பல்லான் குன்றில் குழுமூர் உதியன் – சேரர் ஆயிரம்

அளவில்லாத அன்னதானம் அளித்த பல்லான் குன்றில் குழுமூர் உதியன்

பல்லான் குன்றில் குழுமூர் உதியன் என்றவன் உதியன் வழிவந்த சிற்றரசனாக இருந்தாலும் “தானத்தில் அளவில்லாது கொடுத்த சிறப்புடைய அரசன் ஆவான்” என்று, கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாங்கோதை 168ஆம் பாடலில் குறிப்பாக இவனின் அன்னதான சிறப்பை மையப்படுத்தி புகழ்ந்து பாடுவதை நாம் பார்க்கிறோம். இவன் சேரமான் மாங்கோதை காலத்தில் வாழ்ந்தவனாக இருக்கவேண்டும் இல்லை அதற்கு முன் வாழ்ந்தவனாக இருக்க வேண்டும்.

ஒருவன் விளைநிலமும் கறவைப் பசுவும் இருந்தால் விருந்துக்கு அஞ்ச வேண்டியது இல்லை என்பதை வ்வரசன் மெய்ப்பித்துக் காட்டுகிறான். திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் பெருமைக்கு நிகராக இவ்வரசன் விளங்குவது சேரர்களின் கொடைத் தன்மையைக் காட்டுகிறது. இச்சடையப்ப வள்ளல் வீட்டின் முன் கதவு மூடியதே கிடையாது என்று கம்பர் அவரை புகழ்ந்து இருப்பார் “அடையா நெடுங்கதவு” என்றும் விருந்தினர் புலவர்கள் என்று பாராது இரவும் பகலும் ஆரவாரமாய் இருக்கும் என்றும் சிறப்பித்துள்ளார்.

அச்சடையப்ப வள்ளல் தன்மை உடையவராக இச்சிற்றரசனாக குழுமூர் உதியன் விளங்குகிறான். தன் வீட்டில் புலவர், பாணர், கூத்தர் போன்றவர்களுக்கு எப்பொழுதும் விருந்து உபசரிப்பு ஆரவாரமாய் இருக்கும் என்பதைப் பாடல் வழி அறிய முடிகிறது.

“பல்லான் குன்றில் படுநிழற் சேர்ந்த
. நல்லான் பரப்பில் குழுமூர் ஆங்கண்
கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து
அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பில்”

இவ்வரசனின் அன்னதான சிறப்பினை பாடல் அழகாக வெளிக்கொணர்வது சிறப்பாகும்.

“நல்லான் பரப்பிற்குழுமூர்” என்பது இச்சிற்றரசன் நல்ல கறவை பசுக்களை மந்தை மந்தையாக வைத்திருந்தான் என்றும் அதனால்தான் விருந்து செய்வது இவ்வரசனுக்கு எளிதாக இருந்திருக்கும் எனச் சேரமான் மாங்கோதை குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு ஒருவன் தன் அளவிற்கு அரிய பணியைச் செய்வதற்குச் சிறந்த இல்லாளும் ஏற்ற வகையில் அமைய வேண்டும் அப்படி இருப்பின் பல பணிகள் செய்யத் தடை ஏற்படாது. அவ்வகையில் சிற்றரசனானவன் குழுமூர் உதியன் சிறப்பானவன் என்பதும் சேரன் உதியன் வழியானவன் என்பதால் வானளவு கொடுப்பவராகவும் இருந்திருப்பான் எனவும் அறியமுடிகிறது.

Leave a Reply