பாண்டியருக்கு முன்பு மதுரையை ஆண்ட மன்னர் யார்?

இறந்த மன்னரை புதைப்பற்கு முன் படையெடுத்து சென்ற மக்கள். ஏன்?

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் மதுரையானது பல நூற்றாண்டுகள் தொடர்ந்து மக்கள் வாழும் ஒரு முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இன்றும் மதுரையில் எங்கு தோண்டினாலும் தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைத்த வண்ணமே உள்ளன. மதுரை என்றாலே பாண்டியர்கள் தான் நம் ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால் கூடல் நகர் என அழைக்கப்படும் மதுரையை பாண்டியர்களுக்கு முன்பாகவே ஒரு அரச வம்சம் ஆண்டு உள்ளது.

தமிழகத்தில் முடிசூடிய மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களைப் போலவே ஒரு காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் “வேளிர்” என கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் தரவுகளில் இருந்து பல அறிஞர்கள் கூறுகின்றனர். வேளிர் என்பது வேள் என்னும் சொல்லின் பலர்பால் ஆகும். இதற்கு விரும்புதல், நட்பு, காதல், மணம் புரிதல், யாகம் செய்தல் ஆகிய பொருளும், மன்மதன், முருகன் திருமணம் பிறந்த ஆண் மகன் எனும் பெயர்களை கூறுவதாகவும் உள்ளன. சில அறிஞர்கள் வேளிர் எனும் சொல் வேள்வி என்பதில் இருந்து தோன்றியதாக கருதுகின்றனர். எனினும் இப்பெயர்கள் அனைத்தும் ஆய்வுக்கு உரியவையாகவே கருதப்படுகின்றன.

வேளிர் பற்றிய பல வரலாற்று ஆய்வுகளை சங்க இலக்கியங்கள் வாயிலாக திரு .ராகவ ஐயங்கார் அவர்கள் விரிவாக எழுதியுள்ளார். வேளிர் என்போர் சங்க காலத்திற்கு முன்பு வடக்கிலிருந்து வந்த யாதவர்கள் என அவர் கூறுகின்றார்.

“நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
10 உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்,”

எனும் புறநானூறில் 201 ஆவது பாடல் மூலம் வடபால் முனிவரான அகத்தியருடன் தென்னகம் குடிபெயர்ந்த வேளிர் குழு என கருதப்படுகின்றது

தமிழி கல்வெட்டுகளிலும், பல பானை எழுத்து பொறிப்புகளிலும் வேணகாசிபன், வேள் அறை நிகம், உளியன், ஒளியன், வேள், வேளாதன், வேள் ஊர் அவ்வனா பதவன், போன்ற பெயர்கள் வேளிரை குறித்ததாக கருதப்படுகின்றது.

சங்ககால இலக்கியங்களும், நடுகற்களும் குறிப்பிடும் ஆகோள் பூசலில் ஈடுபட்ட ஆயர் எனப்படும் கால்நடை மேய்த்தவர்கள் “வேளிர்” எனப்பட்டனர்.

வேளிர்கள் கால்நடை வளர்ப்பதோடு சுரங்கங்களை தோண்டி மணிகளை சேகரித்து, அதன் மூலம் பலன் பெற்றனர் என அறிஞர்கள் கருதுகின்றனர். வடமொழியில் கூறப்படும் வைடூரியம் என்ற சொல்லும், பாலி மொழியில் வைடூரியத்தினை குறிக்கும் வேளூரியா என்ற சொல்லும் வேளிர் என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றது.

வேளிரும் சங்க இலக்கியம் குறிப்பிடும் ஒளியாகும் . வெளிச்சம், வெள்ளை எனும் ஒரே பொருளில் இருந்து தோன்றிய சொற்கள். ஆகவே இருவரும் ஒருவர் என பல சான்றுகள் மூலம் அரங்கசாமி அவர்கள் நிரூபிக்கிறார்.

வட மொழியில் குறிப்பிடப்படும் ராஜா என்ற சொல்லின் மூலமான “ரஜ்” என்பதும், எகிப்தில் குறிப்பிடப்படும் “ரா” என்பதும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பல பழங்குடி மக்களின் தலைவர்களை குறிப்பிடும் “மன” என்பதும், வேளை போன்றே ஒளியை குறிப்பிட்ட சொல்லாகும். பாண்டியர் செப்பேட்டிலும், பல்லவர் செப்பேட்டிலும் ஒளியாரின் கோட்டைகளை அழித்ததை பற்றி குறிப்புகள் வருகின்றன.

பண்டைய காலத்தில் கோவை “வேளிலூர்” என்று அழைக்கப்பட்டது. சேரர்கள் ஆட்சி செய்வதற்கு முன்பு வேளிர்கள் கருவூரை ஆட்சி செய்துள்ளனர்.

சங்ககாலத்தில் “பாடுசால் நன்கலம்” (பதிற்றுப்பத்து) என்பன ஒரு கூட்டத்தில் தலைவனாக இருக்கும் ஒருவன் வைத்திருக்கும் பண்டங்கள் (திறைகள் – செல்வம்) என ஆய்வாளர் கோ. சசிகலா அவர்கள் குறிப்பிடுகின்றார். அதாவது தலைவன் ஒருவர் இறக்கும் பொழுது அவரோடு சேர்த்து புதைக்கும் கலன்கள் (உடமைகள்) அவன் மதிப்பை உணர்த்துவதாக இருந்துள்ளது.

ஒரு சமயம் மன்னன் ஒருவன் இறக்கும் பொழுது இறந்தவனிடம் ஒரு கலனும் இல்லை. எனவே அவனுக்காக மக்கள் பக்கத்து நாடுகளுக்கு படையெடுத்து சென்று. அதன் மூலம் கவர்ந்து வந்த பொருட்களை அவனுடன் வைத்து புதைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் இருவகை வேளிரில் இறந்தவர்களுக்கு பெருங்கற்கால சின்னங்கள் வைத்தவர்கள் தொன் முதிர் வேளிர் என்றும், நெய்தல், மருதம் போன்ற பகுதிகளில் தாழிகளில் புதைத்த வேளிர் இரண்டாவது வகையினர் என்றும் கருதப்பட்டனர்.

வேளிர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதியின் அடிப்படையில் கூடல் வேளிர், உறந்தை வேளிர், கொங்குவேளிர் என அறியப்பட்டனர். சேர சோழ பாண்டியர்களின் தலை நகரங்களான முறையே கரூர், உறந்தை, கூடல் எனும் மதுரையை மூவேந்தர்களுக்கு முன்பு வேளிர் ஆட்சி செய்தனர் என இலக்கியங்கள் உரைக்கின்றன.

மதுரையாம் கூடல்நகரை கொற்கையை ஆண்ட பாண்டியர்கள் படை எடுத்து வருவதற்கு முன் அகுதை எனும் வேளிர் அரசன் அதனை ஆட்சி செய்தான் என்பதை

“….. மறப்போர் அகுதை

குண்டுநீர் வரைப்பின் கூடல் அன்ன

குவை இரும் கூந்தல் வருமுன் சேப்ப”

என்னும் புறநானூற்று பாடல் வரி கூடல் நகரம் அகுதையின் ஆட்சியின்கீழ் இருந்தது விளக்குகிறது. அதனை பாண்டியர்கள் பல நாள் முற்றுகையிட்டனர் எனவும் அறியமுடிகிறது.

உறந்தை என கருதப்படும் சோழர்களின் உறையூரையும் தித்தன் வெளியன் எனும் வேளிர் அரசன் ஆண்டதாக புறநானூறு பாடல் குறிப்பிடுகின்றது. பிற்காலத்தில் வந்த நக்கீரர் தான் உறந்தை சோழர்களின் தலைநகரம் என்பதை குறிப்பிடுகின்றார்.

அதேபோல கரூரையும் சேரர்கள் தங்கள் தலைநகராக ஆக்குவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வேளிர் அங்கு எழுச்சியுடன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பல அகழாய்வுகள் மூலம் நமக்கு கிடைக்கின்றன.

பல்லவர்களும் ஒளியரை வென்று அப்பகுதிகளை கைப்பபற்றியதாக அவர்களின் செப்பேடுகள் கூறுகின்றன.

எனவே குடி ஆட்சியிலிருந்து தலைவன் ஆட்சி அல்லது மன்னராட்சி துவங்கியது வேளிர் காலத்தில் என நம்பப்படுகின்றது. அதுமட்டுமல்ல இன்று தென்னகத்தில் காணப்படும் கல்வட்டம், பதுக்கைகள், நெடுங்கல் போன்ற பல பெருங்கற்கால சின்னங்களும், சாம்பல் மேடுகளும், ஆகோள் பூசல் நடுகற்களும், கால்நடை வளர்பில் இருந்த ஆயர் எனப்படும் வேளிரோடு தொடர்புடைய மக்களிடமிருந்து தோன்றிய பண்பாடாக கருதப்படுகின்றது.

மறக்காமல் இப்பதிவுக்கு, Share and Comment இடவும். நன்றி

Follow our Page Thali Heritager Magazine

Website: http://heritager.in/?p=2306
Telegram: https://t.me/heritager

இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்

Leave a Reply