மித்ரன் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #2

கதை முன் குறிப்பு: இந்தக் கதை யார் மனதையும், யாருடைய எண்ண ஓட்டத்தையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டது இல்லை. இதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும். இது என்னுடைய முதல் முயற்சி, இது ஒரு முழு கற்பனைக் கதை.

இந்தக் கதை ராஜேந்திரசோழன் அவர்கள் ஸ்ரீவிஜயத்தையும் கடாரத்தையும் வென்றார் என்ற அவரின் மெய்க்கீர்த்தியில் வரும் வரிகளை மட்டும் மூலமாக கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைவு சிறுகதை. நன்றி

-சிரா

=============================================

மித்ரன்

அது ஒரு அழகிய காலை பொழுது காவிரி பொங்கி புது வெள்ளம் உருண்டு வந்து கொண்டு இருக்கிறது. காவிரியின் புது வெள்ளத்தை பார்க்கவும் பொன்னி தாயின் கொடையை வணங்கவும் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. ஒருபுறம் பறையிசை முழங்குகிறது, ஒருபுறம் நாதஸ்வரம் தவில் சத்தமும் கேட்கிறது.

மக்கள் மிகுந்த ஆனந்தத்தோடு பொன்னி என்கிற காவிரித் தாய்க்கு மலர்தூவி வணங்கிக் கொண்டு இருந்தார்கள்.

அது கங்கை படையெடுப்பு முடிந்த காலம் மாமன்னர் இராஜேந்திர சோழர் மக்களை போருக்குப்பின் இன்னும் சந்திக்கவில்லை ஆனால் போரில் என்ன நடந்தது, எப்படி நடந்தது யார் பராக்கிரமக சண்டையிட்டார்கள், யார் முன் வரிசையில் நின்றார்கள், தளபதியார், வீரர்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்கள், நாட்டுக்காக இறந்தவர்களின் குடும்பத்திற்காக – அரசாங்கத்தில் என்ன இழப்பு பணிக்கொடை என்பது எல்லாம் அறிவிக்கப்பட்டு மக்களுக்கு தெரியவந்தது. இவை அனைத்தும் செப்பேடுகளிலும் பொறிக்கப்பட்டது.

(மற்ற சிறுகதைகள்

1. காதலும் துரோகமும்
http://heritager.in/?p=2106

2. மித்ரன்
http://heritager.in/?p=2110

3. ஒரு விறலியின் காதல்
http://heritager.in/?p=2115

4. பனித்திரை
http://heritager.in/?p=2118)

காலை மாளிகையில் எழுந்து சூரியனை வணங்கி விட்டு, மக்களை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்து தலைமை அதிகாரச்சியிடம் சென்றனர். அவள் மாளிகையில் இருக்கும் மெய்க்காவல் படை தலைவரிடம் சொல்ல, அவர் மன்னரைப் பார்க்க அரண்மனையில் இருக்கும் மெய்க் காவல் படை அலுவல் அறையில் காத்து இருந்தார். அவர் அங்கு காத்துக் கொண்டிருப்பது மன்னருக்கு சொல்லப்பட்டது.

மன்னர் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் இட்டு சிவனை நினைத்து கிழக்கு நோக்கி இரண்டு நிமிடம் நின்று வணங்கிய பின், மெய்க்காவல் வீரர்கள் அலுவல் அறைக்கு சென்றார்.

மன்னரைப் பார்த்தவுடன் அந்த மெய்காவல் படை தலைவர் வணக்கம் சொல்லி, நாம் மக்களை எங்கு சந்திக்க போகிறோம் என்று கேட்டார். மன்னர் சிறிதும் யோசிக்காமல் இன்று ஆடிப்பெருக்கு இல்லையா? மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக காவிரித்தாயை பார்த்து வணங்கி கொண்டாட கொள்ளிடக் கரைக்கு வந்து இருப்பார்கள், நாமும் அந்த கொள்ளிடக்கரைக்குப் போகலாம் என்று கூறினார்.

இந்த பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது, ராஜேந்திர சோழ தேவர் மக்களைப் பார்க்க கிளம்புகிறார் என்ற செய்தி கிருஷ்ணன் ராமன் அவர்களுக்கும், வந்தியதேவர் அவர்களுக்கும் சொல்லப்பட்டது. அதன்மூலம் அவர்கள் இருவரும் மன்னரைப் பார்க்க மாளிகைக்கு வந்தனர்.

மன்னர் கொள்ளிடக் கரையில் மக்களை சந்திக்கலாம் என்று சொன்ன பொழுது அவர்கள் இருவரும் மெய்க்காவல் வீரர்களின் அலுவலகத்தினுள் நுழைந்தனர். அவர்கள் இருவரையும் கண்டதும் மன்னர் வணங்கி அவர்களை நலம் விசாரித்தார்.

மன்னர், “உங்களுக்கும் செய்தி வந்ததா?” என்று கேட்க, வந்தியத்தேவர் பேச ஆரம்பித்தார். ராஜேந்திரா!! நீ மக்களை கொள்ளிடக் கரையில் பார்க்கலாம் என்று சொன்ன வரைக்கும் தகவல் வந்தது.

பின் மெய்க்காவல் படைத்தலைவர் நாங்கள் போய் ஆக வேண்டிய வேலையை பார்க்கிறோம் என்று சொல்லி உத்தரவு வாங்கிக் கொண்டார்.

மன்னரும், அவர்களும் கங்கை படையெடுப்பை பற்றி பேசிய பிறகு, அடுத்தது என்ன என்று மன்னர் கேட்க, கிருஷ்ணன் ராமன் ஆரம்பித்தார். மன்னா, நாம் சபையில் கங்கை படையெடுப்புக்குப் பின் ஸ்ரீவிஜயம் மற்றும் கடாரத்துடன் அடுத்த போர் பற்றியும், கலங்கள் கட்டுவதை பற்றியும், கடல் பயணத்திற்கு தேவையான மருந்துகள் மற்றும் வீரர்களுக்கான பயிற்சியும் தர சொல்லி இருந்தீர்கள் அவையாவும் தயார் நிலையில் உள்ளன.

கொள்ளிடக்கரை அருகில் இருக்கும் மாதிரவேலூர் என்ற இடத்தில் ஒரு சாலை அமைத்து அதில் முழுவதும் கடல்சார் பயணத்துக்குத் தேவையான பயிற்சி, கலங்கள் அமைப்பது, கடல் பயணத்திற்கு தயார் ஆவது மற்றும் புது ஆயுதங்கள் தயார் செய்வது என்று மொத்தமும் தயாராக உள்ளது நீங்கள் சொன்னால் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றார்.

நல்லது இதைப்பற்றி பின்னர் கொள்ளிடம் சென்று வந்தபின் தெளிவாக பேசலாம். வாருங்கள் நாம் காலை உணவை முடித்துவிட்டு கிளம்புவோம் என்றார் மன்னர்.

அரிசி கஞ்சியும் பருப்புத் துவையலும் மற்றும் பழங்களையும் உண்டு,  அவர்கள் மூவரும் மாளிகையை விட்டு கிளம்பினார்கள்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் கோட்டைவாயிலில் முரசு ஒலிக்க கொம்புகளுடன் இரண்டு பக்கமும்  காவல் வீரர்கள் பின் மூன்று வீரர்கள் இடது வலமாக 22 வீரர்கள் ஒன்பது வீரர்கள் சூழ்ந்துகொள்ள, மன்னர் ஒரு ராஜ கம்பீரமான கருப்பு குதிரையில் அமர்ந்து இருந்தார்.

மெய்க்காவல் வீரர்கள் அனைவரும் கருப்பு நிற வேட்டியும் கருப்பு நிற மணித்தியாலமும் கட்டி தலைக்கு சிவப்பு நிற தலைப்பாகை தரித்து இருந்தனர். மன்னரோ வெள்ளை நிற வேட்டி கச்சம் வைத்து கட்டி வெள்ளை நிற அங்கவஸ்திரமும் , மூன்றாம் துண்டும் மேலே தரித்து இருந்தார். முத்து மாலையும் தங்க சங்கிலியில் புலிச்சின்னம் பொறித்த பதக்க சங்கிலியையும் கழுத்தில் அணிந்து தலையில் கருப்பு நிறத்தில்  அழகிய வேலைப்பாடுடன் அமைந்த முத்து வெள்ளியும் கோர்த்து ஒரு அணிகலனும் கொண்ட  தலைப்பாகையிம் அணிந்திருந்தார்.

முரசும் கொம்பும் இசை முழங்க வந்தியத்தேவனும் கிருஷ்ணன் ராமனும் அவர்களின் புரவியில் கிளம்ப, பின் மன்னரும் மெய்க்காவல் படைவீரர்களும் கிளம்பினர்.

கொள்ளிடக் கரையில் மக்களும், மந்திரிகளும், தளபதிகளும் கூடி மன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழரைக் காண காத்துக் கொண்டிருந்தனர். காவிரித் தாயும் பொன்னியின் செல்வன் மைந்தனின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

வந்தியத்தேவனும், கிருஷ்ணன் ராமனும் கொள்ளிடக் கரைக்கு வந்து சேர்ந்தனர். பின் மெய்க்காவல் படை வீரர்கள் வந்தார்கள், வந்து கூட்டத்தையும் மக்களையும் சரி செய்து, ஒரு புலி சின்னம் எழுதிய மஞ்சள் கொடியை அசைத்தனர். அந்தக் கொடியை பார்த்து மெய்க்காவல் படைத்தலைவர் மன்னன் வருகையை உறுதி செய்து தன் கையிலிருக்கும் புலிச்சின்னம் எழுதிய மஞ்சள் கொடியை அசைக்க கொள்ளிடக் கரையில் விழாக்கோலம் கொண்டது !

பம்பை, உறுமி, பறை, தவில், நாதஸ்வரம், என அனைத்து இசைக் கருவிகளும் ஒருசேர முழங்க மன்னர் மெய்க் காவல் படை சூழ கருப்பு நிற புரவியில் மாமன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழர் மக்களைப் பார்க்க கொள்ளிடக்கரை வந்துசேர்ந்தார்.

மக்கள் கூட்டம் சோழம் ! சோழம் ! சோழம் ! என்று ஒரு சேர உணர்ச்சி பொங்க சொல்லியது.

“திருமன்னி வளர இருநிலமடந்தையும்
போர்ச்சயப் மாலையும் சீர்த்தனிச் செல்வியுத்
தன் பெருந் தேவியராகி இன்புற..”

என்று அவரின் மெய்க்கீர்த்தி பாடப்பட்டது. அனைத்தையும் மனமார ஏற்றுக் கொண்ட மன்னர், மக்களைப் பார்த்து கை உயர்த்தி அவர்களை அமைதிப்படுத்தினார்.

படித்துறை திண்டில் ஒரு பட்டுத் துண்டு விரிக்கப்பட்டு மன்னருக்காக மெய்க்காவல் வீரர்கள் சூழ தயாராக இருந்தது. ஆனால் மன்னரோ மக்களுக்கு நடுவே அமர்ந்து கொண்டு நலம் விசாரிக்க துவங்கினார்.

மன்னர் ஒரு சிறுவனை அழைத்து எப்படி இருக்கிறாய்?, பாடம் படிக்கிறாயா?, உன் தாய் தந்தை எப்படி இருக்கிறார்கள்?, சோழ தேசம் எப்படி இருக்கிறது? என்று கேட்டார். “இளம் கன்று பயமறியாது என்பது போல்” அச்சிறுவன்! இங்கே யாவரும் நலம், சோழதேசம் நலம், நான் நன்றாக படிக்கிறேன். நான் பெரியவனான பின் ஒரு போர் இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கிறேன்” என்றான்.

“என்ன போர் இயந்திரம்?!” என்று மன்னர் கேட்க, ஒரு கோட்டை வாயிலை ஒரே அடியில் தாக்க ஒரு ஆயுதம் செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு இருக்கிறேன்” என்றான். மன்னருக்கு அவர் மக்களைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி. மன்னர் அவனிடம் நீ எந்த ஊர் தம்பி? என்று கேட்க, நான் சிதம்பரத்தை சேர்ந்தவன் என்றான்.

“நன்று ! நன்று ! மிக நன்று !”

மாமன்னர் கிருஷ்ணன் ராமனை அழைத்து, இவன்  பெற்றோர்களுடைய சம்மதம் பெற்ற பின் இவனை “காஞ்சிமா சாலைக்கு” அனுப்பி போர் மற்றும் இயந்திரக் கலையிலும் பயிற்சி தாருங்கள். பின் இவனை இந்த மாதிர வேலுரில் உள்ள சாலையில் இயந்திர ஆராய்ச்சியில் ஈடுபடுத்துங்கள் என்றார்.

பின் அனைவரிடமும் ஏதேனும் குறை இருக்கிறதா, என்ன வேண்டும் உங்களுக்கு? நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

“மக்கள் அனைவரும் நாங்கள் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கிறோம்” என்றனர்.

ஒருவர் எழுந்து எங்களுக்கு கங்கைகொண்டசோழபுரம் கோட்டையும், கோயிலையும் பார்க்க வேண்டும் என்று ஆசை, எங்களில் சில பேருக்கு அந்த ஊருக்கு இடம் பெயரவும் ஆசை உண்டு இது நடக்குமா? என்றார்.

உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் “அனைவரும் வாருங்கள், வந்து பாருங்கள், சோழ தேசத்தில் சோழ தேசத்து மக்கள் எங்கு வேண்டுமானாலும் வரலாம் போகலாம் அவர்களுக்கு எந்தத் தடையும் கிடையாது” என்றார் மன்னர்.

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு இடம்பெயர சில விதிமுறைகள் உள்ளன. கோட்டைக்குள்ளே, நகரத்தின் உள்ளோ நீங்கள் வந்து குடியமர உங்கள் கிராம சபையிலிருந்து ஒப்புதல் பெற்று, ஒரு விண்ணப்பத்தை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இடம்பெயர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பின் ஒரு அரசாங்க அதிகாரி வந்து உங்களையும் உங்கள் கிராமசபை தலைவரையும் சந்தித்து பேசிவிட்டு உங்களுக்கு இடம் ஒதுக்கப்படும். இந்த ஏற்பாடு மக்களை சந்தேகித்தோ, அவர்கள் இடம்பெயருதல் தடுக்கவோ இல்லை. இது “சோழத்துக்காக, சோழ தேசத்து மக்களுக்காக”. எவ்வாறு என்றால், சோழ தேசத்தில் சிறார்கள் முதல் முதியோர் வரை ஏதேனும் ஒரு அரசாங்கப் பணியில் இருக்கிறார்கள், உங்களைத் திடீரென இடம் மாற்றினால் அந்த பணியும், அந்தப் பணியை நம்பியிருக்கும் மக்களுக்கும் பிரச்சனையாகும் இதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்றார் மன்னர்.

மக்கள் அனைவரும், “ஆஹா! ஆஹா! நல்ல யோசனை” என்றார்கள். இந்தப் பேச்சு நடக்கும் பொழுது இடையிடையே “டொக்கு டொக்கு” என்று பாக்கு இடிக்கும் சத்தம் கேட்டது. பேசி முடித்தபின் மன்னர் எழுந்து பார்த்தார். ஒரு பாட்டி பாக்கை கொட்டிக் கொண்டு இருந்தாள். மன்னர் அவளிடம் சென்று “நீ கனகம் அம்மாள் தானே? என் தந்தையின் சபையில் அதிகாரச்சியாக இருந்தாய் அல்லவா?” என்று விசாரித்தார்.

“ஆம்” என்றார்கள் கனகம் மகிழ்ச்சியாக.

மன்னர் கனகத்திடம் அமர்ந்து பேசி விட்டு அவளிடம் தாம்பூலம் வாங்கி மென்று கொண்டு காவிரித்தாயை பார்க்க படித்துறைக்கு நகர்ந்தார்.

அப்படி அவர் படித்துறையை அடையும்பொழுது மூன்று குதிரை வீரர்கள் புயல் வேகத்தில் அந்த மக்கள் கூட்டத்தில் படித்துறையை நோக்கி வந்தனர். அதில் இரண்டு ஒற்றர்களும் (உதயாதியனும், லட்சுமணனும்), ஒரு தளபதியும் (ராஜ ராஜ பிரம்மராயர்) வந்து மன்னரை பார்த்து வணக்கம் செலுத்தினார்கள்.

மன்னர் அவர்களைப் பார்த்து அருகில் அழைத்து வந்த நோக்கம் என்ன என்ன செய்தி என்றார்.

உதயாதியன் பேச ஆரம்பித்தான், மன்னா என்னிடம் ஒரு விண்ணப் மடலை வணிகர்கள் அளித்தனர். அதில் அவர்கள் படும் கஷ்டங்களை பற்றியும், ஸ்ரீ விஜயம் மற்றும் கடாரத்தில் படும் துன்பங்களைப் பற்றியும் ராஜ ராஜ பிரம்மராயர் அவர்களின் மூலம் உங்களிடம் சேர்க்க சொன்னார்கள். அதற்குத் தான் வந்தோம்”, என்றான்.

மன்னர் மடலை கையில் வாங்கி படித்தபின் வந்தியத்தேவரை பார்த்தார். வந்தியத்தேவர் மடலை மன்னரிடம் இருந்து வாங்கி வாசித்துப் பார்த்த பின் அவரின் முகம் மாறியது!. அதை கவனித்த மன்னர், அந்த சமயம் ராஜ ராஜ பிரம்மராயர் எதுவோ பேச வாய் எடுத்தபொழுது மன்னர் அவரை அருகில் அழைத்து “காவிரியில் நீஞ்சி பலகாலம் ஆயிற்று, வாருங்கள் போய் நீஞ்சுவோம் என்று சொல்லி தலைப்பாகை அங்கவஸ்திரம் மூன்றாம் துண்டு இவைகளுடன் அணிகலன்களையும் அவிழ்த்து வைத்தார்”.

மன்னரே அழைத்த பின் மறுபேச்சு உண்டா ! இதோ வருகிறேன் என்று ராஜ ராஜ பிரம்மராயர் ஆடைகளைக் களைந்து காவிரியில் நீஞ்ச தயாரானார்.

இதை மக்களும், தளபதிகளும், மெய்க் காவல் வீரர்களும், பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் வந்தியத்தேவன் மட்டும் இருவரும் பத்திரமாக சென்று வாருங்கள் என்றார்.

பின், வந்தியத்தேவன் புலிச்சின்னம் வரைந்து ஒரு கொடியை அசைத்தார். இருவரும் ஒருசேர காவிரியில் குதித்தனர், ஆனந்தமாக நீஞ்சினர். நீஞ்சும் பொழுது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர். அக்கறைக்கு சென்றனர் பின் நீஞ்சி இக்கரைக்கு வந்தனர்.

படித்துறையில் வந்து ஏறும் பொழுது வந்தியத்தேவனும், கிருஷ்ணன் ராமனும், ராஜ ராஜ பிரம்மராயர் ஒருசேர தலையை கீழ் அசைத்தனர். மன்னரும் அதை திரும்பி செய்தார்.

இந்த சமிக்கைக்குப் பிறகு வந்தியத்தேவர் போர் முடிவானால் பறக்கும் சிவப்புக் கொடியில் மஞ்சள் நிற புலி வரையப்பட்ட கொடியை அசைத்தார், ஊருக்கு அச்சாரம் வாங்கினால் என்ன நடை வாசிக்கப்படுமோ, அந்த நடையில் பறை தவில் பம்பை உறுமி மத்தளம் திடும்பம் என அனைத்து இசைக் கருவிகளையும் ஒரு சேர இசைத்தனர்.

மக்களும் புரிந்து கொண்டு சோழம் ! சோழம் ! சோழம் ! என்றனர். “தென்னாடுடைய சிவனே போற்றி !! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!” என்றும் மக்கள் குரல் ஒலித்தது.

பின்னர் மன்னன் கிருஷ்ணன் ராமனை அழைத்து, கொள்ளிட சாலையை யார் நிர்வகிக்கிறார்கள் என்று கேட்டார். உடனே கிருஷ்ணன் ராமன் இதை வில்வ ராஜனும் , காடவராயன் நிர்வகிக்கிறார்கள் என்றார்.

நல்லது ! இங்கே மந்திர ஆலோசனை செய்ய அறை இருக்கிறதா ?

இருக்கிறது மன்னா! இங்கு சாலையின் நூலகத்தின் உள்ளே ஒரு அறை இருக்கிறது. கூடவே ஒரு நிலவரை ஆலோசனை செய்வதற்கு என்றே அமைக்கப்பட்டிருக்கிறது. இது நல்ல காத்து வெளிச்சம் இரண்டும் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உள்ளே ஒரு யானை பிளிறினால் கூட வெளியே கேட்காது அதுபோல் கட்டப்பட்டிருக்கிறது.

மிக நன்று!!!

நாம் உடனே அந்த சாலைக்கு செல்வோம் அங்கு ஆலோசனை முடித்தபின் ஊருக்கு உண்டான தேதி குறித்து கிளம்புவோம். ராஜ ராஜ பிரம்மராயர் நீங்கள் அனைத்து உப தளபதிக்கும் செய்தி அனுப்பி நாளை காலை உதயாதி மாளிகையிலிருந்து ஆறாம் நாழிகைக்குள் அவர்கள் கங்கைகொண்ட சோழிஸ்வரர் கோவிலுக்கு வர வேண்டும் என்று தெரிவியுங்கள்.

அப்படியே செய்கிறேன் மன்னா!!!

வந்தியத்தேவன் மெய்க்காவல் வீரர்கள் இடையே விஷயத்தை சொல்ல அவர்கள் சாலையை ஒரு மேற் பார்வை பார்த்தபின் ஒரு வீரன் வந்து அங்கு யாவும் தயார் என்றான். பின் மன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழர் மக்களிடம் ஒரு உரையாற்றி “கடல்வழிப் போருக்கு அச்சாரம் வாங்கியதைப் பற்றியும், நம் வணிகர்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஸ்ரீ விஜயம் மற்றும் கடார நாட்டினருக்கு அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் சொன்னார்!!!”

இந்த முறை நான் இல்லாத சமயத்தில் என் மூன்று மகன்களும் உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள் என்றும் சொன்னார்.

மக்கள் சோழம் ! சோழம் ! சோழம் ! என்று உரக்க சொல்ல, மன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழர் மக்களிடமிருந்து உத்தரவு வாங்கிக் கொண்டு அவருடைய புரவியில் ஏறிக்கொண்டு கொள்ளிட சாலையை நோக்கி நகர்ந்தார்.அவர் நகரவும் அந்தக் கொள்ளிடக் கரையில் ஏதோ ராணுவ அணிவகுப்பு போல் அனைத்து தளபதிகளும் ஒரு தளபதிக்கு நாலு படைவீரர்கள் என ஒரு 150 பேர் மன்னர் பின் அந்தக் கொள்ளிட சாலையை நோக்கி சென்றனர்.

அந்த சாலையில் நுழைந்தவுடன், மன்னர் சாலையின் நிர்வாகிகளை அழைத்து பேசினார். பின் கிருஷ்ணன் ராமனும் வந்தியத்தேவரும் மன்னருக்கு அந்த சாலையை சுற்றிக் காட்டினர். அந்த சமயம் சாலையில் உள்ள மந்திர ஆலோசனை கூடத்தில் ராஜ ராஜ பிரம்மராயர் தலைமையில் தளபதிகள் அனைவரும் அணிவகுத்து அவரவர்களுக்கு உரிய இருக்கையில் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் பரஸ்பரம் விசாரித்து கடல்படையும் பயணமும் எப்படி செயல்படப் போகிறது, என்பதை பேசிக்கொண்டிருந்தனர்.

மந்திர ஆலோசனை கூட்டத்தில் யாவரும் தயார் என்பதை ராஜ ராஜ பிரம்மராயர் மன்னனிடம் சொல்ல, மன்னர் அந்த அறைக்கு வந்தார். மன்னர் வருகைக்காக காத்திருந்த தளபதிகள் மன்னர் வந்த பின் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். மன்னரும் சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

அமர்ந்து கிருஷ்ணன் ராமன் அவர்களை வாஞ்சையோடு பார்த்தார், சபைக்கும் , கிருஷ்ணன் ராமனுக்கும் அது புரிந்தது.

ராஜ ராஜ பிரம்மராயர் பேச ஆரம்பித்தார்!!

கங்கைப் படையெடுப்பில் முடிந்து ஆறு மாத காலம் ஆயிற்று… கங்கைப் படையெடுப்பில் வெற்றியும் கண்டோம்! அந்த வெற்றியில் நிறைய சிறந்த தளபதிகள், பிரம்மராயர்கள், படைவீரர்கள், யானைகள், குதிரைகள், வைத்தியர்கள், என நிறைய பேரை இழந்தோம். அதில் எப்பொழுதும் நம் சபையை அலங்கரிக்கும் மன்னரின் உற்ற தோழனும் நம் கிருஷ்ணன் ராமன் அவர்களின் மகனும், நம் தலைமை தளபதியும், சுத்தவீரனாகவும் இருந்த, நம் பிரம்மராயர் அருண்மொழிப்பட்டரை நாம் இழந்து இருக்கிறோம். அதற்கு, நம் சோழ தேசத்தின் தலைமை தளபதியாக இருந்தவரும், நம் சோழ தேசத்தின் அரசியல் நுணுக்கங்களை அறிந்தவராகவும், நம்மையும் நம் மன்னரையும் வழிநடத்தும் நம் அன்புக்குரிய ஆசான் ஐயா கிருஷ்ணன் ராமன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை மன்னரின் சார்பாகவும், சபையின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

மன்னர் கிருஷ்ணன் ராமன் அவர்களை பார்த்து இரு கை கூப்பி வணங்கி விட்டு, தன் பேச்சை துவங்கினார்.

இதுவே அருள்மொழி இல்லாத முதல் ஆலோசனை கூட்டம், நாம் எந்த முடிவு எடுத்தாலும் அதில் உள்ள நான்காம் கோணம்தான் அருண்மொழிக்கு தெரியும். அதுவும் அவர் சொல்படியே நடக்கும். இன்றும் சரி, இனியும் சரி, இச்சபையில் அந்த நான்காம் கோணம் சிந்தனை யாருக்கு வரும்? அப்படி வந்தாலும் அது அருண்மொழி அளவுக்கு துல்லியமாக இருக்குமா? தெரியவில்லை!

அருண்மொழியின் குடும்பத்தாருக்கும், என் தந்தை நிலையில் இருந்து, என்னையும், நம் தேசத்தையும் வழி நடத்தும் கிருஷ்ணன் ராமன் அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனாலும், இப்படி ஒரு வீரனை நம் சோழ நாட்டுக்கு தந்தமைக்கு நன்றி. உங்களுக்கு சோழ தேசமும் நானும் கடமைப்பட்டுள்ளோம். உங்களுக்கு ஒரு மகன் இல்லை என்று நினைத்து விடாதீர்கள் நான் இருக்கிறேன் உங்கள் தோளோடு தோள் கொடுக்க.”

சபை ஒரு நிமிடம் அமைதியாக இருந்தது. மன்னர் இருக்கையில் அமர சிறு களைப்புடன் கிருஷ்ணன் ராமன் அவர் பேச்சை துவங்கினார். “அனைவருக்கும் வணக்கம் நம் தலைமை தளபதியின் இறப்பு ஒரு பேரிழப்பு தான் எனக்கும் நமக்கும், நம் மன்னருக்கும் நம் சோழ தேசத்துக்கும் தான். ஆனால் அதைப்பற்றி நாம் பேசி வருந்த வேண்டாம். நம் மன்னரையும் மக்களையும் காக்க சோழ தேசத்தில் ஒரு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வீரன் பிறக்கிறான், பிறப்பான். அவனுக்காக நாம் வருந்த வேண்டாம் நாம் இப்பொழுது ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்.”

நாம் இங்கு கூடி இருப்பது ஸ்ரீவிஜயம் மற்றும் கடாரத்தின் மேல் போர் செய்வது பற்றியும் வியூகங்கள் அமைப்பது பற்றியும் ஆலோசனை செய்து இன்றிலிருந்து 15 வது நாள் நாம் பூம்புகார், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், மற்றும் சேரநாடு துறைமுகங்கள் வழியாக ஈழம் போய் அங்கிருந்து, ஸ்ரீவிஜயம் மற்றும் கடாரத்தை தாக்கி நாம் வெற்றி அடைய வேண்டும்.

இதுவே இப்பொழுது நம் குறிக்கோள். இதுவே மன்னரின் எண்ணமும். நாம் கங்கைப் படையெடுப்பில் சிறப்பாகவும் அருண்மொழியின் இறப்புக்குப்பின், நம் படைகளையும் தளபதிகளையும் வழிநடத்திய ராஜ ராஜ பிரம்மராயரை நம் சோழப் படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க நம் மன்னரின் அரசாணை இந்த செப்பேட்டில் இருக்கிறது. இதை நம் மன்னரே ராஜ ராஜ பிரம்மராயரிடம் அளிப்பார்.

சபைக்கு வணக்கம் செலுத்தி ராஜ ராஜ பிரம்மராயர் மன்னரிடம் இருந்து புலிச்சின்னம் பொறித்த வாளும் அரசாணையும் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீ ராஜேந்திர சோழர் பேச இன்று நாம் கடாரத்தின் மீதும் ஸ்ரீவிஜயத்தின் மீதும் படையெடுக்க அச்சாரம் வாங்கிற்று. நம் படைக்கு புதிதாக தலைமை தளபதியும் நியமனம் செய்தாகிவிட்டது. இவரை நம் நான்காம் படையான கடற்படையின் தளபதியாகவும் நியமிக்கிறேன் ராஜ பிரம்மராயர் கீழ் வேலை செய்ய
1. ராஜராஜ அணிமூரி நாடாழ்வான்
2. சோழ மூவேந்த வேளான்
3. வில்லவ ராஜனும்
4. காடவராயரையும்
நியமிக்கின்றேன். கிருஷ்ணன் ராமன் சொன்னதுபோல் இன்றிலிருந்து 15 வது நாள் நாம் பூம்புகாரிலிருந்து நம் பயணம் தொடங்கும். இதில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்ன செய்யப் போகிறோம் என்று வியூகம் அமைப்போம்.

என் எண்ணத்தின் படி நம் சோழப்படை போய் இறங்கிய உடனே ஸ்ரீவிஜயத்தின் மன்னன் சங்கிராம விஜயோத் துங்கவர்மன் சரண் அடைவான் என்று நம்புகிறேன். எதிர்ப்பு இருக்காது என்று சொல்லவில்லை எதிர்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் அந்த எண்ணம் நிறைவேற நாம் சரியாக ஒரு ஆயிரம் கலங்கள் கொண்ட படையுடன் நாம் போய் ஸ்ரீவிஜயத்தின் மண்ணில் இறங்க வேண்டும்.

மாமா நம்மிடத்தில் அந்த அளவுக்கு கலங்கள் உள்ளதா? வந்திய தேவர் பேச ஆரம்பித்தார்.

மன்னா நம்மிடம் கலன்கள் தயார் நிலையில் உள்ளன இங்கு இந்த கொள்ளிடக்கரை சாலையில் மட்டும் 256 தயார் நிலையில் உள்ளன. பின் நாகப்பட்டினத்தில் 144 ராமேஸ்வரத்தில் 100 இலங்கையில் 100 மாமல்லையில் 156 மயிலையில் 144 கோடியக்கரையில் நூறும் சேரநாட்டின் துறைமுகத்தில் இருந்து 300 கலங்களும் மொத்தம் 1300 கலங்கள் தயார் நிலையில் உள்ளன. இன்று கிளம்ப வேண்டும் என்றாலும் நாம் தயார்.

இதில் எத்தனை யானைகள், குதிரைகள், போர்வீரர்கள், வைத்தியர்கள் செல்ல முடியும்? மன்னா இதற்கு ஏற்ற பதிலை நம் கப்பல் கட்டுமான தலைமை நிர்வாகி நித்திய வினோத பெருந்தச்சன் சொன்னால் சரியாக இருக்கும். அவர் சபையில் இல்லையே என்றார். மன்னர், “அவர் எங்கு இருப்பார்?”

மீண்டும் வந்திய தேவர் பேச ஆரம்பித்தார்,  “அவர் இந்த சாலையில்தான் நம் கடல்படைக்கு தேவையான புதுப்புது ஆயுதங்களை செய்யும் ஆராய்ச்சியில் உள்ளார். அவரை அழைத்துவர ஒரு வீரனை அனுப்புகிறேன்.

நன்று.

“மன்னா உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்து சேர்க்காமல் விட்டு விட்டோம். அதற்கு கங்கை படையெடுப்பில் வெற்றியும், தலைநகரம் நிர்மாணம் அலுவல், பின் நம் தலைமை தளபதியின் மரணம் என நீங்கள் தொடர் பயணத்தில் இருந்தீர்கள். இதை சொல்ல வரும் பொழுது எல்லாம், நீங்கள் வேறு ஒரு வேலை சொல்லிவிடுவீர்கள். அதனால் இந்த செய்தி மறந்துவிட்டது” என்றார் வந்தியதேவன்.

இதைக்கேட்டு ராஜேந்திர சோழர் அவர் ஆசனத்தில் இருந்து இறங்கிவந்து, சபை என்றும் பாராமல் அவர் மாமா வந்தியத்தேவரை ஆரத் தழுவிக் கொண்டு, அவர் இடுப்பில் இருந்து ஒரு ஓலையை எடுத்து, மாமா இதைப் பற்றி தானே சொல்லப்போகிறீர்கள். நானும் ஆறு மாத காலமாக இதை உங்களிடம் சேர்க்க சித்தம் கொண்டேன் இது எப்படியோ தாமதமாகிவிட்டது.

அந்த ஓலையை வாங்கிய வந்தியத்தேவர் அதைப் படித்துப் பார்த்து ஆடிப் போனார்!!!
அதில்!

“ஒரு கலம் நிறைய பொன் பரிசாக, உனக்காக கங்கைக்கரையில் நிறுத்தினேன். அது வந்தியத்தேவர் கையில் கிடைத்து. பொன் கஜானாவுக்கும், கலம் உன் கடல் படை பயணத்துக்கும் உதவும் என்று குளத்தில் ஒரு சாலை அமைக்க சொல்லி அதில் நித்திய வினோத பெருந்தச்சனை இந்த தளத்தை பற்றியும் அதன் பாதுகாப்பு பற்றியும் அதன் உறுதி பற்றியும் ஆராய்ச்சி செய்ய சொல்லி கடல்மார்க்கமாக அந்த கலம் சோழ தேசம் வந்து கிருஷ்ணன் ராமனிடம் வந்து சேர்ந்தது.

“இந்த ஓலையுடன் நண்பா உங்களுக்கு ஒரு இரண்டாம் வாளை பரிசாக வைத்துள்ளேன். இதை என் நட்பின் சின்னமாக ஏற்க வேண்டும்.” – மித்ரன்

மன்னவா இந்த ஓலையைப் பற்றி இல்லை ஆனால் இந்த ஓலையை எழுதிய மித்ரன் பற்றி இந்த ஓலையில் இருக்கும் விஷயத்தைப் பற்றிதான் இதில் குறிப்பிடப் பட்ட படி அனைத்தும் நடந்தது இந்தாருங்கள் என்னிடம் இருக்கும் மித்ரனின் ஓலை.

மன்னன் வாங்கி பார்த்தார் அதில் இது என் அன்பு நண்பன் ராஜேந்திர சோழர் அவர்களுக்கு, அவரை ஸ்ரீவிஜயத்தில் உள்ள சோழ துறைமுகத்தில் சந்திப்போம் – மித்ரன்

கிருஷ்ணன் ராமன் அவர்களே, “மித்ரன் என்றால் நண்பன் என்றுதானே பொருள்?” ஆம் மன்னா!

“மாமா யாரு இந்த மித்ரன்? விசாரித்தீர்களா?”

நம் ஒற்றர் படையை வைத்து அலசினோம் “நமக்கு கிடைத்தது ஒரு கொடியும் இரண்டு ராஜராஜர் இலச்சினையும்,  5 இரண்டாம் வாளும்” என்றார் வந்திய தேவர்.

“மாமா என் இரண்டாம் வாளை பார்த்தீர்களா? இந்தாருங்கள் என்ன  வேலைப்பாடு? மரகதமும் வைடூரியமும் பதிக்கப்பட்டிருக்கிறது மற்றும் என் இலச்சினையும் என் ஐயன் இலச்சினையும்,  என் தந்தையார் அவர்கள் என்னை ஆசையாக சொல்லும் சோழ புலிக்குட்டி” என்று அந்த வாளில் எழுதி இருக்கிறது.

பின் கைப்பிடி தங்கத்தால் செய்யப்பட்டு இருக்கிறது, அதில் புலி சின்னம் இருக்கிறது இதில் மிகவும் முக்கியமானது இந்த வாள் கனம் குறைவாக இருக்கிறது ஆனால் மிகவும் உறுதியாகவும் உள்ளது.

மன்னா! நமக்கு கிடைத்த இந்த ஐந்து வாள்களும் இதே போல் தான் இருக்கிறது. இதில் ஐந்து பெயர்கள் பொறிக்கப்பட்டு உள்ளது ஒன்று கிருஷ்ணன் ராமன், வந்தியத்தேவர், ராஜ ராஜ பிரம்மராயர் மற்றும் என் மைத்துனனும் உன் தந்தையுமான, மறைந்த ராஜராஜ சோழரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்தும் நம் நித்திய வினோத பெருந்தச்சரிடம் பத்திரமாக இருக்கிறது. இதையும் ஆராய்ந்து நம் அனைத்து படை வீரர்களுக்கும் இரண்டாம் வாள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது நித்திய வினோத பெருந்தச்சர் சபைக்கு வந்தார். மன்னனுக்கு என் வணக்கம்! மன்னருக்கு என் பரிசுகள். பரிசுகள் பற்றி சொன்னவுடன், அவர் மாணவர்கள் ஒரு ஐந்தடி உள்ள ஒரு அற்புதமான வாளைக் கொண்டு வந்தார்கள். அதை மன்னருக்கு சபைமுன் அவர் கொடுத்தார்.

மன்னா இன்னும் சில பரிசுகளை நீங்கள் ஏற்கவேண்டும் என்று சொல்லி ஒரே வில்லில் ஐந்து அம்புவிடும் ஒரு கருவி, 30 வினாடியில் தொடர்ந்து ஆறு அம்புவிடும் ஒரு கருவியும், ஒரு கருவியில் ஈட்டி எறியும் விதமாக பல பல கருவிகள் பரிசாக கொடுத்தார்.

இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட மன்னர், “கலங்களைப் பற்றியும் அதில் எத்தனை பேர் செல்லலாம்?, எவ்வளவு காலம் ஆகும் விஜயத்தை அடைய?, பரிசாக கிடைத்த கலம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

இதைத்தொடர்ந்து பெருந்தச்சன் பேச துவங்கினார். “மன்னா நமக்கு பரிசாக கிடைத்த கலத்தை விட நம் சோழ தேசத்து கலங்கள் நேர்த்தியான முறையில் செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த கலங்களின் மூலம் ஒரு விடை கிடைத்துள்ளது. யானைகளுக்கு ஒரு அறை, குதிரைகளுக்கு ஒரு அறை என்று கீழ் தளத்தை பிடித்து இருக்கின்றார்கள் இதன் மூலம் எடை அதிகம் இருக்கும் பொருள் கீழ் இருக்கும் பொழுது, மேல் தளத்தில் இருக்கும் வீரர்கள் பொருள்களுக்கு அலைகள் மூலமும் கலங்கள் அசைவதன் மூலமும் வரும் ஆட்டம் குறையும். மற்றும் அடித்தளத்தில் மிருகங்கள் இருப்பதால் அவை மிரளாமல் இருக்கும். பின் ஒரு கலத்தில் மூன்று யானைகள் பத்து குதிரைகள் 200 வீரர்கள் மற்றும் துடுப்பு போடும் கப்பல் தொழிலாளிகள் மற்றும் அவர்களுக்கான ஆயுதமும் உணவுகளும் கொண்டு செல்ல முடியும். ஆக நாம் 1300 கலங்களை செலுத்தப் போகிறோம் அல்லவா? அப்படி செய்தால் நம் யானை குதிரை வீரர்கள் துடுப்பு போடுபவர்கள் வைத்தியர்கள் என 4 லட்சத்து 6 ஆயிரத்து 900 பேர் இந்த கடல் போருக்கு செல்வோம். நம் கலங்களின் அணிவகுப்பை பார்த்து ஸ்ரீவிஜயம் மற்றும் கடாரத்தின் மன்னர் “சங்கிராம விஜயோத் துங்கவர்மன்” தோல்வியை ஒப்புக் கொள்வான் என்றார்.

இதைக் கேட்ட மன்னர் நன்று என்று சொல்லி அவரை ஆரத் தழுவினார். பின் மன்னர் நம் சோழ தேசத்து மக்கள் ஆகட்டும், அரசாங்க ஊழியர்கள் ஆகட்டும், யார் கண்ணுக்கும் தெரியாத மித்ரன் ஆகட்டும், சோழ தேசத்தின் மீதும், மக்களின் மீதும் காதல் கொண்டும் கற்றுக் கொண்டும் உள்ளனர் என்று இதன் மூலம் தெரிகிறது.

பெருந்தச்சரே நான் ஒன்று கேள்விப்பட்டேன் அது உண்மையா? நம் கலங்கள் துடுப்பு மூலமும் பாய்மரம் மூலமும் ஒரே சமயத்தில் நகருமாமே?

ஆமாம் மன்னா!

நல்லது. அதை இப்பொழுது காணலாமா?

வாருங்கள் மன்னா என்றார்.

கிருஷ்ணன் ராமன் அவர்களே இன்றிலிருந்து 15 வது நாள் நாம் பூம்புகாரில் உள்ள பல்லவனேஸ்வரர் கோவிலில் பூஜை முடித்து ஸ்ரீ விஜயாத்தையும் கடாரத்தையும் வென்று வாகை சூடுவோம். இதற்கு நம் படைத்தளபதிகள் படைவீரர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன். ராஜராஜரும் பிரகதீஸ்வரும் சோழிஸ்வரரும் உடன் இருப்பார் என்றார் கிருஷ்ணன் ராமன்.

தளபதிகள் அனைவரும் ஒருசேர
“சோழம்! சோழம்! சோழம்!” என்றனர்.

பின் சாலையையும், கலங்களையும் பார்த்தார். இவை அனைத்தையும் பார்த்தபின், மன்னர், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

பின் சாலையில் வாள் பயிற்சி நடக்கும் இடத்தைப் பார்த்தார். பார்த்து காடவராயரை அழைத்து வாருங்கள் என்றார். நாம் இருவரும் வாள் வீசுவோம் என்றார்.

காடவராயர், முதுகில் வாள் வைத்து சண்டைபோடும் இரண்டாம் படைக்கு தளபதி. இவர் 5 அடி வாள்வைத்து சண்டையிடும் வித்தைக்காரர். பெருந்தச்சன் தந்த ஐந்தடி வாளை பிரயோகம் செய்து பார்க்க மன்னர் அழைக்கிறார் என்று புரிந்து களத்தில் இறங்கினார். மன்னரும் காடவராயரும் வாள் வீசி முடித்தனர். பின் மன்னர் உதயாதியனை அழைத்து என் மகன்கள் மூவரையும் அரண்மனைக்கு வரச் சொல் என்றார். பின் ராஜ ராஜ பிரம்மராயரை அழைத்து, “நாளை அனைவரும் சோழிஸ்வரர் கோவிலுக்கு வந்துவிடுங்கள்” என்றார்.

சொல்லிவிட்டு மன்னரும் மற்றவர்களும் கங்கைகொண்ட சோழபுரத்தை சென்றடைந்தனர். ஸ்ரீ ராஜேந்திர சோழர் மாளிகை அடையும் முன்பு அவர் மகன்கள் இராஜாதி ராஜனும், இரண்டாம் இராஜேந்திரனும் வீரராஜேந்திரனும் வந்து சேர்ந்தனர்.

மன்னர், அந்த சபையில் நடந்ததை பற்றியும், இன்றிலிருந்து 15 வது நாள் ஸ்ரீ விஜயம் படையெடுப்பை பற்றியும் கூறினார். பின், “இந்தப் போருக்கு நான் செல்கிறேன். நீங்கள் மூவரும் நம் சோழ நாட்டின் எல்லைகளை பாதுகாத்து, நாட்டு மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து, நாட்டையும், நாட்டு மக்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

வீரராஜேந்திர, “நீ மீண்டும் கங்கை வரை, ஒரு சிறிய குதிரை படையுடன் சென்று விட்டு வா. ஏனெனில் நம் படையெடுப்புக்குப் பின், ஏதேனும் கலகம் அங்கு ஏற்பட்டிருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள” என்றார் மன்னர்.

“இந்த ஸ்ரீவிஜயத்தின் பயணம் குறைந்தது ஒரு வருட காலம் போகலாம். இல்லையெனில், சீக்கிரம் முடியலாம். அதனால், நீங்கள் நம் தேசத்தை சீரோடும் சிறப்போடும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மூவரும் எந்த ஒரு தடையும் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டனர். அந்த நாள் நன்றாக முடிந்தது.

இரண்டாம் நாள் சபை சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. அதில் மன்னர் – வந்தியதேவன் மற்றும் கிருஷ்ணன் ராமனிடம், “இலங்கையில் இருக்கும் 300 கலங்கள் தவிர்த்து, மற்ற அனைத்தும் பூம்புகார் துறைமுகம் வரவேண்டும். நாம் ஒன்றாக ஆயிரம் கலங்களில் – வீரர்கள், குதிரைகள், யானைகளுடன் செல்லவேண்டும்” என்றார்.

இதைக் கேட்டு வந்தியதேவர், “மன்னா! நேற்று நம் சபை முடிந்தவுடனேயே, இந்த செய்தியை அனுப்பி விட்டேன். அவர்கள் நாளை புறப்பட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நன்று!!!

மாமா, “நீங்கள் ஒருவர் மட்டுமே என் மன ஓட்டத்தைப் படித்து சொல்லி விடுகிறீர்கள்” என்றார் மன்னர்.

பின் தலைமை தளபதி ராஜ ராஜ பிரம்மராயர் அழைத்து மன்னர் அனைத்து தளபதிகளும் உப தளபதிகளும் வந்துவிட்டார்களா? என்று கேட்டார். அனைவரும் வந்து விட்டார்கள் என்றார் பிரம்மராயர்.

மன்னர் அனைவரிடமும் உரையாற்றினார் “இது ஒரு கடல் போர். இதில் 30 வயதுக்குக் கீழ் இருக்கும் படை வீரர்களை நாம் அழைத்துச் செல்லப் போகிறோம். அதனால் வீரர்களை தேர்வு செய்யுங்கள். 30 வயதிற்கு மேல் இருப்பவர்கள் இந்த தேசத்தை பாதுகாத்துக் கொண்டு இருங்கள்” என்றார். “தளபதிகளுக்கு வயது வரம்பு கிடையாது அனைவரும் வாருங்கள் ஸ்ரீவிஜய மன்னர் சங்கிராம விஜயோத் துங்கவர்மனுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” என்றார்.

இதைக் கேட்டு வீரர்கள் வானம் அதிரும் அளவிற்கு “சோழம்! சோழம்! சோழம்!” என்றனர்.

ஒருவேளை இந்த சத்தம் காற்றில் கலந்து ஸ்ரீவிஜயம் சென்று விட்டதோ? ஸ்ரீவிஜயத்து மன்னருக்கு இந்தப் படையெடுப்பு பற்றி விஷயம் தெரிய வந்து, பயந்து போய் அமர்ந்திருந்தார். என்ன செய்யலாமென்று சபையில் பேச…

அந்தத் தருணம் சோழ தேசத்தில் மன்னர் போருக்கு ஆயத்தமாக, நாட்கள் உருண்டோடின. பதினைந்தாவது நாள் வந்தது பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை முடிந்தது.

ஆயிரம் கலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மத்தள சத்தம் முழங்க கிளம்பியது. அதை ஒரு கருடன் வானத்தில் வட்டமிட்டு பார்த்து “என்ன இவ்வளவு பெரிய கடல் புலியா?” என்று வியக்கும் வகையில் அந்த கலங்கள் புலி வடிவில் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்தத் கங்களில் இருக்கும் கொடிகள் அசையும்போது, அதிலிருக்கும் பாயும் புலி சின்னங்களும் ஸ்ரீ விஜயத்தை நோக்கி வேகமாக வேட்டையாடப் போவது போலிருந்தது.

முதல் கலத்தின் மேல் தளத்திலுள்ள தொலைநோக்கி திண்டில் இருந்து, மன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழர் நின்று, கடலையும், அவரின் கலங்கள் அணிவகுப்பையும் பார்த்து, மனதுக்குள் தன் மூதாதையர்களுக்கு நன்றி சொன்னார். “சிவ! சிவா!” என்று சொன்னார். பின் மத்தளத்தில் போருக்கு செல்லும் பொழுது வாசிக்கும் நடை வாசிக்கப்பட்டது. அதைக் கேட்டு அனைத்து கலங்களிளும் அதையே வாசித்தனர். அனைத்து வீரர்களும் “சோழம்! சோழம்! சோழம்!” என்று சொல்ல, யானைகளும், குதிரைகளும் – அதன் பங்குக்கு சத்தமிட்டது. பின் 5 நாட்களில் இலங்கையை அடைந்தது அந்தப் பெரும் படை. அங்கு பத்து நாட்கள் தங்கி பயணக் களைப்பை போக்கிக்கொண்டு, பின் ஆயிரத்து 300 கலங்களாக கிளம்பியது ராஜேந்திரனின் சோழப்படை.

வழியில் இவர்களின் அணிவகுப்பைப் பார்த்த அனைத்து தீவுகளின் மன்னர்களும் அவர்களின் படையுடன் வந்து மணிமுடியையும் செங்கோலையும் தந்தனர். நம் மன்னர் ராஜேந்திரசோழன் அவர்களிடம் அதை திருப்பி அளித்து விட்டு நாம் நண்பர்கள் என்றும், எங்கள் வணிகர்கள் வந்தால் நல்ல முறையில் கவனியுங்கள் அது போதும்! பின் சோழ தேசத்துக்கு என்று ஒரு துறைமுக இடம் தாருங்கள் என்றார். அனைத்தையும் ஒப்புக்கொண்டனர்.

இப்படியே ஐம்பத்தி ஒரு நாள் பயணம் முடிந்தது, 52 ஆம் நாள்  ஸ்ரீவிஜயத்தின் கடல் எல்லை ஆரம்பிக்க எங்கு இருந்து இந்தக் கலங்கள் வந்தது என்று தெரியாதவாறு ஒரு நூறு கலங்கள் சோழர்களின் களங்களுக்கு அரண் போல் சுற்றி வளைத்தனர். மன்னர் தளத்தின் முன் ஒரு ஆயிரம் அடி தொலைவில் ஒரு கலம் வழி காட்டுவது போல் சென்றது.

இந்த எதிர்பாராத கலங்களால் ஒரு சிறு சலசலப்புக்குப் பின் மன்னரும் ராஜராஜ பிரம்மராயர் தொலைநோக்கி மூலம் பார்க்க ! மன்னரின் களத்தின் முன்சென்ற கலத்தில் வெள்ளை நிறக் கொடியில் பச்சை நிற ஒளி வரையப்பட்டிருந்தது, இது நட்பைக் குறிக்கும் சின்னமாகும். இன்னொரு இடத்தில் கருப்பு நிற கொடியில் வெள்ளை நிறத்தில் வரையப் பட்டிருந்தது, இது கடலில் வணிகர்கள் செல்லும் பாதையை கவனிக்கும் கலங்களுக்கு உரிய சின்னமாகும்.

இதை கவனித்தனர், இது மித்ரனின் கலங்கள் என்று புரிந்தது. பதற்றமான சூழல் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க மத்தளத்தில் நடை மாற்றி வாசிக்கப்பட்டது.

அவர்கள் அந்த நடையை வாசிக்க அந்த மத்தளத்தின் அதிர்வு ஸ்ரீவிஜயத்தின் கோட்டைக்குள் கேட்க, இவ்வளவு நாள் அறைகூவல் விட்ட அவர்கள் ஆடிப் போனார்கள்.

மன்னரின் கலத்தின் முன் சென்ற கலம் செல்லும் வழியில் சேனைகள்  செல்ல, அது சரிதானா என்று பார்க்க சென்ற ஒற்றர்களின் படகு வந்து செய்தியை சொன்னது. இந்த வழி ஆபத்து இல்லை இங்கு சற்று தூரத்தில் பெரிய நிலப்பரப்பு உள்ளது நம் படைக்கு ஏதுவாக இருக்கும். முன்னிருக்கும் கலங்களுக்கு கூட எங்களை ஒன்றும் செய்யவில்லை என்றார். இதைக்கேட்ட மன்னருக்கு ஒரே மகிழ்ச்சி, என்ன ஒரு விசுவாசம் சோழம் மீது சோழ தேசத்து மக்களுக்கு. இத்தனை தொலைவு வந்தும் சோழ தேசத்தின் ஒரு விசுவாசி நமக்கு உதவ காத்துக் கொண்டிருக்கிறான் என்று.

பின், கலங்கள் தரை தட்ட ஆரம்பித்தது கலங்களுக்கு நங்கூரம் போட்டு,  காவல் வீரர்கள் இறங்கி அந்தப் பகுதியை சல்லடையில் சலித்தனர். பின் மன்னரும் மற்றப் படைகளும் கரையில் இறங்கி அந்த இடத்தை சுற்றி பார்த்தனர், ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

மன்னருக்கு ஏனோ ஒரு புது இடத்திற்கு வந்த எண்ணமில்லை. ஏதோ நீண்ட நாட்களாக பழகிய ஒரு இடத்திற்கும், பழகிய ஒருவரை சந்திக்க வந்திருக்கும் மனநிலையில் மன்னர் அங்கு நின்றிருந்தார். அத்தருணத்தில் எக்காளம் ஊதி, மன்னர் அவர்களை வரவேற்க என்ன நடை மேளத்தில் வாசிப்பார்கள் அந்த நாதம் முழங்க ஒரு அலங்கரிக்கப்பட்ட யானையுடன் 300 படை வீரர்கள் அவர்களின் தலைவன் மித்ரன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

மெய்க்காவல் படைவீரர்களுக்கு மிகுந்த ஆச்சரியம், நாம் இந்த இடத்தை இவ்வளவு கவனமாக பார்த்தும் இத்தனை மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று.

மன்னருக்கும், வந்தியத்தேவருக்கும் நம் மித்ரனை பார்த்து உன் வியப்பு. ஏனெனில், ஏதோ நீண்ட நாள் பழகிய முகம் போல் மித்ரனின் முகம் அவர்களுக்குத் தோன்றுகிறது. மித்ரன் அங்கிருந்து நடந்து வரும் தோரணையே கம்பீரமாக இருந்தது. மாமன்னர் ஸ்ரீ ராஜேந்திர தேவர் அவர்களை நேரில் காணவரும் சோழநாட்டு பெரும் படைத் தளபதிகளும், அரசு அதிகாரிகளோ ராஜேந்திர சோழன் அவர்களை காண வரும்போது இத்தனை எளிதாகவும் கம்பீரமாகவும் வந்து நிற்க மாட்டார்கள். மன்னரைப் பார்க்க வருகிறோம் என்ற பணிவும் பயபக்தியுடன் வந்து நிற்பார்கள். ஆனால் மித்திரனின் கூற்றமும், கம்பீரமும் ஆஜானுபாகுவான உடல்வாகும் மன்னருக்கு அவரைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது.

மித்ரனும் அவரின் படைவீரர்களும் மன்னரை நெருங்கி வரும் சூழலில், மித்ரனின் படைவீரர்கள் மன்னரின் மெய்க்கீர்த்தி கூறி மன்னரை வரவேற்றனர். மெய்க்கீர்த்தி முடிந்தவுடன் அனைவரும் ஒருமித்தக் குரலில் சோழம்! சோழம்! சோழம்! என்று முழங்க அது இடி ஒலியாய் ஸ்ரீவிஜயம் முழுக்க பரவியது.

இதைக்கேட்டு மன்னரும் சோழப் படையினரும் பூரித்துப் போய் மித்ரனின் ஒரு நிமிடம் நின்று பார்த்தனர்.

பின் மித்ரனின் மரியாதையை ஏற்றுக்கொண்டு மன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழன், மித்ரனின் யானை மீது ஏறி அம்பாரியில் அமர்ந்து மித்ரனின் இடம் நோக்கி சென்றார்.

அங்கு மரத்தால் செய்யப்பட்ட ஓர் மாளிகை, அந்த மாளிகையை சென்றடைந்தனர். யானையில் இருந்து கீழே இறங்கிய மன்னர் ராஜேந்திர சோழர் மித்ரனின் இடம் நீ யார்? நீ சோழ தேசத்தை சேர்ந்தவன் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் சோழ தேசத்திற்கு யாரும் இதுவரை தந்திட அளவிற்கு பரிசும், உனக்கு நான் மித்ரன் என்று சொல்லக்கூடிய துணிவும் உன்னிடம் எப்படி வந்தது? பின் உன்னுடைய விரல்களை நான் கவனித்தேன் அதில் ஒரு கையில் என் தந்தையாரின் இலச்சினை, மற்றொரு கையில் என்னுடைய இலச்சினை. பின் இலங்கைப் போரில் நான் பயன்படுத்திய என் தந்தையின் இலச்சினை பதித்த பதக்கம் சங்கிலி உன் கழுத்தில் பார்த்தேன். எப்படி இது எல்லாம் உன்னிடம், மீண்டும் கேட்கிறேன் நீ யார் ?

மித்ரன் பேச ஆரம்பித்தான்!!!

மன்னர் மன்னா, அனைத்தையும் நான் சொல்கிறேன் ஆனால் எனக்கு நீங்கள் ஒரே ஒரு சலுகை மட்டும் தரவேண்டும். அதுவும் இப்பொழுதே, என்ன என்றார் மன்னர். மன்னா மன்னா என்று சொல்வது எனக்கு சிறிது அந்நியமாக இருக்கிறது. ஏனெனில் உங்களை மித்ரன் ஆகவே (நண்பனாகவே) நினைத்து இத்தனை காலம் நான் வாழ்ந்து விட்டேன். அதனால் நண்பா என்று சொல்ல அனுமதி வேண்டும் தருவீர்களா !!!

மன்னர் “சோழ தேசத்தின் மன்னன் என்று நினைக்காமல் என்னையும் ஒரு சக மனிதனாக நினைத்து, நீ என்னை நண்பனாகவே நினைத்து வாழ்ந்தேன் என்று சொல்வதற்காகவும், என் தந்தைக்குப் பின் இத்துணை கம்பீரமாக யாரும் என்னிடம் பேசியதில்லை அதற்காகவும் நான் உன்னை நண்பனாக ஏற்றுக் கொள்கிறேன்”, உன் வேண்டுகோளுக்கிணங்க நீ என்னை நண்பா என்று அழைக்கலாம் என்றார்.

பின் மித்ரன் மீண்டும் பேச ஆரம்பித்தான்!!!

நண்பா என் பெயர் சிவாந்தகன். நான் உங்களை என் பதினோராவது வயதில் முதல் முதல் சந்தித்தேன். நீங்களும் உங்கள் தந்தையுமான மாமன்னர் ராஜராஜ சோழனும் திக்விஜயம் செய்து கொண்டிருந்த தருணம் அது, நான் என் கிராமத்தில் தவறு செய்த இரண்டு பேரை பிரம்பால் அடித்து கொண்டிருந்தேன். அதைப்பார்த்து உங்கள் தந்தை ராஜராஜன் அவர்கள் என்னை யார் என்று எங்கள் ஊர் பெரியவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். 11 பிரம்படி தண்டனை முடித்துவிட்டு நானும் அந்த இடத்திற்கு வந்தேன். எங்கள் ஊர் பெரியவர் நான் செய்வதை அனைத்தையும் மன்னரிடம் சொன்னார் “அதாவது நான் ஒரு நாள் ஒரு கிராம சபையில், மன்னர்,  தவறு செய்தால் செய்தவருக்கு 11 பிரம்படி தண்டனை தரவேண்டும் என்றும், அதை அந்த கிராமத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் அவர்கள் தவறே செய்யாதவர்கள் ஆக இருக்க வேண்டும்” என்று ஒரு கட்டளை இட்டார். அந்த இடத்தில் நான் இருந்தேன்.

அன்றிலிருந்து நான் தவறு செய்வதில்லை, தவறு செய்யாமல் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்டு பிரம்பால் அவர்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தேன். இதை மன்னரிடம் எங்கள் ஊர்ப் பெரியவர்கள் கூறினார்கள். பின் மன்னர் என் படிப்பைப் பற்றியும் என் தாய் தந்தையர் பற்றியும் விசாரித்தார். என் தாய் தந்தையர் எங்கள் கொல்லையில் இருக்கும் வாழைத்தோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சர்ப்பம் தீண்டி இறந்து விட்டார்கள் என்று நான் சொன்னேன். என் படிப்பைப் பற்றி எங்கள் ஊர் பெரியவர் சொன்னார் நான் பதினாறு வயதிலேயே மூன்று வேதங்களையும் படித்து பண்டிதன் ஆனேன் என்றும், ஆனாலும் இந்த சிவாந்தகன் உங்களை கொண்டு வாழ்கிறான், நடப்பது, நிற்பது, பேசுவது, பிரம்பெடுத்து தண்டனை கொடுப்பது, எதிர்த்து கேட்பது தவறுகளைத் தட்டிக் கேட்பது என்று அனைத்திலும்.
இவனுக்கு வேதங்கள் படித்த பண்டிதனாகி எங்களைப்போல் வேதம் சொல்வதில் ஈடுபாடில்லை. நாட்டுக்காக போர்க்களம் செல்ல வேண்டும், மன்னருக்காக தோள் கொடுக்க வேண்டும், குதிரை ஏற வேண்டும், யானை ஏற வேண்டும், கலங்கள் செலுத்தி அயல்நாடுகளுக்கு சென்று போர் புரிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பான். பின் யாராயினும் தண்டனை கொடுக்கும் அளவிற்கு வளரவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டே இருப்பான் என்றார் எங்கள் ஊர் பெரியவர்.

பின், மன்னர் ராஜராஜர் கேட்டார் 11 வயது கொண்ட இந்த பாலகன் தண்டனை தருகிறான், நீங்கள் வயதில் மூத்தவர் முதியவர் நீங்கள் ஏன் தண்டனை கொடுக்கவில்லை. நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள். அதற்கு எங்கள் ஊர் பெரியவர் சொன்னார் “நானும் தவறு செய்தேன், என்னவென்றால் எங்கள் பக்கத்து வீட்டில் வளரும் மாமரம் காய்த்தது. அதில் ஒரு கிளை எங்கள் வீட்டு நிலப்பரப்பில் சாய்ந்து இருந்தது, அந்தக் கிளையில் இருந்து இரண்டு மாங்கனிகள் கீழே விழுந்தது அதை நான் எடுத்து வீட்டுக்குள் கொண்டு சென்றேன் அதை இவன் பார்த்துவிட்டு இது தவறு என்று சுட்டிக்காட்டி எனக்கும் 11 பிரம்படி கொடுத்தான்”.

இதைக் கேட்டவுடன் மன்னர் என்னை ஆரத்தழுவி, என்னை கொண்டு இருக்க என் மகன் ராஜேந்திரன் மட்டும் தான் இருக்கிறான் என்று நினைத்தேன் இல்லை, இல்லை, இந்த சோழ தேசத்தில் என்னைக் கொண்டு நிறைய மகன்கள் இருக்கிறார்கள் என்று, இன்று உன் மூலம் அறிந்தேன். இன்றிலிருந்து நீ இந்த சோழ தேசத்தின் சொத்து. இன்று உன் குருமார்கள் அனைவரிடமும் உத்தரவு வாங்கிக் கொண்டு நாளை “காஞ்சிமா கடிகைக்கு” சென்று போர்க்கலைகள், ராஜதந்திரங்கள், அரசியல், சித்தாந்தம்,வேதாந்தம், பின் போர்க் கலைகளில் உனக்குப் பிடித்த கலை மற்றும், நீ ஆசைப்பட்டது போல் கலங்கள் செலுத்த கற்றுக்கொள் பின் கலங்களில் புதிய வகை ஆயுதங்களை செலுத்து என்றார். எனக்கு மிக்க மகிழ்ச்சி நான் அவரிடம் ஒன்றே ஒன்று கேட்டேன், எனக்குத் தாய் தந்தையர் இல்லை உங்களை நான் பெரியப்பா என்று அழைக்கலாமா? மீண்டும் என்னை ஆரத்தழுவி உனக்கு என்ன தோன்றுகிறதோ எப்படி என்னை அழைக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறதோ அதுபடியே அழை என்றார்.

பின் அவர் கையிலிருந்து ஒரு இலச்சினை மோதிரத்தை தந்து நீ எப்பொழுது வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கலாம் என்றார். அப்படிக் கிடைத்ததுதான் இந்த இலச்சினை பின்பு தன் வலக்கையை காட்டினார்.

பின் என்னையும் உன்னிடத்தில் அறிமுகம் செய்தார் நண்பா. ராஜேந்திரா இவனை மறந்துவிடாதே இவன் உன் மித்ரன் என்று கூறினாரே ஞாபகம் இருக்கிறதா. அன்றிலிருந்து இன்றுவரை நான் உங்களை என் நண்பனாகவும், என் உயிரினும் மேலானவனாகவும் நினைத்து வாழ்ந்து வந்துள்ளேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மன்னர் இராஜராஜன் அவர்களின் இலங்கை போரிலும், உங்கள் தலைமையின் கீழ் நடந்த இலங்கை போரிலும் நான் கலந்து கொண்டேன்.

நீங்கள் பாண்டியர்களின் மணிமுடியும், செங்கோலையும் இலங்கைப் போரில் கைப்பற்றினார்கள் அல்லவா, அத்தருணத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்று போர் வீரர்களுக்கு இடையே கூறினீர்கள்! அப்பொழுது போர்வீரர்கள் என்ன கேட்டாலும் நீங்கள் தந்தீர்கள், சிலர் உங்களது தலைப்பாகை முத்துமாலை கையில் அணிந்திருந்த மோதிரங்கள் இதெல்லாம் கூட கேட்டுப் பெற்றார்கள்.

அத்தருணத்தில் தான் நான் உங்கள் இலச்சினை பதித்த இந்தப் பதக்கத்தை கேட்டு பெற்றேன். அந்தப் போரில் கலந்து கொண்ட அனைவருக்கும் நீங்கள் உங்களுடைய இலச்சினை மோதிரத்தை தந்தீர்கள் அடையாளத்திற்காக. அதன்மூலம் நான் அதையும் பெற்றேன் என்னுடன் இருக்கும் 200 வீரர்களில் 100 வீரர்களிடம் உங்களுடைய இலச்சினை மோதிரம் இருக்கிறது.

நான் எப்பொழுதும் நம் சோழ பெருங்கடலையும், சோழ நாட்டையும் சுற்றி கொண்டேதான், இருப்பேன். ஏதேனும் வகையில் உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன். இது ஒரு நல்ல தருணம் அதனால்தான் ஒரு கலம் அனுப்பி நம் கடற்படைக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன். இவ்வளவுதான் நான். நம் சோழ தேசத்தில் நான் ஒரு சாதாரண பிரஜை. ஆனால் என் சிறுவயதில் இருந்து எந்த தருணத்தில் என் பெரியப்பா இராஜராஜர் உங்களை என் மித்ரன் என்று சொன்னாரோ அன்றிலிருந்து இத்தருணம் வரை ஏன் இறக்கும் தருணம் வரை நீங்கள் என் நண்பன் தான் உங்களை நண்பனாக தான் நினைத்து வாழ்ந்துள்ளேன் இப்பொழுது பேசிக்கொண்டும் இருக்கிறேன் நண்பா.

இதை அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த இராஜேந்திரசோழன் வந்தியத்தேவர் மற்றும் படையினர் அசந்து போனார்கள். மன்னர் இராஜேந்திர சோழன் வந்தியத்தேவரை பார்த்து எங்கிருந்து நூல் பிடித்து வந்திருக்கிறான் பாருங்கள் நம் சோழ தேசத்தின் கடற்படைக்கு கிடைத்த ஒரு வைரக்கல் இந்த சிவாந்தகன் என்றார். சொல்லிவிட்டு சிவாந்தகனை ஆரத்தழுவிக் கொண்டார்.

என்றும் நீ என் நண்பன் என்று கூறி ஒரு வெண்ணிற புரவியை சிவாந்தகனுக்கு பரிசளித்தார்.

பின் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் உணவு அருந்திவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

சில மணிநேரங்கள் கழித்து மன்னர் அனைத்து தளபதிகளையும், சிவானந்த கனையும் அழைத்து போர் வியூகங்களை பற்றி பேசினார்.

அத்தருணத்தில் இராஜ ராஜ பிரம்மராயர் கருத்தும், மன்னர் கருத்தும், சிவாந்தகன் கருத்தும் ஒருசேர இருந்தது. அது என்னவென்றால் நாளை காலை நமது சிறு குதிரைப் படையை அனுப்பி நம்முடைய வரவை பற்றி ஸ்ரீவிஜயத்தின் மன்னன் சங்கிராம விஜயோத் துங்க வர்மனுக்கு தெரிவிப்போம். தெரிவித்த பின் இந்த மொத்த ஸ்ரீ விஜயத்தையும் சுற்றிப் வலைப்போம் என்பதுதான்.

இந்தக் கருத்தை வீரமிக்க தளபதிகள் சூழ்ந்திருக்கும் சபை ஏற்றுக்கொண்டது. வந்தியத்தேவன் சபாஷ்! என்றார். சபை கலைந்து அனைவரும் இரவு உணவு அருந்தி விட்டு களைப்புத் தீர உறங்கினர்.

இரவுக் காவலர்கள் மட்டும் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.

காலை சூரியோதயத்திற்கு முன்பே சிறு குதிரை படை கிளம்பியது. உதயாதியன் தான் தலைமை தூதுவராகவும் அவனுடன் நூறு குதிரை வீரர்களும் சென்றனர். அவர்கள் சென்று அறை நாழிகையில் மொத்த ஸ்ரீ விஜயமும் சோழர்களின் பெரும்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டது. இதன்பின் நான்கு நாட்கள் ஸ்ரீவிஜயத்தின் மன்னனிடம் எழுந்து எந்தத் தகவலும் இல்லை. ஐந்தாவது நாள் ஒரு 50 வெண்ணிற புரவிகள் ஒருசேர கையில் வெள்ளைக்கொடியுடன் மாமன்னர் ராஜேந்திர சோழன் இருக்கும் இடத்தை தேடி வந்தது அதில் ஸ்ரீவிஜயத்தின் மன்னன் “சங்கிராம விஜயோத் துங்க வர்மனும்” இருந்தார். அந்த 50 பேரும் புரவியை விட்டு கீழே இறங்கி ஸ்ரீவிஜயத்தின் மன்னன் முன்னே நடக்க மீதி ஆட்கள் பின்னே நடந்து வந்தனர்.

இவர்களை பார்த்து மன்னர் இராஜேந்திர சோழன் அவருடைய இருக்கை அருகில் வர சொன்னார். வந்தவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்டார்.

ஸ்ரீவிஜயத்தின் மன்னன் பேச ஆரம்பித்தார் !!!

எங்களுடைய தவறை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம், சோழர்களின் வணிகர்களை நாங்கள் துன்புறுத்தி இருக்கக்கூடாது. அதேபோல் சோழர்கள் அவர்களுடைய பொருள்களை ஸ்ரீவிஜயத்தின் தான் விற்க வேண்டும் சீனத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று சொன்னது மிக தவறு என்று நான் உணர்ந்துவிட்டேன். உங்களுடைய படைகளின் எண்ணிக்கை கூட இல்லை ஸ்ரீவிஜயத்தின் மக்கள் எண்ணிக்கை. அதனால் இந்தப் போர் மூலம் வரும் பேரிழப்பை என்னாலும் என் மக்களாலும், என் நாடாலும் தாங்க இயலாது.

அதனால் என் மணிமுடியையும் என் செங்கோலையும் ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு கீழ் அடிபணிந்து ஆட்சி செய்யும் ஒரு அரசனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். சோழ தேசத்திற்கு என்றும் கட்டுப்பட்டு நானும், என் மக்களும் இருப்போம். மன்னித்து அருள்க என்றார்.

இதில் இருக்கும் உண்மையை உணர்ந்து மன்னன் ஸ்ரீ ராஜேந்திர சோழர் ஸ்ரீவிஜயத்தின் மன்னன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, உன்னை நான் என் கீழ் இருக்கும் மன்னர்களின் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்கள் நாட்டின் நிர்வாகம், வணிகம், உள்நாட்டு ஒப்பந்தங்கள், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் அனைத்தையும் நிர்வகிக்க, என் நிர்வாகி ஒருவரை பணி அமர்த்துவேன். அத்துடன் ஸ்ரீவிஜயத்தில் 25000 படைவீரர்களையும் இங்கே பணி அமர்த்தி விட்டு தான் செல்வேன். இதற்கு நீ ஒப்புவித்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். இதை ஒப்புக்கொண்டு பட்டயத்தில் கையெழுத்திட்டார் ஸ்ரீவிஜயத்தின் மன்னர். இவ்வாறு ஸ்ரீவிஜயம் அடிபணிந்தது மன்னர் ஸ்ரீ இராஜேந்திர சோழர் ஸ்ரீவிஜயத்தின் திக்விஜயம் செய்து மாளிகை கோட்டை கொத்தளங்கள் அனைத்தையும் பார்வையிட்டார். பார்த்துவிட்டு ஸ்ரீவிஜயத்தின் மன்னரிடம் உங்கள் நாட்டில் எங்கள் சோழநாட்டு நிர்வாகியாக சிவாந்தகனை நியமிக்கிறேன் என்றார்.

இத்தருணத்தில் கடாரத்தை நோட்டமிட சென்ற உதயாதியனும் அவன் குழுவினரும் மாமன்னரை பார்க்க வந்தனர். அவர்களைப் பார்த்து மன்னர் கடாரத்தில் நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்டார். மன்னா கடாரத்தில் தனிப்பட்ட அரசன் என்று யாருமில்லை ஒரு சாரார் ஸ்ரீவிஜயத்தின் மன்னரையே மன்னராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், சொற்ப மக்களே கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள். நமது படையிலிருந்து சிறு பிரிவை அனுப்பினால் போதும் அவர்களின் கொட்டத்தை அடக்கி விடலாம் என்றான் உதயாதியன்.

இதைக் கேட்டு மன்னர் நம் தலைமைத் தளபதி ராஜ ராஜ பிரம்மராயரை அழைத்து மிக இயல்பாக கடாரத்திற்கு யாரை அனுப்பலாம் என்றார்.

ஒரு நொடி கூட தாமதிக்காமல் நம் தலைமை தளபதி, நம் தளபதிகள் சோழ மூவேந்த வேளான் மற்றும் ராஜராஜ அணிமூரி நாடாழ்வான் தலைமையில் ஒரு 20 ஆயிரம் படைவீரர்களை அனுப்பலாம் மன்னா என்றார்.

இதை அப்படியே ஏற்றுக்கொண்டார் மன்னர்.

அடுத்த நாள் காலை அவர்கள் இருவரும் கடாரத்துக்குள் நுழைந்தனர், நுழைந்து அங்கே ஸ்ரீவிஜயத்தின் மன்னனை ஏற்றுக்கொண்ட மக்களை ஒரு படைப்பிரிவினர் பாதுகாத்தனர். மீதமுள்ள படையினர் கலகக்காரர்கள், கலகக்காரர்களின் தலைவனையும் கபளீகரம் செய்தனர். செய்துவிட்டு அங்கேயும் சோழத்தின் புலிக்கொடியை நட்டனர். பின் ஒற்றர்கள் மூலமாக இந்த தகவலை மாமன்னர் ஸ்ரீ இராஜேந்திர சோழர் அவர்களுக்கு தெரிவித்தனர்.

ஒரு ஐந்து நாட்களுக்கு பிறகு மன்னரின் கட்டளைப்படி மீண்டும் ஸ்ரீவிஜயத்தின் அரண்மனைக்கே திரும்பினார்கள் அந்த இரு தளபதிகளும்.

பின் இரண்டு நாட்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பிறகு, ஒரு பிரதோஷ நாளில் மாமன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழர் அவர்களுக்கு ஸ்ரீ விஜயத்திலேயே வீரா அபிஷேகமும், மகுடாபிஷேகம் செய்து, ஸ்ரீ விஜயத்தை சோழர்களின் குடைக்கீழ் கொண்டுவந்த மகிழ்ச்சியை கொண்டாடினர் சோழப் படையினரும், வந்தியத்தேவனும்.

அந்த விழா முடிந்தபின் ஸ்ரீ ராஜேந்திர சோழர் சிவாந்தகனின் அரண்மனைக்கு வந்தார். வந்து படைத் தளபதிகளுடன் பேசினார் அத்தருணத்தில் கடாரத்தின் வெற்றியை உரித்தாக்கி இருக்கும் கடாரம் கொண்டான் என்கின்ற பட்டத்தை அளித்தார். அன்றிலிருந்து அவர்கள் கடாரம் கொண்ட சோழன் மூவேந்த வேளான் என்றும், சேனாதிபதி அரையன் கடாரம் கொண்ட சோழன் ராஜராஜன் அணிமூரி நாடாழ்வான் என்றும் அழைக்கப்பட்டனர்.

பின் சிவானந்தகனுக்கு, பிரம்மராயர் பட்டம் சூட்டப்பட்டது. ஓரிரு நாட்களுக்குப் பின் மாமன்னர் இராஜேந்திர சோழன் சிவாந்தகனிடம் நான் ஸ்ரீ விஜயத்தை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது நண்பா, உன்னிடம் இந்த ஸ்ரீவிஜயத்தின் கடாரத்தையும் இதை சுற்றியுள்ள தீவுகளையும் ஒப்புவித்து நாளை மறுதினம் நான் சோழ தேசத்தை நோக்கி புறப்படுகிறேன் என்றார். இதைக்கேட்டு சிவந்தகன் நண்பா இன்னும் ஒரு சில நாள் இங்கு இருந்து விட்டு செல்லலாம் அல்லவா என்றார். இல்லை வந்த வேலை முடிந்து விட்டது உன்னையும் பார்த்தாகிவிட்டது மிகுந்த மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் நான் புறப்படுகிறேன் உனக்குத் தேவையான 25,000 படைவீரர்களை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றார்.

இதற்குமேல் மறுப்புத் தெரிவிக்க முடியாத சிவந்தகன், அதை ஏற்றுக்கொண்டு படை வீரர்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, மன்னரின் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை  தயார் செய்ய ஆரம்பித்தார். மன்னர் கிளம்பும் நேரம் வந்தது மன்னரும் படையினரும் எந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீ விஜயத்திற்கு கிளம்பி வந்தார்களோ அதே மகிழ்ச்சியுடன் மீண்டும் சோழ தேசத்தை நோக்கி புறப்பட்டனர்.

சோழ தேசத்திலிருந்து புறப்பட்ட பொழுது படையை நோட்டமிட்ட அதே கருடன் மீண்டும் இந்த படையை பார்க்கிறது பார்த்து இன்னும் எத்தனை நாடுகள் இவர்கள் கடக்க போகிறார்களோ? வெல்லப் போகிறார்களோ? என்று நினைத்துக்கொண்டு இவர்களுக்கு என்றும் வெற்றி கிடைக்கட்டும் என்று சொல்லியது அந்த பக்ஷிராஜன்.

-முற்றும்-

-சிரா.

(மற்ற சிறுகதைகள்

1. காதலும் துரோகமும்
http://heritager.in/?p=2106

2. மித்ரன்
http://heritager.in/?p=2110

3. ஒரு விறலியின் காதல்
http://heritager.in/?p=2115

4. பனித்திரை
http://heritager.in/?p=2118)

3 Comments

  1. மிகவும் அருையான பதிவு. ஒரு சிறு கதையில் இவ்வளவு கதாபாத்திரங்களை இவ்வளவு எளிதாக கையாண்டுள்ளீர்கள். மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த ஆசிர்வாதங்கள். வாழ்த்துக்கள்!

  2. சரித்திரம் சார்ந்த எழுத்துக்களில் அதிகப்படியான மிகைப்படுத்தல் இருக்கும் ஆனால் ஒரு எதார்த்தமான கதையாக (உதாரணமாக கப்பலில் 2 யானைகள் ஏற்றிச் சென்றது போன்ற சொல்லப்பட்டிருந்த செய்திகள்) எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப்போல் அரண்மனை அலுவலரால் ஒரு பெண் இருப்பது போற்றத்தக்க நல்ல சிந்தனை. அதைப்போல் முழுக்க முழுக்க இது ஒரு வரலாற்றுப் புனைவு என்பதையும் தங்களின் முதல் முயற்சி என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு தங்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து பயணியுங்கள் வாழ்த்துக்கள்.

  3. கதை அருமை நண்பா , வாழ்த்துக்கள்

Leave a Reply