மனிதகுல வாழ்வை நில அடிப்படையில் ஒப்பீட்டுப் பார்க்கையில் அது ஒருவரிடமிருந்து வேறுபட்டதாக அமைகின்றது. தொடக்க காலத்தில் நாகரிகமற்றுத் திரிந்த மனிதன் காலப்போக்கில் தம் அறிவின் முதிர்ச்சியால் நாகரிக வலைக்குள் நுழையத் தொடங்கினான்.
இதன் விளைவாக கற்காலத்தில் வாழ்ந்த மனிதனுக்கும், இக்காலத்தில் வாழும் மனிதனுக்குமிடையே மாற்றங்கள் பரவியுள்ளன என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இருப்பினும் மனித வாழ்வில் விஞ்ஞான வளர்ச்சி ஏறுமுகங்கொண்டாலும் சில மனிதர்களின் வாழ்வு குவளை மலர் காட்சியாகவே அமைகின்றது. குறிப்பாகப் பெரும்பாலும் மலைவாழ் (பழங்குடியினர்), நரிக்குறவ மக்களின் நிலை வெளிச்சத்திற்கு வராமல் இருளிலே மூழ்கிக் கிடக்கின்றது என்பது வௌ¢ளிடை மலை. மேற்சுட்டிய மக்கள் வரிசையில் நரிக்குறவ மக்களின் நிலையும் இவ்வாறே அமைகின்றது.
நெல்லை மாவட்டம் தென்காசி கீழவாலிபன் பொத்து எனும் பகுதியில் வாழும் நரிக்குறவ மக்களின் வாழ்வியலை ஏடுத்துரைக்கும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.
நரிக்குறவர் பெயர்க்காரணம்
வட இந்தியாவில் ஆரவல்லி மலைத்தொடர், மேவார், குஜராத் முதலிய பகுதியிலிருந்து கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் தமிழகம் வந்து குடியேறியதாகக் கருதப்படும் மக்கள் நரிக்குறவர்கள் ஆவர். இன்று இவர்கள் தமிழகம் முழுவதும் நாடோடிகளாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு நரிக்குறவர், குருவிக்காரர் என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள் தங்களை வாக்ரி என்று அழைத்துகொள்கின்றனர். ‘வாக்ரி’ எனும் குஜாரத்தியச் சொல்லுக்குப் பறவை அல்லது குருவிப் பிடிப்பவர் எனப் பொருள் அறியப்படுகின்றது.
குறவர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நரிக்குறவர்கள் மக்களை நினைப்போம். ஆனால் குறவர் சமூகத்திற்கும், நரிக்குறவர் சமூகத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. நரிக்குறவர் மொழி, பழக்க வழக்கங்கள் போன்றவை குறவர் இன மக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாகும். தமிழகத்தில் நாடோடி வாழ்க்கை நடத்திவரும் நரிக்குறவர்கள் நரியினை வேட்டையாடி அதன் இறைச்சியைப் புசிக்கின்றனர். தோலைப் பையாகச் செய்கின்றனர். நரிப்பல், நகம், வால், கொம்பு முதலியவற்றை மக்களிடம் விற்பனை செய்கின்றனர். இதனடிப்படையில் ‘நரிக்குறவர்’ என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
நரிக்குறவர் வகைகள்
நரிக்குறவர் பல வகையில் உள்ளனர். ‘உப்புக்குறவர், கறிவேப்பிலைக் குறவர், கேப்மாரிக்குறவர், பச்சைக்குத்திக் குறவர், குஞ்சுக் குறவர், காதுக்குத்திக் குறவர், கூடை முறம் கட்டும் குறவர், பஞ்சாரம் கட்டிக் குறவர், அம்மிக்கொத்திக் குறவர், பச்சைமலைக் குறவர், பவழமலைக் குறவர், ஊர்க் குறவர், பன்றிக் குறவர், எருக்கலவாரு குறவர், மூச்சுக்குறு குறவர், ஒரங்குறுக் குறவர், நாடு திரிகிற குறவர், தப்பலாயக் குறவர், குஞ்சுக் குறவர் எனப் பல்வேறு பெயர்களில் சுட்டுகின்றனர்’. (குறவர் வகையும் குலங்களும்: சுயக்கருத்துருவம் அடையாள உருவாக்கத்தில் வழக்காறுகளின் பங்கு, ப.73).
தென்காசியில் வசிக்கும் இம்மக்களின் பூர்வீகம் நெல்லை. பிழைப்பதற்காக இடம்பெயர்ந்து உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. வேட்டையின் மூலம் நரியைப் பிடித்துச் சமைத்து உண்டதால் நரிக்குறவர் என அழைக்கப்பட்டனர் என அறியமுடிகிறது.
மொழி நிலை
இவ்வின மக்கள் பேசும் மொழியை ‘மிக்சர் பாஷை’ ஆகும். இதுதான் இவர்களின் தாய்மொழியெனக் குறிப்பிட முடியாது. தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பல்வேறு இந்திய மொழிகளை கலந்து பேசுகின்றனர். ஒலிவடிவம் உண்டு. வரிவடிவம் இல்லை. இவ்வின மக்கள் அம்மா என்பதற்கு ‘அயா’ எனவும், அப்பா என்பதற்கு ‘பா’ எனவும் பேசுகின்றனர்.
கல்வி நிலை
தென்காசி நரிக்குறவ மக்களின் கல்விநிலை மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றது. கல்வி கற்க வாய்ப்பிருந்தும் பெரும்பாலும் கற்க நாட்டமில்லாதவர்களாகவே திகழ்கின்றனர். இவற்றிற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அறிய முற்படுகையில், ‘‘எங்க இனத்துல தொழில் பண்ணினால்தான் பொன்னு தருவாங்க படிச்சா பொன்னுதர யோசிப்பாங்க’’ எனக் கூறுகின்றனர்.
தன் முன்னோர்கள் காக்கா, குருவி பிடித்தலுக்காகவும், வேட்டையாடலுக்காகவும், தொழிலுக்காக ஊர் சுற்றுதலுக்காகவும் எனப் பல்வேறு இடங்களுக்குச் செல்வதால் நிலையான இருப்பிடம் இல்லை. இதனால் பள்ளியில் சென்று கல்வி பயில இடையூறுகள் ஏற்படுகின்றன எனக் கூறுகின்றனர். இவ்வாறு பிழைப்பைத் தேடி பல இடங்களுக்குச் செல்வதால் கல்வி மீது நாட்டமற்றவர்களாகத் விளங்குகின்றனர்.
இம்மக்களில் சிலர் அத்தி பூத்தாற் போல பள்ளிக்குச் சென்றுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆசிரியர், உடன்பயிலும் மாணவர்கள் ஆகியோரின் அணுகுமுறை எப்படி அமைகிறது என்பதை அறிய முற்படுகையில் ‘எந்தவொரு பாகுபாடின்றி எங்களுடன் பழகுகின்றனர். இருப்பினும் எதிர்பாராவிதமாக அடிக்கடி கெட்டவார்த்தை பேசுவதால் ஆசிரியரின் கண்டிப்புக்கு ஆட்படுகிறோம்.
இவ்வாறு கண்டிப்பதால் பள்ளி செல்வதற்குச் சிக்கலாக அமைகின்றது’ எனக் கூறுகின்றனர். இதுவரை அதிகபட்சம் எட்டு பேர் பள்ளிக்குச் சென்று ஐந்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளனர். அதில் சிலர் மூன்று, நான்கு வகுப்புகளில் இடை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் இம்மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக அமைந்துவிடும்.
தொழில் முறை
தென்காசி நரிக்குறவ மக்கள் ஒரே இடத்தில் நிலையாக வசிப்பதில்லை. ஏனெனில் பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் செல்லும் நிர்பந்தம் ஏற்படும் நிலை காணப்படுகின்றது. ஓரிடத்தில் ஆறு மாதமும், மற்றொரு இடத்தில் ஆறு மாதமும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசி, ஊசி, ஊக்கு, கயிறு போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் தம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, விலங்குகளை வேட்டையாடுதல், தேன் எடுத்து விற்பனை செய்தல் போன்ற தொழிலும் ஈடுபடுவர்.
அண்டை மாநிலமான கேரளாவில் திருவிழாக்கள் நடைபெறும்போது அங்கே தொழிலுக்குச் செல்வர். கைவேலைப்பாடமைந்த மாலை செய்வித்து விற்பனை செய்வர். இவர்களால் செய்யப்படும் மாலை, கையில் கட்டும் கயிறு போன்றவைகளை வாங்கி அணிந்து கொண்டால் இறையருள் கிடைக்கும் என்பது கேரள மக்களின் நம்பிக்கையெனக் குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் இவர்கள் சாபமிட்டால் பழிக்குமெனவும் உறுதிபடக் கூறுகின்றனர்.
உணவு முறை
ஒரு வேளையில் சமைத்த உணவை மூன்று நேரத்திற்கும் உண்ணும் பழக்கமுள்ளவர்களாகக் காண்கின்றனர். மாலை இரண்டு அல்லது மூன்று மணியளவில் உலையில் அரிசியிட்டு பெரிய சோற்றுப் பானையில் சமைப்பர். சமைத்த உணவைச் சாப்பிட்டு ஏழு மணிவரை குழுவாக அமர்ந்து பேசிவிட்டுப் படுக்கைக்குச் செல்வர்.
குலதெய்வம்
தென்காசி நரிக்குறவ மக்கள் இறை நம்பிக்கை உடையவராகத் திகழ்கின்றனர். இம்மக்களின் குல தெய்வம் காளி. அதுமட்டுமின்றி அட்டகாளி காளிச்சாமி, வயிராகன் ஆகிய தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றனர்.
பொழுதுபோக்கு
வேலையில்லாக் காலங்களில் பொழுது போக்கிற்காகத் தாயம், சீட்டுக்கட்டு, சில்லாங்குச்சி ஆகிய விளையாட்டினைப் பெரியோர், சிறியோர் விளையாடுவர். அதுமட்டுமின்றி காக்கா, குருவி அடித்தல், தேன் எடுத்தல், பச்சைக் குத்துதல் ஆகியவற்றை செய்வர். பட்டணம் பொடி, மூக்குப்பொடி, கணேஷ் புகையிலை, பீடி, சிகரெட், மதுபானம் ஆகியவற்றையும் வேலையின்றி இருக்கும் நேரங்களில் பயன்படுத்துவோமெனக் கூறியுள்ளனர்.
பொருளாதார நிலை
தென்காசி கீழவாலிபன் பொந்து எனும் பகுதியில் சுமார் இருபத்தி மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடம் புறம்போக்கு நிலமாகும். தற்போது பல்வேறு முயற்சிகளின் விளைவால் சொந்த பட்டாவாக மாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை வாங்கி வைத்துள்ளனர். தற்போது குடிசை வீட்டில் வசித்து வருவதால் மழை, வெயில் காலங்களில் இயற்கை சக்திகள் எளிதில் நுழையும் நிலையில் உள்ளன.
புதிய வீடு கட்டினால் பாதுகாப்புடன் வாழமுடியும். ஆனால் வீடு கட்டுவதற்குப் பொருளாதாரத்தில் பின்தங்கியே காணப்படுகின்றனர். ஆடம்பரமான வாழ்வு இல்லாவிடினும் அத்தியாவாசியம் பொருள் வாங்குவதற்கான நிலை மட்டும் உள்ளதெனக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் வசிக்கும் சிலரிடம் பழைய இருசக்கர வாகனத்தை (பைக்) விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக மதிப்பின்மை
யாரிடமும் கையேந்தாமல் சுய உழைப்பால் வாழ்க்கை நடத்தி வந்தாலும் சமூகத்தில் பிற மக்களிடமிருந்து போதுமான மதிப்பில்லையென வருந்துகின்றனர். இவ்வாறு ஏன் நிகழ்கின்றது? அதற்கு என்ன காரணம்? என்ற வினாக்களை முன்வைத்தபோது, ‘நாங்க குளிக்காம.. சுத்தமில்லாமல் இருப்போம். அப்புறம் அரை குறை ஆடையுடனும் அழுக்கு நிறைந்த ஆடையுடனும் இருப்பதால் எங்கள யாரும் மதிக்க மாட்டாங்க.’ எனக் குறிப்பிடுகின்றனர்.
போதைப்பொருள் பழக்கம்
இம்மக்களில் பெரியோர் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக மூக்குப்பொடி, கணேஷ் புகையிலை மற்றும் பீடி இவற்றைத் தொடர்ச்சியாக பின்பற்றி வருவதால் இவர்களுடைய பிள்ளைகளும் எளிதில் போதைப்பொருளுக்கு அடிமையாகி விடுகின்றனர். தற்போது அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையாயிருப்பது கவலைக்குரியதாக அமைகின்றது.
வீட்டிற்குத் தேவையான எந்த பொருள் வாங்க வேண்டுமென்றால் பெற்றோர் தம் பிள்ளையைக் கடைக்கு அனுப்புவது இயல்பு. அவ்வாறு கடைக்கு அனுப்பும்போது எனக்கு சிகரெட் அல்லது பீடி வாங்க காசு கொடுத்தால் கடைக்குச் செல்வேன் என அடம்பிடிக்கின்றனர். பெற்றோர் செல்ல இயலாத காரணத்தால் வேறு வழியின்றி அவன் கேட்கும் காசைக் கொடுத்து விடுகின்றனர். இதனால் இளம் வயதில் சீரழிவதற்குப் பெற்றோரே காரணமாக அமைக்கின்றனர் என்பது வருந்ததக்கச் செயலாகும்.
குடும்ப நிகழ்ச்சிகள்
குழந்தைப்பேறு முதல் இறப்பு வரை நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதைக் கடைப்பிடிப்பவர்களாகக் காணப்படுகின்றனர். கனிசமான மக்கள் தொகை இல்லாவிடினும் தம்முடன் வசிக்கின்ற சொற்ப உறவுகளிடம் தனது இன்ப துன்பத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். பூப்பெய்தல், திருமணம், வளைகாப்பு, குழந்தைப்பேறு, மறுமணம், இறப்புச் சடங்கு ஆகியவற்றிற்கு முக்கியத்துவத்துடன் நடத்தி வருகின்றனர்.
பொதுவாகப் பருவமடைந்த பெண்ணைப் பத்து நாட்களுக்குத் தனியே குடிசை அமைத்து, உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான பொருட்களைக் கொடுத்து உண்ண வைப்பர். குறிப்பிட்ட நாள் வந்ததும் தாய்மாமன் சீர் வரிசையுடன் தலைக்கு நீர் ஊற்றி வீட்டிற்குள் விடுவர். ஆனால், இவ்வின மக்களிடையே பருவமடைந்த பெண்ணைப் பாதுகாப்புடன் குச்சில் (குடில்) அமைத்து, ஆடவர் கண் படாதவாறு தனியாக வைக்கின்றனர். பூப்பெய்த இரண்டு நாட்கள் கழிந்த பின்பு தலைக்குத் தண்ணீர் ஊற்றி வெளியே நடமாட விடுவர். ஆக பூப்பெய்திய பெண்ணை நீண்ட நாட்களுக்குத் தனிமைப்படுத்துவதில்லை என்பதை அறியமுடிகிறது.
பொதுவாகப் பருவமெய்து குறிப்பிட்ட ஆண்டுவரை வைத்திருந்து பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பர். இவ்வின மக்களிடையே வயதிற்கு வந்த சில நாட்களில் மணம் செய்துகொடுக்கும் நிலை காணப்படுகின்றது. பெண்ணிற்குத் திருமண வயது 15 எனவும், ஆணிற்குத் திருமண வயது 14 எனவும் நிர்ணயித்துள்ளனர்.
திருமணம் நடைபெறும் நாளன்று கருப்பு மற்றும் ஆரஞ்சு குளிர்பான பாட்டில், வெற்றிலை மூன்று, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து, தனது குலசாமி முன்பு திருமணச் சடங்கை நடத்துவர். மணமானப் பெண்ணின் மடியில் பல்வேறு காய்கறிகளைக் கட்டி சுமக்க வைத்து விடுவர். ஏனெனில் மணப்பெண் எவ்வளவு சுமைகளைச் சுமக்கும் திறன் கொண்டவள் எனப் பரிசோதிப்பர்.
இல்வாழ்வை மேற்கொண்ட பெண், குறிப்பிட்ட மாதங்களில் கர்ப்பம் தரிப்பாள். அப்பெண்ணுக்கு வளைகாப்புச் சடங்கினைச் சிறப்பாக நடத்துவர். சிவன் கோவில் சென்று குழந்தை நலமுடன் பிறக்க வேண்டுமென வழிபடுவர். பெரும்பாலும் பிரசவத்தை இவர்களே பார்த்துக் கொள்வர்.
குழந்தை பிறந்த பத்து நாட்களுக்குத் தாய் மற்றும் சேயை ஆண்கள் யாரும் பார்க்க அனுமதிப்பதில்லை. குறிப்பாக உடன் பிறந்த சகோதரர் மற்றும் கணவனை மட்டும் பார்க்க அனுமதிப்பர். பத்து நாட்கள் கழிந்த பின்பு சட்டி பூஜை செய்து, பின்னர் குழந்தையைத் தூக்கப் பிறரை அனுமதிப்பர்.
மறுமணம்
தென்காசி நரிக்குறவ மக்களிடம் மறுமணம் செய்துகொள்ளும் முறை காணப்படுகின்றது. கணவன் அல்லது மனைவி யாரேனும் இறந்தால் மறுமணம் செய்து கொள்வர். இருப்பினும் முதல் மணத்தின் போது சில சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது போல மறுமணத்திற்கு சிலச் சம்பிரதாயங்கள் உண்டு.
சோடா – ஆரஞ்சு போன்ற குளிர்பானங்களை வைத்து மறுமணத்தை நடத்துவர். விரலில் அணியப்படும் மோதிரம் ஒன்றினை நீர் நிறைந்த ஒரு பானையில் இட்டு, மணமான இருவரும் கையை விட்டுத் தேடிக் கண்டுபிடிப்பர். மணமான பெண்ணின் கழுத்தில் கருமணியை அணிவித்து விடுவர். பின்பு வெற்றிலையில் ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கையில் கட்டி விடுவர்.
இறந்த உடலைத் தாமாகவே அடக்கம் செய்கின்றனர். இறந்த உடலை இரண்டு நாட்கள் வைத்திருந்து பூ மாலையிட்டுச் சடங்குகள் செய்து மாலை மூன்று அல்லது நான்கு மணியளவில் சுடுகாட்டிற்குக் கொண்டுபோய் (வீட்டிற்கு அருகில்) அடக்கம் செய்து வருவர். இவ்வாறாக இவ்வின மக்களின் வாழ்வு அமைகின்றது. தீபாவளி அன்று இறந்துபோன முன்னோர்களின் நினைவாகப் படையல் வைத்து வழிபடுவதும் உண்டு.
எதிர்காலத் திட்டங்கள் ஏதாவது உண்டா? என வினவும்போது, “எங்களுக்கு நல்ல வீடு கட்ட வேண்டும். அவ்வாறு கட்டிவிட்டால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்”, எனக் கூறுகின்றனர்.
இதுவரை கண்ட தென்காசி நரிக்குறவ மக்களின் வாழ்வியலை பிற இன மக்கள் வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் பின்தங்கியே இருக்கின்றனர். முதலாவது அடிப்படை வசதியின்றி வாழ்கின்ற இம்மக்களுக்கு அனைத்துத் தேவைகளையும் செய்ய அரசு முன்வரவேண்டும்.
இவ்வினக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு அவர்களின் தவறான பேச்சுக்கள் தடையாக அமைகின்றன. இதனை சிரமம்பாரது பள்ளி ஆசிரியர்களே அறிவுறுத்தலின் மூலம் நிவர்த்தி செய்யலாம்.
சிறார்கள் பணிக்குச் செல்வது சட்டப்படிப் குற்றம். அவ்வாறு பணிக்குச் செல்பவர்களைக் கல்வி கற்பதற்கான ஆசைகளைத் தூண்டி, சில பயனுள்ள விழிப்புணர்வு படங்களைக் காட்டலாம்.
போதைப் பொருளின் மேலுள்ள மோகத்தைக் குறைக்க, அதனால் ஏற்படும் விளைவுகளை நேரடியாகச் சென்று விளக்குவதன் மூலம் சரிசெய்யலாம்.
மறுமணத்தை ஆதரிப்பது போற்றத்தக்கச் செயலாகும். இதுபோல் சமூக மதிப்பைப் பெற வேண்டுமெனில் சுத்தமாக வாழக் கற்றுக்கொள்வதற்கான நடைமுறைகளைக் சுகாதாரத்துறை மேற்கொண்டால், இருளில் மூழ்கிக்கிடக்கும் இவர்களின் வாழ்வானது விடியலை நோக்கி அமைய வேண்டும்.