பேச்சிப்பாறை காணிக்காரர்கள் பாகம் 1 – K. வருசக்கனி

பேச்சிப்பாறை காணிக்காரர்கள்
– K. வருசக்கனி
ஆய்வு மாணவர், நாட்டுப்புறவியல்

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றன. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர்.

இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன், முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கபடுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும்.

கன்னியாகுமரியில் பேச்சிப்பாறையை ஒட்டிய தச்சமலை, தோட்ட மலை, மாறா மலை, பின்னமூட்டுதேரி, களப்பாறை, நடனம்பொற்றை, சிலக்குன்று, முகளியடி, வெட்டம்விளை, பெருங்குருவி உள்ளிட்ட நாற்பது எட்டு குடியிருப்புகள் உள்ளன.

வழக்குமொழி

காணிக்காரர் மொழி ஒரு வகைபடுத்தப் பாடாத திராவிட மொழியாகும். மலம்பாசை, கன்னித் தமிழ், போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவது உண்டு. காணிக்காரர்களின் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை.

இவர்களில் பெரும்பாலனவர்கள் மலையாளமும் தமிழும் கலந்த மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர். இம்மொழி மலையாளத்தையும் தமிழையும் ஒத்திருக்கிறது. இலங்கையில் உள்ள மட்டக்களப்பு தமிழர்களின் மொழியும் காணிக்கார்களின் மொழியும் ஒரே போல உள்ளன.

எண்ணிக்கை

2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கன்னியாகுமரியில் 3409 காணிக்காரர்களும், நெல்லையில் 428 காணிக்காரர்களும் உள்ளனர்.

வசிப்பிடம்

இவர்கள் வசிப்பிடங்களைக் காடு, மலை, பொற்றை, குழி, பாறை, என்ற பெயர்களில் அழைக்கின்றனர். வாழ்விடங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி, செங்குத்தான மலைப்பகுதியில் வசிக்கின்றனர். வீடுகள் காணிப்பத்தி என்றும் வீடுகளின் தொகுப்பு குப்பனி என்றும் வீடுகளின் தொகுப்பிற்கு நடுவில் கட்டப்படும் பொதுவிடம் பாட்டப்பரை என்றும் அழைக்கபடுகிறது.

குகைகள், மரப் பொந்துகள், ஏறுமாடம் என மர உச்சியில் வீடு கட்டி வாழ்ந்தனர்.

வீட்டு அமைவு

வீடுகள் தரவம்புல், மூங்கில் குச்சிகள் மற்றும் ஈத்தல் இலைகளைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. கயிறுகளுக்கு பதில் ஈஞ்ச வள்ளி, கைவன் நார், சதய வள்ளிப் போன்ற காட்டுத் தாவரங்களின் நார்களை பயன்படுத்துகின்றனர். தரை மண் திட்டாலும் சுவர் பகுதிகள் தட்டையான மூங்கில் பட்டைகளாலும் அமைக்கப்படுகின்றன. வீடுகள் நீள்வடிவத்தில் கிழக்கு நோக்கி கட்டப்படுகின்றன. தனித்தனி அறைகள் பெரிய திண்ணை மற்றும் அகலமான முட்டம் காணப்படுகிறது. இரவு நேரங்களில் விளக்காக குயவு எனும் மரத்தில் இருந்து பெறப்படும் எண்ணெய்யை எரிக்க பயன்படுத்துக்கின்றனர். 

வீட்டின் முன்பாக உள்ள தாழ்வானப் பகுதியை எறும்பு எனவும் இரு வீட்டின் இடைப்பகுதியை பெறுவ என்றும் அழைக்கின்றனர்.

உடைகள்

இலை தழைகள், மரப் பட்டைகள் ஆடையாக அணிந்தனர். ஆடைகள் பொதுவாக வட்டக்கண்ணி இலை மற்றும் இறைஞ்சி மரப் பட்டைகளால் ஆன உடைகளால் ஆனது.

பெண்கள் இடைக்காலம் வரை ஒரு வேட்டியை மட்டும் கீழாடையாக அணிந்தனர். ஆளைத்தெங்கு ஓலையினால் வேய்ந்த பெட்டிகளில் ஆடைகளை வைக்கின்றனர். பாக்கு மரப் பட்டைகளால் ஆன செருப்புகள் மற்றும் தலை கவசம் தயாரிக்கின்றனர்.

தாவரங்களின் பாகங்களில் இருந்து ஆபரணங்கள் தயாரிக்கின்றனர். மரவள்ளி கிழங்கின் கட்டைகள் மற்றும் இலைத்தண்டுகளை கொண்டு சங்கலி, கொலுசு, மோதிரம், போன்ற ஆபரணங்கள் தயாரிக்கின்றனர்.

வளர்ப்பு பிராணிகள்

ஒவ்வொரு வீட்டாரும் வேட்டையாடவும் வன விலங்குகளில் இருந்து நிலத்தை பாதுகாக்கவும் நாய்களை வளர்கின்றனர். வீரன், குட்டன், செம்பி, கறுப்பி, வேணா என்ற பெயர்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளன. ஆடு, மாடு, கோழி, மைனா, கிளி, முயல், பூனை, போன்ற விலங்குகள் வளர்க்கின்றனர்.

உணவு

விருந்தினர்களுக்கு சிறுத்தேன், திணை மாவு, கதளி பழம், மூன்றையும் பினைந்து உருண்டையாக கொடுப்பர்.

திரளி அப்பம், கரைநெல், சாமை, திணை, சோளம், கொடிவள்ளி, மரவள்ளி, சீனி வள்ளி, சேம்பு, நூலி, நெடுவன் , நூறை , கருகிழங்கு, முக்கிழங்கு, கறிசக்கை, பலாவை அவித்து காந்தாரி மிளகாய் அரைத்து உண்பர்.

தற்போது ரேசன் அரிசியை பயன்படுத்துகின்றனர். கூட்டுக் கஞ்சி, முக்கனி அவியல், சளப் பனங்காய, தௌ¢ளுக்காய் போன்றவற்றை சமைத்து உண்கின்றனர்.

சமையல் பாத்திரம்

பெரிய ஆமை ஓடினை பக்குவப்படுத்தி அதை பாத்திரமாக பயன்படுத்தி உணவு சமைக்கின்றனர். மூங்கில் தண்டுகளை பயன்ப்படுத்தி சமைகின்றனர். வீட்டு உபயோக மண்பாண்டங்களை தூதை , காருவச்சட்டி , கும்ப என்று வழங்குகின்றனர்.

அடுத்த இதழில் அவர்கள் பயன்படுத்தும் போதை உணவு, வானியல் அறிவு, மருத்துவம்,தொழில்கள், கலைகள் போன்றவற்றை பற்றிய தகவல்களை பார்போம்….

Leave a Reply