இராஜராஜன் கடிதம் – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #15

பொன்னியின் செல்வர், சிவபாதசேகரன், சக்கரவர்த்தி இராஜராஜன் அமர்ந்திருந்த
ரதம் கொள்ளிடத்தை ஒட்டி நீண்ட சாலையில் அதிக விரைவின்றி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, இராஜராஜனின் முதிர்ந்த முகம் ஏதோ பழம் நினைவுகளில் ஆழந்து கிடப்பதை புலப்படுத்தியது. மாலைக்கதிரவன் ஒளியில் கொள்ளிடத்தின் வெள்ளம் ஏதோ பொன்னாலடித்த தகடுகள் போல் மின்னுவதையும், இரு கரைகளிலும் தோகை விரித்திருந்த வயல்வெளிகளையும், சோலைகளையும் ரசித்தபடியே வந்தவரது முகத்தில் ரதசாரதி ஜெயந்தனின் அறிவிப்பைக் கேட்டதும் ரசனை மறைந்து அச்சம் பரவியது.

“மழபாடியை நெருங்கிவிட்டோம் பிரபு” ஜெயந்தனின் குரலிலும் நடுக்கம் தொனித்தது. சாளுக்கியரின் வியூகங்கள், தென்பாண்டி அரசர்களின் போர்க்களிறுகள், புரவிகள், வீரர்களின் போர்க் குரல்கள், சேரநாட்டு வீரர்கள் என்று எத்தனை எதிரிகள் எதிரில் நின்றாலும் தயங்கவே தயங்காமல் உள்ளே நுழைந்து சக்கரமாகக் சுழலும் ஜெயந்தனின் சாரத்தியம் அந்த கொள்ளிடத்து குக்கிராமத்தின் ஆளரவமற்ற தெருவில் நுழையத் தயங்கியது. மாலைப்பொழுது முற்றத் தொடங்கிவிட்டதால் இரு புறங்களிலுமிருந்த இல்லங்களில் ஏற்றப்பட்ட விளக்குகளும், தெருவின் ஓரங்களில் ஒளிவிட்ட பந்தங்களும் பார்வைக்கு ஜாஜவல்யமாகத் தெரிந்தாலும், முகப்பிலேயே தெரிந்த ஒடுகளால் வேயப் பட்ட அந்த இல்லத்தின் வாயிலில் நின்றபடி ரதம் வருவதைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுமியைக் கண்டதும் ஜெயந்தனின் முகத்தில் திகில் இன்னும் உயர்ந்தது.
“சக்கரவர்த்தி, சந்திரமௌலிப் பட்டரின் இல்லத்து வாசலில் அம்மங்கா நிற்கிறாள். என்ன செய்வது? நம் ரதம் வருவதை கவனித்துவிட்டாள் என்றே நினைக்கிறேன்” ஜெயந்தன் முகத்தில் சற்றுக் கலவரம் படர்ந்து கிடந்தது.

சாதாரண நுாலாடையொன்றுடனும், நீண்ட குழலை இரட்டைப் பின்னலாக இருபுறங்களிலும் தொங்கவிட்டு, நெற்றியில் திலகமும், குறுகுறுவென வண்டுகள் போல் சஞ்சரித்த மாவடு போன்ற விழிகளுடனும், இருகரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டு ரதம் வருவதைக் கவனித்தபடியே நின்ற அந்தச் சிறுமி எதோ முணுமுணுத்தபடி தலையை முன்னும் பின்னுமாக அசைத்துக் கொண்டாள்.
சக்கரவர்த்திகள் மெல்ல ரதத்தை விட்டு இறங்கினார். அந்தச் சிறுமியின் அழகிய விழிகள் அவரைக் கவனித்துக் கொண்டேயிருந்தன.

ஜெயந்தனும் ரதத்தை விட்டு இறங்கி புரவிகளின் கயிற்றை எறிந்துவிட்டு தயக்கத்துடன் ரதத்தின் பின்புறமாக நகர்ந்தான்.

“ஜெயந்தா, பின்னாலிருக்கும் கனிவகைகளையும், துணிகளையும் எடுத்துக் கொள். நான் முன்னால் நடக்கிறேன். எதற்கும் என்னுடன் கூடவே வா” என்ற இராஜராஜர், தயங்கிய படியே அந்தச் சிறுமி நின்ற இல்லத்தை நோக்கி நடந்தார்.

“வாரும், பாட்டனாரே, வாரும். இப்போதுதான் வழி தெரிந்ததா? எத்தனை முறை அரண்மனைக்கு ஆட்களை அனுப்புவது? கொஞ்சமேனும் இந்தப் பேத்தியின் நினைவு இருக்கிறதா? இங்கே வராமல் அப்படியென்ன வேலை உங்களுக்கு? உமது மகன் இராஜேந்திரருக்கு பட்டம்தான் கட்டியாயிற்றே? அவர் அனைத்தையும் கவனித்துக் கொள்ள மாட்டாரா? ஏன் இத்தனை காலமாக வரவில்லை ?” சிறுமி அம்மங்காவின் குரலில் உஷ்ணம் தெறித்தது.

இராஜராஜரும், பின்னால் கூடைகளுடனும், கனிகள் நிரம்பிய தட்டுடனும் நின்ற ஜெயந்தனும் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டார்கள்.

“சரி, சரி, வழக்கம்போல திண்ணைக்கு அருகில் வந்து நில்லுங்கள்” என்றவள் திண்ணையின் மீது ஏறி அருகில் நெருங்கிய ராஜராஜரின் தலையின் குட்டு ஒன்றை வைத்துவிட்டு அடுத்து அவர் மீது பாய்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடினாள். அவளைத் தம்மோடு அணைத்துக் கொண்ட இராஜராஜரின் முதிர்ந்த முகம் எல்லையில்லாத ஆனந்தத்தைக் காட்டியது.

“மன்னித்துக் கொள் அம்மங்கா. இராஜேந்திரன் காஞ்சிக்குச் சென்றுவிட்டான். கங்கை வரை நம் படைகளை அனுப்பப் போகிறானாம். அதற்கான ஏற்பாடுகளில் அங்கேயே இருக்கிறான். இங்கே உள்ள பணிகளை நான்தானே கவனிக்க வேண்டும்? அதனால் தான் வரஇயலவில்லை ” என்றவர் “சரி, உன் தந்தை எப்படியிருக்கிறார்?. வா, நாம் உள்ளே சென்று காணலாம்” என்றவர் அம்மங்காவை தோளில் சுமந்தபடியே இல்லத்தின் உள்ளே நுழைந்தார்.

இல்லத்தின் உள்ளிருந்து அம்மங்காவின் தாயும், தந்தை சந்திரமௌலிப்பட்டரும் வியப்பும், மகிழ்வும் முகமெங்கும் படர வெளிவந்து வரவேற்றார்கள். முன்னறிவிப்போ, மெய்ககாவலரோ இன்றி சர்வசாதாரணமாக தன் மக்களிடையே உலவும் வழக்கமுடைய சக்கரவர்த்திகளின் வருகை ஆச்சரியமேதும் அளிக்கவில்லை பட்டருக்கு. ஆனால் சந்திரமௌலி பட்டரின் முகமும் உடலும் வாடிக்கிடந்தது. கனிகளுடனும் துணிமணிகள் அடங்கிய கூடையுடனும் உடன் நுழைந்த ஜெயந்தன் அவற்றைக் கீழே வைத்துவிட்டு பட்டரை வணங்கினான்.

“வரவேண்டும் மன்னவா, தங்களை எதிர்பார்த்தே காத்திருக்கிறேன்” என்ற சந்திரமௌலி பட்டர் இராஜராஜரை இருக்கையொன்றில் அமர வேண்டினார். ராஜராஜர் இருககையில் அமர்ந்ததும் அம்மங்கா அவர் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“சரி, கூறும் பட்டரே, உங்கள் உடல் நிலை எப்படியிருக்கிறது? நான் வரவேண்டுமென்று பலமுறை செய்தியனுப்பினீர்கள். என்னால் தான் வர இயலவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். ஆலயத்தைப் பற்றி என்னிடம் கூறவேண்டுமென்றும் தெரிவித்திருந்தீர்கள். கொள்ளிடத்து வெள்ளம் மீண்டும் சுவர்களை அரித்துவிட்டதா?”

“வாருங்கள். சென்று கண்டுவிட்டு வருவோம். அதற்காகவே தங்களை அழைத்திருந்தேன்” என்ற பட்டர் ராஜராஜருடன் வெளியே நடக்க, அம்மங்கா சக்கரவர்த்திகளின் கரத்தைப் பிடித்துக் கொண்டு துள்ளியபடியே உடன் நடந்தாள்.

கொள்ளிடத்தில் வெள்ளம் வந்தபோதெல்லாம் பாதிக்கப்பட்ட அந்த ஆலயத்தின் தோற்றமே மன்னரின் முகத்தை வாட்டமடைய வைத்தது.

செடிகொடிகளை விலக்கி உள்ளே நுழைந்த பட்டர் கொடிமரத்தையும் மண்டபத்தையும் கடந்து உள்ளே கருவறைக்குள்ளே சென்று இறைவனை வணங்கிவிட்டு ராஜராஜரை நோக்கித் திரும்பினார். “மன்னவா, சற்று பக்கச்சுவர்களிலும், மேற்புறத்திலும் பாருங்கள்” என்றபடி சரவிளக்கை ஏற்றி உள்ளே ஒளியைப் படரவிட்டார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட அந்த ஆலயத்தின் கருவறைச்சுவர்களில் பல்லவமன்னர்கள் தொடங்கி பலர் அளித்த நிவந்தங்களும், தானங்களும், இறையிலி நிலங்களின் விவரங்களும் எழுதப்பட்டிருந்தன. நந்திதேவரின் திருமணமும், வஜ்ரஸ்தம்பம் வந்த கதைகளும் இன்னும் வர்ணம் குறையாமல் மேற்சுவரில் பளிச்சிட்டன. ஆனால் செங்கல்லால் கட்டப்பட்டிருந்ததால் ஆங்காங்கே விரிசல்களும், காறை பெயர்ந்து விழுந்து கூரைச்செங்கற்களும் கண்களில் பட்டு இராஜராஜரின் முகத்தில் வருத்தத்தைப் படரவிட்டன.

” இதற்காகத்தான் தங்களை அழைத்தேன் மன்னவா” சந்திரமௌலி பட்டரின் குரல் நெகிழ்ந்து ஒலித்தது “பழுது பார்க்க முற்பட்டால் இந்தச் சாசனங்கள் அழிந்துபோகும். எப்படி இவற்றைப் பாதுகாப்பது? கொள்ளிடத்து வெள்ளத்தால் அடிக்கடி மணலடித்து சுவர்கள் உறுதியற்றதாகிவிட்டது. செடிகொடிகளின் ஆதரவில்தான் சுற்றுச்சுவரே தற்போது நின்றுகொண்டிருக்கிறது”

இராஜராஜரின் முகத்தில் வருத்தத்தோடு சிந்தனை தெரிந்தது. அருகில் நின்று இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த அம்மங்கா, “பாட்டனாரே, கவலைப்பட வேண்டாம். இந்த சாசனங்களை எல்லாம் கோயிற்சுவடிகளில் படியெடுத்து எழுதிவிடலாம். மற்ற கோயில்களை கற்றளியாக்கியது போல் இதையும் கற்றளையாக்கி மீண்டும் அதில் பொறித்துவிட்டு, இதே சித்திரங்களையும் தீட்டி விடலாம். எமது சிறிய பாட்டன் உத்தமசோழ பிரம்மராயரை வரச்சொல்லி அத்தனை சாசனங்களையும் சரிபார்த்துக் கொண்டு பிறகு கற்றளியாக்கும் பணியைத் துவக்கலாம். என்ன, நான் கூறுவது சரிதானே பாட்டனாரே?” என்றாள்.

இராஜராஜரின் விழிகள் அம்மங்காவை நோக்கித் திரும்பின. அவளை அணைத்துத் தாக்கிக் கொண்டவர் “அம்மங்கா, நீ கூறியது சரிதான். ஆனால் என்னால் இதை உடன் நின்று கவனித்துச் செய்ய இயலாது. என் உடல்நிலை அதற்கு இடந்தாராது. மிகக் கவனமாக இதைச் செய்யவேண்டும். தற்போது இராஜேந்திரன் காஞ்சியில் அவனது நீண்டநாள் கனவான கங்கைப் படையெடுப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான். அதை முடித்து அவன் திரும்பியதும் இதைச் செய்து தருமாறு கூறுகிறேன். ஆனால் ……. ” என்று இழுத்தவர் முகத்தில் மீண்டும் சிந்தனை படர்ந்தது.

“ஆனால் என்ன மன்னவா?” பட்டரின் குரலில் கவலை ஒலித்தது.

“பட்டரே, கங்கைவரை படைநடத்திச் சென்று மீண்டுவருவது எளிதல்ல. இராஜேந்திரன திரும்பிவர மாதங்கள் என்ன, ஆண்டுகள் கூட ஆகலாம்” என்றவர் “சரி, சென்று ஓலைச்சுவடிகளை எடுத்து வாருங்கள். இந்த ஆலயத்துக்கு செய்யவேண்டியவற்றை கடிதமாக எழுதித்தருகிறேன். பத்திரமாக வைத்திருந்து, ராஜேந்திரன் திரும்பியதும் அவனிடம் அளித்துவிடுங்கள். என் அரண்மனைக் குறிப்புகளிலும் இதைச் சேர்த்துவிடுகிறேன். நிச்சயம் உங்கள் எண்ணம் ஈடேறும், இந்த ஆலயம் கற்றளியாக மாற்றப்படும். அம்மங்கா கூறியதைப் போல அனைத்துச் சாசனங்களையும் எழுதி சரிபார்க்க நாளையே தஞ்சையிலிருந்து பிரம்ம மாராயரையும், பரமன் மழபாடியாரையும் அனுப்பிவைக்கிறேன்” என்ற இராஜராஜர் அப்போதே ஓலைகளை எழுதி தம் கரத்திலிருந்த முத்திரை மோதிரத்தைப் பதித்து சந்திரமௌலி பட்டரிடம் அளித்தார்.

அம்மங்காவின் அன்பில் திளைத்தபடி பட்டரின் இல்லத்தில் இராஜராஜர் வெகுநேரம் கழித்தார். அந்த சிறிய அழகிய கொள்ளிடக்கரை கிராமத்துக்கு அவர் வருவது அதுவே கடைசிமுறை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, அம்மங்கா அவருக்கு எளிதில் விடைகொடுக்க மறுத்தாள். நீண்ட நேரம் கழித்த பின்னரே பிரிய மனமின்றி இராஜராஜருக்கு விடைகொடுத்தாள் அம்மங்கா.

அரண்மனைக்குத் திரும்பிய பின்னர் சக்கரவர்த்திகளின் உடல்நிலை மேலும் வாடத் தொடங்கியது. மறுமுறை அம்மங்காவைக் காணாமலே அடுத்த ஆண்டில் இராஜராஜர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

கங்கைக்கரையில் புலிக்கொடியைப் பறக்கவிட்டுத் திரும்பிய சோழ ராஜேந்திரரை பரமன் மழபாடியாரின் உதவியால் அரண்மனைக்குச் சென்று சந்திரமௌலி பட்டரும், அம்மங்காவும் கண்டு இராஜராஜரின் அந்த ஒலையை அவரிடம் அளித்தனர். ராஜராஜர் தம் கையெழுத்தில் வரைந்த அந்த ஓலையையும், அவரது முத்திரையையும் வெகுநேரம் பார்த்தபடி அடித்துவைத்த சிலையாகவே அமர்ந்திருந்தான் சோழ இராஜேந்திரன். முத்து முத்தாக எழுத்துக்களில் வரையப்பட்ட சக்கரவர்த்திகளின் அந்த ஓலை அவனுக்கு தந்தையே உடனிருந்து வாசிப்பது போன்ற பிரமையை அளித்தது.

அடுத்த திங்களின் முதல் முகூர்த்தத்திலேயே பணிகளைத் தொடங்க உத்தரவிட்டான் சோழ இராஜேந்திரன். திருமழபாடி ஆலயத்தைக் கற்றளியாக மாற்றிய இராஜேந்திர சோழன் அவரது அந்த ஓலையின் வாசகங்களையும் அப்படியே ஆலயச்சுவரில் பொறிக்கச் செய்தது மட்டுமின்றி சக்கரவர்த்திகளின் ஆணைப்படியே தானும் செய்து முடித்ததாகவும் பொறித்தான்.

பொன்னியின் செல்வரின் அந்த ஓலை இன்னும் திருமழபாடி ஆலயத்தில் கல்வெட்டாக சோழரின் பெருமைக்கும், புகழுக்கும் சான்றாக நிற்கிறது.

சோழமன்னர்களின் ஏராளமான கல்வெட்டுகள் வரலாற்றைப் பாடுவதாலும், நந்திகேஸ்வரருக்கு பங்குனி புனர்பூசத்தில் இறைவனே திருமணம் நடத்தி வைத்ததாலும் மிகச் சிறப்பு பெற்ற தலமாகும் இந்த திருமழபாடி. “மழபாடியில் மாணிக்கமே” என்று சுந்தரரால் பாடப்பட்ட இத்தலம் தந்தை இராஜராஜரின் வார்த்தைகளை தவறாமல் நிறைவேற்றிய தனயன் இராஜேந்திர சோழனின் புகழையும் காலகாலத்துக்கும் பாடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பு.. கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழ தேவனின் காலத்தில் எத்தனையோ சரித்திர நிகழ்வுகள் நடந்திருந்தாலும், தந்தையின் கடிதத்துக்கு மதிப்பளித்து அதை அப்படியே நிறைவேற்றிக் காட்டிய ஒரு தனயனாகவும் அவன் இருந்தான் என்பதற்காக சாட்சி திருமழபாடிக் கல்வெட்டு. கல்வெட்டின் 83 வரிகளில் 74 வரிகள் ராஜராஜ சோழதேவன் எழுதிய கடிதம்தான். அவற்றை அப்படியெ பொறித்து, இறுதி பத்து வரிகளில் தான் அதை அப்படியே நிறைவேற்றிய தாகவும் எழுதியிருக்கிறான் இராஜேந்திர சோழ தேவன்.

– விஷ்வக் சேனன்

Leave a Reply