பேச்சிப்பாறை காணிக்காரர்கள் – 2 – K. வருசக்கனி

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றன. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர்.

இவர்களைப் பற்றிய அறிமுகத்தை கடந்த இதழிலேயே விரிவாகக் கண்டோம்.

தகவல்தொடர்பு:

தகவல் தொடர்புக்கு என தனியாக விளிகாணி எனும் அதிகார பதவி உள்ளது. பரப்பன் என்பது ஆண் விளிகாணியாகும், பரப்பி என்பது பெண் விளிகாணியாகும். காட்டுக்கொடியில் முடிச்சு போட்டு தகவல் அனுப்பப்படுகிறது. முடிச்சு தகவல் தொடர்பில் இருமுறைகள் உள்ளன.

1) பத்தையக்கட்டு
2) முக்கும்பற கட்டு

வானியல் அறிவு:

தை, மாசி மாதங்களில் காட்டுத்தீயில் வரும் புகை பனியாக மாறி மேகமாக மாறி மழையாக பெய்கிறது. சித்திரை 10 தேதி கிழக்கே நிலவுக்கு அருகே பிரகாசமான நட்சத்திரம் வந்தால் அந்த ஆண்டு மழை நன்றாக பொழியும் என்பது நம்பிக்கை. நிலவை சுற்றி பிரகாசமான வளையமாக தெரிவதை மழைக்கொட, வெறிக்கொட என மழை வருவதை கண்டறிகின்றனர்.

மருத்துவம்:

காணிக்காரர்களுக்கு மருத்துவத்தை கற்றுக்கொடுத்தது அகத்திய முனி என்கின்றனர். மருத்துவம் பிலாத்தியின் வம்சாவளியினர் சிறப்பாக செய்யப்படுகிறது. இலை, வேர், கொடி, பட்டை, ஆரோக்கிய பச்சை, மஞ்சள் கொடி, கருட கொடி, கல்பால், கல்மதம், என பல மூலிகை மருத்துவம் செய்கின்றனர்.

காணிக்காரர்களின் தொழில்கள்

1) விவசாய முறைகள்:
காணிக்காரர்கள் காடெரிப்பு வேளாண்முறையை பின்பற்றினர் தை, மாசி மாதங்களில் வெயில் காலத்தில் காடுகளில் சேர்ந்துள்ள இலைதழைகளை எரித்து அதன் சாம்பலால் நிலம் வளப்படுத்தி பயிரிட தோதான இடத்தை உருவாக்குகிறார்கள்.

காட்டுத்தீ உருவாவதால் புதிய தாவரங்கள் வளத்துடன் வளர்வதாகவும் , அதனால் காட்டுயிர்களுக்கு போதிய உணவு கிடைப்பதாகவும் , மரத்தின் அடிப்பட்டை கருகுவதால் புதிய பட்டை உருவாகி மரம் தடிமனாக உறுதியாக மாறுகிறது என கருதுகிறார்கள்.

காடெரிப்பு வேளாண்மை வனத்துறையால் தடைசெய்யப்பட்ட பின்பு வணிக ரீதியிலான வாழை, ரப்பர் மிளகு போன்ற பயிர்களையும் முந்திரி பாக்கு, மிளகு , இஞ்சி , மஞ்சள், மரவள்ளி , சீனிவள்ளி , சேம்பு , கரைநெல், குச்சி கிழங்கு , சேனை , காச்சி என கிழங்கு வகைகளை பயிரிட்டனர்.
மூன்று மாத பயிர்கள் , ஆறு மாத பயிர்கள் , ஒரு வருட பயிர்கள் என காலத்திற்கு ஏற்ப பயிர்கள் அறுவடை செய்யப்படுகிறது.

1.1) பயிர் பாதுகாப்பு:

காணிக்காரர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்க மரக்கிளைகளில் ஏறு மாடம் எனும் காவல் மாடம் அமைக்கின்றனர். அதன் மூலம் விளைநிலங்கள் கண்காணிக்கப்படுகிறது. விளைச்சலுக்கு சேதம் ஏற்படுத்தும் பரவைகளை விரட்ட பாட்ட எனும் கருவியை பயன்படுத்துகின்றனர். பாட்டையொலி எனும் யுக்தியில் நிலத்தின் நான்கு மூலைகளைலும் தகர டின்கள் மற்றும் பிளந்த மூங்கில்களை கட்டிவைத்து அவற்றை கயிறு மூலம் இணைத்து காவல் மாடத்தில் கட்டிவைத்துள்ளனர்.விலங்குகள் வரும் போது கயிரை இழுப்பதன் மூலம் மூங்கில்கள் டின்களின் மீது மோதி ஓசை எழுப்பபடுகிறது.

1.2) அறுவடை :

அறுவடையின் இறுதியில் பச்சைநெல் இடித்து பொங்கல் படையலிடப்படுகிறது.
ஒலையில் உறிப்பானை எனப்படும் குடுவை பின்னி (சொர்ணக்கட்டு ) அதனுள் 18 கிலோ வரை வித்துகள் அடுத்த விதைப்புக்கு சேகரித்து வைக்கப்படுகின்றன.

2)வேட்டையாடுதல்:

மீன் பிடித்தல், வேட்டையாடுதல் தேனெடுத்தல் போன்ற தொழில்களை மேற்கொள்கின்றனர், மீன் பிடித்தலில் சில பிரத்யேக முறைகளை கையாளுகின்றனர். காணிக்காரர்கள் வேட்டையாடுதலை நயாட்டு என்கின்றனர்.

2.1) மீன் பிடித்தல்:
நஞ்சஞ்குரு என்ற காயை பக்குவம் செய்து நீரில் கரைக்கின்றனர். இதன் மூலம் மீன்களை மயக்கமும் செய்து எளிதாக பிடிக்கின்றனர்.கரையானை தூவி அதை தின்ன வரும் மீன்களை வலைவீசி பிடிக்கின்றனர்.
மீன் பிடித்தலில் கூடு வைத்தல், வட்டில் பாத்திரம் கயிறு எறிதல் தாடிமுள்ளை கூடு,அடப்பு வைத்தல் என பலமுறைகளை கையாளுகின்றனர்.

தூண்டில் முட்கள் உலட்டி என்ற மரப்பட்டையில் இருந்து பின்னப்பட்ட நாரில் கட்டப்படுகிறது.உலட்டி நார் மிக வலிமையாகவும், பெரிய எடையை தாங்கி பிடிக்கும் அளவுக்கு உறுதியானதாகும்.

2.2) விலங்கு வேட்டைக் கருவிகள் :

விலங்குகளை வேட்டையாட பல வித கண்ணிகளை பயன்படுத்துகின்றனர். அவை : 1. பரண் பொறி (டால்) 2. பெருப்பு – 3. கல் பொறி 4. பாலப்பொறி(ஊற்று) 5. மறைமுகப்பொறி (அடி வீயை) 6. கயறுப்பொறி (கண்ணி) 7. குடில் பொறி (கொடுங்கை) 8. தூக்குவீயை 9. கொம்பு வீயை 10. கொணி வீயை 11. அடப்புவீயை 12. வில்வீயை (வியா) போன்றவையாகும்.

3) தேன் எடுத்தல்

கொடுந்தேன், பெருந்தேன், சிறுதேன் என மூன்று வகையான தேன்களை சேகரிக்கின்றனர். கொடுந்தேன் பாறைகளிலும் மரக்கிளைகளிலும் காணப்படுகிறது.சிறுதேன் வீடுகளிலும் மரப்பொந்துகளிலும் மண்சுவர்களின் சிறுபொந்துகளிலும் காணப்படுகிறது.பக்குவம் செய்த தேனை மூங்கில் குற்றிகளில் அடைத்து வைக்கின்றனர்.

3.1) தேனடையை கண்டறிதல்:

தேனீ எழுப்புகிற ஒலியை வைத்து தேன் இருக்கும் இடத்தை அறிகின்றனர். யார் முதலில் தேன்கூட்டை கண்டதும் அவர் மரத்தில் அடையாளம் வைத்து செல்கிறார். அடையாளம் வைக்கப்பட்ட தேன் கூட்டை வேறு யாரும் எடுப்பத்தில்லை.

4) கைவினை பொருட்கள்:

வனத்தில் கிடைக்கும் பலவகையான மரங்களில் இருந்து மரத்திலான உரல் பால்வள்ளிக்கொடியினால் செய்யப்படும் லாமி, ஓலையினால் செய்யப்படும் கூடை(வல்லம்) மூங்கிலான குவளை பெட்டி பாய் முறம், பிரம்புவள்ளி நாரை பக்குவப்படுத்தி செய்ய்யப்படும் கூடை ஆளைத்தெங்கு மரத்தின் ஈர்க்குமுட்கள் மற்றும் ஒலட்டி நாரால் கட்டப்பட்ட மீன்பிடிக்கும் கூடு மற்றும் பிரம்பு , பனை மரங்களில் இருந்து பல பொருட்களை செய்கின்றனர். நெல், மாவு போன்றவற்றை பக்குவம் செய்ய மரத்தாலான உரல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கலைகள் விளையாட்டுகள்:

அறுபத்தி துறுபத்தி , பழுங்காகளி , காரிகக்ரி (3 ம் விளையாட்டுகள்) மரவுரி நடனம் , அம்மானை பாடல் கதையாடுதல் போன்றவையாகும். ஆடல்கள்:
காணிக்காரர்கள் துள்ளல் என்பது ஆடுவது என்று பொருள் கூறுகின்றனர். அவை , தும்பி பாட்டு , தும்பி துள்ளல், சோனன் துள்ளல், பேரயன் துள்ளல், கலித்துள்ளல் போன்றவையாகும் துள்ளல்கள் ஆவியுடன் தொடர்பு கொண்டதாக நம்புகின்றனர்.இந்த துள்ளல்களை இரவில் மட்டுமே நிகழ்த்துகின்றனர்.கலித்துள்ளல் ஆடுபவர் விரதமிருந்து ஆடுகின்றனர்.

தும்பி துள்ளல்: ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் வட்டமாக இருந்து பாடுகின்றனர். துள்ளுவதற்கு என்று ஒரு பெண் அல்லது ஆணை தேர்ந்தெடுத்து நடுவில் உட்கார் செய்கின்றனர். தும்பி பாடலை பலமுறை பாடும்போது அவர் துள்ளுவார். தும்பி துள்ளாதிருந்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட பாடலை பாடுகின்றனர். இப்பாடலை பாடியவுடன் தும்பி துள்ள துவங்குகிறது. கூடியிருப்பவர் ஆரவாரம் செய்ய நிகழ்ச்சி தொடர்கிறது.

சோனன் துள்ளல்: சோனன் என்பது என்பது எறும்பு வகைகளில் ஒன்று. இந்த எறும்பு தெய்வீக சக்தி உடையதாக நம்பப்படுகிறது. இரவு வேளையில் பெண்கள் கூடியிருந்து பாடுவர் அப்பொழுது ஏதாவது ஒரு பெண்ணின் உடலில் சோனன் வெளிப்படும் அவள் மிகுந்த சத்தம் எழுப்பி அமர்ந்த நிலையில் சுற்றுவாள். பின் மயக்கமுற்று கீழே விழுவாள்.

பேரயன் துள்ளல்: பேரயன் என்பது அசுரரை குறிப்பதாகும். இறந்த அசுரர்களின் ஆவி நன்மை செய்வதாக நம்புகின்றனர். பேரயனை நினைத்து பாடும் போது பாடுகின்றவரின் உடலில் அந்த ஆவி வெளிப்படுகிறது. ஆவி வெளிப்படும் போது அவர் தரையில் நீண்ட தூரம் புரண்டவாறு சத்தமிடுகிறார்.

பெண்கள் இந்த துள்ளலில் அதிகளவு பங்கு பெறுகின்றனர்.

கலித்துள்ளல்: ஆண்கள் மட்டுமே இந்த துள்ளலில் பங்கு பெறுகின்றனர்.சங்கு ஊதி பறையிசைத்து தெய்வத்தை வரச்செய்து அந்த தெய்வத்திற்கு வேலை கொடுத்து விளையாடுகின்றனர்

கூத்துகள்:

காக்கார்களி, குறத்திக்களி போன்ற கூத்துகள் நிகழ்த்திக்காட்டப்படுகின்றன. இவை புராணக்கதையோடு தொடர்புடைய கூத்துகள் ஆகும். இசைக்கருவிகள்: கொக்கரை, நந்தினி தாளம், வாங்கு, கொம்பு, வேந்தளம், போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்துகின்றனர்.கொக்கரை சாற்று பாடலுக்கும், வாங்கு வேந்தளம் சாஸ்தா வழிபாட்டிற்கும் மட்டும் பயன்படுத்துகின்றனர்.

கதைப்பாடல்கள்:

1. பேராயன் பாடல்கள்

2. அங்கு குய்கண்ணி பாடல் – பாரத கதை

3. அரயம்மார் பாடல் |

4. கொச்சு தம்பி

5. கிலுக்கிலாம் பெட்டி.- பாரத கதை

6. ஆலந்துரை வேலன் கதை பாடல் –

பழமரபு கதை கதைகள்:

1. பாம்பு ராஜா கதை 2. புலித்தீண்டங்காம்பன்புருத்தி கதை 3. பூலோக அரம்பன் கதை 4. பேரயன் கதை 5. பேரச்சி கதை 6. மறுமுத்தன் கதை 7. முனிக்கதை 8. நரிக்கதை

சமூக அமைப்பு

காணிக்காரர்கள் மத்தியில் இரண்டு வகையான பிரிவுகள் காணப்படுகின்றன. 12 பிரிவுகளில் 2 இல்லங்கள் அழிந்து விட்டன அவை பாலமல இல்லம் வெளநாட்டு இல்லம் ஒவ்வொரு பிரிவிலும் 5 குலங்கள் உள்ளன. 5 பிரிவுகள் சகோதரர்களாகவும் 5 பிரிவுகள் மாமன் மச்சான்களாகவும் கருதுகின்றனர்.

அவை, பெருமனத்து இல்லம், மாங்கோட்டு இல்லம், மூங்கொட்டு இல்லம்,, மேனி இல்லம், கை இல்லம் இவர்கள் 5 இல்லமும் சகோதரர்கள் முறை ஆவார்கள். மூட்டு இல்லம், தலை இல்லம், குறும் இல்லம், வேலி இல்லம் பெருஞ்சி இல்லம் இவர்கள் 5 இல்லமும் சகோதரர்கள் முறை ஆவார்கள்.
மேற்கண்ட இரு பிரிவினர் மாமன் மச்சினன் முறையினர் ஆவர். இவர்களுக்கு இடையே திருமணங்கள் நடைபெறுகின்றன. தற்போது மற்ற சமூகத்தினர் காணி பெண்களை திருமணம் செய்துள்ளனர். பெண் வழியாக சொத்துகள் கடத்தப்படுகின்றது.

தண்டனைகள்:

கடினமான குற்றங்களுக்கு தண்டனையாக குனியக்கல், கட்டிவைத்து எறும்புகளை விட்டு கடிக்க வைத்தல்.

நிர்வாகம் பேச்சிப்பாறையை சுற்றி 48 குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 48 குடியிருப்புகளுக்கு 6 மூதவர்கள் 48 மூட்டுக்காணி, 48 விளிகாணி, 48 பிலாத்திகளும் உள்ளனர்.

மூட்டுக்காணி: காணிகாரர்களை சுய நிர்வாகம் செய்துகொள்ள ஒவ்வொரு காணிகிராமத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார் அவர் மூட்டுக்காணி என அழைக்கப்படுவார். இவரே சமூக அரசியல் நிகழ்வுகளில் முக்கியத்துவம் பெறுபவர். மூட்டுக்காணி பதவியானது பெண்களின் வழியாகவே கடத்தப்படுகிறது. மூட்டுக்காணி இறந்துவிட்டால் அவரது சகோதரி மகன்களில் மூத்தவர் மூட்டுக்காணியாகவே பதவியேற்கிறார்.

பாட்டப்பரை: காணிக்காரர்களின் பாரம்பரிய பஞ்சாயத்து கூடும் இடமாக பாட்டப்பரை எனும் குடில் மூட்டுக்காணி வீட்டிற்கு அருகே அமைக்கப்படும். கிராமத்தின் அனைத்து முடிவுகளும் அங்கு தான் எடுக்கப்படும்.

மூட்டுக்காணி: மூட்டுக்காணிக்கு உதவியாக இருப்பவர் விளிகாணி ஆவார். மூட்டுக்காணியின் உத்தரவை ஏற்று ஆட்களை அழைத்துவருவதால் விளிகாணி என அழைக்கப்படுகிறார்.விளிகாணியின் பதவி அமைச்சரின் பதவி போன்றதாகும். மூட்டுக்காணி விளிகாணியின் வாயிலாக குடியிருப்பின் அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்துகொள்கிறார்.விளிகாணி பதவியும் பரம்பரை சார்ந்தது.

பிலாத்தி: மூட்டுக்காணி பதவிக்கு அடுத்து பிலாத்தி என்பவர் உள்ளார். பிலாத்தி மருத்துவராகவும் மந்திரவாதிகளாகவும் செயல்படுகிறார்.நோயானது கெட்ட ஆவிகளால் ஏற்படுகிறது என காணிக்காரர்கள் நம்புகின்றனர்.

எனவே மருந்துகளையும் மந்திரத்தையும் இணைத்தே பிலாத்தி செய்கின்றனர். காணிகளின் வாழ்விடத்தை சுற்றியுள்ள தாவரவகைகள் அதன் மருத்துவ குணங்கள் குறித்து மரபு சார்ந்த அறிவினை பெற்றிருக்க வேண்டும்.இப்பதவியும் மரபு வழியாக கடத்தப்படுகிறது.

மூத்தவர்: மூட்டுக்காணிகளால் தீர்க்க முடியாத சிக்கல்கள் மூத்தவர் வசம் கொண்டு செல்லப்படும். 8 குடியேற்ற பகுதிகளுக்கு ஒரு தலைமையாக மூதவன் இருப்பார்.

காணிக்காரர்களுடன் மேலும் பயணிப்போம் ..

Leave a Reply