மறைந்துப் போன சோழர் கூத்துக்¢ கலை – ராஜா, திருச்சி

பாரம்பரியமிக்க நம் பைந்தமிழ் நாட்டில் ஐவகை நிலமக்களும் தமக்கென்று தனித்துவ குணத்துடன் கலை, பண்பாடு, தொழில்முறை, இறைவழிபாடு என்று செழுமையாய் வாழ்ந்திருந்தனர், மேலும் நமது சங்க இலக்கியங்களும் கோன் புரிந்த சாதனைகளையும் குடிமக்களின் நிலைப்பாட்டையும், அவர்களின் தொழில்கள், கலைகள், மொழிப்பற்று போன்றவற்றினை பறைசாற்றுகின்றது.

Vidushaka-Mani_Madhava_Chakyar

 

சங்க இலக்கியங்கள் கூறும் கலைகளில் பல சுவடழிந்தும் சில குற்றுயிரும் குலையுயிருமாக அழியும் நிலையை எதிர்நோக்கியுள்ளன.

குறிஞ்சிநில மக்கள் சேயோனைத் துதித்து ஆடிய கூத்து குன்றக்குரவைக்கூத்து என்றும், முல்லைநில மாந்தர் மாயோனை துதித்து ஆடியக்கூத்து ஆச்சியர்குரவை என்கிறது தொல்காப்பியம், மாதவி பதினொருவகையான ஆடல்வகைகளை வெளிப்படுத்தினாள் என்று அரங்கேற்றுகாதையில் சிலம்பு கூறுகிறது.

அவைக் கொடுகொட்டி, பண்டாரங்க்கூத்து, அல்லியத்தொகுதி, மல்லாடல், துடிக்கூத்து, குடைக்கூத்து, குடக்கூத்து, பேடி, மரக்காலாடல், பாவை மற்றும் கடையம் எனப்படும். அதனில் சாக்கைக்கூத்துமொன்று இதனைப் பறையூர் சாக்கைமாராயன் என்பான் சேரமன்னன் செங்குட்டுவன் அவையில் ஆடினான் என்பதனை செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூதகந் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிறனாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன், என்று வஞ்சிக்காண்டம் பகர்கின்றது.

“தேனார் மொழியார் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில் “

“வலம்வந்த மடவார் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே “

“தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் உறையும் புகார் “

“சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர் ஏரார்பூங் கச்சி “என்று ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குறவர்கள் ஆடல்கலைகளைப் புகழ்ந்துள்ளனர்.

இப்படி குணக்கடல் முதல் குடக்கடல் வரை செழித்த இக்கலையானது தற்போது கேரளத்தில் மட்டுமே உள்ளது. இருப்பினும் பிற்கால சோழர்காலம் வரை இக்கலை தமிழகத்தில் தழைத்தோங்கியது என்பதற்கு கல்வெட்டுகளாய் சில சான்று நிற்கின்றன.

முதலாம் ராஜராஜனின் தமையனும் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி எனும் ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆண்டு கல்வெட்டு திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருவௌ¢ளறையை சேர்ந்த சாக்கையன் கீர்த்திமறைக்காடன் என்பவனுக்கு தானம் வழங்கியமைப் பற்றிய செய்தி கூறுகிறது. இவன் வைகாசி திருவாதிரைக்கும் தைப்பூசத்திருநாளுக்கும் ஆடியதாகக் கூறுகின்றது.

கீழப்பழுவூர் ஆலந்துரையார் ஆலயத்தில் உள்ள உத்தமசோழரின் ஒன்பதாம் ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் ஐப்பசி மாத அஸ்வதி நாளில் நடைபெறும் திருவிழாவில் சாக்கைக்கூத்தாட அல்லையூரைச்சேர்ந்த சாக்கை ஆடுபவர்க்கு அரைக்கலஞ்சு பொன்னும் மூன்று கலம் நெல்லும் வழங்கப்பட்டுள்ளது.

காமரசவல்லி கார்கோடேஸ்வரர் ஆலயத்திலுள்ள முதலாம் ராஜேந்திர சோழனின் இருபத்தொன்பதாமாண்டு கல்வெட்டு வைகாசி மாதம் நடைபெறும் திருவாதிரை திருநாளில் சாக்கை கூத்தாட விக்கரமசோழனெனும் சாக்கை மாராயனுக்கு மூன்று மா நிலம் இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது.

வஞ்சி நகரை அடுத்துள்ள, பறையூரின் அரசனான பறையனை நம்பூதிரிகள் ஒரு போட்டியில் வென்று இந்த கூத்தைக் கைப்பற்றினர் என்று இக்கூத்து எவ்வாறு தோன்றியது என்பது பற்றி ஒரு ஒரு ஊர் பழங்கதை உள்ளது.

சாக்கைக் கூத்து கூத்தம்பலம் எனும் இடத்தில் நடைபெறும். இது கோவில் அல்லது பொது மண்டபமாகவும் இருக்கலாம். மேடையில் சாக்கையனுக்குப் பின் ‘நம்பியார்’ என்பவன் நின்றிருப்பான். அவன் அவ்வப்போது முழவு எனும் இசைக்கருவி இசைப்பான். நம்பியார் இன நங்கையர் எனப்படுவாள், சாக்கையனுக்கு எதிரில் அமர்ந்து, தாளத்தைக் கைகளில் பிடித்தபடி வேண்டும்போது தட்டுவாள். கூத்து நடைபெறும் போது சொல்ல வந்த கதையுடன் பல்வேறு கிளைக்கதையை இடையில் கூறி கேட்போர் தமை மெய்மறக்கச் செய்யும் வகையில் இக்கூத்து நடைபெறும். கூத்தின் போது நங்கையார் சிலை போல அமர்ந்து இருக்கவேண்டும். சாக்கையாரின் பேச்சைக் கேட்டு சிரித்துவிட்டால் கூத்து உடனே நிறுத்தப்படும்.

இது புராணக் கதைகளை நாட்டு நடப்போடு நகைச்சுவையாகக் கூறும் Standup Comedy போன்ற தனிநபர்க் கூத்து ஆகும். இக்கலையானது தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிட்டது. எப்போது இக்கலை தமிழகத்தில் மறைந்தது என்பதற்கு நேரடியான தரவுகள் இல்லை. இப்படி எத்தனை எத்தனையோ அதிசிறந்த கலைகளை வேந்தரும் மாந்தரும் போற்றிவளர்த்தனர் இன்றைய நாகரீகக் கோமாளிகளான அவைகளை தொலைத்தோம், இன்னும் பலவற்றை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்.

Leave a Reply