மதுரைக்கு அழகு சேர்க்கும், யானை மலையை இவகுன்றம் (இப குன்றம்) என தமிழி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இபம் என்றால் யானை. இங்கே உள்ள குடைவரை நரசிம்மர் கோவில், பாண்டிய மன்னன் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 770 இல் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் நரசிம்மருக்காக எழுப்பப்பட்ட ஒரு குடைவரை வைணவக் கோவிலாகும். பாண்டிய மன்னனின் மந்திரியாகிய மதுரகவி என்னும் மாறன்காரி இக்குடவரைக் கோயிலை எடுப்பித்தார் என வட்டெழுத்து கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ஆனைமலைக் கல்வெட்டின்படி, இவரை மருத்துவப் புலவர் (சிகாமணி) மாறன்காரி அல்லது மூவேந்த மங்கலப் பேரரையன் என்று அழைக்கப்டுகிறார். கைதேர்ந்த வைத்தியர்கள், வைத்திய ராஜா, வைத்தியப் புரந்தரன், வைத்திய சிகாமணி, வைத்திய சக்கரவர்த்தி, சிகாமணி, என்று சிறப்பு பட்டத்துடன் அழைக்கப்பட்டனர் என்று பல தமிழ் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. மந்திரியாக, மருத்துவராக, மட்டுமல்லாமல் சிறந்த கவிகளை படைக்கும் புலவராகவும் திகழ்ந்ததால் “மதுரகவி” என்னும் பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது. கே.வி ராமன் அய்யா இவரை மதுரகவி ஆழ்வாராக இருக்கலாம் என்றும், வைத்திய மரபை சேர்ந்தவர் என்றும் ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார். நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் “கண்ணி நுண் சிறுத்தாம்பு” என்ற ஒரே பதிகம் தான் பாடியுள்ளார். அந்த பதிகத்தில் உள்ள பதினொரு பாடல்களும் நம்மாழ்வாரை பற்றி பாடுவதாக உள்ளது.
ஒரு சமயம் பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாரவர்மனுக்கும், கங்க நாட்டு இளவரசிக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சாளுக்கிய மன்னன், கங்க இளவரசியை மணக்கும் பொருட்டு இதனை எதிர்த்து வந்தான். இதனை சசிக்குமாரின் நாடோடிகள் படத்தில் வருவது போல மாறன் காரியே மற்ற அரசர்களின் உதவியுடன் சாளுக்கியர்களை போரில் வென்று இளவரசியை மீட்டு, மன்னனின் திருமணத்தை முடித்து வைத்ததாக வேள்விக்குடி செப்பேடு நமக்கு கூறுகின்றது.
பரம வைணவரான மாறன்காரி பெருமாளுக்காக கட்ட துவங்கிய இந்ந யானை மலை நரசிம்மர் குடைவரை கோவில், பாண்டிய நாட்டில் தோன்றிய முதல் குடைவரை கோவில்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் துரதிஷ்ட வசத்தால் இக்கோவிலை அவர் கட்டிமுடிக்க முடியாமல் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். பின்னர் அவரின் தம்பி மாறன் எயினன் என்பர் மந்திரி பதிவி ஏற்று இக்கோவிலை கட்டி முடித்தார். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பாண்டிய மன்னனின் மூன்றாம் ஆட்சியாண்டு, கலியுக வருடம் 3871 வாக்கில், கார்த்திகை மாதத்தில், ரேவதி நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமை அன்று, கி.பி. 770, நவம்பர் மாதம் நான்காம் தேதி இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
இதே நவம்பர் மாதத்தில் சரியாக 1250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பெருமை மிகு கோவிலாக நரசிங்கம் பெருமாள் கோவில் குடைவரை விளங்குகிறது.
வெறும் படித்துவிட்டு கடந்துவிடாமல் இப்பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் Share செய்யுங்கள், பின்னூட்டமிடுங்கள், பதிவில் உங்கள் விருப்பத்தை (👍🙂❤️😡😥) தெரிவியுங்கள்.
தொடர்ந்து இவ்வாறான வரலாற்று செய்திகளை அறிய மறக்காமல் Thali Heritager Magazine எங்களுடைய பக்கத்தை Follow செய்யுங்கள்.
Sharing is Caring….
இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையாக வாழ்த்துக்கள். நன்றி..