பண்பாடுகளின் கலங்கரை விளக்கங்கள்

“ஒரு காவல் தெய்வம் கோயில், அங்கு மிக அழகிய வண்ண மயமான காவல் தெய்வம், அனுமன் சிலை, விநாயகர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ளன. பல கடவுள்களை வழிபடும் முறை நம்மிடையே உண்டு என்பதின் வெளிப்பாடாய் நான் இப்படத்தை பார்க்கிறேன். இக்கோயில் திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள பட்டிணம் என்னும் ஊரில் உள்ளது.

இக்கோயில் என்னை மிகவும் கவர்ந்ததற்கான காரணம் இது மிகப் பழமையானதோ, அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்கதோ அல்ல இக்கோயில் ஒரு கிராமிய பண்பாட்டில் உள்ள மக்களின் வாழ்வியல் வெளிப்பாடு. அவர்ளின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம். இது மக்களின் அடையாளமாக நான் கருதுகிறேன்.

அடுத்து, ஒரு செட்டிநாடு வீட்டின் புகைப்படம். இது இரண்டு முற்றங்களுக்கு நடுவில் உள்ள நடைபாதையின் படம். எனக்கு மட்டும் இல்லை, உலகின் பல மூலைகளில் உள்ளவர்களுக்கும் செட்டிநாடு வீடுகள் பிடிக்கும். அதிலும் அரண்மனை போன்று பிரமாண்டமான வீடுகள் நிறைந்த செட்டிநாட்டில், எனக்கேன் இந்த இடம் பிடித்தது? இவ்வூரில் பல இடங்களையும், பல வீடுகளையும் நான் பார்த்தேன். ஆனால் இந்தச் சிறு வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்து. ஒனாசிறுவயல் என்னும் ஊரில் உள்ள வீடு இது, இவ்வீட்டில் மிக அழகிய முற்றம் இது. வீட்டின் முன் திண்ணை, பராமரிப்புக்காக மூடி இருந்ததால் பின் பக்கமாக உள்ளே நுழைந்தோம். பின் திண்ணைக்கு அடுத்து உள்ள முற்றம் இது. இதன் அருகில் ஒரு மிக இருட்டான பாதை, அதில் இவ்வீட்டின் உரிமையாளர் நிற்கிறார்.

கட்டிடக்கலை விளக்கங்களில் “ஒளி மற்றும் இருள்” என்று ஒரு பதம் உள்ளது. அதாவது ஒரு இடத்தில் ஒளி விழுவதும், இருள் சூழ்வதும் ஒருவித அழகைத் தரும். அது ரம்யமானது. அத்தகைய ஒரு இடமாக இந்தப் பாதை உள்ளது. இந்தப் பாதையின் முன்னும் பின்னும் ஒளியால் சூழ்ந்துள்ளது. பாதை இருளில் உள்ளது. காணவே மிக அழகான ஒரு இடமாக இதை இருளும் ஒளியும் மாற்றியுள்ளது.

அடுத்த படம், இது காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தின் படம். பழங்கால வழக்கப்படி, செட்டிநாட்டைச் சேர்ந்த மக்கள் பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்விடங்களை விட்டு, இப்போதுள்ள இடத்திற்கு பெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகப் புதிய வாழ்விடத்தில் பெரிய ஏரிகள், குட்டைகள் இல்லாது பார்த்தனர். ஆனாலும் தங்களின் தேவைகளுக்காகப் பின்னாட்களில் அவர்கள் நீர்த் தேக்கங்கள், குளங்களைக் கோயிலுடன் சேர்த்து அமைத்துக்கொண்டனர். இவை விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டன. இவற்றின் சுவர்கள் “செம்பரான்கல்” கொண்டு கட்டப்பட்டுள்ளன. நீர் சேமிப்பின் வழிகளை நாம் இவர்களிடம் தான் கற்க வேண்டும். இது நீர் மேலாண்மை மட்டுமின்றி வாழ்வியல் முறையாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்தப் படம், குன்னக்குடி கோயிலின் அடியில் உள்ள குடைவரை கோயில். இக்கோயில் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. பெரும்பாலும் குன்னக்குடிக்கு வரும் மக்கள்மேல் உள்ள முருகன் கோவிலை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். ஆனால் இங்கு ஒரு அழகிய மண்டபம், ஒரு குடைவறையும் உள்ளது என்பதை வெளிக்கொணர முயல்கிறேன்.

கடல் கடந்து நாங்கள் சென்ற கம்போடியாவில் உள்ள “தப்ரோம் (Taphrom)” என்னும் கோயில். கம்போடியாவில் இருந்த கோயில்கள் எப்போதும் என்னை வியக்க வைத்த கோயில்கள். அவற்றைச் சென்று பார்க்க வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். மிகப் பெரிய இந்துக் கோயில் என்ற ஒற்றைக் காரணம் போதுமானதாக இருந்தது. ஆனால் நான் இங்கு அந்த புகைப்படத்தைக் காண்பிக்காமல் வேறொரு படத்தைக் காண்பித்திருக்கிறேன். ஏன் என்றால் இதை நான் இயற்கைக்கும், கட்டிடக்கலைகுமான போராட்டமாகவே காண்கிறேன். இக்கோயில் அங்கோரை பின்பற்றி அந்த முறையிலேயே கட்டப்பட்ட இந்துக் கோயில், பிற்காலத்தில் இது புத்த மடாலயமாக மாற்றப்பட்டது.

நாங்கள் கோவாவில் கண்ட கலங்கரை விளக்கம். இது சால்ஸ் கொரியாவால் கட்டப்பட்ட “கலா அகாடமி” பின்னே உள்ளது. இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே கட்டப்பட்டது தான், ஆனாலும் இது ஏன் எனக்கு மிகப் பிடித்தது என்றால் , அதன் சுற்றுச்சுழல், நான் நின்று பார்த்த இடம் மொத்தமாக அதன் சூழலையே மாற்றி அதை மிகுந்த அழகுடையதாகக் காண்பித்தது.

இதன் எதிரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அகோடா கோட்டை” உள்ளது. சிறியதா இருப்பினும் இது அதன் அமைப்பிலும், அமைவிடத்தாலும் என்னை அதிகம் கவர்ந்துள்ளது. மேலும் கடலில் இருந்தும், மாண்டவி ஆற்றில் இருந்தும், உள்ளே வெளியே செல்லும் மக்களுக்கு இந்தக் கலங்கரை விளக்கம் மிக முக்கிய பயன்பாட்டில் உள்ளது.

சிம்ம தூண் என்றாலே நம் எண்ணத்திற்கு வருவது பல்லவர்கள் தான். ஒரு கட்டிடக்கலை மாணவியாக, உலக வரலாற்றில் எப்படி டொரிக், ஐயானிக், கொரிந்தியன் தூண்கள் உள்ளனவோ, அப்படி இந்திய அளவில் தூண்கள் என்றாலே எனக்குச் சிம்ம தூண் தான் நினைவிற்கு வரும். பல்லவ சாம்ராஜ்யத்தின் கட்டிடக்கலை புடைப்பு சிற்பங்கள், என ஆரம்பித்து இரதங்கள், குடைவறைகள், கட்டுமானக் கோயில்கள் என்று விரிந்து கிடந்தது. அதில் இது எனக்கு மிகப் பிடித்த சிற்பமாகும்.

திருவண்ணாமலை கிரி வலப் பாதையில் உள்ள துர்வாச முனிவர் கோயிலின் பின் உள்ள வேப்பமரம். முதல் படத்தில் கூறியது போலவே, இது நம் மக்களின் கலாச்சார அடையாளம். அவர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு. அதற்கும் மேலே, இதை நானும் செய்திருக்கிறேன். மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி, பிள்ளை வரம் வேண்டியும், கற்களை அடுக்கி வீடு கட்டவும் வேண்டிக்கொள்வர்.

நானும் இப்படி கயிறு கட்டி இருக்கிறேன். வேண்டுதல் என்பதைத் தாண்டி அது நமக்கு ஒரு நேர்மறை எண்ணங்களைத் தருகின்றது. நமக்கான சோகங்களை மரத்திடம் விட்டு, நீ சுமந்து கொள் என்பதான ஒரு முயற்சி.

பல கோயில்களில் நாம் பார்த்திருக்கக்கூடிய ஒளி விழும் அமைப்பு. இப்படம் விராலி மலை முருகன் கோயிலின் கருவறையைச் சுற்றி வரும் பாதையில் உள்ள இடம். இது இக்கோயில் மட்டும் இல்லை, பெரும்பாலும் நம் ஊரில் உள்ள பழைய கோயில்களில் பார்க்க முடியும். இது கருவறை சுற்றுப் பாதையின் இருளை ஒரு அளவிற்கு நீக்கும் பொருட்டு ஒளி வழங்கும் படி, அக்கால கட்டிடக்கலை நிபுணர்களால் அமைக்கப்பட அமைப்பாகும். இது இந்த இடத்தையே அழகாக்குகிறது.

என்னைச் சிறுவயது முதல் கவர்ந்த செஞ்சிக் கோட்டை. திருவண்ணாமலை சொந்த ஊராக இருந்தக் காரணத்தினால் அடிக்கடி பயணித்த இடம் இது. எப்போதும் பயணத்தின்போது, பேருந்தில் ஏறியுடன் உறங்கிவிடும் நான், செஞ்சி வரும்போது மட்டும் விழித்துக்கொள்வேன்.

காரணம், செஞ்சி கோட்டையைப் பார்க்க, உள்ளே என்னவெல்லாம் இருக்கும்? என்று எப்போதும் கனவுகளில் வாழ்ந்திருக்கிறேன். 2013 ஆண்டில் தான் முதன் முதலில் கோட்டையின் மேல் ஏறினேன். அதுவும் ராணியில் மட்டும், அதனால் அதன் மேல் இருந்து ராஜாக்கோட்டை, சாலை, கோட்டைக் கொத்தளங்கள் எல்லாம் தெரியும்படி ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளேன். காலத்தைக் கடந்து உறுதியாக நிற்கும் இதன் தன்மை என்னைக் கவர்ந்த விஷயம்.

மீண்டும் கம்போடியாவிலிருந்து, இதை “நாம் குலேன் மலைகள்” என்றும், நான் குலையின் என்று அழைக்கின்றனர். இங்கு ஓடும் அருவியில் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த இடத்தின் வரலாற்றைப் பார்ப்போம்.

மன்னன் ஜெயவர்மன் இந்த இடத்தில் தான் “க்மேர்” என்னும் சாம்ராஜியத்தைத்  தோற்றுவிக்கிறான். அந்த நாட்டை “கம்போஜா அல்லது கம்போயா” என்று அழைத்தனர். இவர்களே கம்போடியாவின் அங்கோர் கோயில்களை கட்டியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இதை இந்திரனது மலையாகக் கருதுகின்றனர்.

ஆற்றின் பாறைகளில் நிறையச் சிவலிங்கங்களும், கடவுள்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தொட்டுச் செல்லும் நீர் மிகப் பவித்திரமானதாக மக்களால் கருதப்படுகிறது.”

திருமதி. தீபிகா காமேஸ்வரன், கட்டடக்கலை நிபுணர், உதவிப் பேராசிரியர், கோயிற்கலை ஆய்வாளர், சுற்றுலா ஆர்வலர் எனப் பன்முகங்களையுடையவர். நம்முடைய இந்த மாத இதழில் ஒரு கட்டடக்கலை ஆசிரியராக அவர் பயணித்த இடங்களில், அவர் மனம் கவர்ந்த பண்பாட்டுக் கூறுகள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Ar. தீபிகா காமேஸ்வரன்

Leave a Reply