பச்சைமலை நோக்கி மரபுப் பயணம் – A.T. மோகன், சேலம்

அதிகாலை 4.30 மணிக்கே நண்பர் ரவி அவர்கள் என்னை வீட்டின் அருகில் வந்து பிக்கப் செய்து கொண்டு கிளம்பினோம். வழியில் பசிக்கும் போது சாப்பிட அம்மாப்பேட்டை ஸ்பெஷல் அவல் சுண்டல் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

அயோத்தியா பட்டினத்தில் ஆசிரியர் கலை செல்வன் காருடன் காத்திருக்க , இருச்சக்கர வாகனத்தை ஸ்டேண்டில் போட்டு விட்டு காரில் எங்களின் பயணம் காலை 5.30 க்கு தொடங்கியது.
வாழப்பாடி வழியாக முதலில் தம்மம்பட்டி நோக்கி நாங்கள் பயணம் செய்த வண்டி புறப்பட்டது.

வாழப்பாடி கடந்ததும் இடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நாங்கள் எடுத்துச் சென்ற அவல் சுண்டல் சாப்பிட்டோம், ஆனால் அப்போது எங்களுக்கு தெரியாது, அதுதான் எங்கள் காலை உணவாக இருக்கும் என்பது. இடையில் மகாத்மா செல்வப்பாண்டியன் சாருடன் ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினோம். அவர் மூலம், தம்மம்பட்டியில் தேர் செய்பவர்கள் பற்றியக் குறிப்பு எங்களுக்குக் கிடைத்தது.

எங்கள் பயணத்தை மீண்டும் துவங்கினோம். வழியில் இடைப்பட்ட ஒரு கிராமத்தில் பாரதம் கூத்து நடந்துக் கொண்டிருந்தது. அதில், போர் முடிந்து இறந்துபோன சகோதரர்களின் சடலம் முன் துச்சலை அழும் காட்சி மிக தத்துருபமாக நடித்துக் கொண்டிருந்தனர்.

அக்காட்சிப்படி சடலமாக ஆடாமல் அசையாமல் மக்கள் படுத்து இருந்த காட்சி பார்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரம் அங்கே இருந்து பார்த்து விட்டு தம்மம்பட்டி போய் சேர்ந்தோம். அங்கு வழி காட்டும் நண்பர் எங்களுடன் வந்து இணைந்துக்கொண்டார்.

இடையே சேலம் மாவட்டம், திருச்சி மாவட்டம் என கண்ணாமூச்சி காட்ட வழியில் வியூ பாய்ண்டில் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்துவிட்டு புறப்பட்டோம்.

டாப் செங்காட்டுபட்டி ஊரை அடைந்ததும் அங்கே எங்களை வரவேற்றது பிள்ளையாரும், சுமார் 2000 வருடங்கள் பழமையான குத்துக்கல்லும்தான், வாங்கி சென்ற மாலையை பிள்ளையாருக்கு அணிவித்துவிட்டு அவரை வணங்கியப் பிறகு குத்துக்கல்லினைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

வளைந்து நெளிந்து செல்லும் பசுமையான சாலையில் பயணம் ஊர் பெயர்கள் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு கிராம கோயிலில் விஜய நகர காலத்து கல்வெட்டு பார்த்து அருகில் இருந்த இரண்டாயிரம் வருட பழமையான புதியக் கற்கால ஆயுதங்களைக் கண்டோம்.

பின்பு ஊரைச் சுற்றி ஒரு பயணம் மேற்கொண்டோம். வழியில் அழகான தானியங்கள் சேமிக்கும் குதிர், அழகிய வீடுகள், வனத்துறையின் பரண் வீடு, பாழடைந்த வன பங்களா, பச்சோந்தி போன்றவற்றை பார்த்துவிட்டு புறப்பட்டோம். அதற்குள் மதியம் மணி மூன்று ஆகிவிட்டது, வயிற்றில் கப கப வென பசி கொழுந்து விட்டு எரிய, மோகன வள்ளி எனும் ஒரு சிறிய உணவகம் கண்ணில் பட்டது. அங்கே மதிய உணவாக பரோட்டா, ஆம்லட் சாப்பிட்டு நாங்கள் பசியாறினோம். பின்பு, மலையை விட்டு இறங்க ஆரம்பிதோம்.

உப்பிலியபுரத்துக்கு மீண்டும் வந்ததும் எங்களை சந்திக்க நண்பர் பெரியசாமி ஆறுமுகம் காத்திருந்தார். அவருடன் சேர்ந்து அங்கே இருந்து கலங்கி விரன் நடுகல்லைப் பார்க்க புறப்பட்டோம். வழியெங்கும் மயில்கள் பார்த்துக்கொண்டே சென்றோம். பின்பு கலங்கி வீரன் நடுகல்லைப் பார்த்து விட்டு பெரிசாமிக்கு விடைக் கொடுத்து அனுப்பிவிட்டு, நாங்கள் சேலம் நோக்கிப் பயணத்தைத் துவங்கினோம். வழியில் தம்மம்பட்டியில் வன உதவியாளரை இறக்கி விட்டு, இரவு எட்டு மணியளவில், சேலம் வந்தடைந்தோம். தேடல் இனிதே முடிந்தது..

Leave a Reply