ஈழத்தில் சோழரின் சுவடுகள்

இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறிய நாடான இலங்கை பல வரலாற்று தடங்களைக் கொண்டிருக்கிறது.

 குறிப்பாகத் தமிழர்களின் வரலாற்று எச்சங்களை தாங்கியிருக்கும் அற்புத நாடாக திகழ்ந்து வருகிறது. இராமாயணப் புராண நிகழ்வுகள் நடைபெற்ற இடமாக கருதப்படும் இலங்கை, அதனை ஆண்ட மன்னன் இராவணனின் பெயரால் “இராவணபுரி” என்றும். “இலங்கை” என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீவு நகரத்திற்கு  “இலங்கேஸ்வரம்”, ” இலங்காபுரி”, “சிலோன் ” என்ற மற்ற பெயர்களும் உண்டு.

இலங்கையில் பிரதான மதமாகக் கருதப்பட்டு வருவது புத்த மதமே ஆகும். கி.மு 3 – ம் நூற்றாண்டில் பௌத்த மதத்தைப் பரப்ப தன் மகனையும் மகளையும் அனுப்பி வைத்ததாக அசோகரது ஆவணங்கள் கூறுகின்றன. அதன் பின் அங்கு ஏராளமான மடாலயங்களும் விகாரைகளும் எழுந்தன.

சோழர்களின் ஆதிக்கம்

இலங்கையில் சோழ மன்னர்களின் ஆதிக்கம் கி.மு 3- ம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று இலங்கை இலக்கியமான “மகாவம்சம்” கூறுகிறது. அதவாது இந்நிகழ்வு கி.மு 160 – 140 க்குள் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் பின்வரும் செய்தியினைக் கூறுகிறது.

” கி.மு 2- ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் “ஏழாரன்” என்னும் சோண்ணாட்டு அரசன் ஒருவன் ஈழத்திற்கு வந்து இலங்கையை வென்று 45 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.”

கி-மு 2 – ம் நூற்றாண்டின் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னன் இலங்கையை ஆண்டதாக கலிங்கத்துப்பரணி கூறுகிறது.

தாலமியின் பயணக்குறிப்புகளில் சங்க கால சோழர்களைப் பற்றியும் அவர்களின் துறைமுக பட்டிணமானக் காவிரிபூம்பட்டிணத்தையும் குறிப்புகள் உள்ளது.

சங்க கால சோழர்களுக்கு பின் அதாவது கி.பி 8 – ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சிப்பெற்ற முற்கால சோழ மரபினரான விசயாலயன் வழி வந்த மன்னர்கள் ஈழத்தில் தங்கள் ஆட்சியை பரப்ப பல முயற்சிகளை மேற்கோண்டனர் என்றாலும் அம்முயற்சிகள் எளிதாக வெற்றி பேறவில்லை .

ஏறத்தாழ 100 வருடங்கள் கழித்தே இலங்கை சோழர் வசம் ஆனது. சங்க கால சோழர்களை விட முற்கால சோழர்களே இலங்கை ஆட்சிக்கு உறுதியான வித்திட்டனர்.

சோழர் கொடியும் வெற்றிக்கனியும்

ஈழநாடு சோழர்களின் கைகளுக்குள் கொண்டு வர வித்திட்டவர்கள் முதலாம் பராந்தகனும் அவன் வழி வந்தவர்களுமே ஆவார்கள்.

சோழர்கள் ஈழத்தில் பல்வேறு படையெடுப்புகளை நடத்தியிருந்தாலும் உடனடியாக வெற்றித்திருமகள் அவர்கள் வசமாகவில்லை பல தோல்விகளை சந்தித்தப்பிறகு தான் சோழர்களால் வெற்றிக்கனியை பறிக்க முடிந்ததது என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஈழ ஆட்சிக்கு அடித்தளமிட்ட சோழ மன்னர்கள்

முதலாம் பராந்தகன் (கி.பி 907 – 953)

ஆதித்ய சோழனின் மகனான முதலாம் பராந்தகன் ஈழ மண்ணில் சோழர் ஆட்சி வளர அடிகோலியவன்.

இவனுக்கும் பாண்டிய மன்னன் இராசசிம்மனுக்கும் நடந்த போரில் வெற்றி பெற்ற பராந்தகன் அடுத்து ஈழப்போருக்கு ஆயத்தமானான். போரில் தோற்றோடிய இராசசிம்மன் 5 – ம் காசிபனின் உதவியை நாடினான் தன் மணிமுடியையும் அவனிடம் ஒப்படைத்தான்.

ஈழ மன்னனை தோற்கடிப்பதற்காகவும் பாண்டியன் முடியை மீட்பதற்காகவும் படையெடுப்பு நடத்தினான் ஆனால் மணிமுடியை மீட்க இயலவில்லை சோழர் படையும் ஏமாற்றத்துடன் திரும்பியது.

இரண்டாம் பராந்தகன் (கி.பி 956 – 973)

இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தர சோழன் தன் ஆட்சிக்காலத்தில் வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனோடு சேவூர் என்னும் இடத்தில் போர் நடத்தினான். அம்மன்னனையும் அவனுக்கு துணையாக வந்த இலங்கை அரசனையும் தோற்கடித்தான் இப்போரில் நான்காம் மகிந்தன் பாண்டிய அரசனுக்கு உதவி செய்வதற்காக தன் படைகளை அனுப்பி வைத்தான்.

அதனால் சீற்றங்கொண்ட சோழ மன்னன் இலங்கைக்கு தன் படைகளை அனுப்பினான். ஆனால் சோழப்படை போரில் தோற்று படைத்தலைவனையும் இழந்து திரும்பியது.

முதலாம் இராசராசன் (கி.பி 985 – 1014)

கி.பி 985 – ல் அரியணை ஏறிய முதலாம் இராசராசன் காலத்தில் இருந்து ஈழத்தில் சோழரின் ஆட்சி நிலைப்பெற தொடங்கியது எனலாம் .

இராசராசன் ஈழத்தின் மீது படையெடுத்து சென்ற காலம் கி.பி -991 ஆகும் மற்றும் இப்படைக்கு தலைமை ஏற்று சென்றவன் அவன் மகன் இராசேந்திரன் ஆவான். இப்போரில் ஈழ அரசன் 5 – ம் மகிந்தனை தோற்கடித்து நாட்டின் வடபகுதியை கைப்பற்றினான்.

இராசராசனின் நிர்வாகப்பிரிவுகள்

ஈழத்தில் வெற்றிக்கொடி நாட்டிய இராசராசன் அங்கு சோழரின் நிர்வாகப் பிரிவினை உருவாக்கினான். ஈழ மண்டலத்திற்கு மும்முடிச் சோழ மண்டலம் எனப்பெயரிட்டான். அனுராதபுரம் தலைநகராக மாற்றப்பட்டது. அனுராதபுரமும் மாதோட்டமும் இராசராசபுரம் எனப்பட்டது.

சோழர் கால முக்கியமான இலங்கை நகரங்கள்

1) பொலனருவா

2) ரோஹணா

3) அனுராதபுரம்

4 ) மாதோட்டம்

5) காந்தலை

6) திரிகோணம்

திருவாலாங்காடு செப்பேடுகள் கூறும் இராசராசனின் ஈழ வெற்றி

முதலாம் இராசராசனின் ஈழப்போர் வெற்றியை திருவாலாங்காட்டு செப்பேடுகள் பின்வருமாறு விவரிக்கின்றன.

”குரங்குகளின் துணை கொண்டு கடல் மீது பாலம் அமைத்து இலங்கை சென்று அரசனை தனது கூரிய அம்புகளால் கொன்றவன் இராமன். அவனை புறந்தள்ளி தனது வலிய கடற்படை வழியாக ஈழத்தை அடைந்து இலங்கை அரசனை வெற்றி கண்டவன் இராசராசன்.

இராசராசனின் படைப்பிரிவுகள்

1) பார்த்திவ சேகரப்பிரிவு

2) சமரகேசரி

3) விக்ரம சிங்கப் பிரிவு

4 ) தாயதோங்கன் பிரிவு

5) தானதோங்கன் பிரிவு

6) சண்டபராக்கிரமன் பிரிவு

7) இராசகுஞ்சரன் பிரிவு

முதலாம் இராசேந்திரன் (கி.பி 1012 – 1044)

முதலாம் இராசேந்திரன் தன் தந்தைக்கு பிறகு இலங்கையில் சோழர் நிர்வாகத்தை திறம்பட நிர்வகித்தான். தன் முன்னோர்களால் கொண்டு வர முடியாத பாண்டியனின் மணிமுடியை மீட்டவன். இப்போர் கி.பி 1017 – ல் ஈழ நாட்டின் மீது படையெடுத்து சென்றான் ஈழ நாட்டின் தென் பகுதியாகிய ரோகண நாட்டை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த ஐந்தாம் மகிந்தன் இறக்கவே அவன் மகன் விக்கிரமபாகு என்பவன் ஈழநாடு முழுவதையும் சோழரிடமிருந்து மீட்கும் நோக்குடன் போரிட்டான்.

மூலம்: jaycreation

முதலாம் இராசாதிராசன்(கி.பி 1018 – 1054)

முதலாம் இராசேந்திரன் காலத்தில் தொடங்கப்பட்ட போரை அவன் மகன் இராசாதிராசன் தொடர்ந்து நடத்தி வெற்றிக்கண்டான். வீரசலாமேகன், சீவல்லபன், மதனகாமராசன் ஆகிய சிங்கள தளபதிகள் தோற்றோடினர். இக்காலம் கி.பி 1041 ஆகும்.

இரண்டாம் இராசேந்திரன் (கி.பி 1054 – 1063)

முதலாம் இராசாதிராசனுக்கு பிறகு அவன் சகோதரன் இரண்டாம் இராசேந்திரன் அரியணை ஏறி ஈழப்போரை தொடர்ந்து நடத்தினான்.

வீர இராசேந்திரன் (கி.பி 1062 – 1070)

வீர இராசேந்திரன் பெரும்படை ஒன்றை கி.பி 1067 – ல் அனுப்பினான். சிங்கள மன்னன் விசயபாகு என்பவன் சோழரின் ஆட்சிக்குட்பட்ட ஈழ நாட்டுப் பகுதியை மீட்க முயன்று தோற்று ஓடினான்.

இலங்கை பிரிதல்

கி.பி 1070 – ம் ஆண்டு வரை இலங்கை சோழரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆதன் பின் முதல் குலோத்துங்கனின் காலத்தில் பிரிந்து சிங்கள மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தள்ளது.

இரண்டாம் விசயபாகு என்பவன் பலமுறை குலோத்துங்கனோடு போரிட்டு இறுதியில் ஈழ நாடு முழுவதையும் கைப்பற்றி அரசாண்டான்.

இராசேந்திரன் மற்றும் அவனின் புதல்வர்களின் ஆட்சிக்குப்பிறகு ஈழ நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது.

இரண்டாம் இராசாதிராசன்(கி.பி 1166 – 1178)

இராசாதிராசன் அரியணை ஏறிய இரண்டொரு ஆண்டுகளில், பாண்டிய நாட்டில் அரச உரிமைக்காக பராக்கிரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும் சண்டையிட்டுக் கொண்டனர்.

சோழ மன்னன் இராசாதிராசன் குலசேகர பாண்டியனுக்கு உதவினான். ஆனால் நன்றி மறந்த பாண்டியன் சிங்கள மன்னன் பராக்கிரம பாகுவின் நயவஞ்சகத்திற்கு இலக்காகி சோழரை எதிர்த்தான்.

அதனால் கோபம் கொண்ட சோழன் பாண்டினை அடக்கி சிங்களனை வென்று ஈழ ஆட்சியை கைப்பற்றினான்.

மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி 1178 – 1228)

பராக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியனோடு போரிட்டு வந்தான். சிங்களரின் உதவியை நாடினான். ஆனால் இப்போரில் சிங்கள படையை வெல்வதற்காக கி.பி 1188 – ல் படையெடுத்து சென்று வெற்றி பெற்று ஈழ ஆட்சியை கைப்பற்றினான்.

சோழரின் சுவடுகள்

இலங்கையில் உள்ள சோழரின் சுவடுகளை கீழக்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1) கோவில்கள் 2) கல்வெட்டுகள் 3) நாணயங்கள் 4) ஏரிகள் 5) குளங்கள்

சோழரின் நாணயங்கள்

சோழர்கள் நிர்வாகத்தை கல்வெட்டுகள் மற்றும் கோயில்கள் மட்டுமில்லாமல் அவர்களின் நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன.

அவை பெரும்பாலும் பொன்னால் செய்யப்பட்டு இருந்தன. காய்ச்சி உருக்கி வெட்டினும் மாற்றும் நிறையும் குன்றாது என அதிகாரிகள்.

நாணயங்களின் தரத்தை ஆய்வு செயததற்கு அறிகுறியாகத் துளையிடம் பெற்ற துளைப்பொன்னும் இருந்தன.

இராசராசன் மட்டுமில்லாமல் பராந்தக சோழனின் ஈழக்காசுக்களும் கிடைத்துள்ளன. முதலாம் இராசராசனின் ஈழக்காசுக்கள் பெரும்பாலும் உருவங்கள் கொண்டதாகவும் நாகரி மற்றும் கிரந்த எழுத்துக்களை உடையதாகவும் இருக்கும்.

இராசராசன் வடஅனுராதபுரத்தை ஆண்டபோது பொன்னால் ஆன நாணயத்தை “ஸ்ரீ ராசராசன்” என்னும் வாசகத்துடன் வெளியிட்டான். “மாடை’ என்னும் நாணயங்களும் அவனால் வெயிளிடப்பட்டதாகும்.

ஈழக் காசு

முதலாம் இராசராசன் தன் காலத்தில் 49 வகை காசுக்களை வெளியிட்டான் ஈழக்காசும் அவற்றுள் ஒன்றாகும். அவனது மகனான முதலாம் இராசேந்திரன் தன் ஈழ ஆட்சியின் போது “யுத்தமல்லா” என்னும் பெயர் பொறிக்கப்பட்ட தங்க காசுக்களை வெளியிட்டான்.

இராசனுடைய ஈழக்காசின் முன்புறத்தில் ஒரு மனிதன் நிற்பது போலவும் மற்றொரு புறம் நாகரி எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அரசனுடைய பெயரும் உள்ளன. மற்றொன்று இராசேந்திரனின் ஈழக்காசும் ஆகும்.

இதன் பின்புறம் “உத்தம சோழன் ” என்ற நாகரி பொறிப்பு உள்ளது. உத்தமசோழனின் வெள்ளிக்காசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேந்தலை பட்டிணம் என்ற இடத்தில் தஞ்சை தமிழப் பல்கலை கழகம் நடத்திய அகழாய்வில் 8 செப்புக்காசுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வகையான நாணயங்கள் ஈழத்தில் சோழர்களின் பொருளாதார மற்றும் நிர்வாக நிலையை பறைச்சாற்றுகிறது –

கோயில்கள்

ஈழ மண்டலத்தை பல ஆண்டுகள் ஆட்சிப்புரிந்த சோழர்கள் அங்கு கோயில்கள் சிலவற்றை கட்டியுள்ளனர். அவற்றுள் முக்கியமானவற்றை பற்றி இக்கட்டுரை வாயிலாக காண்போம்.

வானவன் மாதேவீச்சுரம்

பொலனருவா நகரில் இராசராசன் தன் தாய் வானவன் மாதேவிக்காக கோயில் ஒன்றை கட்டியுள்ளான். வானவன் மாதேவி ஈஸ்வரம் என்று அழைக்கப்படும் இக்கோயில் இரண்டு தளங்களை கொண்ட கற்றளியாகும். தஞ்சையில் கட்டப்பட்ட பெரிய கோயிலுக்கு ஈழ நாட்டிலுள்ள ஊர்களை நிவந்தமாக அளித்துள்ளதை பற்றி கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகிறது.

மேலும் அனுராதபுரத்தில் ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் என்ற மற்றொரு சிவன் கோயிலை கட்டியுள்ளான். 15 – க்கும் மேற்பட்ட சோழர் அதிகாரிகளும் வணிகர்களும் கொடைகளை அளித்துள்ளனர். (கி.பி 1005)

படைவியா என்னும் இடத்தில் மேலும் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. அட்டகட்டே என்ற இடத்தில் உள்ள சிவன் கோயில் ‘உத்தம சோழ ஈஸ்வரம்’ எனப்பட்டது.

“மாதோட்டம்” எனப்படும் அருமொழி வளநாட்டில் சோழ அலுவலரின் கோயில் ஒன்று உள்ளது. இராசராச ஈஸ்வரம் எனப்பட்ட இக்கோயிலுக்கு பல தானங்களை அளித்துள்ளான்.

மேலும், இங்கு வைகாசி விசாகம் எனப்பட்ட பண்டிகைக்கு சில ஏற்பாடுகளை செய்துள்ளான். சிவன் கோயில்கள் மட்டுமில்லாமல் சில விஷ்ணு கோயில்களையும் உருவாக்கியுள்ளனர்.

முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டுகள் பொலனருவா வானவன் மாதேவி கோயில் உள்ளது.

தளயபெரும் பள்ளி புத்தர் கோயில்

தளய பெரும் பள்ளி என்ற புத்தர் கோயில் புத்தரின் பற்களை வைத்து வழிப்படும் கோயிலாகும். இக்கோயில் சிங்கள அரசன் விசய பாகுவின் காலத்தில் பெரும் புகழின் உச்சியில் இருந்தது. சோழ நாட்டை சார்ந்த “திருவேளைக்காரர்கள் ” பெரும் பள்ளி கோயிலை பராமரித்துவந்தனர்.

காந்தலை கோயில்

காந்தலை என்னும் ஊரில் உள்ள இராசராச வளநாட்டு பிரிவில் அமைந்துள்ளது. காந்தலை என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான “காந்தலா” என்னும் சொல்லில் இருந்து வந்துள்ளது.

இந்த காந்தலை கிராமம் அந்தணர்களுக்கென்று வழங்கப்பட்ட “இராசராச சதுர்வேதி மங்கலம் ” பிரம்மதேய” கிராமமாகும்.

முதலாம் இராசாதிராசனின் காலத்தை சேர்ந்த காந்தலை கல்வெட்டு ஈழத்தில் உள்ள சோழர்களின் நிர்வாகப் பகுதிகளை குறிக்கிறது.

சைவ வைணவக் கோயில்கள்

பொலனருவாவில் உள்ள வைணவக்கோயில் “பள்ளிக் கொண்டார்” கோயில் என்றும் அழகிய மணவாளர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருவீராமீஸ்வரமுடையார் கோயில் கல்வெட்டு இராசேந்திர சோழனின் படைத்தளபதி தேவன் சந்திமன் 2 காசுக்களை கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.

சிவதேவாலே கோயில் கல்வெட்டு இந்த அழகான கோயில் கருங்கல் மற்றும் சுண்ணாம்பினை கொண்டு கி.பி 10 – ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  அதிராசேந்திரனின் 3 – ம் ஆண்டு கல்வெட்டு வேள்ளாள சீராளன் என்பவன் வானவன் மாதேவி கோயிலுக்கு காசினை கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.

திருவாலீஸ்வரம் மற்றும் பத்தமடை பகுதிகளில் உள்ள கோயில்கள் முன்ருகை மகாசேனாயகர் என்னும் சோழ தளபதியால் பாதுகாக்கப்பட்ட கோயில்களாகும்.

கோயில்கள் மட்டுமில்லாமல் வணிகக் குழுவின் தளங்களும் மற்றும் சிறுவணிக நகரங்களும் அங்குள்ளன. சோழ அலுவலர்களால் இலுப்பை கடவை என்ற இடத்திற்கு அருகில் ஏரி ஒன்று வெட்டப்பட்டது.

“மாதோட்டம்” எனப்படும் மாந்தலை சோழர்களின் முக்கியமான கடற்படை நகரமாக திகழந்து வந்தது.

அனுராதபுரத்தில் உள்ள கல்வெட்டு 4 நாடுகளை சோந்த புத்த மத கொடையாளர்கள் மற்றும் பாதுகாவலர்களின் உருவங்கள் பெளத்த மத விகாரத்தில் உள்ளதை பற்றி கூறுகிறது.

மேலும் பல்வேறு அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்கள் கொடுத்த தானங்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கிறது.

1) செயமுர்த்தி நாடாள்வான் 2) முக்கரி நாடாள்வான் 3) திருபுவன தேவன் 4) தில்லைக்கரசு தியாக சிந்தாமணி 5) பணகனந்திவன்

வணிகர்கள் சேர்ந்த குழுவை “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” என்று அழைத்தனர்.

சோழரின் ஈழப்படையெடுப்பை கூறும் சில கல்வெட்டுகள்

1) மணிமங்கலம் கல்வெட்டு 2) திருவாலாங்காடு கல்வெட்டு 3) கன்னியாக்குமரி கல்வெட்டு 4) திரிபுவனம் கல்வெட்டுகள் 5) ஆரப்பாக்கம் கல்வெட்டுகள்

மணிமங்கலம் கல்வெட்டு

இக்கல்வெட்டு, இரண்டாம் இராசேந்திரன் காலத்தை சேர்ந்த கல்வெட்டாகும். மணிமங்கலம் கல்வெட்டு சோழ அரசர்கள் மற்றும் இளவரசர்களுக்கு கொடுக்கப்பட்ட நாடுகளை பற்றி குறிப்பிடுகிறது. இரண்டாம் இராசேந்திரனின் தம்பி வீரசோழன் என்பவன் கரிகாலன் என்ற பெயரோடு ஈழத்தில் ஆட்சி செய்ததை காந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது.

திருவாலாங்காடு கல்வெட்டு

திருவாலாங்காடு கல்வெட்டு, இரண்டாம் இராசாதிராசனின் சார்ந்த கல்வெட்டாகும். அக்கல்வெட்டு சோழருக்கும் சிங்களருக்கும் நடந்த போரைப் பற்றி குறிப்பிடுகிறது.

கன்னியாக்குமரி கல்வெட்டு

வீரராசேந்திரனின் கன்னியாக்குமரி கல்வெட்டு முதல் பராந்தகன் ஈழத்தின் மீது படையெடுத்து சென்று வெற்றிக்கொண்டு சிங்களாந்தகன் என்ற பட்டப்பெயர் பெற்றதை பற்றி விவரிக்கிறது.

திரிபுவனம் கல்வெட்டு

திரிபுவனம் கம்பனேஸ்வரர் கோயில் கல்வெட்டு, 3 – ம் குலோத்துங்கன் தன் ஆட்சிப்பரப்பை சக்கரகோட்டத்திலிருந்து சிங்கள அனுராதபுரத்திற்கு மாற்றினான். இக்கல்வெட்டு கிரந்த மொழி கல்வெட்டாகும்.

ஆரப்பாக்கம் கல்வெட்டு

இக்கல்வெட்டு, இரண்டாம் இராசாதிராசனின் 5 – ம் ஆட்சியாண்டு அதாவது கி.பி 1171- ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாகும். சோழர்கள் சிங்களர்களுக்கு எதிராக பெற்ற வெற்றியை கூறுகிறது.

இறுதியாக

கி.பி 8 – ம் நூற்றாண்டிலிருந்து 13 – ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த சோழர்கள் இலங்கையில் தங்களுடைய செல்வாக்கை முதலாம் பராந்தகன் காலத்தில் இருந்தே பெற தொடங்கினர் என்றாலும் அது இராசராசன் காலத்தில் தான் உன்னத நிலையை அடைந்தது எனலாம்.

கோயில்கள், கல்வெட்டுகள், வணிகத்தளங்கள், நாணயங்கள் என பல்வேறு சான்றுகள் ஈழத்தில் இருக்கின்றன.

கட்டுரை: ஆயிஷா பேகம்

Leave a Reply