மல்லையின் ஒற்றுமை விளி – பிரதிக் முரளி

பல்லவர் கலையறியாதாரிலர். மண்டகப்பட்டில் அரும்பி, மல்லையில் விரிந்து, கச்சியின் கற்றளிகளாய்ப் பூத்த பல்லவக் கலைக்கொடியின் மலர்கள் இன்றும் மணம் வீசித் தன் பக்கம் இழுக்கின்றன.

என்றோ ஏழாம் – எட்டாம் நூற்றாண்டு என்றில்லாமல், இன்றும் இந்தக் கலைக்கூடங்கள், கடி பொழில் வாழ் கடல்மல்லையில் சாமானியர்களை நிழற்படங்களுக்காகவும், அறிஞர்களை ஆராய்ச்சிக்காகவும், கலை ஆர்வலரைச் சிற்பங்களுக்காகவும் தன்னகத்தே பல நூறாண்டுகளாய் ஈர்த்துக்கொண்டே இருக்கின்றன.

கலைப்பொக்கிஷங்களின் மேலேறிக், கீழிறங்கிச் சிரித்துப் படமெடுக்கும் கூட்டம் ஒரு பாலிருக்க, இவற்றினின்று விலகி, நிலமடந்தையைத் தன் வலப்பாலேந்திப், பல்லவர்கோனீந்த தளியதனுள் இனிதே அமர்கிறார் ஆதி வராகர். திருவலவெந்தை என்று குறிப்பிடப்படும் இந்தக் குடைவரை, ராஜேந்திர சோழனால், “பரமேஸ்வர வர்ம மகா வராஹ விஷ்ணு க்ரிஹம்” என்று குறிப்பிடப்படுகிறது. (1)

ஆழ்வார் உகந்து பாடிய திருப்பதியாகிய மல்லையின் இந்த விஷ்ணு ஆலயம் கல்வெட்டு, ஆழ்வாரின் பா வரி, சிற்பம் என்று பல படிகளால் சைவ வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது. குடைவரையில் உள்ள துர்க்கைக்கருகே தரையில் இவ்வாறு கல்வெட்டு கிடைக்கிறது:

“திக் தேஷாம் திக் தேஷாம், புனரபி திக் திகஸ்து திக் தேஷாம் |
யேஷான்ன ஹ்ருதயே குபதி கதி விமோக்ஷகோ ருத்ர: ||” (2)

“ஒழியட்டும் ஒழியட்டும், மீண்டும் ஒழியட்டும் அவர்கள்,
எவருடைய மனதில் துர்மார்க்கங்களை நீக்கும் ருத்திரன் இல்லையோ”

என்று, ஒரு விஷ்ணு ஆலயம், ருத்ரதேவர் புகழ் பாடுகிறது.

இந்த ஊரைப்பாடும் திருமங்கை மன்னன், வியத்தகு பா ஒன்றைச் சமைக்கிறார்,

“பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே” (3)

“பிணங்களைச் சுடுகின்ற சுடுகாட்டில் நடமாடுகிற சிவபெருமானோடு கூடி இருக்கக்கூடிய, சக்கரத்தைக் கையில் உடைய விஷ்ணுவுக்கு இடமானதும், ஆகாயத்தில் தேவகணங்கள் வசிக்கும் மல்லையை வணங்குவாரை வணங்குவாய் நெஞ்சே” என்ற பொருள்பட சிவ-விஷ்ணுக்களை ஓருருவாய்ப் பாடுகிறார். வைணவப் பெரியோர், சிவனுக்கும் மால் தனது திருமேனியில் இடமளித்தார் என்று உரையிட்டுள்ளனர். இங்கு பாட்டில் திகழும் சைவ வைணவ கூற்றே சிற்பமாக திகழ்வது சிறப்பு.

கோயிலின் உள்ளே பல சிற்பங்கள் உள்ளன, அவையாவன :
1. துர்க்கை
2. இலக்குமி
3. கங்காதரன்
4. பிரம்மா
5. விஷ்ணு
6. அரிஅரன்
7. இரண்டு பல்லவ மன்னர்கள் ஆகியவை

இவை ஒவ்வொன்றுமே ஆய்வுக்குரியவை எனினும், நாம் அரிஅரனை நோக்குவோம்.
சங்கரநாராயணர், இரு பாலும் இரு அடியவர் திகழ, நின்று காட்சியளிக்கிறார். துவாரபாலகர்கள் அருகில் நிற்கிறார்கள். மேலே சத்ரம் (குடை) திகழ, ஒரு கையை இடையிலும், மறுகையை அபயமாகவும் வைத்திருக்கிறார். மேலிரு கைகளில் சக்கரமும் மழுவும் ஏந்தி நிற்கிறார்.

பொதுவாக இடக்கையில் சங்கமேந்தும் அரி, இங்கு மாறாக ஆழியேந்துவது குறிப்பிடத்தக்கது. ஆழ்வாரின் தமிழில் “சக்கரத்து எம்பெருமான்” என்ற சொல்லோடு பொருந்துகிறது இந்தச் சிற்பம்.

இங்ஙனம் சிற்பம், பாடல், கல்வெட்டு என்ற மூன்று வகைகளிலும் ஒற்றுமை போற்றும் மல்லைக்குச்சென்று இவற்றை ரசிப்பதோடு அல்லாமல், இவற்றின் பெருமையை உணர்ந்து, போற்றிப் பாதுகாக்கவும் செய்வோம் என்று உறுதி மொழிவோமாக.

References :
1) South Indian Inscriptions Vol IV No.373
2) Epigraphica Indica Vol X Page 8
3) Periya Thirumozhi : 2-6-9
4) Two statues of Pallava Kings & 5 Pallava inscriptions in a rock temple at Mahabalipuram – ASI publication

Leave a Reply