கான ‘டாடா லிட் லைவ்!’ விருது, ‘சக்தி பட் முதல் நூல்’ பரிசு, ‘அட்டா கலாட்டா’ பரிசு என மூன்று விருதுகளை இந்தப் நூல் இதுவரை பெற்றிருக்கிறது. விற்பனையில் சாதனை படைத்த இந்தப் நூல் தற்போது எட்டாம் மறுஅச்சில் இருக்கிறது; தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகவிருக்கிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனின் நூல் வெளியீட்டுக்காகச் சென்னை வந்திருந்த டோனி ஜோசப்-ஐ ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். அவருடனான உரையாடலில் இருந்து:

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிக இதழாளராகப் பணியாற்றிய நீங்கள் தொல்பழங்காலம், தொல்லியல் சார்ந்த நூலை எழுதியதன் நோக்கம் என்ன? அந்தத் துறை நோக்கி உங்களை ஈர்த்தது எது?

ஹரப்பா (சிந்துவெளி) நாகரிகத்தின் மேல் எப்போதுமே எனக்கு ஈர்ப்பு இருந்துவந்திருக்கிறது. எல்லோரையும்போல் பள்ளியில்தான் நானும் அதைப் பற்றி முதலில் படித்தேன். என்னுடைய கற்பனையில் ஆழமான தாக்கத்தை எப்போதும் அது செலுத்தி வந்திருக்கிறது; நாளிதழ்களில் அதைப் பற்றி எந்தச் செய்தி வந்தாலும் தவறாமல் வாசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தேன். ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்குமுன், எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தபோது, ‘ஹரப்பர்கள் யார்; அவர்கள் எங்கு மாயமானார்கள்; பொ.ஆ.மு. (கி.மு.) 1,900 வாக்கில் சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தியாவில் மீண்டும் நகரங்கள் உருவாவதற்கு இடையில் 1,500 ஆண்டு இடைவெளி ஏன் ஏற்பட்டது’ என்று என்னை எப்போதும் துரத்திக்கொண்டிருந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியில் இறங்கினேன்.

நூலை எழுதத் தொடங்கியபோது, ஹரப்பர்களை மையப்படுத்தியதாக மட்டுமே அது இருந்தது. அதுகுறித்துச் சமீப காலத்தில் பல்வேறு புலங்களில் நிகழ்ந்திருக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் அதற்கான விடைகளை நெருக்கமாக அணுக முடியும்; குறிப்பிட்ட தொலைவுக்கு நெருங்கிச் செல்ல முடியும் என்று எனக்குத் தோன்றியது.

தோலவிரா, லோதல், ராகிகரி உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் தளங்களுக்குப் பயணித்தேன்; மதிப்பு வாய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள், மொழியியலாளர்கள், கல்வெட்டியலாளர்கள், சிந்துவெளி நாகரிகம் சார்ந்து ஆய்வுசெய்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர்கள் எனப் பல அறிஞர்களைத் தொடர்ந்து சந்தித்தேன். இந்த வேளையில்தான் ஹரப்பர்கள் யார் என்ற கேள்வியும் இந்தியாவின் முதல் உழவர்கள் யார் என்ற கேள்வியும் கிட்டத்தட்ட ஒன்று என்பதை உணர்ந்தேன். ஏனென்றால், தொல்லியல் ஆதாரங்களின்படி, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள மெஹர்கர் (Mehrgarh) என்ற இடத்தில் 9,000 ஆண்டுகளுக்குமுன் வேளாண்மை தொடங்கி, வடமேற்கு இந்தியா முழுமைக்கும் வேகமாகப் பரவியதை அறியமுடிகிறது. கிராமங்கள் அப்போதுதான் உருவாகத் தொடங்கின. பிறகு சிந்துவெளி நகரங்கள் மேலெழுந்தன. ஆக, சிந்துவெளி நாகரிகம் என்பது 9,000 ஆண்டுகளுக்குமுன் – அதாவது பொ.ஆ.மு. 7000 – ஏற்பட்ட வேளாண் புரட்சியின் இயல்பான தொடர்ச்சியே. அதனால்தான், ஹரப்பர்கள் யார் என்ற கேள்வியுடன் இந்தியாவின் முதல் உழவர்கள் யார் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவின் முதல் உழவர்கள் யார் என்ற கேள்விக்கான விடையை, முதல் இந்தியர்கள் யார் என்று தெரியாமல் அறிய முடியாது.

தொடக்கத்தில் நான் நினைத்திருந்ததைவிடப் நூலின் எல்லை இப்படி விரிந்துகொண்டே சென்றது. நூலின் பாதித் தொலைவுவரை வந்துவிட்ட பிறகு, பல்வேறு புலங்களைச் சேர்ந்த தரவுகள், தகவல்கள் கடலெனச் சேர்ந்துவிட்டதால் இந்தப் நூலை எழுதி முடிக்க முடியாது என்றே எனக்குத் தோன்றியது. அப்போதுதான் உலகின் பெரும் மக்கள்தொகைக் குழுக்கள் எப்படித் தோன்றின என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் முற்றிலும் புதிய துறையான ‘மக்கள்தொகை மரபணுவியல்’ (Population genetics) குறித்து அறிந்தேன்; அது என்னை ஈர்த்தது.

மக்கள்தொகை மரபணுவியல் சார்ந்து வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன்; உலகம் முழுவதும் உள்ள மக்கள்தொகை மரபணுவியலாளர்களைத் தொடர்புகொண்டு, அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து விவாதித்தேன். தொடக்க கட்டத்தில் வெளியான சில ஆய்வு அறிக்கைகளின் முடிவுகள் முரணாக இருந்தன. ஆனாலும், முன்பு வாழ்ந்த மக்கள்தொகையின் மரபணுக்களுடன் தற்போதுள்ள மக்கள்தொகையின் டி.என்.ஏ-வை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம், அவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய, தொடர்பே இல்லாத மக்கள்தொகைக் குழுக்கள் எவையெவை என்று கண்டறிய முடிந்தது. அந்தக் கண்டறிதல் புதிய ஒளி பாய்ச்சுவதாக இருந்தது.

அதேநேரம் டி.என்.ஏ. ஆய்வுகளை மட்டும் வைத்து, ‘யார், எங்கு, எப்போது இடம்பெயர்ந்தார்கள்’ என்பதைக் கண்டறிய முடியாது. அதனால், இடப்பெயர்வு சார்ந்த கேள்விகளுக்கு இந்த ஆய்வுகள் மூலம் பதில் கிடைக்கவில்லை. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மக்களுடைய டி.என்.ஏ-வைப் படியெடுத்து (extract) பகுத்து ஆராயக்கூடிய முறை, சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்கள்தொகை மரபணுவியல் ஆராய்ச்சியில் பெரும் பாய்ச்சலாகக் கருதப்பட்டது; நிலைமை முற்றிலும் மாறியது.

ஒரு தொல்லியல் தளத்தின் பல அடுக்குகளில் கிடைக்கும் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த டி.என்.ஏ-வைச் சேகரித்து ஆராயும்போது, ஒரு புதிய வம்சாவளி அங்கு இடம்பெயர்ந்து, காலப்போக்கில் அந்த இடத்தின் மக்கள்தொகையை மாற்றியமைத்த காலகட்டத்தைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தது. கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான பண்டைய டி.என்.ஏ. மாதிரிகள் படியெடுக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டிருக்கின்றன. இவற்றின் முடிவுகளை வைத்து யார், எங்கு, எப்போது இடம்பெயர்ந்தார்கள், அவற்றின்மூலம் உலகின் பெரிய மக்கள்தொகைக் குழுக்கள் எப்படித் தோன்றின என்பன குறித்த துல்லியமான வரைபடத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.

இந்தத் துறையில் நிகழும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தெற்காசியாவையே மையம் கொண்டிருப்பதாக பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது; அது உண்மையல்ல. தெற்காசியாவில் நடைபெறும் இந்த ஆய்வுகள், உலகெங்கிலும் வாழும் பல்வேறு மக்கள்தொகை குழுக்களைப் பற்றிய பரவலான புரிதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பல கண்டங்கள் சார்ந்து நடைபெறும் ஆய்வின் ஒரு பகுதிதான் இது. பல்வேறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு பெரிய படப்புதிரைச் சேர்ப்பதைப் போன்றதுதான் இது; ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் அந்தப் புதிரில் புதியதொரு தொடர்பை ஏற்படுத்தி, விடையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.

இன்றைய ஐரோப்பிய மக்கள்தொகை என்பது மூன்று இடப்பெயர்வுகளின் விளைவு. 45,000 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த முதல் இடப்பெயர்வு, ஆதிகால முதல் மனிதர்கள் அல்லது ஹோமோ சேபியன்ஸ்-ஐ ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்றது; அனடோலியா என்று அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியிலிருந்து 9,000 ஆண்டுகளுக்குமுன் ஆதி உழவர்கள் ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தார்கள். ஏற்கெனவே அங்கு வாழ்ந்துவந்த வேடர்களைக் கணிசமான அளவில் பதிலீடுசெய்த இவர்கள், அங்கே எஞ்சியிருந்தவர்களுடன் குறிப்பிட்ட அளவுக்குக் கூடவும் செய்தார்கள். ஐரோப்பாவில் நிகழ்ந்த இரண்டாவது இடப்பெயர்வு இது.

மத்திய ஆசியப் புல்வெளிப் (Central Asian Steppe) பகுதியைச் சேர்ந்த, குதிரை செலுத்துதல் – உலோகவியலை கற்றுத் தேர்ந்த நவீன மக்கள்தொகைக் குழு 5,000 ஆண்டுகளுக்குமுன் ஐரோப்பாவுக்கு சென்றது மூன்றாவது இடப்பெயர்வு. இந்தக் குழு தங்களை ஆரியர்கள் என்றழைத்துக்கொண்டது. நவீன மனிதர்கள் முதன்முறையாக நடமாட்டத்தில் (mobility) உயர்நிலை சாத்தியத்தை அடைந்திருந்தனர். ஏற்கெனவே மக்கள்தொகை அதிகமிருந்த ஐரோப்பா போன்ற பகுதிகளுக்குச் சென்று, அங்கு ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்தப் பண்பு ஆரியர்களுக்கு உதவியது. அவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்த பிறகு, ஏற்கெனவே அங்கு வாழ்ந்துவந்த உழவர்களைப் பெரிய அளவில் பதிலீடுசெய்தும், குறைந்த அளவில் அவர்களுடன் கூடியும் ஐரோப்பாவின் மக்கள்தொகையை மீண்டும் மாற்றினார்கள்; ஐரோப்பாவின் வேடர் குழுக்களில் எஞ்சியிருந்த மக்களுடனும் அவர்கள் இணைந்தார்கள். ஆக, இன்றைய ஐரோப்பியர்கள் யார் என்ற கேள்விக்கான விடை, இந்த மூன்று பெரிய இடப்பெயர்வுகளின் விளைவாக உருவானவர்கள் என்பதுதான்.

மக்கள்தொகை மரபணுவியலில் நான் கவனம் செலுத்தத் தொடங்கிய காலத்துக்கு முன்பாகவே தொல்லியல், மொழியியல், கல்வெட்டியல், வரலாறு உள்ளிட்ட துறைகள் சார்ந்த பெரும்பாலான தரவுகளைச் சேகரித்து முடித்திருந்தேன். எனவே, மனிதர்களின் தொடக்க காலம் குறித்து பல்வேறு துறைகளில் கண்டறியப்பட்ட முடிவுகளுடன், மரபணுவியலின் புதிய கண்டறிதல்கள் எப்படிப் பொருந்துகின்றன என்பதை என்னால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. 65,000 ஆண்டுகளுக்குமுன் தொடங்கி வரலாற்றுக்கு முந்தைய காலம்வரை நிகழ்ந்த நான்கு பெரிய இடப்பெயர்வுகள், இன்றைய இந்திய மக்கள்தொகையை எப்படி நிர்ணயித்தன என்பதை என்னுடைய நூல் விவரிக்கிறது.

‘உண்மையைச் சொல்வதால் பிரச்சினைக்குரிய பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதால், அதை எச்சரிக்கையுடன்தான் கையாள வேண்டும்’ என்று உங்கள் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த நூலின் ஆசிரியராக உங்களுக்கு அது எப்படிப்பட்ட சவாலாக இருந்தது?

உண்மையை மறைப்பதோ ஒளிப்பதோ நன்மையை விட, தீமையையே ஏற்படுத்தும் என்று எப்போதும் நான் நம்புகிறேன். வரலாற்றுத் தகவல்களை வரலாற்றுத் தகவல்களாகவே அணுகவும் கையாளவும் வேண்டும். அதேவேளை, வரலாற்றுத் தகவல்களில் இருந்து உறுதிப்படுத்தப்படாத முடிவுகளை எப்போதுமே பெறமுடியாது என்பதையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எனவே, அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் கிடைக்கும் தகவல்களின் பாதையில்தான் செல்ல வேண்டும் என்பதில், எந்த நேரத்திலும் என்னுடைய மனம் சந்தேகம் கொள்வதில்லை.

எடுத்துக்காட்டாக, இந்திய மக்கள்தொகை என்பது நான்கு பெரிய தொல்பழங்கால இடப்பெயர்வுகளின் விளைவாக உருவானது என்று கூறும் அதே வேளையில், இன்று வாழும் இந்திய மக்கள்தொகைக் குழுக்களில் அநேகமாக எல்லாவற்றிலுமே இந்த இடப்பெயர்வுகளின் வம்சாவளி வெவ்வேறு அளவுகளில் கலந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இன்றைய மக்கள்தொகை குழுக்கள் அனைத்தும் அவற்றுக்கு முந்தைய மக்கள்தொகை குழுக்களின் இணைவால் உருவானவை என்பதில் சந்தேகமில்லை. யாருமே தூய-தனித்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வதற்குச் சாத்தியமில்லை.

என்னுடைய நூலில் இடம்பெற்றுள்ள வாதங்களில் அநேகமாக எல்லாவற்றுக்கும், மதிப்புவாய்ந்த ஆய்விதழ்களில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இருந்து சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன; அவற்றுள் பெரும்பாலானவை அறிவியல் ஆராய்ச்சி அறிக்கைகள். துணை நூற்பட்டியல் மட்டும் 10 பக்கங்களுக்கு நீள்கிறது.

இன்றைய இந்திய மக்கள்தொகையை நிர்ணயித்த தொல்பழங்காலத்தில் நிகழ்ந்த நான்கு முக்கிய இடப்பெயர்வுகள் என்னென்ன?

முதல் இந்தியர்கள் என்பவர்கள் 65,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். இவர்கள் 70,000 ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி, அராபிய தீபகற்பத்துக்கு இடம்பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்களே. கடைசியாக 16,000 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கக் கண்டத் தையும் சென்றடைந்த இவர்கள்தான், உலகின் மற்றப் பகுதிகளில் மக்கள் உருவாவதற்குக் காரணமானவர்கள்.

இந்திய மக்கள்தொகையை வடிவமைத்த இரண்டாம் இடப்பெயர்வு சுமார் 12,000 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்தது. மேற்கு ஆசியா அல்லது ஈரானின் ஸாக்ரோஸ் (Zagrose) மலைபகுதியைச் சேர்ந்த உழவர்கள், வடமேற்கு இந்தியாவில் ஏற்கெனவே வாழ்ந்துவந்த மக்களுடன் இணைந்து, இந்தியத் துணைக்கண்டத்தில் வேளாண் புரட்சிக்கு வித்திட்டார்கள். இதுவே சிந்துவெளி நாகரிகமாக பின்னர் வளர்ச்சியடைந்தது. ஆக, ஹரப்பர்கள் யார் என்ற கேள்விக்கு இங்கே விடைகிடைத்துவிடுகிறது. 65,000 ஆண்டுகளுக்குமுன் இங்கு வந்து வாழத்தொடங்கிய முதல் இந்தியர்கள், அவர்களுடன் மேற்கு ஆசியா – ஈரானின் ஸாக்ரோஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த உழவர்களின் கூட்டிணைவுவால் தோன்றியவர்கள்தாம் ஹரப்பர்கள்.

மூன்றாம் இடப்பெயர்வு 4,000 ஆண்டுகளுக்குமுன் கிழக்கு ஆசியாவின் வழியாக ஏற்பட்டது. இன்றைக்கு இந்தியாவின் கிழக்கு, மத்தியப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளின் மொழிகளான காசி, முண்டாரி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்ட்ரோ-ஏசியாடிக் மொழிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தது இந்த இடப்பெயர்வுதான். தென்கிழக்கு ஆசியாவின் லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் பேசப்படும் மோன்-கெமர் மொழிகளுடன் ஆஸ்ட்ரோ-ஏசியாடிக் மொழிகள் நெருங்கிய தொடர்புடையவை.

இன்றைக்குக் கஸகஸ்தான் என்றழைக்கப்படும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கான நான்காம் (கடைசி) இடப்பெயர்வு நிகழ்ந்தது. ஆரியர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட மத்திய ஆசியாவின் புல்வெளிப் பகுதியைச் சேர்ந்தவர்கள், 4,000-3,500 ஆண்டுகளுக்குமுன் தெற்காசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்தார்கள். இந்த இடப்பெயர்வு 4,000 முதல் 3,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆயிரமாண்டு காலத்தில் நிகழ்ந்தாக நம்பப்பட்டுவந்தது. ஆனால், தற்போது கிடைத்திருக்கும் மரபணுத் தரவுகள், பொ.ஆ.மு. 2000 முதல் 1500-க்கு இடைப்பட்ட 500 ஆண்டு காலத்தில்தான் இந்த இடப்பெயர்வு நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதே மக்கள் குழுவின் ஒருபகுதிதான், அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஐரோப்பாவுக்கு நகர்ந்திருந்தது.

இன்றைய இந்தியாவின் (தொல்பழங்காலத் தெற்காசியா) எந்தப் பகுதியில் வாழும் மக்கள்தொகைக் குழுக்களை எடுத்துக்கொண்டாலும் – அது சாதியப் படிநிலையில் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் – மேற்சொன்ன நான்கு பெரிய இடப்பெயர்வுகளால் உருவானவையே. இன்றைய இந்திய மக்கள் குழுக்கள் அனைத்தும், இந்த நான்கு இடப்பெயர்வுகளின் வம்சாவளியை வெவ்வேறு அளவுகளில் சுமந்துகொண்டிருப்பவையே.

இந்தியர்களின் வம்சாவளிக்கான ஆதாரம், முதல் இந்தியர்களிடம் இருந்து வந்த ஒன்று என்ற கண்டறிதல் திகைக்க வைக்கிறது. ‘முதல் இந்தியர்கள்’ யார் என்ற கேள்வி எப்போதும் நம் ஆவலைத் தூண்டிவந்திருக்கிறது. இன்றைய ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் முதலில் குடியேறிய ஆதி இந்தியர்களின் வம்சாவளித் தொடர்ச்சியை இந்திய மக்கள்தொகை தனக்குள் சுமந்துகொண்டிருப்பதால், நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்வதன் மூலம் நம் மூதாதையர்கள் யார் என்பதற்கான விடையைக் காணலாம்; இது ஓர் முக்கியத்துவம் வாய்ந்த கண்டறிதல் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் உள் இடப்பெயர்வுகள் நடந்தனவா? அவை எவ்வளவு தொலைவுக்கு நீண்டிருந்தன?

வடமேற்கு இந்தியாவில் பரவிய வேளாண்மையே தன்னளவில் ஒரு உள் இடப்பெயர்வுதான். ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெறத் தொடங்கும்போது, மக்கள் அந்த இடத்தில் தங்குகின்றனர்; அப்போது முன்பைவிட குறிப்பிட்ட பகுதியில் மக்கள்தொகை அதிகரிக்கத் தொடங்கும். இது மற்ற பகுதிகளுக்கு இடப்பெயர்வை நிகழ்த்தி, அந்த மக்கள்தொகைக்கு மறுவடிவம் கொடுப்பதில் சென்று முடிகிறது. ஆகவே, உள் இடப்பெயர்வு என்பது எப்போதும் பெரிய இடப்பெயர்வுகளின் ஒரு பகுதிதான்.

பொ.ஆ.மு. 1900 வாக்கில் தொடங்கிய சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கும் உள் இடப்பெயர்வுகளுக்கும் தொடர்பு உண்டு. இன்றைக்கு வட இந்தியா, தென்னிந்தியா என்று அழைக்கப்படும் பகுதிகளுக்கு மக்கள் அப்போதுதான் நகர்ந்தார்கள். சிந்துவெளி நாகரிகத்தினர் புனிதங்களாகச் சுமந்துகொண்டிருந்த மொழி, பண்பாடு, நம்பிக்கை முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இடம்பெயர்வின்போது சுமந்து சென்றார்கள். ஆகவேதான், இன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முற்றம் வைத்து வீடு கட்டுதல், மரங்களைப் புனிதமாகக் கருதுதல் போன்ற பண்பாட்டுச் சின்னங்களின் ஆதாரம், சிந்துவெளி நாகரித்தோடு ஒப்புமைப்படுத்திப் புரிந்துகொள்ளப்படுகிறது. இன்றைய இந்தியாவுடன் இணைந்திருக்கும் ஒரு பண்பாட்டுப் பசையாக ஹரப்பர்களையும் அவர்களுடைய நாகரிகத்தையும் கருதலாம். நாம் இன்றைக்குக் குழந்தைகளுக்குச் சொல்லும் பஞ்சதந்திரக் கதைகள், ஹரப்பர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லத் தொடங்கியவையாக இருக்கக்கூடும். சிந்துவெளியின் சின்னம் ஒன்றில் பானையில் கல்லைப் போடும் காக்கை ஒன்றின் சித்திரம் உள்ளது. தங்கள் மொழிகளையும் பண்பாட்டையும் அவர்கள் பரப்பினார்கள். `எர்லி இந்தியன்ஸ்’ முன்வைத்திருப்பதைப் போல், அவர்கள் பூர்வ-திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும்.

பொ.ஆ.மு. 2000 – 1500 காலகட்டத்தில் மத்திய ஆசியாவில் இருந்து வட இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களால் மொழிமாற்றம் ஏற்பட்டது. இந்தோ-ஐரோப்பிய மொழி அல்லது தொடக்க நிலை சம்ஸ்கிருதம் அல்லது பிராகிருதம் என்று கருதப்படும் மொழிகளை ஆரியர்கள் கொண்டுவந்தார்கள். அவர்களுடைய இடப்பெயர்வு ஒப்பீட்டளவில் தென்னிந்தியாவில் குறைவாக இருந்ததால், ஹரப்பர்களின் மொழி தென்னிந்தியாவில் செழித்தது. திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்டவை இன்றைக்கு இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களால் பேசப்படுகின்றன.

இந்திய வரலாற்று ஆய்வாளர்களும் அறிவியலாளர்களும் உண்மையைச் சொல்வதில்லை, சார்புடன் செயல்படுகிறார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை ஒரு பிரிவினர் முன்வைக்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இது உண்மைக்கு நேரெதிரானது. எனக்குத் தெரிந்த அறிவியல்-வரலாற்றுத் திரிபுகளுள் மிக மோசமானவை வாட்ஸ்அப் குழுக்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் திட்டமிட்டுப் பரப்பப்படுபவையே. இந்தக் கட்டுக்கதைகளை உருவாக்குபவர்கள் தொழில்முறை வரலாற்று ஆய்வாளர்கள் அல்லர்; அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தொண்டர்கள். கடந்த காலத்தில் நிகழ்ந்தவை குறித்து தொழில்முறை வரலாற்று ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளைப் பூசி மெழுகி, தங்களுடைய புராணக் கதைகளைப் புகுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள பரப்புரையாளர்களிடம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் அரசியல் பரப்புரையின் நோக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் வரலாற்றை மாற்றி எழுத அவர்கள் விரும்புகிறார்கள்.

தொழில்முறை வரலாற்று ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, ஒரு வரலாற்றுத் தரவுக்கான பொருள் விளக்கம் (Interpretations) சார்ந்து அவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட-இறுதி செய்யப்பட்ட தகவல்கள் சார்ந்து மிக அரிதாகவே அவர்கள் வேறுபடுகிறார்கள். புராணங்களுடனும், அரசியல் கற்பனைகளுடனும் வரலாற்றுத் தகவல்கள் முரண்படும்போதெல்லாம், புராணங்கள்-அரசியல் கற்பனைகளை அவர்கள் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். ஆக, நாம் இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல், தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை மாற்றி எழுதிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களுடைய பரப்புரையாளர்களும்தான்.

இந்தியாவில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக ராகிகரியில் பண்டைய மரபணு சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட வசந்த் ஷிண்டே, நீரஜ் ராய் ஆகியோர் தங்கள் ஆய்வு முடிவுகளுக்கு முரணான தகவல்களைச் செய்தியாளர் சந்திப்பில் கூறியது சர்ச்சையானது. இதற்கு அரசியல் அழுத்தம், அரசியல் சார்பு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

இந்தக் கேள்விக்கு என்னால் நேரடியாகப் பதில்கூற முடியாது. அதேநேரம் ஊடகங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன் அடிப்படையில் பேசலாம். அந்த ஆராய்ச்சிக் கட்டுரை முன்வைக்கும் முடிவுகளும், அந்த முடிவுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளும் முற்றிலும் முரணானவை என்பதை யாரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டில் (2019) வெளியான இரண்டு மரபணுவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒரே முடிவுகளை எட்டி ஒன்றுக்கு மற்றொன்று ஆதரவாகத் திகழ்கின்றன: ஒன்று, 65,000 ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி இந்தத் துணைக்கண்டத்துக்கு இடம்பெயர்ந்த முதல் இந்தியர்களும் ஈரானின் ஸாக்ரோஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த உழவர் குழுவுமே வடமேற்கு இந்தியாவில் வேளாண் புரட்சியைத் தொடங்கி, சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்த மக்கள் குழு என்பது; இரண்டு, மத்திய ஆசியப் புல்வெளிப் பகுதி எனப்படும் இன்றைய கஸகஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் (ஆரியர்கள்), இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் பொ.ஆ.மு. 2000 முதல் 1500-க்குள் கணிசமான அளவில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், சிந்துவெளி நாகரிகம் என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிகள் இந்தியாவுக்கு வருவதற்கு முந்தையது அல்லது ஆரியர்களுக்கும் முந்தையது.

ஆனால், பெரும்பாலான ஊடகங்களில் வெளியான செய்திகள் இதற்கு நேர்மாறாக இருந்தன: ஹரியாணாவின் ராகிகரியில் உள்ள சிந்துவெளித் தொல்லியல் தளத்தில் பெறப்பட்ட டி.என்.ஏ. மாதிரியில் ஆரிய வம்சாவளித் தொடர்பு இல்லை; ஆகவே, ஆரியர்கள் இடப்பெயர்ந்தவர்கள் அல்லர் என்று அந்தச் செய்திகள் கூறின. இது முற்றிலும் திரிக்கப்பட்ட, தவறான வரலாற்று விளக்கம். சிந்துவெளி டி.என்.ஏ-வில் ஆரிய வம்சாவளித் தொடர்பு இல்லை என்ற தகவல், ஆரியர்கள் சிந்துவெளி நாகரிகம் செழித்திருந்த காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கவோ, அங்கு வாழ்ந்த மக்களுடன் கலந்திருக்கவோ இல்லை; அவர்கள் அதற்குப் பிற்பாடு வந்தவர்கள்தான் என்பதை வலுவான ஆதாரத்துடன் தெளிவுபடுத்துகிறது. அதேநேரம் இன்றைய இந்தியர்களின் டி.என்.ஏ.வில் ஆரிய வம்சாவளித் தொடர்பு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் வரலாறு, அறிவியல் இரண்டுக்கும் பரவலான வரவேற்பு இருந்ததில்லை. ஆனால், கடந்த ஆண்டு நிலைமை மாறியதாகத் தெரிகிறது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

உலக நாடுகளில் இந்தியா போன்ற வெகு சில நாடுகளில் மட்டுமே அரசியல் விவாதங்களில் தொல்பழங்காலம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் அறிவியலாளர்களும் கல்வியாளர்களும் மட்டுமே தொல்பழங்காலம் குறித்த விவாதங்களில் ஈடுபடுகிறார்கள்; அரசியல்வாதிகளோ, அரசியல் இயக்கங்களின் தொண்டர்களோ இதைக் கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் நாடு, தேசியம் குறித்த சிந்தனைகளில் பல நாடுகள் ஒரு முடிவை எட்டிவிட்டன. அவர்களைப் பொறுத்தவரை தேசியம் என்பது தொல்பழங்காலத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல.

எடுத்துக்காட்டாக, பண்டைய டி.என்.ஏ-வைப் பயன்படுத்தி, இங்கிலாந்தில் சுமார் 9,000 அல்லது 10,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மனிதனுடைய முகத்தை மறுகட்டமைப்புச் செய்தார்கள். ‘செடார் மேன்’ என்று இணையத்தில் தேடினால் அந்த முகத்தைப் பார்க்கலாம். கருப்புத் தோலும் நீலக் கண்களையும் கொண்டிருந்த அந்த மனிதன் ஒரு வேடன். இன்றைக்கு வெள்ளை நிறத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இங்கிலாந்து மக்கள், இந்தப் படத்தையும் கண்டறிதலையும் ரசித்தார்கள். ஆனால், ஒருபோதும் அங்கு அது அரசியல் விவாதமாக, சர்ச்சையாக மாறாது.

இந்தியாவில் தொல்பழங்காலம் அரசியல் விவாதமாக மையம் கொண்டிருப்பதற்கு, யார் பெரியவர் என்ற போட்டி மிகுந்த ஒரு களமாக அது இருப்பதுதான் காரணம். பல்வேறு தரப்புகள் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள வேறுபட்ட வரலாறுகளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றன. தேசம் குறித்த நம்முடைய சிந்தனை என்பது முன்பு எப்போதையும்விட இன்றைக்குப் போட்டிமிகுந்த ஒன்றாக மாறியிருக்கிறது. அதனால்தான், தொல்பழங்காலம் குறித்த புரிதல் இந்தியாவில் இன்றைக்கும் ஒரு யுத்தகளத்தை ஒத்திருக்கிறது.

தேசம் குறித்த இரண்டு வெவ்வேறு கருத்தாக்கங்களுக்கு இடையிலான மோதலில், தொல் பழங்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். தேசம் குறித்த முதல் கருத்தாக்கம் சாதி, மதம், மொழி, இடம் என எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒவ்வொருவரையும் இந்தியன் என்ற ஒரே புள்ளியில் இணைத்து, காலனி ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் போராட்ட காலம் தொட்டுத் தொடர்ந்துவருகிறது.

இதற்கு மாறாக, கடந்த ஒரு நூற்றாண்டாகத் தேசம் குறித்து முன்வைக்கப்படும் இரண்டாம் கருத்தாக்கமோ, நம்முடைய தேசத்தைப் பெரும்பான்மை மதத்தின் அடிப்படையில் மட்டுமே வரையறுத்து, மற்ற சமூகங்களை அதிலிருந்து விலக்கிவைக்கிறது. தேசம் குறித்த முதல் கருத்தாக்கம் தாஜ் மகாலை தேசியச் சின்னமாகவும் காந்தியை தேசத் தந்தையாகவும் முன்னிறுத்தியது; அதேவேளை, இரண்டாம் கருத்தாக்கமோ தாஜ் மகாலை தேசிய அவமானமாகவும் காந்தியை வில்லனாகவும், அவரைப் படுகொலை செய்த கோட்சேவைக் கதாநாயகனாகவும் முன்னிறுத்துகிறது.

இந்த இரு கருத்தாக்கங்களுக்கும் இடையிலான மோதலில், தொல்பழங்காலம் ஓர் ஆடுகளமாக உள்ளது. ஏனென்றால், சிறுபான்மை மதங்களை விலக்கி வைக்கும் தரப்பினர், உலகிலுள்ள மற்ற மக்கள்தொகைக் குழுக்களைப் போலவே இந்தியர்களும் பல்வேறு இடப்பெயர்வுகளால் உருவானார்கள்தான் என்ற வரலாற்று-அறிவியல் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

வரலாற்றின் மீது சமீபகாலமாக ஆர்வம் பெருகுவதற்கு, `வரலாற்றின் அரசியல் முக்கியத்துவம்’ ஒரு வகையில் காரணம்தான். ஆனால், அது மட்டுமேதான் காரணம் என்று கூற முடியாது. பண்டைய டி.என்.ஏ. மூலம் தொல்பழங்காலம் குறித்த புரிதலை மேம்படுத்தும் வகையில் வெளியாகும் கண்டுபிடிப்புகள்-கண்டறிதல்கள் புதிய வெளிச்சத்துக்கு இட்டுச்செல்கின்றன என்பதும் இதில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உண்மை.

சிந்துவெளிக்கும் திராவிட இன மக்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா?

திராவிடமும் ஆரியமும் இனங்கள் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; இரண்டுமே மொழிக் குடும்பங்கள். திராவிடர் என்ற சொல் திராவிட மொழிகளைப் பேசும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைச் சுட்டுகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக்குழுவான இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசும் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆரியர் என்று தங்களுக்குப் பெயர் சூட்டிக்கொண்டார்கள். அதனால் இது இனம் சார்ந்த கேள்வியல்ல; மொழி சார்ந்ததே. ஹரப்பர்கள் பேசியது இன்றைய திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் மூதாதை மொழி அல்லது பூர்வ-திராவிட மொழி. அந்த வகையில், ஹரப்பர்கள் பேசியது இன்றைய திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் மூதாதை மொழி அல்லது பூர்வ-திராவிட மொழி. இது மரபணுவியல், மொழியியல், தொல்லியல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து கிடைத்த வலுவான ஆதாரங்கள் மூலம் உறுதியாகிறது.

மிகச் சிறந்த அறிஞரும் கல்வெட்டியலாளருமான மறைந்த ஐராவதம் மகாதேவன், வெகுகாலத்துக்கு முன்பே தன் உள்ளுணர்வால் இதைத் தெரிந்து கொண்டிருந்தார்: சிந்துவெளி மரபுகள் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் பொதுவாக இருக்கும் அதேநேரம், அதன் மொழி வளம் இன்றைக்குத் தென்னிந்தியாவிடம்தான் உள்ளது.

O

  1. (இந்து தமிழ் திசை – பொங்கல் மலர் 2020இல் வெளியான இந்த நேர்காணலின் தேர்ந்தெடுத்த பகுதிகள் 2020 ஜனவரி 28 அன்று இந்து தமிழின் ‘ஆறாம் அறிவு’ இதழில் வெளியாகின)

Leave a Reply