எனது மோட்டார் பைக் பயணங்களில் தவறாமல் இடம் பெறுபவை, குலதெய்வங்கள். போகின்ற வழிநெடுகிலும் காணக்கிடப்பவை இச்சிறு தெய்வங்கள்.
தமிழ் சமூக படிமங்களில் நாட்டார் இலக்கியங்கள், நாட்டார் மொழி (வழக்காற்றியல்) நாட்டார் குலதெய்வங்கள் சுவாரஸ்யமானவைகள். அவைகள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்காதவைகள்.
தமிழ் வழி பாரம்பரியத்தில் மூன்று வகை தெய்வங்களைக் காணலாம். குலதெய்வங்கள், காவல் தெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள் எனச் சொல்லப்படுகிற, கருப்பு – குடும்பத்தில் ஒவ்வொருவருக்குமான முன்னோர் தெய்வம் ஆத்மா.
இதில் குலதெயவங்களுகென்று நான் கண்டவை: (என் பயணத்தில் சேகரித்தவை இவை)
1. கல்வெட்டுகளில் காணக்கிடைக்காதவை இவை.
2. அங்காளிகள் – பங்காளிகள் எனக் கூட்டுக்குடும்ப வழிபாடாக இருந்து இன்று வெறும் குடும்ப வழிபாடாக வழக்கொழிந்துகிடக்கிறது.
3. சில இடங்களில் முன்னோர் வழிபாடு குலதெய்வ வழிபாடாகவும், சில இடங்களில் நடுகல் வழிபாடு குலதெய்வ வழிபாடாகவும் உருமாறியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக கருப்பன், மதுரைவீரன் குலதெய்வங்கள் நடுகல் வழிபாட்டு வகையில் இருந்து மறுவி வந்தவை.
4. குலதெய்வங்களுக்கு இதிகாச, புராண அடிப்படை எதுவும் இருக்காது.
5. குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் வேறுபட்டு இருக்கும்.
6. குலதெய்வ வழிபாடு (சடங்குகள் மற்றும் சம்பரதாயங்கள்) அந்ததந்த குலதெய்வத்தின் இடம், பிறப்பு, வாழ்க்கைமுறை, இறப்பு இவற்றை பொறுத்து அமையும்.
7. குலதெய்வ வழிபாடு பொதுவாக தந்தைவழி சமூகத்தில் எச்சமாக தொக்கி நிற்கிறது. பெண்களுக்கு இரு குல தெய்வங்கள் உண்டு (பிறந்த வீடு, புகுந்த வீடு).
8. குலதெய்வ வரலாறு பொதுவாகவே வட்டார வரலாறாக, வாய்மொழி வரலாறாக, நாட்டுபுற வரலாறாக இருக்கிறது. இருந்தாலும் இவை புராணங்களைப் போல அதீத புனைவு கொண்டிருக்காமல் அன்றாட வாழ்க்கைக்கு நெருக்கமானதான இருக்கிறது.
9. குல தெய்வ வழிபாட்டைப் பற்றிய முதல் ஆய்வை ஹென்றி ஒயிட்ஹெட் என்பவர் செய்தார்.
…இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
என் குழந்தைகளுக்கு குலதெய்வ வரலாற்றைப் பற்றி நிறைய பேசுகிறேன். அறிவியல் பூர்வமாகவும் (not the pseudoscience which the spiritual leaders and religious leader propagate) வரலாற்று பூர்¢வமாகவும் புராண இதிகாசங்களைப் பேசுகிறேன்.
பெருந்தெய்வ வழிபாட்டை (சைவ, வைணவ) தாண்டி எதார்த்தமான எலும்பும் தசையும் கொண்ட ஒரு சிறுதெய்வ வழிபாடு என்னிடம் இருந்ததை என் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.
நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாமே?
— கபிரியேல் ஆபுத்திரன். படம்: பழுவூத்தியம்மன், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி மாவட்டம்