பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ்

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ் அமெரிக்கன் கல்லூரி, மதுரை

ராமநாதபுரம், கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பேரையூர் என்னும் சிற்றூரில் செய்யப்படும் மட்பாண்டங்களையும் அதனைச் செய்யும் மட்பாண்ட கலைஞர்களின் வாழ்வியலையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. பேரையூரில் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களைப் பற்றி கள ஆய்வு செய்வதால் ஆய்வுக்களமாக பேரையூர் அமைகிறது.

பேரையூர் பகுதி குயவர் மண்ணை முக்கிய ஆதாரமாகக் கொண்டு மண்பானை, சட்டி, மண் தொட்டி போன்ற பல மண்பாண்ட பொருள்களை வடிவமைக்கின்றனா. பரம்பரை பரம்பரையாக

கள ஆய்வு மூலமாகக் கிடைத்த தகவலாளர்களின் தகவல்களே இங்கு முதன்மை ஆய்வு மூலங்களாக அமைகின்றன.

உலோகம் கண்டுபிடிப்பிற்கு முன்பே நாம் மண்ணால் செய்த பாண்டற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களி மண்ணால் உருவான மண்பாண்டங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பலவகையான சாட்சியங்கள் உள்ளது. அக்காலத்தில் வீடுகள் கூட கணிமண்ணால் கட்டப்பட்டு அதில் வாழ்ந்தும் உள்ளனர்.

மண்ணின் மகத்துவம் தெரியாது, முன்னோர் கற்றுக்கொடுத்த வாழ்வியல், தொழில் முறைகளை மறந்து பல ஆண்டுகளாகி விட்டது. ஆனால் தற்போதுதான் அங்குமிங்கமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட, மறைந்த முறைகளை தேடுகின்றனர். கிராமங்களில் மண்ணை தெய்வமாக மதித்து தொழில் துவங்குவர் முழு கவனமும் தொழில் சார்ந்த சிந்தனையாக இருக்கும்.

வளமான மண், பாசன வசதி இருந்தால் அதற்கேற்ற பயிர்களை நட்டு பராமரித்து, வளம் சற்று குறைந்த மண் என்றால் அங்கு கிடைக்கும் தண்ணீர் வசதிக்கேற்ப மாற்று பயிர் விவசாயத்தில் இறங்குவர். களிமண், வண்டல மண் மட்டுமே கிடைக்கும் பகுதி என்றால் அதற்கேற்றவாறு தொழில் நடக்கும். கிராமத்து மண்ணை மூலதனமாக கொண்டு செங்கல், ஓடுகள் தயாரிக்கப்படும். அந்த வகையில் ஆதிகாலத்து தொழிலாக மண்பாண்டம் உள்ளது.

பழங்காலத்தில் பானைகள் கைகளால் உருவாக்கப்பட்டன. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுச் சக்கரங்களைக் கொண்டு பானைகள் உற்பத்தி செய்யப்பட்டன. பொதுவாகப் பேரையூர் பகுதியில் பானைகள் உருவாக்குவதற்கு ஐந்து நிலைகள் பின்பற்றப்படுகிறன. அவையாவன:

1. களிமண் தேர்வு செய்தல்
2. பாத்திர வகைக்கேற்ப வனைதல்
3. அடிப்பகுதியை அமைத்தல்
4. உட்புறம், வெளிப்புறத்தை அலங்கரித்தல்
5. சுட்டெடுத்தல்

களிமண் தேர்ந்தெடுக்கப்பட்டு அழுக்கு நீக்கப்பட்டுத் தூய பொடியாக மாற்றிச் சல்லடையால் சலித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அதனைப் பசைபோல் பிசைந்து சக்கரத்தின் உதவியோடு பானைகள் உருவாக்கப்படுகிறன.

“ஒரு சக்கரத்தைக் கம்பால் சுற்றிவிட்டு, அதன் நடுவில் மண்கலவையை வைத்து மண்பாண்டங்களான தட்டு, கப், நீர் குடவை போன்றவை தயாரிப்பவர், தயாரிப்பின் முதலிலிருந்து கடைசிவரை கவனம் சிதறாமல் இருப்பார். இதில் உடலும், மனமும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு நிமிடம் தவறினாலும் உருக்குலைந்துவிடும். மீண்டும் அதே வேலையைத் துவக்கத்திலிருந்து செய்ய வேண்டும். தற்போது அனைத்து தொழில்களும் இயந்திர மயமாகி வரும் நிலையில் மண்பாண்டம் மட்டும் என்னவோ இன்றும் அப்படியே உள்ளது. பின் மலைப்பகுதியில் கிடைக்கும் பாசி செடி மற்றும் செம்மண் கலந்த இயற்கை சாயம் தயாரிக்கப்பட்டு, கலர் கொடுக்கப்பட்டு மண்பாண்டம் தயாராகிறது”, என்கிறார் முத்து.

பானைகளின் உருவாக்கத்தைப் பற்றி பேரையூர் பகுதியைச் சேர்ந்த குயவர் சேகர் கூறும் போது. “குயவர்கள் குளங்களில் சேகரிக்கப்பட்ட மணலையும் களி மண்ணையும் ஒன்று சேர்த்து நன்றாக காயவைத்து அதனை அடுத்த நாள் சரிவிகிதத்தில் தண்ணீர் கலந்து பதப்படுத்தி வைப்பார்கள்.

மறுநாள், கை மற்றும் கால்களால் நன்றாக பிசைந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் களி மண்ணைச் சக்கரத்தில் வைத்துச் சக்கரத்தைச் சுற்றிச் சுற்றிக் கைகளால் வார்தெடுப்பார்கள் இப்படி உருவாபாக்கப்பட்ட பானைகளில் அடிப்பக்கத்தில் துளை இருக்கும் அந்தத் துளையை அடைப்பதற்காக நிழலில் 4 முதல் 5 மணி நேரம் உலர வைத்த பின்னர், கல்லாலும் மர அகப்பையாலும் தட்டித் தட்டித் துளைகள் அடைக்கப்படுகின்றன. அதன் பின்னரே முழுமையான பானை வடிவம் கிடைக்கிறது. அதன் பின்னர் சூரிய ஒளியில் நாள் முழுவதம் உலர வைத்து அதற்கு வர்ணம் பூசி மீண்டும் சூரிய ஒளியில் உலர வைக்கிறார்கள்.

நன்கு உலர்ந்த பானைகளைச் சூளையில் அடுக்கி, விறகு, வைக்கோல் ஆகியவற்றின் மூலம் தீயிட்டு வேக வைக்கிறார்கள் இப்படி வேகவைக்கப்படும் பானைகளுக்கு 800 சென்டிகிரேட் வெப்பம் தேவைப்படுகிறது. சூடு குறைவாக இருந்தால் மண் பானைகள் வேகாது. அடுப்பு சூடு அதிகரித்தாலும் பானைகள் உடைந்து விடும். எனவே இதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. பானைகளை வடிவமைப்பதில் பொறுமையும் நிதானமும் தேவை. ஒருநாள் முழுவதும் அடுப்பில் இருக்கும் பானைகளை மெல்ல எடுத்து அடுத்த நாள் விற்பனைக்குக் கொண்டு செல்கிறார்கள்” எனகிறார்.

பேரையூர் பகுதி கிராமங்களில் கூட இன்றும் மண்பாண்டம் தொழில் நடந்து வருகிறது. தெரிந்த தொழிலை கைவிட மனமில்லாத படைப்பாளிகள் இத்தொழிலைத் தொடர்கின்றனர்.

தற்போது சமையல் செய்ய புதிய வரவுகளாக மண்பாண்டத்தில் தோசை கல், ஆப்ப சட்டி, பணியார சட்டி, மளிகை பொருள் வைக்க அடுக்கு பானை, வடைசட்டி, காய்கறி பாதுகாக்க தொட்டி போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன. இயற்கை விரும்பிகளும் மண் தயாரிப்புகளையே வாங்கி செல்வதால் இவர்கள் மூலம் விற்பனையும் குறைவில்லாமல் நடக்கிறது.

பேரையூர் பகுதியில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் செய்வோர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து அதன் மூலம் கண்மாய் மண் எடுக்க அனுமதி பெறுகின்றனர். இதை தாராளப்படுத்தி, தொழிலுக்காக மானியம், வங்கி கடன் போன்ற வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், பேரையூர் பகுதி கிராமங்களில் படைப்பாற்றல் மிக்க இத்தொழில் மறையாது என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. இதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

`களிமண் ஒருவகையான மண் வகையாகும் பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும். நீர் வளம் மிக்க பகுதிகளில் தோண்டினால் இது கிடைக்கும்.; பேரையூர் பகுதிகளில் கிடைக்கும் இந்த களிமண்ணில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் செய்யும் பானைகள் சீக்கிரம் சூடாகும் என்கின்றனர். அது போலவே இங்குச் செய்யும் கடம் அந்த இரும்பு தன்மையினால் நல்ல இசையைக் கொடுக்கிறதாம். களிமண்ணுடன் ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் பசை தன்மையுள்ள குறுமண்ணைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துதான் பேரையூர் பகுதியில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறன.

`ஆறு, குளங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை ஈர பதத்துடன் ஒரு சாக்கு போட்டு வைக்கின்றனர் அதனுடன் சிறிது குறுமணல் சேர்த்து அந்தக் காலத்தில் காலால் மிதித்துச் சரியான பதத்திற்குக் கொண்டு வருகின்றனர். முதலில் வெயிலில் அந்த மண்ணைக் காய வைத்து, பின்னர் அதில் குறுமணல் கலந்து தண்ணீர் ஊற்றிக் காய வைத்து, பின்னர் அதைக் காலால் மிதித்து, எந்த மணல் கட்டிகளும் இல்லாமல் செய்கின்றனர். கேட்பதற்குச் சுலபமாக இருந்தாலும், கால் வலிக்கும் வேலை. பின்னர் இந்த மண்ணைப் பானை செய்யும் சக்கரத்தின் நடுவில் வைத்துச் சுற்றுவார்கள்.

இந்தப் பானை செய்வதற்கு நன்றாக வளையும் விரல் வேண்டும். இடது கை ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் முதலில் மண்ணில் ஒரு குழி செய்து அதை மேலே எழுப்ப வேண்டும். இதைச் செய்யும் போதே வலது கையில் அந்த பானையை பாலிஷ் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லை, இந்தப் பானை செய்ய அவர்கள் குத்த வைத்து வெகு நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டும். இதனால் கால்களில் ரத்த ஓட்டம் தடைபட்டுக் கால் மரத்து விடும்”, என்கிறார் முத்துக்கிருஷ்ணன்.
நான் அவரிடம் ஒரு மணி நேரம்வரை பயிற்சி எடுத்து ஒரு பானை செய்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது முறை தோற்று இருப்பேன். இந்த நுட்பத்தை இன்றைய தலைமுறை இளைஞர்கள் கற்றுக் கொள்ளாமல் வேறு வேலைகளுக்குச் செல்வதால் பானை செய்ய ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. என்றாவது நீங்கள் பானை செய்பவரைப் பார்த்தால் அவர்களது கையைப் பாருங்கள். சிறு ரேகைகள் அனைத்தும் அழிந்து இருக்கும் அவர்களது எதிர்காலத்தை எந்த ஜோசியரும் கணிக்க முடியாது.

மண் குக்கர்

சீனிவாசன் (மண்பானை விற்பனையாளர், பேரையூர் பகுதி), “மண் பானையில் செய்த தண்ணீர் குடங்களை ஆர்வலர்கள் தேடி வந்து வாங்குகின்றனர். குறைந்த லாபம் என்றாலும் மன திருப்தியுடன் செய்கிறேன். விழிப்புணர்வு உள்ளவர்கள் பேரம் பேசுவதில்லை. சொல்லும் விலை கொடுத்து வாங்குகின்றனர். தேவைக்கேற்ற உற்பத்தி இல்லாததால் ‘டிமாண்ட்’ அதிகரிக்கிறது. சமையலுக்கு மண்பாண்டங்கள் வந்து விட்டன”. மண்பானை குக்கர் கூட வந்து விட்டது.

கிருஷ்ணவேணி (குடும்பத் தலைவி பேரையூர் பகுதி) “எனது வீட்டில் மண்பாத்திரங்களையே பயன்படுத்துகிறேன். காஸ் அடுப்பு என்றால் ‘சிம்’ வைத்து சமையல் செய்வது கட்டாயம். முதலில் சூடேறாது, தாமதம் ஆகும் என்பார்கள். இது போல் சூடு குறைவதும் தாமதம் ஆகும். குக்கரின் பயன்பாட்டை கொஞ்சம் குறைத்து மண்பானையில் சமைக்க துவங்கினேன். சிறுதானியம், பயறு வகைகளை மண்பாத்திரத்தில் வேகவைத்து சாப்பிட்டால் ருசியே தனிதான் என்கிறார்”.

மண் பாத்திரங்களைத் தேடிச் சென்று வாங்க வேண்டி உள்ளது. உற்பத்தி குறைவு என்பதால் அதிகவிலை கொடுக்க வேண்டி உள்ளது. இதைச் சீராக்கினால், மண் பாத்திர சமையல் மூலம் மக்கள் ஆரோக்கியமாக வாழலாம்.

இருதய நோயை குணமாக்குது

சத்தியசீலன் (மருத்துவர், அரசு மருத்துவமனை, பேரையூர்) “பேரையூர் பகுதி மண்பானைகளைச் சமையல், குடிநீருக்குப் பயன்படுத்தினால் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் நீங்கும். மண்பானை தண்ணீரில் தேற்றான்கொட்டை போட்டால், சுத்தமான குடிநீர் கிடைக்கும். இதைத் தொடர்ந்து குடிக்கும்போது, இருதய நோய் குணமாகும். மண்பானை என்பது இயற்கை சுத்திகரிப்பே என்றே கூறலாம்” என்கிறார்.

மண்பானைத் தண்ணீரில் செப்புத்தகடு போட்டால் கழிவுகள் தகட்டில் தேங்கும், சுவையாக இருக்கும். குழந்தை இல்லாத தம்பதியினர் மண்பானையைப் பயன்படுத்தினால் குழந்தையின்மை நீங்கும். ஐந்திற்கும் மேற்பட்ட பேரையூர் பகுதி ஓட்டல்களில் மண்பானையில் சமையல் செய்கின்றனர்.

தனிசுவை உள்ளது. சோறு, கூழ் போன்றவைகளை மண்பானையில் வைத்தால் கெட்டு போகும் தன்மை தாமதமாகும். இதன் நீராகாரத்தைச் சாப்பிட்டால் பெண்களுக்கான சூதகவலி குறையும்.

சமையலில் நூறு சதவீதம் சத்து

அலமேலு மங்கை (குடும்பத் தலைவி பேரையூர்) “மண் பானையில் சமைப்பதால் உணவு பொருட்களில் உள்ள நூறு சதவீதச் சத்துகளும் கிடைக்கிறது. மண் பானையில் உணவுபொருட்களை தான் சாப்பிடும் நிலையில், அதில் உரிய முறையில் சத்து நமக்கு ஆரோக்கியம் தான் கூட மண்ணால் தயாரிக்கப்பட்ட பிரிட்ஜ் போல் செயல்படும் மண்தொட்டியில் தான் காய்கறிகளை வைக்கிறேன்.

சாதம், குழம்பு, தோசையை மண்பாத்திரத்திலே சமைக்கிறேன். சுவையுடன் அதிகம் கெடாமல் உள்ளது. பேரையூர் பகுதிக்கு வருபவர்களிடம் மண்பானையின் சிறப்புகளை எடுத்து கூறுகிறேன். பலரும் இயற்கை உணவு முறை, மண்பானை பயன்படுத்தத் துவங்கி விட்டனர்” என்கிறார்.

குளிர் பானத்தில் இல்லாத திருப்தி

அந்தோணி ராஜ் (லோடுமேன், பேரையூர்) “லோடு மேன் சங்கம் சார்பில் 25 ஆண்டு முன் பேரையூர் நகராட்சி அலுவலகம் எதிரே இருமண் பானைகள் வைத்து தண்ணீர் வைத்தோம். அப்போது இந்த ரோட்டில் இரு பள்ளிகள் இருந்தன. மாணவர்கள் குடிநீருக்காக அலைந்தனர். இதைத் தவிர்க்க தான் மாணவர்களுக்காக வைத்தோம்.

சாலையில் செல்பவர்களின் தாகம் தணிக்க மண்பானை உதவியது. தினமும் நகராட்சி குழாயில் 15 குடம் குடிநீர் பிடித்து மண்பானையில் ஊற்றுவோம். கோடைகாலம் என்றால் 15 குடத்திற்கு மேல் ஊற்றினாலும் பற்றாக்குறை இருக்கும். வெயிலில் அலைந்து விட்டு இந்த ரோட்டை கடந்து செல்பவர்களுக்கு மண்பானை நீர் புதுதெம்பு தருகிறது. பலர் நன்றி தெரிவித்துவிட்டுச் செல்வர்.

இதற்காக மேடை அமைத்து மணல் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் மண்பானை வைத்துள்ளோம்”. கோடை காலத்திலும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கிறது. குளிர்பானங்களைக் குடிப்பதில் இல்லாத திருப்தி, மண்பானை குடிநீருக்கு உள்ளது.

பாரம்பரியம் மாறாத மண் பானைப் பொங்கல்

மண் பாண்டத்திற்குப் பெயர் பெற்ற பேரையூர் பகுதியில் கஞ்சிக் கலயம் முதல் கலையம்சம் பொருந்திய கடம்வரை மண்ணால் தயார் செய்யப்படுகிறது. பேரையூர் பகுதியில் பொங்கல் திருநாளையொட்டி, இல்லங்களில் பொங்குவதற்கு தயாராகும் வகையில் பொங்கல் பானைகள், பல வகைகளில் தயாராகின்றன. இங்கு தயாராகும் மண்பாண்டங்கள், உறுதியாகவும், நேர்த்தியாகவும், தரமாகவும் இருப்பதால், வெளி மாவட்டங்களில் வரவேற்பு உள்ளது. சீசனுக்குத் தகுந்தவாறு மண்பாண்ட பொருட்கள் தயார் செய்வது இங்குள்ள தனிச்சிறப்பு.

பாரம்பரிய மணம்

பாரம்பரியத்தை விரும்புவர்களுக்காக மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் கிராமப்புறங்களில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது வீட்டு வாசல் மற்றும் கால்நடை தொழுவம் ஆகியவற்றில் விவசாயிகள் பாரம்பரிய மண் அடுப்புகளில் மண் பானைகள் வைத்து பொங்கல் கொண்டாடுவார்கள். இவர்களைக் குறிவைத்தே பேரையூர் பகுதியில் மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

பொங்கல் பானைகள்

தற்போது பொங்கல் திருநாள் நெருங்குவதால், அதற்காக பொங்கல் பானைகள் அடுப்புகள் தயாராகி வருகின்றன. பேரையூர் பகுதி ஐந்து கிராம கண்மாய்களில் உள்ள மண்ணைக் கலவையாக்கி, ஆறாவதாக வைகை ஆற்றுமணலை உறுதுணையாக்கி, அரைத்து மாவாக்கி, தரையில் போட்டுத், தண்ணீர் ஊற்றி ஊற வைத்துப், பானையாகத் தயாரிப்பதற்கு இசைவாகும் வரை, காலால் மிதித்து, கையால் பிசைந்து பக்குவப் படுத்துகின்றனர்.

தயாராகும் பானைகள்

பக்குவமான மண் கலவை சக்கரத்தில் வைத்து, கைக்கு லாவகமாகிய பின், பல்வேறு வடிவங்களில் பானையாக உருவாக்குகின்றனர். அவற்றை அரைகுறை வெயில், நிழலில் காய வைத்து, பெற்றப் பிள்ளையைப் பேணிக் காப்பது போல் பாதுகாக்கின்றனர். பின், பேரையூர் பகுதி கோட்டையிலிருந்து வரும் செம்மண்ணில், தண்ணீரைக் கலந்து இயற்கை சாயத்தில் வண்ணம் பூசுகின்றனர்.

பலபடி பானைகள்

கால்படி அரிசியிருந்து ஒன்றரை படி அரிசி வேகும் அளவுக்குப் பல்வேறு அளவுகளில் பானை தயாரிக்கின்றனர். பானை ஒன்றின் விலை 26லிருந்து 70 ரூபாய்வரை. பல ரகங்களில் வியாபாரிகளுக்கு விற்கின்றனர். இங்க வந்து கொள்முதல் செய்யும் வெளியூர் வியாபாரிகள் போக்குவரத்து செலவு, சேதாரம் சேர்த்து இருமடங்கு விலை வைத்து விற்கின்றனர்.

மணக்கும் மண்பானைகள்

உலோகப்பானைகளில் பொங்கல் வைத்தாலும் சுவைக்காத பொங்கல், பேரையூர் பகுதி பானையில் பொங்கல் பொங்கும் கம கம வாசனைக்காக தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். மதுரை, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு வியாபாரிகள் பானைகள் வாங்கப் பேரையூர் பகுதிக்கு வருகின்றனர். பேரையூர் சுற்றுப் புறங்களிலும் மண்பானைகளையும், மண் அடுப்புகளையும் மும்முரமாக தயாரித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பதுக்கு ஏற்ப பல்வேறு மாடல்களில் இவர்கள் தயாரித்து வழங்குவதால் இப்போதே அதன் விற்பனையும், விலையும் ஏறத் தொடங்கியுள்ளன.

உற்பத்தி பாதிப்பு

மண் அள்ள த் தடை, வைக்கோல் தட்டுப்பாடு, மற்றும் உற்பத்தி செலவு ஆகியவற்றால் மண்பானை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரையூர் பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். விறகு, தேங்காய் மட்டை உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரித்து விட்டதால் உற்பத்தி குறைந்து பானை, சட்டிகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி கடந்த சில வாரங்களாக மந்த நிலையில் இருந்தது.

இப்போது உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சாதாரண மண்பானை ரூ.50 முதல் தொடங்குகிறது. ஸ்பெஷல் மண்பானை ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மண்பானை மற்ற பானைகளை விட பெரியதாக இருக்கும். மேலும் சுற்றிலும் வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

தலைப் பொங்கல்

சிறப்பு மண்பானையைத் தலைப் பொங்கலுக்காக திருமணமான தம்பதிகளுக்குப் பரிசாக வழங்குவர். இந்தப் பானை ஆர்டர் கொடுத்து தான் பெற முடியும் என்பதால் பலர் இதற்கு முன்னதாகவே ஆர்டர் கொடுத்து விட்டுப் பெற்றுச் செல்கின்றனர்.

மேலும் மண் அடுப்பு ரூ.50 முதல் விற்பனை செய்யபட்டு வருகிறது. இந்நிலையில் குளங்களில் மண் எடுக்க அரசு கட்டுபாடு விதித்துள்ளதால் பெரும்பாலானோர் பானை செய்வதற்குத் தேவையான மண் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

விலை உயர்வு

தற்போது மண் பானைகளுக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விலை உயர்ந்து காணப்படுகிறது. நவீன காலத்தில் தற்போது அலுமினிய பாத்திரத்தில் பொங்கலிட்டு வருகின்றனர் இன்னும் சிலர் மின்சார அடுப்பில் பொங்கலிட்டு வருகின்றனர் ஆனாலும் கிராமப்புறங்களிலும் இன்னும் பாரம்பரியம் கைவிடப்படவில்லை.

வாசலில் பொங்கல்

பேரையூர் கிராமப் பகுதிகளில் வீட்டு வாசலில் மண் அடுப்பை வைத்து ஓலைகளால் நெருப்பு மூட்டி அதன் மேல் மண் பானைகளை வைத்து பொங்கலிடும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். நகர் பகுதிகளிலும் பலர் இந்தப் பழக்கத்தை விடாமல் மேற்கொண்டுதான் வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மண்பானைகளையே வாங்கிப் பயன்படுத்துவர்.

மண்பானைப் பொங்கல்

இன்று நாகரிக காலத்தில் பலரும் குக்கர் பொங்கலுக்கு மாறி விட்ட நிலையில் மண் பானையில் பொங்கல் வைக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பேரையூர் பகுதி மண்பானைகளுக்கு இன்றும் கூட நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் மண்பானைத் தொழிலும் உயிர்ப்போடு இருக்கிறது.

ஒளிர காத்திருக்கும் பேரையூர் விளக்குகள்

பேரையூரில் கார்த்திகை மாதத்தில் தீப விளக்குகளின் விற்பனை உச்சத்தை எட்டும். பேரையூரில் தயாரிக்கப்படும் மண் பாண்டப் பொருள்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு இசைக்கலைஞர்களையும் கவர்ந்திட, அவர்கள் பேரையூர் பகுதிக்கே வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர். இதற்குக் காரணம் வைகை ஆற்றின் மண் ஆகும்.

பேரையூரில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக குலாலர் தெருவில் மண்பாண்டக் கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். இங்கே மண்பானைகள், பூந்தோட்டிகள், அடுப்புகள், சட்டிகள், விளக்குகள் என்ற களிமண்ணால் ஆன பல்வேறு கலைப் பொருட்களைத் தயாரிக்கின்றனர். காமாட்சி விளக்கு, தட்டு விளக்கு, ஐந்து முக விளக்கு, வினாயகர் விளக்கு, தேங்காய் விளக்கு, சர விளக்கு என விதவிதமான விளக்குகள் இந்தாண்டு விற்பனையில் முன்னணியில் இருந்தன.

ஐப்பசி மாசம் இறுதி நாளான்று விளக்குகள் மொத்த ஆர்டர் கொடுத்த வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து பேசிய பேரையூர் பகுதி மண்பாண்ட கலைஞர் மருது, “பேரையூரில் செய்யக்கூடிய மண்பாண்ட பொருட்களுக்கு உள்ளுரில் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும் நல்ல பெயர் உள்ளது. குறைந்த விலையில் நல்ல தரத்துடன் நாங்கள் கொடுப்பது தான் இதற்குக் காரணம்.

கடந்த வாரம் கமுதி வட்டத்தில் மழை இருந்ததால் தீப விளக்குகள் உற்பத்தியில் சற்று சுணக்கம் இருந்தது. இப்போது விற்பனை விறுவிறுப்பாக உள்ளது” என்றார்.

பேரையூர் பகுதி மண்பானைகளின் விலை

மண்பானை 100 ரூபாய் முதல் 140 வரை
மீன்குழம்பு சட்டி 60 முதல் 200 வரை,
காய்கறி தொட்டி (இயற்கை பிரிட்ஜ்) 400,
வடை சட்டி 80 முதல் 100,
பணியாரசட்டி 130,
தோசை கல் 140 முதல் 160,
நீர் குடவை (ஜக்) 150,
ஆப்பச்சட்டி 100 முதல் 140.

பேரையூர் பகுதி குயவர்களின் தொழில் சிக்கல்கள் தற்போது நிலையற்ற பருவகாலம், ஏரிகளில் களி மண் எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் காட்டும் கெடுபிடி, மண் தட்டுபாடு, மண்பானை தயாரிக்க பயன்படும் உபகரணங்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்கள் தற்போது பெரும் சிரமமாக உள்ளன. ஒரு மண்பானை உருவாக மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகிறது. அது மட்டுமில்லாமல் 100 பானைகள் உருவாக்கும் போது அதில் 75 பானைகள் மட்டுமே தேறுகிறது.

மண் பாண்டங்களின் விற்பனை காலத்திற்கு ஏற்றார் போல மாறுபடுகிறது. கார்திகை மாதத்தில் அகல் விளக்கு, தை மாதத்தில் பொங்கல் பானை வெய்யில் காலங்களில் சாதாரண தண்ணீர் பானை என தயாரிக்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தகுந்த வருமானம் மட்டுமே ஈட்ட முடியும், சேமிப்பு என்பது வெறும் கனவாகவே இருக்கிறது. மழைக்காலங்கள் வந்து விட்டால் தொழில் முற்றிலும் முடங்கிவிடும்.

குறைந்த வருமானம் கிடைப்பதால் நவீன இயந்திரங்கள் மற்றும் அச்சுக்கள் வாங்க இயலாத நிலையால் குயவர்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். பரம்பரை பரம்பரையாக இந்த தொழில் செய்பவர்களால் தான் இந்த மண்பாண்டங்கள் தயாரிக்க முடியும். ஆனால் இந்தக் கணினி காலத்தில் இது போன்ற தொழில்களில் ஈடுபடவே இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலை நீடித்தால் பிற்காலத்தில் மண்பாண்டங்கள் செய்ய ஆள் இல்லாத அவல நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு.

பேரையூர் பகுதி மண்பாண்ட கலைஞர் சாமி “மேலும் தற்போதெல்லாம் பொங்கல் உட்பட உணவு தயாரிக்க உலோக பாத்திரங்களைப் பயன் படுத்துவதால் வெகு விரைவில் இந்தத் தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை ஏற்படாமல் இருக்க குயவர்கள் பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மண்பானை தயாரிக்கும் முறையை செய்து காட்டி விழிப்புணர்வையும் ஏற்¢படுத்தி வருகின்றனர்.. “மேலும் அரசாங்கமும் நவீன இயந்திரங்கள் மற்றும் அச்சுக்கள் வாங்க மானியம் வழங்கி, அழியும் இந்த குயவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

Leave a Reply