மணிமங்கலத்தின் தொண்டை மண்டல நவகண்டச் சிற்பங்கள் – வேலுதரன்

சமீப காலங்களில் ஒரு தலைவன் இறந்த பின்பு அவனுடைய அனுதாபிகள் தாங்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொல்வதை ஊடகங்களின் வழியாக கேள்விப்பட்டு இருக்கின்றோம்.. இப்படியும் இருக்க முடியுமா என்று எண்ணத் தோன்றும். அனால் இதுவே சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாக பரணி போன்ற இலக்கியங்களில் நவகண்டமாகவும் / அரிகண்டமாகவும் சித்தரிக்கப்படுகின்றது.

பல காரணங்களுக்காக ஒருவர் தன் தலையை அரிந்து அல்லது வெட்டிக் கொண்டு, “தலை பலியிடல்” என்ற நிகழ்வாக இறைவனுக்கோ அல்லது இறைவி / கொற்றவைக்கோ அர்பணிப்பதைக் கூறுகின்றன. கொற்றவை பாலை நில தெய்வமாகவே கருதப்பட்டாலும் அவள் குறிஞ்சி நில தெய்வமாகவே வணங்கப்பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. மறவர்களுக்கு தொழிலில் வெற்றியைக் கொடுப்பவளாகவே கருதப்பட்டது. கொற்றவை பற்றி சிலப்பதிகாரங்களுக்கு முந்தைய நூல்களில் காணப்படவில்லை. 5ல் இருந்து 6ஆம் நூற்றான்டுகளில் கலப்பிரர் ஆட்சிக்குப்பிறகு எழுதப்பட்டது. அதில் கொற்றவையைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

அரிகண்டம் என்பது தன் தலையை தானே ஒருகையால் பிடித்துக்கொண்டோ அல்லது தலையை மரம் அல்லது மூங்கிலால் வில் போன்ற வளைவான அமைப்பு ஒன்றுடன் கட்டிக்கொண்டோ, தன் தலையை வெட்டிக் கொள்வதாகும் நவகண்டம் என்பது உடலின் ஒன்பது ரத்த நாளங்களை வெட்டி உதிரப்போக்கு ஏற்பட வைத்து பின்பு தன் தலையைத் தானே வெட்டிக் கொள்வது.

தலைப்பலி என்ற நவகண்டம் போரின் போது தன் நாடு வெற்றி பெறவும், அரசனின் வியாதிகள் சரியாகவும், நோயினால் சாவை எதிர் நோக்கியிருக்கும் ஒருவர், குற்றம் செய்த ஒருவர் மரண தண்டனை அடைய விரும்பாமல் நவகண்டம் கொடுத்து வீரமரணம் அடைதல், இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவர் அதைத் தள்ளிப் போட இறைவனிடம் வேண்டுதல், நெடுநாட்களாக தடைபெற்று இருந்த தேரோட்டம் மீண்டும் ஓட போன்ற காரணங்களுக்காக கொடுக்கப்படுவதாக கருதப்படுகின்றது. மேலும் சோழர்கள் காலத்தில் “வேளக்கார படைகளும்” பாண்டியர்க்கு “தென்னவன் ஆபத்துதவிகள்” என மெய்காவல் படையினர் இருந்தனர். இவர்களின் பாதுகாப்பையும் மீறி அரசர்கள் ஏதாவது உயிர் துறக்க நேரிட்டால் இப்படைவீரர்கள் துர்கையின் முன்பு தங்கள் தலைகளை தங்கள் கைகளாலேயே வெட்டிக்கொண்டு “தலைப் பலி” கொடுப்பதாக சபதம் எடுத்துக்கொண்டவர்கள் என வரலாறு கூறுகின்றது.. இவ்வாறு தலை பலி கொடுக்கப்பட்ட வீரர்களின் வாரிசுகளின் ஜீவனத்திற்கு பொன்னும் பொருளும் நிலமும் வழங்கப்பட்டது.

சில சித்தர்கள் நவகண்ட யோகம் கைவரப் பெற்றவர்கள். வீரராக சுவாமிகள், பாடகசேரி ராமலிங்க சுவாமிகள் போன்ற சித்தர்கள் பல சித்துகள் செய்வதில் தேர்ச்சி பெற்று இருந்தாலும் அபூர்வமான நவகண்ட யோகம் சித்தி பெற்றவர்கள். தங்களுடைய உடலை ஒன்பது தனி தனி துண்டங்களாக்கி யோகம் செய்தவர்கள் என அவர்கள் சரிதம் கூறுகின்றது.

மாமல்லையில் பல்லவர் காலத்தில் (ஏழாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு) குடையப்பட்ட குடவரைகளில் ஒன்றான துரௌபதி ரதத்தில் கொற்றவை புடை சிறபம் காணப்படும் அதில் துர்கையின் வலது கால் அருகே ஒருவர் தன் தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் தன் தலையை தானே அரிந்து கொள்வது போல – தலை பலி – அரிகண்டம் கொடுப்பது போலவும் இடது புறம் இருப்பவர் தன் உடலைப் பல இடங்களில் வெட்டிக்கொள்வது போலவும் கட்டப்பட்டுள்ளது இது நவ கண்டமாகவும் எடுத்துக் கொள்ளலாம். தனி சிற்பங்களாக 13ஆம் நூற்றாண்டு வரை நவகண்ட சிற்பங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றது. மேலும் அவை பெரும்பாலும் போர் நடந்த பகுதிகளிலேயே கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில நவகண்டங்கள் மட்டுமே கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.. அவற்றில் ஒன்றுதான் தொண்டை மண்டலம் சென்னைக்கு அருகே உள்ள மணிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீதர்மேஸ்வரர் கோயிலில் இருக்கும் நவகண்ட சிற்பம். இக் கோயிலில் இரண்டு நவகண்ட சிற்பங்களும் இரண்டு அரிகண்ட சிற்பங்களும் இருக்கின்றன. இங்கு ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களுக்கும் (முதலாம் நரசிம்ம வர்மன்) சாளூக்கியர்களுக்கும் (இரண்டாம் புலிகேசி) போர் நிகழ்ந்து உள்ளது. அதற்க்கு பின்பும் நடந்து இருக்கலாம் ஆனால் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.

இந்தக்கோயிலில் உள்ள நவகண்ட சிற்பங்களுள் ஒன்று 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஸ்ரீ ரங்கநாதன் என்ற யாதவராயரின் (பாண்டியர் வீழ்ச்சிக்குப் பிறகு அந்த பகுதிதையை ஆண்ட சிற்றரசர்கள். தெலுங்கு பொத்தப்பை சோழர்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது) பிறந்த நாளுக்கு மணிமங்கலத்தில் இருந்த கைகோளரும், கைகோளமுதலி (ருத்திர மஹேஸ்வரர்) கைக்கோளர் படை ! உயிர்பலி மரபை உடையவர்கள்) சபையில் முடிவெடுக்கப்பட்டு புதுமையாக அவர்களில் செம்பாதி என்பவரின் தலையை வெட்டி திருமடைவளாகத்தில் வைக்கப்பட்டது. அப்படி தலைப்பலி கொடுக்கப்பட்ட செம்பாதிக்கு இருநூறு குழி நிலம் வழங்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி ஒன்று கூறுகின்றது.

இதில் திருநாள் முன்பிலாண்டுகள் என்று வருவது மன்னனின் பதவியேற்பு விழாவா அல்லது ஆண்டுதோரும் நடைபெறும் பிறந்த நாள் விழாவா என்பதும், மேலும் சேத்த – என்று படிக்க வேண்டும். செம்பாதி- சரிபாதி, கோயில் திருக்காப்பு, கோயில்வாசல், திறத்தல்- மூடல், காப்புச் சடங்கு செய்தல், மெய்காப்பு / காவல் முதலியன ஆய்விற்க்கு உரியது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Leave a Reply