பூக்“கல்” மீண்டும் மலருமா? க.கோமகள் அனுபமா

”என்னங்க, நம்ம வீட்ட செமையா கட்டிரனும். வீட்டுக்கு என்ன டைல்ஸ் போடுறது? எனக்கு ஒரு யோசனை, நம்ம வீட்டுக்கு எங்க ஊரு கல்லு போட்டா என்ன? பாரம்பரியமாகவும் இருக்கும், பாக்க அழகாகவும் இருக்கும், நலிந்துவரும் தொழிலுக்கு வேலைவாய்ப்பு குடுத்த மாதிரியும் இருக்கும். அது மட்டும் இல்லாம சுற்றுப்புறச் வழலுக்கு மாசு இல்லாமையும், நம்ம சந்ததிக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்!”

“கல்லுன்னு இப்படி மொட்டையா சொன்னா எப்படிம்மா? புரியறமாதிரி விளக்கமா சொல்லு…”

“அதாங்க, நம்ம ஆத்தங்குடி “பூ”கல்லத்தான் சொல்றேன்!”

”ஆத்தங்குடி “பூ”கல் எந்த இயந்திரத்தின் உதவியும் இல்லாம, எதையும் எரிக்காம கைலையே செய்றாங்க. செட்டிநாட்டுல இருக்குற ஆத்தங்குடின்னு ஒரு சின்ன கிராமத்துல இத உற்பத்தி பண்றாங்க. அதான் அதுக்கு ஆத்தங்குடி பூக்கல்லுன்னு பேர் வந்தது. இது பூமியை மாசு படுத்தாம இருக்குறதோட வீட்டோட உள் அழகுக்கும் காரணமா இருக்கு. இது காலங்காலமா செட்டிநாட்டுப் பாரம்பரியத்துல ஒண்ணா விளங்குது.

”இது குடிசைத் தொழிலாக நூறு வருஷமா செஞ்சுட்டு வர்றாங்க. அந்தப் பகுதியில கிடைக்குற மண்ணு, சிமெண்ட், ஆக்சைட்கலவை கொண்டு உருவாக்குறாங்க. அதுல வரையுற டிசைன்கள் தனித்துவமா மட்டும் இல்லாம, பாக்கப் பிரமிக்க வைக்குற அளவுக்கு கலைநயத்தோடும், விதவிதமான கண்ணைப் பறிக்கும் வண்ணத்துலையும் இருக்கு.

”இதோட தயாரிப்பு முறை ரொம்ப மெதுவாக இருக்குறதால இதோட வளர்ச்சியும் சரிஞ்சுட்டு வருது இந்த வேகமான துரித உலகத்துல. இத செய்ய இடமும் பொருளும் ரொம்ப குறைவு. செய்முறையும் ரொம்ப ரொம்ப சுலபம்.

”மொதல்ல, மணல் மற்றும் களிமண்ணச் சலிச்சுக் கலந்து நல்ல பவுடர் மாதிரி ஆகுறவரை சிமெண்ட்டத் தண்ணியோட கலந்து கலவையாகுறாங்க. கண்ணாடித் தட்டைச் சுத்தமா துடைச்சு ஒரு பிளாட்பார்ம்ல வைக்குறாங்க. ஒரு இரும்புச் சட்டம் கண்ணாடித் தட்டு மேல வெச்சு அதுல இரும்பு டிசைன் அச்சு வெச்சு அதுல வண்ணக் கலவைகள ஊத்துறாங்க. அதுல தங்களோட கைவண்ணத்துல அழகான டிசைன்னா மாத்துறாங்க. அதன் மேல மணல் சிமெண்ட் பரப்பி, சிமெண்ட் கலவையை அதன் மேலே அந்த சட்டம்வரை நிரப்பி கல்லைச் செஞ்சு முடிக்குறாங்க.

”ஒரு நாள் இரவு முழுக்க காயவிட்டுத் தண்ணித் தொட்டில ஏழு நாள் ஊறவிட்டு நிழல்ல காயவெச்சு எடுத்தா “பூ”கல் தயார்! செட்டிநாடு வீடுகள் “ஆர்ட் டேகோ” வரலாற்றுப் பின்னணிக்கு மிக பிரசித்தம் பெற்றவை.

”னண்கள், கான்கிரிட் சிற்பங்கள், வளைவுகள், மரவேலைபாடுகள், முற்றம், சுவர் ஓவியங்கள் எவ்வளவு இருந்தாலும் வீட்டோட உட்புற அமைப்பையே மேம்படுத்தி ஜொலிக்க வைக்கிறது நம்ம ஆத்தங்குடி “பூ”கல்லுதான்னு சொன்னா மிகையாகுதுங்க!

”ஆனா ரொம்ப வருத்தமான செய்தி என்னன்னா இப்ப இருக்குற சந்ததிங்க வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளிநாடு, வெளியூர் போகச் செட்டிநாட்டு வீடுகள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் நலிவடைஞ்சுட்டு வருது. அத அழியாமக் காப்பாத்த வேண்டியது இன்றைய தலைமுறையோட கடமை இல்லையா?” என்று வருத்ததுடன் முடிக்க,

”அப்பாடி! இவ்ளோ பெருமையா இந்தக் கல்லுக்கு?”
“என்னங்க, எப்போ ஆர்டர் தர போறீங்க?”
“சொல்லியாச்சுல, வீட்டுக்காரம்மா பேச்சுக்கு மறுவார்த்தை ஏது? இப்போவே பேசிடறேன். நம்ம தலைமுறைல இந்தப் பாரம்பரியத்த மலர வைப்போம்… நலிந்து வரும் கைத்தொழிலை மீட்டேடுப்போம்…”

“’கைத்தொழில் ஒன்றைக் கற்றுகொள், கவலை இனி உனக்கில்லை ஒத்துக்கொள்’ன்னு சும்மாவா நம்ம பெரியவங்க சொன்னாங்க. நம்ம பிள்ளைய கம்ப்யூட்டர் கிளாசுக்குப் பதிலா இந்தக் கைத்தொழிலை இந்த விடுமுறைல கத்துக்கச் சொல்லலாம். நாமளும் நிறைய பேருக்குக் கத்தும் தரலாம். என்ன நான் சொல்றது?” என்று கிளம்பினார்.

க.கோமகள் அனுபமா.
கட்டடக் கலை நிபுணர் / துணைப் பேராசியர்

Leave a Reply