பனித்திரை – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #4

வரலாற்றுக் கதைகள் எனும் ஓர் எழுத்துமுறை கதை சொல்லலின் புதியதோர் விதம். மனித வாழ்வினில் கதைகள் பல ரகங்களில் கலந்துள்ளன. அவ்வகையில் முற்றிலும் கற்பனை நிறைந்த கதைகளுக்கிடையில், நமக்கு முன், நாம் வாழ்ந்த நிலப்பரப்பில் உயிரும் சதையுமாக வாழ்ந்து, பல சாதனைகள், சாகசங்கள் புரிந்து; இன்றும் எண்ணிப்பார்க்கையில் மயிர்கால்களைச் சிலிர்க்கச்செய்யும் பல உணர்வுகளைக் கொடுக்கக்கூடிய திறன் வரலாற்றுக் கதைகளுக்கு உண்டு

அதிலும் குறிப்பாக பண்டைய தமிழக வரலாற்றுக் கதைகள் உடலைக் குளிர்விக்கும் உணர்வினைக் கொடுக்கும். அப்படிப்பட்ட உணர்வினைக் கொடுத்த வரலாற்றுப் புதினங்களில் முக்கியமானதோர் புதினம் அகிலன் அவர்கள் இயற்றியவேங்கையின் மைந்தன்“. 

சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் இப்புதினம், முதலாம் ராஜ ராஜரை வேங்கையாகவும் அவர் ஈன்ற தவச்செல்வர் முதலாம் ராஜேந்திரரை அவ்வேங்கையின் மைந்தன் எனக்குறிப்பிட்டும்அந்த மாவீரர் நிகழ்த்திய ஈழத்துப் போரினை அடிப்படையாகக்கொண்டு, அவர் மீட்டு வந்த பாண்டிய முடியினை பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கும்.

(மற்ற சிறுகதைகள்

1. காதலும் துரோகமும்
http://heritager.in/?p=2106

2. மித்ரன்
http://heritager.in/?p=2110

3. ஒரு விறலியின் காதல்
http://heritager.in/?p=2115

4. பனித்திரை
http://heritager.in/?p=2118)

பெரும்பாலான பண்டைய தமிழ் வரலாற்றுக் கதை பிரியர்களுக்கு‘ ‘சொல்லிக்கொடுத்தது அமரர் கல்கியின் படைப்பானபொன்னியின் செல்வன்‘. அப்பொன்னியின் மைந்தன் ஈன்றெடுத்த வீர சோழன் அலையாடும் ஆழ்கடலையே ஓர் குட்டையைப் போல் தன் கட்டுக்குள் அடக்கி வைத்திருந்தார்

அவருடைய வீரதீரங்களைப் பறைசாற்றும் விதமாக பல கதைகள் வரலாற்றுச் சான்றுகளுடன் வந்துள்ளன. அதன்வழி, “வேங்கையின் மைந்தன்எனும் இப்புதினம்ஈழத்தை முழுவதுமாக வெற்றிகொண்டு, பாண்டிய முடியினை மீட்டு, மும்மிடியினையும் சோழ நாட்டிற்கு மகுடங்களாக சூட்டிய நாயகர் ராஜேந்திரர். அப்போரில் தன்னுடன் முடியினை மீட்கத் துணை நின்ற பல வீரர்களில் மிக முக்கியமானவர்கொடும்பாளூர் இளவரசர்தென்னவன் இளங்கோவேள்“. இக்கதையின் நாயகனாக இளமை மிகுந்த துடிப்பான வீரராக புதினம் முழுவதும் வலம் வருகிறார்.

வரலாறுபோர், உதிரம், வீரம் போன்ற புறச்செயல்களைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது, ஆனால் இத்தகைய சூழிநிலைகளில் சிக்குண்டிருக்கும் மக்களின் அக உணர்வினை எவராலும் அறுதியிட்டு கூற இயலாதுஅதிலும் குறிப்பாக, போர் நிகழும் தருணங்களில் அச்சூழலின் இரண்டாம் நிலை பாதிப்பினை அனுபவித்துக்கொண்டிருக்கும் மகளிரின் உள்ளபோரினை விவரிக்கவே தனியொரு இயல் உருவாக்கிட வேண்டும். பல தமிழ் வரலாற்றுப் புதினங்களைப் போன்று, இப்புதினமும் போரினை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டிருந்தாலும், அப்போர்களின் உடன், தெளிவானதொரு காதல், தெளிவிக்கப்படாததொரு காதல் என இரு வேறு காதல் உணர்வுகள் பயணிக்கின்றன

தெளிவான வெளிப்படுத்தப்பட்ட காதல் :- வலி, துரோகம், காயங்கள் நிரம்பிய ஒன்றாக இருந்தாலும் அழகும் காதல் உணர்வும் ததும்பும் வகை.

தெளிவிக்கப்படாத, வெளிப்படுத்தாத காதல் :- நம்பிக்கை, தியாகம், முன்வகை காதல் உணர்வினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் மருந்தாக, வீரமும் கம்பீரமும் நிறைந்த வகை.

இவ்விரு வகை காதல் உணர்வுகளும் ஈழத்துப் போரிற்கு நிகரான போராட்டமாக கதை முழுதும் பயணிக்கின்றன.

ஏனோ! தெளிவிக்கப்படாத அந்த வீரக்காதல், இப்புதினத்தில் இரண்டாம் தர இடத்தினை அடைந்து முறையான முக்கியத்துவம் பெறவில்லை என, இளம் பருவத்தின் இறுதிக்கட்டத்தில் இப்புதினத்தை படித்த ஓர் பெண்ணிற்குத் தோன்றியது

அவ்வெண்ணத்தின் வெளிப்பாடாக, தெரியப்படுத்தாதக் காதலைக் கொண்டிருந்த நாயகியின் மன ஓட்டத்தை, நிலக்கரியில் புதைந்திருக்கும் வைரமணியினை அகழ்ந்தெடுக்கும் ஓர் முயற்சி மேற்கொள்ள அவள் விரும்பினாள்வேங்கையின் மைந்தன் புதினம் முழுவதும, ஈழம், போர், முதலாம் ராஜேந்திரர், வல்லவரையர் வந்தியத்தேவர், கொடும்பாளூர் இளவரசர் இவர்களின் வீரமும், ரோகண தேசத்து இளவரசி ரோகிணியின் அழகு, அவளும் கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவேள் ஒருவர் பால் மற்றொருவர் கொண்டிருந்த காதல் பற்றும் விவரிக்கப்பட்டிருந்தாலும், இவையனைத்திற்கும் மறைவாக நம் சிந்தை ஓட்டத்தில் ஒளிந்துகொண்டு, தன் வெளிப்படுத்தாத காதலின் வலியினை உணர்த்திக்கொண்டே இருப்பவள்….கடாரமும் ஈழமும் கங்கையும் கொண்ட மாவீரர் முதலாம் ராஜேந்திரரின் புதல்வியாக இப்புதினத்தில் சித்தரிக்கப்படும்அருள்மொழி நங்கையார்“.

இச்சிறுகதை, மங்கையாக, இளவரசியாக, காதலியாக தன் கடமையில் இருந்தும், கண்ணியத்தில் இருந்தும், காதலில் இருந்தும் சிறிதளவும் வழுவாது, வேங்கையின் மைந்தன் புதினம் முழுவதும் தன் அகத்தே நடந்துகொண்டிருந்தமனப்போரினைவெற்றிகொண்ட சோழத்து இளவரசிஅருள்மொழி நங்கையின்உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் சிறிய முயற்சி.

அருள்மொழி நங்கை

அழுத்தக்காரி‘.

மா. சிந்தனா

 

பனித்திரை

பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மனித இனம், தோன்றிய நாள் முதல் ஆணும் பெண்ணும் காடு, மலை, வனாந்திரம் என பல இடங்களில் அலைந்து திரிந்து, உணவும் உரைவிடமும் பங்கிட்டுக் கொண்டனர். பின் சமுதாயக் கூட்டங்களாக மாறி ஓரிடத்தில் தங்கும் சமுதாயமாகக் குடி கொண்டனர். 

பின், ஓரிடத்தில் தேங்கிய குடிகள் நிரை வளர்த்தனர், வேளான் செய்தனர், குடி பெருமை பெருக்கினர் பின் ஒரு கட்டத்தில் வீரம், காத்தல், வலிமை, அரசு பொறுப்பு, குடி பொறுப்பு அனைத்தும் ஆண்களின் கையில் செல்ல, வளம், ஞானம், கலை, கற்பு, குடிப்பெருமைக் காத்தல் போன்றவை பெண்களின் பொறுப்பாக மாறிட, தொடக்க காலத்தில் அன்பு, அறிவு, வீரம், வளமை அனைத்திலும் முன்னோடியாகப் திகழ்ந்த பெண்கள் பதுமையென அச்சம், மடம், நானம், பயர்ப்பு கொண்டு குடிபெருமை காத்தனர். 

அப்படித் தன் குலப் பெருமையினை நிலைநாட்டப் பிறந்திருக்கும் பெண்பிள்ளைகளை மதிப்பும் மரியாதைக்கும் உரியவர்களாக பாவிப்பதில் மிகசிறந்தவர்கள்; வளம் பொருந்திய நாட்டாளுமையும் வலிமை பொறுந்திய கடல் ஆளுமையும் கொண்ட சோழர்கள். 

சோழ நாட்டு பெண்டிற்கு வரலாற்றில் ஓர் தனி இடம் உண்டு, கோயில் கற்றளிகளுக்கு கொடை வழங்குவதில் தொடங்கி, நீதி வழுவிய மன்னரின் நகரையே தீக்கிரையாக்குவது வரை; அரசிற்கு அறிவுரை கூறுவது முதல், இறைவன் திருவடி தொண்டு செய்து, கடவுள் மற்றும் இறைவன் புகழ்பரப்புவது வரை; சோழ நாட்டு மகளிர் அசாத்தியமான குணநலன்களைக் கொண்ட எடுத்துக்காட்டாகவே திகழ்ந்துள்ளனர். 

இவர்கள் வழி வந்த பெண்மக்கள் வீரமும், நீதியும், நாணயமும் தாம் ஈன்றெடுத்த வீரமகன்களுக்கு ஊட்டி வளர்த்தனர். அப்படியொரு வீரத்தாய்க்குப் பிறந்த ஓர் சோழ புலி, தான் ஈன்றெடுத்த பெண்பிள்ளைக்கு, தன் தந்தை, ‘பொன்னியின் செல்வர்: ராஜ ராஜரின்’ நினைவாக அவரது இயற்பெயரினை சூட்டினார். 

தாத்தாவின் பெயர் கொண்டதாலோ என்னவோ ‘அருள்மொழி நங்கை” பெண் பிள்ளையாக இருப்பினும் கம்பீரத்திலும், குணத்திலும், தோற்றப் பொலிவிலும், செயலாற்றும் திறனிலும் அவரைப் போலவே விளங்கினாள். 

நேர் கொண்ட பார்வை; செருக்கும் அடக்கமும் கலந்ததோர் நடை; உள்ளத்தின் உணர்வுகள் எதையும் வெளிப்படுத்தாத அமைதி நிறைந்த முகம்; மன ஆற்றாமையில் இருக்கும் யாரையும் நொடிப் பொழுதில் சாந்தப் படுத்தும் திறன்வாய்ந்த விழிகள்; வசியக்கூறுகள் ஏதும் இன்றி, புன்னகயிலும் வீரத்தை வெளிப்படுத்துகின்ற மென்சிரிப்பு; 

அருள்மொழி வர்மரே இப்பிறவியில் பெண்ணாகப் பிறவியெடுத்தது போல் தோன்றினாள். அறிவு, அமைதி, அழகு நிறைந்த ஞான ஒளி ஒன்று பெண்ணாய் உருவெடுத்து தன் குலப் பெண்களுக்கே உரிய குணநலன்களைக் கொண்டிருந்தாள்.

கொடும்பாளூர்

சோழர்களுடன் மணத் தொடர்பு கொண்டு நீண்டகாலமாக நெருங்கிய உறவுகளாக மாறி, சோழப் பேரரசின் வலிமை வாய்ந்த பந்தமாகத் திகழ்பவர்கள் ‘கொடும்பாளூர் வேளிர்கள்’. 

அங்கு தன் மாமா மதுராந்தக வேளாரின், கொடும்பாளூர் அரன்மனையின் மாடத்தில் நின்றுகொண்டு தன் தாய் ‘வீரமா தேவி பிறந்த ஊரின் அழகினை ரசித்துக் கொண்டிருந்தாள்; தன் தாயாதிகளின் வீரக்காற்றினை நுகர்ந்துகொண்டிருந்தாள். அடடா! அவள் முகத்தில் என்ன ஒரு வீரம் நிறைந்த ஆனந்தப் பிரதிபலிப்பு!

மாடத்தில் நின்று கொண்டிருந்தவள்; அருகில் உரையாடிக்கொண்டிருந்த தனது தந்தை இராஜேந்திரர் மற்றும் கொடும்பாளூர் அரசர் மதுராந்தக வேளாரின் உரையாடலையும் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

அவள் கவனம் முழுவதும் இவைகளில் லயித்துக்கொண்டிருக்க; மாடத்தின் முற்றத்தில் ‘வாழ்க சோழவள நாடு’ என்று ஒரு குரல் கேட்டது; அவள் கவனம் கலைந்தது.

வாழ்த்தொலியினைக் கேட்டவுடன் அவள் முகத்தில் அப்படியொரு பொலிவு! நட்சத்திரங்களைப் போல் கண்கள் மின்ன; உதடுகளில் எழுந்த புன் சிரிப்பினை மறைத்துகொண்டு, ஓசை கேட்ட திசை நோக்கித் திரும்பினாள்.

அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே ஆடவன்!

இன்று நேற்றல்ல, நினைவு தெரிந்த நாள் முதல் அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆடவன்.

பேதைப் பருவத்தில் விளையாட்டுத் துனையானவன்;

பெதும்பைப் பருவத்தில் குறும்புகள் பல செய்தவன்;

இதோ! இன்று இளம்பெண்ணாக, சூரியக்கீற்றொளி போல் தோன்றும் அவளைக் கரம்பிடித்து ஆளப் போகிறவன். 

கொடும்பாளூர் இளவரசன் ‘தென்னவன் இளங்கோவேள்’. அருள்மொழி நங்கையின் முறைமாமன்.

அவனை நேரில் காண  நாணப்பட்டு மாட விளக்கின் திரியினைத் தூண்டுவதுபோல் தன் விழிசுடர்களை அவன் மீது திருப்பினாள்.

கொடும்பாளூர் இளவரசருக்கோ, விளக்கின் சுடர்களுக்கு இடையில் இருந்து வைரச்சுடர் ஒன்று தன்னைத் தீண்டுவது போல இருந்தது. எனினும் அவன் சுடரொளி வீசிய திசையினை நோக்கவில்லை, தான் வந்த காரியத்தில் கருத்தாக நின்று, மாமன்னரிடமும் தன் தந்தையாரிடமும் அவன் கேட்டறிந்த, கண்டறிந்த செய்திகளைப் பகிரத் தொடங்கினான். 

பேச்சு பல திசைகளில் நகர்ந்தது; பாண்டியர்கள், சாளுக்கியர்கள் என இறுதியில் ஈழத்தில் இருக்கும் பாண்டிய மணிமுடியினை மீட்பதில் உரையாடல் வந்து நின்றது.

மாமன்னர் இராஜேந்திரரின் முகத்தில் ஓர் ஏக்கம். மரணிக்கும் தருவாயில் தன் தந்தையார் வாங்கிய வாக்கு அவர் நினைவிற்கு வந்தது. நீண்டதொரு பெருமூச்சிற்குப் பிறகு உரையாடத் தொடங்கினார்.

“எத்தனை போர்கள், எத்தனை உயிர்பலிகள் அந்த ஒரு மணிமுடியினை மீட்க; இருப்பினும் இன்று வரை நம்மால் அந்த காரியத்தில் வெற்றி காண இயலவில்லை”. 

ஒரு நொடி அமைதிக்குப் பின் மன்னரே மீண்டும் தொடங்கினார்; கொடும்பாளூர் இளவரசனை நோக்கி, “இளங்கோ, இம்முறை நீயும் எங்களுடன் ஈழத்திற்கு வருகிறாய்’.

இந்தச் சொற்களைக் செவிமடுத்த மூன்று உள்ளங்கள் பூரிப்பில் மிதந்தன.

 • கொடும்பாளூர் இளவரசனோ, வாழ்வின் பெரும்பேரு கிட்டியது போல் தலைகால் புரியாமல் தன் உள்ளத்தில் ஆனந்தக் கூத்தாடிகொண்டிருந்தான்.
 • கொடும்பாளூர் அரசர் மதுராந்தக வேளார் தன் மகனிற்குக் கிட்டிய பாக்கியத்தினை எண்ணிப் பூரிப்படைந்தார்.
 • மூன்றாவது உள்ளமோ, எந்த ஒரு உணர்வும் சரியாக உணரமுடியாத நிலையில் பூரிப்பிலாழ்ந்திருந்தது. ஆனால், அப்பூரிப்பிலும் ஓர் அச்ச உணர்வு கலந்துவிடும் என அந்த உள்ளம் உணர்ந்திருக்கவில்லை, மதுராந்தக வேளார் கூறிய அவ்வார்தைகளைக் கேட்கும் வரை. 

கொடும்பாளூர் அரசர், மதுராந்தக வேளார் மிகவும் திடமான குரலில் தான் ஈன்றெடுத்த ஒரே மகனை நோக்கி,

“வெற்றி அல்லது வீர மரணம்;

இளங்கோ ஈழத்தில் இருந்து நீ திரும்பாவிட்டாலும் பாண்டிய மணிமுடி திரும்பிடவேண்டும்”. என்றார்.

இச்சொற்களைக் கேட்டு மாமன்னர் ராஜேந்திரரே அதிர்ச்சியுற்று நிற்க, ‘ஆஆ’ என்றொரு அலறல் கேட்டு அனைவரும் திரும்பினர்.

மாமன்னர் ராஜேந்திரர் தன் மகளை நோக்கி “என்ன ஆயிற்று மகளே?” என்றார்

நங்கை, “ஒன்றும் இல்லையப்பா, சுடரில் விரலைச் சுட்டுக் கொண்டேன்” என மறுமொழி கூறினாள். பிறகு அவ்விடத்தில் இருக்க விருப்பமின்றி விரைந்து சென்றாள்.

உண்மையில் அவள் விரலைச் சுட்டிருக்கவில்லை; மதுராந்தக வேளாரின் வார்த்தைகள் தான் அவள் உள்ளத்தை சுட்டுவிட்டது.

குளம்போல அவள் கண்கள் நீரால் நிரம்பியிருந்தன. அருள்மொழி எதற்கும் உணர்ச்சிவயப்படாதவள்; தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த நன்கு அறிந்தவள். இருந்தாலும் கூட, தன் உள்ளத்திற்குரியவரை நோக்கி பாய்ந்த ஆபத்தான அச்சொற்கள் அனைத்தும் அவளை அச்சத்தில் ஆழ்த்தி விட்டன.

கொடும்பாளூர் பெரிய வேளார் மீது கடுங்கோபம் எழுந்தது அவளுக்கு,

‘முதல் முறை போரிற்கு செல்லும் வீரரை இப்படியா வாழ்த்துவது? 

அதிலும் தான் பெற்றெடுத்த ஒரே மகன்; சிறிதும் இங்கீதம் இல்லாதவர் மதுராந்தக வேளார்’ என அவரை மிகவும் கடிந்துகொண்டாள்.

இம்மனநிலையில் அந்தப்புரத்திற்கு செல்ல மனமின்றி கொடும்பாளூர் அரண்மனைப் பூங்காவினை நோக்கி நடந்தாள்; பூங்காவின் மையமண்டபத்தின் தூணில் சாய்ந்தாள்; வானத்து குளிர்ந்த சந்திரனும், மகரந்தத்துகள்கள் நிறைந்த பூங்காவின் காற்றும் ஆறுதல் கூறி அவளைத் தேற்றிக் கொண்டிருந்தனர். 

அல்லிகுளம்

ஈழத்துப் போரில் தானும் பங்கேற்கப் போகிறோம் எனும் நினைப்பு இளங்கோவிற்கு பேரின்பத்தைக் கொடுத்தது. அவன் மனம் சிறுபிள்ளை போல் துள்ளிகொண்டிருந்தது. மகிழ்சியில் அவனது கால்கள் எங்கெங்கொ சென்று கொண்டிருந்தன; இறுதியில் அரண்மனை பூங்காவின் மையமண்டபத்தை வந்தடைந்தான்.

துள்ளலுடன் வந்தவன், பூங்காவின் மையமண்டப தூணில் வடித்திருந்த பொற்சிலையினைக் கண்ணுற்றான். இவ்வளவு அழகிய சிலை! இதை எப்பொழுது வடித்தார்கள் எனக் கூறிக் கொண்டே சிலையருகே சென்றான். 

அருகில் சென்ற பிறகே நிற்பது பொற்சிலை அல்ல, உயிர்சிலை அருள்மொழி நங்கை என தெரிந்து கொண்டான். ஒரு நொடி கண் இமைக்காது அவளை நோக்கியவன்; அவள் தனிமையினைக் கெடுக்க நினைக்காது அங்கிருந்து புறப்பட எத்தனிதான்.

அப்பொழுது, மேன்மாடத்தில் அவள் சுடரில் விரலைச் சுட்டுக்கொண்டது நினைவிற்கு வந்தது.

அவள் கண்களில் படும்படியாக வந்து நின்று, “இளவரசி” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

ஈழத்துப் போரிற்கு செல்லும் இளவரசர் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவள், அக்குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தாள்; மெல்ல எழுந்து, “வாருங்கள்” எனக் கூறினாள்.

இளங்கோ நேரிடையாகவே கேட்டான்: “விரலைச் சுடரில் சுட்டுக் கொண்டீர்களே! இப்பொழுது எப்படி உள்ளது?”

திருடனுக்கு தேள் கொட்டியது போல விழித்தாள். பிறகு சற்றே சுதாரித்துக் கொண்டு “பெரிதாக ஒன்றும் இல்லை; லேசான சூடு, சிறு எரிச்சல்” எனக்கூறி மழுப்பினாள்.

“ஏதேனும் மருந்து இட்டீர்களா?” என்று அடுத்த கேள்வியினைக் கேட்டான் இளங்கோ.

“அப்படியொன்றும் பெரிய காயம் அல்ல” என்றாள் நங்கை.

“சரிதான், நீங்கள் அப்படி எண்ணிவிட்டீர்களா? இப்பொழுது ஒன்றும் தெரியாது, இரவில் உறங்க முடியாத  அளவு எரிச்சல் கூடிவிடும்” என்று கூறி சுற்றும் முற்றும் பார்த்தான்.

வேகமாகச் சென்று அருகில் இருந்த செவ்வாழை மரத்தின் தண்டினைக் கீறி கசக்கி சாறு எடுக்கத் தொடங்கினான்.

அல்லிகுளத்தின் திண்டில் அமர்ந்திருந்த நங்கையின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்; அவள் விரலில் இல்லாத காயத்திற்கு சாறு பிழிந்து மருத்துவம் செய்துகொண்டிருந்தான்.

அருள்மொழி நங்கை ஒரு நிமிடம் சிலிர்த்தாள். செயற்கரிய போர்வீரன்; கொடும்பாளூர் நாட்டினை ஆளவிருக்கும் வருங்கால அரசன்; தன் முன் மண்டியிட்டு தனக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

நங்கைக்கு சிரிப்பு வந்தது, அடக்கிக்கொண்டாள், தனக்குக் கிடைத்த இந்த பெரும்பாக்கியத்தை எண்ணி மனதிற்குள் பூரிப்படைந்தாள் கொண்டாள்.

பிறகு அங்கிருந்து புறப்படும் வண்ணம், “நீங்கள் இங்கு வர ஏதும் காரணம் இருக்கும், நான் புறப்படுகிறேன்” எனக் கூறினாள்.

இளங்கோ அதற்கு “இல்லை இளவரசியாரே, தாங்கள் இருங்கள், நானும் என் உள்ளப் பூரிப்பினை உங்களிடம் பகிர்ந்திட விரும்புகிறேன்” என்றுக் கூறினான்.

“என்ன பூரிப்பு”, என்றாள் நங்கை.

“ஈழத்து போரில் நானும் பங்குபெறும் பாக்கியம் கிட்டியிருக்கிறதல்லவா! என்று கூறி குதூகலித்தான்”. நங்கையின் முகம் வாடியது; அவன் அதை கவனிக்கவில்லை.

“நீங்கள் ஈழப் போரில் பங்குபெறுவது பெருமகிழ்ச்சிக்குரிய காரியம் தான், இருப்பினும், காரியத்திலும், சிந்தையிலும் கவனம் வேண்டும் இளவரசே” என்று வாய்மொழிந்தாள் நங்கை.

“கவனமா! நிச்சயம் என் கவனம் பாண்டிய மணிமுடியினை மீட்பதில்தான் இருக்கும் என சூலுரைத்தான்” அந்த வீரன். 

பின்பு தன் தந்தை பெரிய வேளார் கூறியதை நினைவு படுத்துவது போல், 

“நான் திரும்பாவிட்டாலும் பாண்டிய மணிமுடி திரும்பும், 

வெற்றி அல்லது வீர மரணம் “என்று முழங்கினான்.

போதும் நிறுத்துங்கள் இளவரசே” 

என்று பொங்கினாள் அருள்மொழி நங்கை. 

“இதுவா வீரத்தின் இலக்கணம்?” என்று வினவினாள்.

இளங்கோ நகைத்துக் கொண்டே,” ஏன் இல்லையா? மாமன்னர் இராஜேந்திரரின் மகளுக்கா இப்படியொரு ஐயம். தங்கள் தந்தையும் இதைப் போன்றொரு வீரர் தானே” என்றான்.

“எது இலக்கணம்? வீரத்தை மட்டுமே எண்ணி முழங்குவதா? அப்படி எண்ணியிருந்தால், பெரும்பான்மையான வீரர்கள் ஒரு போர்களத்திற்கு மேல் தன் வாழ்நாளில் கண்டிருக்க இயலாது.  வீரத்தை மட்டுமே கொண்டு செயல் பட்டு எவரும் சாதித்திடவில்லை. வீரமும் விவேகமும் சேர்ந்ததுவே உண்மை வீரத்தின் இலக்கணம்”.

ஒவ்வொரு முறையும் வெற்றியோடு திரும்புவேன் எனும் நம்பிக்கை, போர்களம் புகும் வீரருக்கோ அல்லது மன்னருக்கோ மட்டுமே உரித்தானது அல்ல.  அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குடிமக்களுக்கும் நம்பிக்கையினை விதைக்கிறது என்பததனை நீங்கள் அறிவீர்களா இளவரசே? என்றாள்.

இளங்கோவிற்கு தம் முன் பேசிக் கொண்டிருப்பது சோழ நாட்டு இளவரசி தானா? என்ற ஐயம் எழுந்தது. தான் வணங்கும் தாய் தெய்வமே தன் முன் தோன்றி, தனது மூர்க்கத்தனமான வீரத்தினைக் கட்டுபடுத்தி, அறிவுடன் சிந்தித்து வீரத்துடன் செயல் படு என அறிவுரைக் கூறிவது போல் அவனுக்குத் தோன்றியது. அவனையறியாது இருகரம் கூப்பி அவளை வணங்க எண்னினான்.

அவளை நோக்கி “நான் ஈழப் போரிற்கு செல்கிறேன் என்பதால் தாங்கள் அக்கறை கொள்கிறீர்கள்” என்றான்.

நங்கை தடுமாற்றத்துடன், “அப்படி அல்ல, சோழ நாட்டின் ஒவ்வொரு வீரரும் நம் சொத்து, அவர்களின் மேல் அக்கறைக்கொள்வது நம் கடமை எனக்கூறினாள்”.

இளங்கோவின் மேல் அவள் கொண்டிருந்த பற்று சிறிதும் வெளிப்பட்டுவிடகூடாதென்பதில் மிகக் கவனமாக இருந்தாள். தன் உள்ள எண்ணங்களை திரையிட்டு மறைத்தாள்.

நேரம் ஆகிறது, நான் புறப்படுகிறேன் என இளங்கோவிடம் விடைபெற்று தன் அறை நோக்கி நடந்தாள். அவள் உள்ளம் கனத்திருந்தது, எனினும் ஒரு வித நிறைவினைக் கண்டிருந்தது.

வெற்றித் திலகம்

தஞ்சை மாநகர் பரபரப்புடன் காட்சியளித்தது. கலகலக்கும் போர் கருவிகளின் ஓசையும், வீரர்களின் அணிவகுப்புமாக மிகவேகமாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தது. மந்திராலோசனைகள் நடந்துகொண்டிருந்தன. ஈழப் போரிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வீரர்கள் தத்தம் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பிரியா விடைபெற்றுக்கொண்டிருந்தனர்.

மாமன்னர் இராஜேந்திரரும், வல்லவரையர் வந்தியத்தேவரும் தஞ்சை மாளிகையில் தத்தம் தலைவிகளிடம் விடைபெற்றுக் கொண்டிருந்தனர். கொடும்பாளூர் இளவவரசரும் தன் அத்தை, தாய், பாட்டியாரிடம் ஆசிப் பெற்றுக் கொண்டிருந்தார். அவர் கண்கள் மட்டும் அவளைத் தேடிக் கொண்டிருந்தன. 

ஆம்!  அன்றிரவு கொடும்பாளூர் பூங்காவில் தன் தாய்தெய்வத்தின் உருவாகத் தோன்றி அறிவுரைக் கூறிய அவளை, அவன் கண்கள் தேடிக் கொண்டிருந்தன.

இனி அவள் தென்படமாட்டாள் என அவன் எண்ணியபொழுது, கூட்டத்தில் இருந்து ஆலம் தட்டுடன் அவள் தோன்றினாள். வீரத்தின் உருவான கொற்றவையே ஆலம் தட்டுடன் வருவது போல தோன்றியது அவனுக்கு. விஜயாலயர் வணங்கிய நிசும்பசூதனி, அகண்ட நீலமான தன் கண் மலரினை இவளுக்கு பொறுத்தி விட்டாளோ! என்ன ஒரு ஆழமான அகண்ட வீரம் பொருந்திய விழிகள்!

கூட்டத்தில் இருந்து வெளிவந்த நங்கை, ஒவ்வொருவராக திலகம் இட்டு வந்தாள். கொடும்பாளூர் இளவரசருக்கு திலகமிட வந்தவள், ஒரு நொடி அவனை ஆழ்ந்து நோக்கினாள்; தான் கூறியது நினைவில் இருக்கிறதா என்று கேட்கும்படியான பார்வை; 

அவனோ, அவ்விழிகளை நோக்கும் சக்தியற்றவனாய் ஆலம் தட்டினையே நோக்கிகொண்டிருந்தான். என்ன ஒரு அதிசயம்! அவன் எதிர்கொள்ள பயந்த விழிகள், அலம் நீரில் கோலமிட்டுக் கொண்டிருந்தன; 

ஆலம் நீரில் தெரிந்த நங்கையின் திருமுகம் கொற்றவையின் வெற்றிமுகம் போன்று அவன் சிந்தையில் பதிந்தது. வீர உணர்ச்சி அவனுள் பொங்கிக் கொண்டிருந்தது; அச்சூழலில் நங்கை அவனுக்கு திலகமிட; அவள் விரல் தன் நெற்றியில் பட்ட நொடிப் பொழுதில் உணர்ச்சிப் பெருக்கில்

 “வெற்றி பெருவோம் “ என்று முழங்கினான். 

அவையே அம்முழக்கம் கேட்டு அதிர்ந்தது; அவனை அனைவரும் நோக்கினர், தான் உணர்ச்சி வயப்பட்டதனை உணர்ந்து வேகமாக அங்கிருந்து புறப்பட்டான். அவன் வேகத்தினை சற்றே குறைப்பதுபோல் அவன் எதிரில் தோன்றினாள் அருள்மொழி.

“வெற்றியுடன் திரும்பி வாருங்கள் இளவரசே! 

(வெற்றிகொண்ட விழுப்புண் நிறைந்த உங்கள் கரத்தினைப் பற்ற நான் காத்திருக்கிறேன்).

முதல் வரி மட்டும் அவன் செவி படும்படி கூறி மற்றவைகளைத் தனக்குள் கூறிக்கொண்டாள்.

பருவப் பெண்களுக்கே உரிய மன உணர்வுகளைக் கொண்டவள் அல்ல நங்கை. இருந்த போதிலும் சிறுவயது முதலே தனக்கானவன் என்று அவள் எண்ணிக் கொண்டிருந்த தன் தலைவனை முதல் முதல் போரிற்கு அனுப்பும் இந்த மாற்றத்திற்கு அவள் மனம் பழகி இருக்கவில்லை. 

வெற்றியுடன் திரும்புங்கள் என அவள் வழியனுப்பி வைத்தவன் பாண்டிய மணிமுடியினை மீட்டு நிச்சயம் திரும்புவான் என பெரு நம்பிக்கைக் கொண்டிருந்தாள். 

ஆனால் மணிமுடியுடன் அவன் உள்ளம் கவர்ந்த பரிசு ஒன்றையும் கொண்டு வருவான் என அவள் அறிந்திருக்கவில்லை; அந்தப் பரிசு இவள் கனவுக்கோட்டையை சுக்கல் சுக்கலாக நொறுக்கி உடைக்கப்போகிறது என்பதை அவள் தெரிந்திருக்கவில்லை; தன் தலைவனின் சிந்தையில் தான் தலைவியாக வீற்றிருக்கவில்லை என்பதயும் அவள் அறிந்திருக்கவில்லை.

கலக்கம்

ஈழத்திற்கு சோழப்படை சென்ற நாளில் இருந்து, தஞ்சைக்கு ஈழப்போர் தொடர்பாக வரும் ஒவ்வொரு தகவலையும் அருள்மொழி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் ஆபத்துகள் இல்லாத தகவல்களாகவே இருந்தன.

 சோழப் படை ஈழத்தை வெற்றிகொண்ட தகவல் அவளுக்கு பெரும் ஆறுதல் அளித்தது. இருப்பினும் பாண்டிய மணிமுடி இன்னும் மீட்கப்படவில்லை என்ற தகவல் அவளை கவலையுற செய்தது. பேராபத்துக்களை சோழப் படை கடந்துவிட்டது என்ற நினைப்பில் அவள் உள்ளம் சிறிது அமைதி கண்டது.

போர் முடியும் வரை உறக்கமின்றி தவித்தவள்; அன்று அசதியில் பகலிலேயே மஞ்சத்தில் சாய்ந்தாள். உறக்கம் அவள் கண்களைத் தழுவியது.  கண் அயர்ந்து உறங்கியவள்; சிறிது நேரத்தில் ‘ஆஆ’ என்று அலறிக் கொண்டே எழுந்தாள். 

அவள் முகம் முழுதும் வியர்வைத்துளிகள்; சுரம் வந்தது போல அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தான் கண்டது கனா என்று உணரவும்; அதில் இருந்து மீண்டு வரவும் அவளுக்கு பல மணினேரம் எடுத்தது.

ஆம்! கொடும்பாளூர் இளவரசர் ரோகணத்து காடுகளில் பேராபத்தில் சிக்கியது போல் கனா கண்டு பதறியடித்து உறக்கம் கலைந்து எழுந்தாள்.

இதென்ன ஆச்சரியம்! அவள் கனா கண்டு பயந்தெழுந்த அதே வேலையில், ரோகண மலைக் காடுகளில் பாண்டிய மணிமுடியினை மீட்ட இளவரசர்  இளங்கோ, குதிரையில் முடியுடன் மாமன்னர் இராஜேந்திரரைக் காண கப்பகல்லகம் திரும்பிக் கொண்டிருந்த பொழுது, தொலைவில் இருந்து வீசப்பட்ட எதிரியின் கூரிய வேலினை தன் தோள் பட்டையில் ஏந்தி சுருண்டு கீழே விழுந்தான்.

 

வழி மீது விழி

 

முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்

கண்டனம் வருகஞ்ச் சென்மோ தொழி

எல்லூர்ச் கேர்தரும் ஏறுடை யினத்துப்

புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ

செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு

வல்வில் இளையர் பகக்ம் போற்ற

ஈர்மணற் காட்டாறு வரூஉம்

தேர்மணி கொல்லான் டியம்பிய வுளவே

குறுந்தொகை – பாடல் 275

 

தலைவனின் வருகையினை எதிர்நோக்கும் தலைவி; எங்கோ கேட்க்கும் மணியோசையினைக் கேட்டு, மாலை நேரத்தில் புல்லை உண்டு வீடு திரும்பும் பசுக்களின் மணியோசையோ? அல்லது எடுத்தக் காரியத்தினை நிறைவாக முடித்து வீடு திரும்பும் தன் தலைவனின் தேர் மணியோசையோ? என்று கண்டு திரும்புவோம் வா! என தன் தோழியினை துணைக்கு அழைத்தாளாம்.

அருள்மொழியின் நிலையும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. ஈழப்போர் முடிந்து; பாண்டிய மணிமுடியும் மீட்டாகியது என்ற செய்தி கிடைத்ததும், சோழ நாட்டு வீரர்களின் வருகையை; குறிப்பாக தன் தன் தலைவன் இளங்கோவின் வருகையை வழி மீது விழி வைத்து எதிர்நோக்கியிருந்தாள்.

அந்த நாளும் வந்தது. சோழ நாட்டு கப்பல்கள் தமிழகத்தில் கரை தட்டின. துறைமுகத்தில் நிகழ்ந்த கோலாகல வரவேற்பினைக் கேட்டறிந்தாள்.  கூடவே ரோகண நாட்டு இளவரசி பற்றிய செய்தியும் அவள் காதுகளுக்கு எட்டியது.

இளைய சகோதரி

போர் முடிந்து தஞ்சை மாளிகைக்கு வந்த மாமன்னர் இராஜேந்திரர், தன்னுடன் அழைத்து வந்த மகிந்தரின் மகள் ரோகிணியை அருள்மொழி நங்கைக்கும், அம்மைங்கை தேவிக்கும் அறிமுகப்படுத்தினார். நங்கை இன்று முதல் தனக்கு மற்றொரு தங்கையாக ரோகிணியும் இருப்பாள் என்று எண்ணினாள்.

வெற்றி வாகை

சூறாவளிக் காற்றில் பாறைகளின் மீது மோதும் அலைகளின் ஓசை போல தஞ்சையில் திரண்டிருந்த மக்களின் ஓசை காதுகளைப் பிழந்தது. 

இடியுடன் முழங்கும் மேகங்களைப் போல யானையின் பிளிரலும், பேரிகை முழக்கமும், உடுக்கை ஒலியும் தஞ்சை திக்கெங்கும் அதிர்ந்தது. 

பட்டும் பொன்னாபரணமும் பூட்டிய பட்டத்து யானைகளின் மேல் அலங்கரிக்கப்பட்ட பாண்டிய மணிமுடியும், மாமன்னர் இராஜேந்திரரும், அவருக்கு அருகில் கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவேளும் பவனி வந்தனர்.

தஞ்சை மாளிகையின் மாடத்தில் இருந்து அரச மகளிர் மலர்கள் தூவி அவர்களை வாழ்த்தினர். மகிந்தரின் மகள் ரோகிணியும் அவர்களுடன் சேர்ந்து மலர்தூவி வாழ்த்துவதைக் கண்டு நங்கை மனம் மகிழ்ந்தாள். 

பாவம்! அவளுக்கு எப்படித் தெரியும்? ரோகிணி தூவிய மலர்கள் சோழர் கொண்ட போர் வெற்றிக்காக அல்ல; மாறாக தன் வீரத்தலைவன் ஈழத்துப் பைங்கிளியைக் கொண்ட காதல் வெற்றிக்காக என்று.

பவணி முடிந்து தஞ்சை மாநகரே வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் லயித்துக் கொண்டிருந்தது. இளங்கோவோ அரன்மனை மூத்த மகளிரிடமும் அம்மங்கையிடமும் மாட்டிக் கொண்டு, அன்பு உபசரிப்புகளிலும், கேலிப் பேச்சுகளிலும் தவித்துக் கொண்டிருந்தான்.

தற்செயலாக அங்கு வந்த அருள் மொழியினைக் கண்ட இளங்கோ, சிரித்துக் கொண்டே அவளை நோக்கி, 

“பார்த்தீர்களா இளவரசி! நீங்கள் அன்று என் நெற்றியில் இட்ட திலகம் இன்றும் என் தோள்பட்டையில் அழியாமல் இருக்கிறது” என்று கூறினான். 

அந்த சொற்கள், அவள் இதயத்திலே வேல் இறக்கியது போல் இருந்தது. அவள் அந்த சொற்களின் வலியினை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

 “சற்று கவனம் கொண்டிருக்கக் கூடாதா இளவரசே?” என்று மென்மையாக மறுமொழி கூறினாள்.

அத்தருனத்திலும், அன்று நாம் இட்ட திலகத்தை இன்றும் இளவரசர் நினைவில் வைத்துள்ளாரே என்றெண்ணி சிலிர்த்தாள். அவள் உள்ளத்தில் நம்பிக்கை மேலும் ஆழமாக வேரூன்றியது.

தலைவனின் காதலி

அருள்மொழி; சிறு வயதிலிருந்தே அமைதியான பிள்ளை. அரச குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை என்பதாலோ என்னவோ அவள் பேச்சிலும் செயலிலும் எப்பொழுதும் நிதானம் இருக்கும். பேரரசரின் மகளாகப் பிறந்ததை எண்ணி அவள் பெருமிதம் கொண்டாலும், சில நேரங்களில் இளவரசியாகப் பிறந்ததை எண்ணி வருந்தவும் செய்திருக்கிராள். 

குறிப்பாக போரிற்கு சென்ற தன் தந்தையைப் பிரிந்து வாடும் நாட்களிலும்; தன் உள்ள எண்ணங்களை அனைவரையும் போல வெளிப்படுத்த முடியாத நாட்களிலும் அவள் இளவரசியாகப் பிறந்ததை எண்ணி வருந்தியுள்ளாள்; அப்பொழுதெல்லாம் அவளுக்கு தோழியாக; உற்ற துனையாக அவள் எண்ணங்கள் அனைத்தையும் கேட்டுகொண்டு ஆறுதல் அளிப்பது, அரன்மையின் மாடத்துப் புறாக்கள்.

இளவரசர் இளங்கோவினை நங்கை தன் தலைவனாக பெதும்பை காலம் முதல் பாவித்து உருகிக்கொண்டிருப்பதை அப்புறாக்கள் மட்டுமே அறியும்; ஈழத்திற்கு போர் புரிய செல்லும் இளங்கோவுடன் கடல் கடந்து பறவை போல இவள் உள்ளம் பறந்துபோனதையும் அவைகள் அறியும். 

அருள்மொழி மனிதர்களிடம் வாய்திறவாத அத்தனை உணர்வுகளையும் அப்புறாகளுடன் வாய் மொழிந்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் தன்னை சங்க இலக்கிய தலைவியாக நினைத்து தன் தலைவன் இளங்கோவிடம் தூது செல்லுமாறு தன் தோழிப் புறாக்களை கூறியிருக்கிறாள்; ஆனால் அவளே ஒரு நாள் தன் தலைவனின் காதலிக்காக அவனிடம் தூது செல்லும் தோழியாக மாறும் நிலை வரும் என கற்பனையிலும் எண்ணியதில்லை.

எவ்வளவு காலம் ஆனாலும்; தனக்கே உரித்தானது என்று அவள் ஆழமாக நம்பிக்கொண்டிருந்தது இளங்கோவின் அன்பு; அதனைப் பங்குபோடும் மனநிலை அவளுக்கு அறவே கிடையாது. அந்த அன்பின் மேல் அவளுக்கு ஐயம் எழுந்ததும் இல்லை; தஞ்சை நிலவரை சிறையில் இளங்கோ அடைபட்ட நாழிகையில் ரோகிணியை அவர் காணசென்றது தான் காரணம் என்று அவள் அறியும் வரை. 

கொடும்பளூர் இளவரசர் சிறைபட்டுக் கிடப்பதைக் கண்டு ஒருபுறம் அவள் கலக்கமுற்றாலும் மறுபுறம் ரோகிணிக்கும் இளங்கோவிற்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கக்கூடாது என்று அவள் மனம் பதைத்துக் கொண்டிருந்தது.

தஞ்சையில் உள்ள மகிந்தரின் மாளிகையில் அடிபட்டுக் கிடந்த ரோகிணியைக் காண விரைந்து சென்றாள்; ரோகிணியோ அவளைக் கண்டவுடன் கேட்ட முதல் கேள்வி, கொடும்பாளூர் இளவரசர் எங்கே? என்பதுதான். அருள்மொழிக்கு மூச்சுத் திணறியது; தன்னை திடப்படுத்திக் கொண்டு ரோகிணியின் நலம் வினவினாள், இளங்கோவினைக் காண ரோகணத்து இளவரசி கொண்ட தவிப்பு அருள்மொழியினை வாட்டியது; அவள் முக வாட்டத்தைக் கவனிக்காது ரோகிணிப் பேசத் தொடங்கினள். 

ஈழத்திற்கு இளங்கோ தூதுவனாக வந்த நாள் முதல் நாகை வரைப் படிப்படியாக எப்படி அவர்கள் காதல் மலர்ந்தது என்று ஒவ்வொன்றாக விவரித்தாள்; அருள்மொழிக்கோ, காதுகள் இரண்டும் அடைத்துக்கொண்டு நாசிக்குள் காற்று புகாமல் நெஞ்சம் அடைத்துக் கொள்வது போல கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. 

அப்பொழுதும் அவள் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை, சராசரி மங்கையைப்போல் குமுறி அழுதிடவில்லை; பருவம் அறிந்த நாள் முதல் தன் இதயத்தில் குடிகொண்டிருக்கும் தலைவைனைப் பறித்துவிட்டாள் என்று ரோகணத்து இளவரசியைப் பழித்திட வில்லை, மாறாக மௌனமாக அனைத்தையும் காதுகொடுத்துக் கேட்டாள். 

இளங்கோவிற்கும் ரோகிணிக்கும் இடையே உள்ள சிறு ஊடல் நீங்க, தான் முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். கொடும்பாளூர் இளவரசருடன் அவளை சேர்த்து வைப்பதாக உறுதிகூறி அங்கிருந்து புறப்பட்டாள். 

நங்கையின் கண்கள் குளமாகின; கால்கள் தரையில் பதியவில்லை; கால்களை நன்கு தரையில் அழுத்தி பதிந்து நடந்தாள், அவள் அழுத்திய வேகத்தில் அவளது கால்கொலுசுகளில் இருந்து முத்துக்கள் உதிர்ந்தன; அவைகளுடன் சேர்ந்து விவரம் அறிந்த நாள் முதல் தன் தலைவனாக அவளுள் வாழ்ந்துகொண்டிருந்த இளங்கோவின் நினைவுகளும் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. 

கண்களின் மொழி

தஞ்சை நிலவரை சிறையில் அடைபட்டுக் கிடந்த இளங்கோவினை காண உடல் பலமற்ற நிலையில் இருந்த ரோகிணியைத் தாங்கிச் சுமந்து வந்தாள், இருவருக்கும் இருக்கும் ஊடல் கலைய; இருவர் தரப்பு நியாயத்தினையும் பேசினாள். 

மறுநாள் கொடும்பாளூர் இளவரசர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அரண்மனையில் அவருக்கு அருமையான விருந்து படைத்துகொண்டிருந்தாள், அவள் இளங்கோவை விழுந்து விழுந்து கவனிப்பதைக் கண்ட வேங்கி நாட்டு இளவரசர் நரேந்திரர், இளங்கோவிற்காக நங்கையின் கண்கள் பேசிய காதல் மொழியினைக் கண்டு வியப்புற்றார். 

விருந்து முடிந்ததும் நங்கை இளங்கோவிடம் ரோகிணியைக் கண்டு வருமாறு வேண்டினாள், இளங்கோவும் புறப்படுச் சென்றான்.

ரோகிணியைச் சந்தித்து சிறிது நேரம் கழித்து அரண்மனைக்குத் திரும்பிய இளங்கோ, அங்கே அருள்மொழியும் வேங்கி நாட்டு இளவரசர் நரேந்திரரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். நங்கை தன் தங்கை அம்மைங்கை நரேந்திரன் மீது கொண்டிருக்கும் காதலினை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிக்கொண்டிருந்தாள். 

“நீங்கள் அரண்மனைக்கு வந்த நாள் முதல் அம்மங்கை அவரையே சுற்றி வருவதை எவ்வாறு கண்ணுற தவறினீர்கள்” என்று நரேந்திரனிடம் வினவினாள். 

நரேந்திரர் கூறிய மறு மொழி  அவளை ஒரு நொடித் தடுமாறச் செய்தது.

 “கொடும்பாளூர்க்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்; இளவரசர் இளங்கோவின் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பு, உங்கள் கண்களில் வெளிப்படுகிறது; ஏனோ, என்னைப் போல அவரும் அதைக் கண்டுணரத் தவறிவிட்டார்” என்று பதில் உரைத்தார். 

தொலைவில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த இளங்கோவிற்கு தன் தலையில் பேரிடி இறங்கியது போல் இருந்தது. 

அருள்மொழி உடனே நரேந்திரனின் கூற்றினை மறுத்தாள். நரேந்திரனோ, அம்மங்கைக்காக இவள் தூது வந்ததைப் போல் இவளுக்காக இளங்கோவிடம் தூது செல்கிறேன் என்று கூறினான். 

அறுள்மொழி உடனே தடுத்து இதனால் தனக்கு எந்த நன்மையும் பிறக்காது, தயவு செய்து இந்த எண்ணத்தினை விட்டுவிடுங்கள் என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்றாள். 

இந்த உரையாடல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த இளங்கோவிற்கு தலை கிரங்கியது. கால் போன போக்கில் நடந்தான்; இறுதியில் அரண்மனை உப்பரிகையில் வந்து நின்றான். 

அவன் எண்ணங்கள், கொடும்பாளூர் அரன்மனைப் பூங்கா; வெற்றித் திலகம்; பழையாரை அரண்மனை; நிலவரை சிறை என எங்கெங்கோ தாவி குதித்து ஓடின. 

தலையில் கைவைத்து அமர்ந்தான். ஒவ்வொன்றாக அவனுக்கு விளங்கத் தொடங்கியது.

கொடும்பாளூர்ப் பூங்காவில் தன் மீது அக்கறைக்கொண்டு பரிந்து பேசியது; மெய்சிலிர்க்கும் வெற்றிதிலகம் சூட்டியது; ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’ என வாழ்த்தியது, அடடா! தான் திரும்பி வரவேண்டும் என்று எவ்வளவு எதிர்பார்ப்பு அவளுக்கு. 

ஈழத்துப் போரில் ஒவ்வொருமுறை துன்பங்களைச் சந்தித்த போதெல்லாம் அருள்மொழியின் எண்ணங்கள் தானே அவனை மீட்டு வெற்றியினை நோக்கி ஓட வைத்தது; அவ்வளவு ஏன்? ஈழத்தில் ரோகிணியின் மேல் காதல் வயப்பட்டபொழுது கூட அவன் கண்களுக்கு ஒரு வினாடி ரோகிணி அருள்மொழி நங்கையாகத் தானே தோன்றினாள். 

அதையும் தாண்டி ரோகணத்து மலைகளில் மரணத்தைத் தழுவி நின்ற போதும் கூட அவன் மனம் நங்கையைத் தானே நாடியது. அவன் கண்கள் கலங்கின, பழையாரை அரண்மனையில் தனக்காக கைவலிக்க மூலிகை அரைத்தவள்; தஞ்சை நிலவரை சிறையில் தன் தந்தை பெரிய வேளார் தன்னை அடைக்க எண்ணியபோது தனக்காக வாதாடி தோற்று போய் சிறை வாசலில் மயங்கி விழுந்த அவள்; அருள்மொழி நங்கை; சிறிது சிறிதாக அவனுடைய தெய்வ உருவில் இருந்து இறங்கி; உயிரும் உணர்வும் கொண்ட மனித உரு பெற்றாள். 

அவன் கண்கள் சிவந்தன; அவளது புனிதமான அன்பினைப் புரிந்துகொள்ளாமல் பக்தி எனும் பெயரில் இரண்டாம் தரம் ஆக்கிவிட்டதை எண்ணி அவன் மீது அவனுக்கே சினம் பெறுகியது, மிகுந்த குழப்பத்துடன் மெல்ல உப்பரிகையில் சாய்ந்தான்; நிலவொலியில் ஓர் சாளரம் தெரிந்தது, அதனுள் நோக்கியவனிற்கு அறையினுள் விளக்கு வெளிக்சத்தில் அருள்மொழி தெரிந்தாள். 

தன் கூந்தலின் அலங்கார நகைகளைக் கலைந்து கூந்தலை அவிழ்த்தாள்; விரித்த கூந்தலுடன் மஞ்சத்தில் சாய்ந்தாள். விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது, அப்படியே அயர்ந்து போய் உறங்கினாள்.

கொடிச்சி கூந்தல் போலத்

தோகை அம்சிறை விரிக்கும்

பெருங்கல் வெற்பன்

ஐங்குறுநூறு

உப்பரிகயில் இருந்து இதைக்கண்டவன், குறிஞ்சி நிலப் பெண்களின் கூந்தல் விரிவதைப் போல் தோகை விரித்தாடும் மயில் ஒன்று தன் தோகையை விரித்து மஞ்சத்தில் சாய்ந்ததாகக் கருதினான். 

அதில் ஒரு வேறுபாடு உண்டு, குறிஞ்சி மயில்கள் தோகை விரித்து ஆனந்தத்தில் கூத்தாடும், மஞ்சத்தில் வீழ்ந்த மயிலோ தன் கூந்தல் தோகையினை விரித்து மஞ்சத்தில் கிடந்து குலுங்கி குலுங்கி அழுதது. அருள்மொழி நங்கையை இந்நிலையில் கண்டிராத அவன் உள்ளம் நெருப்பில் விழுந்ததுபோல் துடித்தது.

விடுதலை

நாட்கள் நகர்ந்தன, சோழ சாம்ராஜியத்தில் பல நிகழ்வுகள் நடந்தன; அருள்மொழி தன் முழு கவனத்தையும் சோழ நாட்டின் வளர்ச்சியில் திருப்பினாள். 

தன் மனம் எதையும் சிந்திக்கக் கூடாது என்றென்னி ஓயாது ஏதாவதொரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளம் ஒரு நிலையில் இல்லை. தனக்காக வாழாமல் பிறருக்காகவே தன் வாழ்க்கை கழிந்துவிட்டதோ என்று ஐயமுற்றாள். 

கூடிய விரைவில் தன் வாழ்க்கையைப் பற்றியும் முடிவு எடுக்க வேண்டும் என்று பல நாட்கள் சிந்தித்து நல்லதொரு முடிவையும் எடுத்தாள். மண உறவில் அவள் உள்ளம் செல்லவில்லை. தன் தாய் திருநாட்டில் எத்தனையோ பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சோழ நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றியும் இறைத்தொண்டாற்றியும் தங்கள் வாழ்வை வாழ்ந்துள்ளனர், அவர்களைப் போல தாமும் வாழ்ந்து தம் காலத்தினை கழித்துவிட வேண்டும் என முடிவு செய்தாள். 

ஒரு நல்ல நாளில் தந்தையிடம் இதைபற்றி பேசவேண்டும் என முடிவு செய்தாள். அதேபோல் தன் தங்கைகள் ரோகிணி மற்றும் அம்மைங்கையின் திருமணத்தைப் பற்றியும் தந்தையிடம் பேச வேண்டும் என எண்ணியிருந்தாள். 

அவள் நினைத்தது அவள் தந்தையாருக்குத் தெரிந்துவிட்டது போலும். மாமன்னர் ராஜேந்திரர் தன் மூத்த மகள் அருள்மொழியினை காண வந்திருந்தார்; அவள் திருமணத்தைப் பற்றி பேசும் முடிவில் இருந்தார். 

இளங்கோவின் மீது தம் மகள் கொண்டிருந்த பற்றுதலை அவர் ஒருவாறு அறிந்திருந்தார் ஆகையால் வந்த காரியம் எளிதில் முடிந்துவிடும் என்று நினைத்தார். அருள்மொழியிடம் கொடும்பாளூர் இளவரசருக்கு அவளை மணம் முடித்துக் கொடுக்க எண்ணியிருப்பதாகக் கூறினார். நங்கை திடமாக மறுத்துவிட்டாள், மாறாக இளங்கோவிற்கும் ரோகிணிக்கும் திருமணம் செய்து வைக்குமாறு வாதிட்டாள். 

இராஜேந்திரரோ அரசகுல தர்மத்தின்படி இரு இளவரசிகளையும் இளங்கோவிற்கு மணமுடித்து வைப்பதாகக் கூறினார். நங்கை சிறிதும் யோசிக்காமல் மறுத்துவிட்டாள். 

கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவின் மீது அவள் கொண்ட அன்பினைத் தியாகம் செய்யத் துணிந்தவளுக்கு அந்த அன்பினை மற்றொரு மங்கையுடன் பங்கிட  மனம் வரவில்லை. 

வேறு வழியின்றி மாமன்னர் இராஜேந்திரர் வல்லவரையரின் உதவியை நாடினார். வல்லவரையர் இளங்கோவின் வாழ்வில் நங்கையின் பங்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்று விளக்கினார். அதையும் தாண்டி கொடும்பாளூர் நாட்டுடன் நடக்கும் இத்திருமண பந்தம் சோழ நாட்டிற்கு எவ்வாறு வலு சேர்க்கும் என்பதனையும் விளக்கினார். 

நங்கையின் கண்கள் கலங்கின; நினைவு தெரிந்த நாள் முதலாக ஆசை ஆசையாய் அவள் உள்ளத்தில் வளர்த்து வந்த அன்பு இன்று அரசியல் பகடையாப்போகிறதை அவள் புரிந்துகொண்டாள். மாபெரும் அரசரும் மதி மிகுந்த சாமந்தக் காரரும் தன் அன்பிற்கு அரசகுல தர்மம் என்றொரு சாயம் பூசி புது உருவம் கொடுக்கப் போகின்றனர் என்று அறிந்துகொண்டாள். 

இனி அவளால் மறுப்பு பேச முடியாது; பேசி பலனும் இல்லை. தன் உற்றத்தாரிற்காக எவ்வளவோ தியாகஙள் செய்தாகியது, தன்னை வளர்த்த சோழ நாடும் அவளிடம் ஒரு தியாகம் கேட்கிறது, அதையும் செய்து முடிப்போம் என்று முடிவு செய்து கொடும்பாளூர் இளவரசரை மணக்க சம்மதித்தாள்.

அரசகுல தர்மம்

 சோழ வள நாட்டில் பல நிகழ்வுகள், போராட்டங்கள், சூழ்ச்சிகளுக்குப் பிறகு அந்த நன்னாள் வந்தது. கங்கையும், கடாராமும், ஈழமும், பூர்வதேசமும் கொண்ட மாமன்னர் ராஜேந்திரரின் மூத்தப் புதல்வி, அருள்மொழி நங்கை; ஈழப்பைங்கிளி இளவரசி ரோகிணி மற்றும் கொடும்பாளூர் நாட்டு இளவரசர் இளங்கோவின் திருமண வைபவம்.

தஞ்சை தரணியே மாவிலைகளாலும், மலர் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சோழ நாட்டு நலம் விரும்பிகள் அனைவரும் ஒன்று திரண்டிருந்தனர்.  அரச குடி மக்களும், பெருங்குடி மக்களும், உற்றார் உறவினர்கள், சோழ நாட்டு மக்கள் சூழ மண மண்டபம் நிரம்பி வழிந்தது. கொடும்பாளூரில் கோலோச்சக் காத்திருக்கும் புலியைப் போல் மணமகன் மண்டபத்தில் காத்திருக்க; மங்கைகள் இருவரும் பொன்னால் செதுக்கிய சிலைபோல் மண்டபத்திற்கு வந்தனர். 

தன் காதல் தலைவி ரோகிணியைக் கண்ட இளங்கோவின் முகம் மலர்ந்தது. அவள் அழகில் மெய்மறந்து நின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கினர். பல போராட்டங்களுக்குப் பிறகு, தாங்கள் விரும்பிய வாழ்க்கை கிட்டிய மகிழ்ச்சியினை அவர்கள் கண்கள் பரிமாறிக்கொண்டன. இருவரின் முகத்திலும் ஆனந்தம் கூத்தாடியது.

ரோகிணியின் அருகில் யானைத் தந்த நிறப் பட்டாடையில் பொன் நகைப் பூட்டி அண்ணம் போல் தலைகவிழ்க்ந்து நடந்து வரும் பெண்ணைக் கண்டான். இளங்கோவின் மேனி சிலிர்த்தது; பயபக்தியோடு இதுவரை அவன் கண்டிருந்த மங்கையை இன்றுதான் முதன் முறையாக அவன் விழிகள் அன்போடு காண்கின்றன.  

குறிஞ்சி நில மயிலின் தோகைக் கொண்ட வெண்தோகை மயிலாள் அவனை ஒரு நொடி ஏறிட்டு நோக்கினாள். அதே அமைதிபொருந்திய அகண்ட சலனமற்ற விழிகள்; ஆனால் இம்முறை இளங்கோ அவ்விழிகளில் ஆயிரம் ஆயிரம் ரோகிணிகளின் அன்பைக் கண்டான். கண்ணிமைக்க மறந்து நின்றான்.

பெற்றோர், உற்றார் உறவினர், நல்லோர் ஆசியுடன் இனிதே திருமணம் நடந்தேறியது. மூன்று உள்ளங்களும் திருமண வாக்குறுதிகள் கொடுத்து பந்தத்தில் இணைந்தன. 

ரோகிணி அருள் மொழியினை நோக்கி “அக்கா நம் மூவரும் விரும்பிய வாழ்க்கை கிட்டிவிட்டது நம் மூவருக்குமே வெற்றி” என்று மகிழ்ச்சி பொங்க கூறினாள். 

நங்கை மென்சிரிப்புடன் கூறினாள் ”ஆம் ரோகிணி வெற்றி தான், ஆனால் அதில் ஒரு சிறிய வேறுபாடு; நீ பெற்றது காதலின் வெற்றி, நான் கொடுத்திருப்பதோ சோழ நாட்டிற்கு வெற்றி” என்று கூறினாள். ரோகிணி விளங்காதவளாய் விழித்தாள். நங்கை புன்னகைப் பூத்தபடி பெரியவர்கள் ஆசி பெற சென்றாள்.

ஆம்! திருமண பந்தத்தில் இணைந்த உள்ளங்கள் மண வாக்குறுதி அளித்துக் கொண்டிருக்கையில், நங்கை மட்டும் தன் உள்ளத்தில் தனக்கான வாக்குறிதியினை அளித்துக் கொண்டிருண்தாள். 

அன்று தன் சிந்தையில் இருந்து உதிர்ந்த காதல் தலைவனின் நினைவு உதிர்ந்ததாகவே என்றும் இருக்கும். இன்று அவள் கரம் பற்றியிருப்பவன் கொடும்பாளூர் மாவீரன் இளவரசன் இளங்கோவேள். பருவம் அடைந்த நாள் முதல் தன் உள்ளத்தில் குடி கொண்ட தன் தலைவன்; மாமன் இளங்கோ அல்ல. 

அரசகுல தர்மத்தின் படி அவள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டமையால் தன் குல தர்மத்தில் இருந்து வழுவாது, கொடும்பாளூரின் அரசியாக முடிசூடும் அரசர் இளங்கோவிற்கு துணை நிற்பேன் என்று தனக்குள் வாக்குறுதி அளித்துக் கொண்டாள். அவள் உள்ளத்தில் தலைவனின் மீது கொண்டிருந்த பற்றுதல் ஏற்படுத்தியிருந்த வெற்றிடத்தை, அரசகுல தர்மத்தின் படி தாய் திருநாட்டின் மீது கொண்ட பற்றுதல் நிரப்பியது.

இளங்கோ அருள்மொழியை அன்போடு நோக்கினான்; கடலின் ஆழத்தில் பல்லாயிரம் அடிகள் ஒளிந்திருக்கும் பனிப்பாறையைத் திரையிட்டு மறைக்கும் கடல் நீரைப் போல், தன் உள்ளத்தின் ஆழத்தில் அவள் ஒளித்து உதிர்த்துவிட்ட தலைவனின் அன்பையும், எண்ணங்களையும்; அரசகுல தர்மத்திற்காக அவள் தனக்கே அளித்துக்கொண்ட வாக்குறுதியையும் திரையிட்டு மறைத்து, அவனை ஏறிட்டு நோக்கினாள்; உதட்டின் ஓரத்தில் மெல்லியதொரு புன்முறுவல் பூத்தாள். கொடும்பாளூரின் வருங்கால அரசி!

அருள்மொழி நங்கை

அழுத்தக் காரி!

 • மா. சிந்தனா

(மற்ற சிறுகதைகள்

1. காதலும் துரோகமும்
http://heritager.in/?p=2106

2. மித்ரன்
http://heritager.in/?p=2110

3. ஒரு விறலியின் காதல்
http://heritager.in/?p=2115

4. பனித்திரை
http://heritager.in/?p=2118)

4 Comments

 1. கதை அருமையாக இருந்தது .
  பனித்திரை – அழகான பொருத்தமான தலைப்பு.
  கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் சுவை மிகுந்ததாக எழுதியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்

 2. அவனோ அவவழிகளை நோக்கும் சக்தியற்ற வனாய்…..ஆலம் தட்டினையே நோக்கி கொண்டிருந்தான், என்ன ஒரு “அதிசயம்” அவன் எதிர் கொள்ள “அச்ச( ம்) விழிகள்,” ஆலம் எடும், இடும், நீரில்,.. வண்ண கோலமிட்டுகொண்டிருந்தன…. ஆஹா என்ன ஒரு அழகு நயம் ,.”அருமைஎழுத்தாளறே”..அருள்மொழியோ அன்பை துறந்து அரச ஆள அழுத்தம் கொண்டாள்..இளங்கோவனோ நங்கையின்விழியில் மதிமறந்து, அரசவழியிலிருந்து ,அருளின்( மொழி) அன்பு விழியைநோக்கி பயணித்தான்..
  நன்றி!

Leave a Reply