மறையும் தவ்வை வழிபாட்டு மரபுகள்

“தவ்வை”, இப்படிச் சொன்னால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஜேஷ்டா அல்லது மூதேவி என்றழைக்கப்படும் மூத்த தேவி தான் தவ்வை. இப்பெயரிலேயே திருக்குறளில் வரிகள் வருகின்றது.

பெண்தெய்வங்களில் மூத்தவள் இவளைப்பற்றிப் பல அமங்கல கதைகளும், நம்பிக்கைகளும் உலாவி வருகின்றன. அதனால்தான் தவ்வை இருக்கும் இடங்களில் பெயர்ந்து கோயிலுக்கு வெளியில் எறியப்பட்டு இன்று லக்ஷ்மியின் சந்நிதி அங்குக் காணமுடிகிறது. பெரும்பாலான பல்லவ மற்றும் சில சோழர்கால கோயில்களில் இவ்வன்னையைக் காண முடியும்.

மத்திய வயது பெண்ணின் அமைப்பு, தொங்கிய வயிறு, பருத்த மார்பகங்கள், தனது இரண்டு குழந்தைகளுடன் அணைத்தவாறு அமர்ந்திருக்கும் தாய்மையின் தோற்றம், என்று போற்றத் தகும் வகையில் அமைந்திருக்கும் இந்தத் தவ்வை எனப்படும் மூத்தோளின் சிற்பம்.

பக்தர்களும் கோயில்களும் நிராகரித்த இவ்வன்னையை சில இடங்களில் மட்டும் இன்றும் வணங்கி வருகின்றனர். தாய்மையைப் போற்றும் சின்னமாக இன்று வரலாற்று ஆர்வலர்களால் இத்தவ்வை போற்றப் படுகிறது.

அதே, போல ஒரு சிலை தான் ராஜகீழ்பாக்கம் ஆளவட்டம் கோயில் குளக்கரையில் உள்ள தவ்வை இப்படத்தில் உள்ளது.

தற்பொழுது வழிபாட்டில் இருந்தாலும் கோயிலிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட இத்தவ்வையின் பாதுகாப்பு குறித்து, தாம்பரத்தை சேர்ந்த நமது செயற்பாட்டாளர் திரு. செல்வபிரபு மின்மனு ஒன்றை தொல்லியல் துறையினருக்கு அனுப்பியிருந்தார்.

அதனை ஏற்றத் தொல்லியல் துறையினர், நேரடிக் களஆய்வை நடத்தி அச்சிலை பல்லவர் கால சிலையென்றும், அதன் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையை அனுப்பியுள்ளனர்.

மக்களோடு இணைந்த அரசும் அரசோடு இணைந்த செயல்படும் மக்களும் புதிய மாற்றங்களை உருவாக்க முடியும்.

ஆம், அரசு இயந்திரத்தைச் செயல்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.

மரபின் சுவடுகளைக் காக்க தன்னார்வத்துடன் செயல்பட்டு அரசுத் துறையின் கதவுகளைத் தட்டிய திரு. செல்வபிரபு ஜகன்னாதன் அவர்களுக்கு அமைப்பினர் சார்பாகப் பாராட்டுதலையும், எங்கள் கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்து உறுதிமொழி அளித்த தொல்லியல் அதிகாரிகளுக்கு நன்றியையும் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாமும் நம் பகுதியில் உள்ள அழிந்து வரும் மரபுச் சார்ந்த விஷயங்களுக்காகக் குரல் கொடுப்போம். தமிழகத்தின் பெருமைகளை மீட்டெடுப்போம்.

படம்: தச்சூர் தவ்வை (எடுத்துக்காட்டுக்காக)

Leave a Reply