தேயிலை உற்பத்தியும் தெய்வ உருவாக்கமும் – எம்.எம். ஜெயசீலன்

நாட்டார் தெய்வங்கள் மக்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்தவையாகும். அத்தெய்வங்களின் தோற்றமும் வடிவமும் குணமும் அவை தோன்றிய சமூகம் சார்ந்தவையாகவே விளங்குகின்றன. தெய்வங்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த பலரும் அச்சமும் உணவுத்தேவையுமே ஆதி மனிதனின் கடவுள் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தன என்று கூறுகின்றனர். அதனால் மனிதனின் உற்பத்திமுறைக்கும் கடவுளருக்கும் இடையே நெருக்கமான உறவு காணப்படுவதுடன் ஒவ்வொரு சமூகத்தினரின் உற்பத்திமுறைக்கு ஏற்ப கடவுளர்களின் தோற்றமும் வடிவும் குணமும் உருப்பெறுகின்றன. தமிழ்ச் சமூக வரலாற்றில் உற்பத்திமுறைகளுக்கு ஏற்ப கடவுளின் உருவாக்கம் இடம்பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகளைக் கூறலாம்.

எடுத்துக்காட்டாக, முல்லைநிலத் தெய்வமாக மாயோனையும் மருதநிலத் தெய்வமாக இந்திரனையும் வழிபட்டதற்கு அந்நிலத்து உற்பத்திமுறை, வாழ்வியலே அடிப்படையாக அமைகின்றன. மந்தைமேய்ப்புச் சமூகத்தேவைக்கு ஏற்ப கையில் புல்லாங்குழலுடன் கன்றுகள் சூழ்ந்தவாறு மாயோனின் வடிவமும் ஆயர்குலத்தோடு இணைந்த வகையில் அவனின் தோற்ற வரலாறும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறே மருதநிலத்து உழவர்கள் வேளாண்மைக்கான நீரைத் தருகின்ற கடவுளாகக் கருதப்படுகின்ற இந்திரனை வழிபடுகின்றனர். இவை மட்டுமன்றிக் காலத்துக்குக் காலம் தமிழ்ச் சமூக குழுக்களுக்குள் உற்பத்திமுறையில் ஏற்பட்டுவந்துள்ள மாற்றங்களுக்கு ஏற்ப கடவுள் உருவாக்கத்திலும் வழிபாட்டு முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அம்மாற்றங்களுள் ஒன்றாக பிரித்தானியக் காலனியக் காலத்தில் உருப்பெற்ற பெருந்தோட்ட உற்பத்திமுறைக்கு ஏற்ப புதிய கடவுளர்கள் உருவாக்கம் பெற்றமை அமைகின்றது. அவ்வகையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் பிரதான பயிராக விளங்கும் தேயிலை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு தோற்றம்பெற்ற கடவுளர்களையும் வழிபாட்டு முறைகளையும் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது. கட்டுரைக்கான தகவல்கள் இலங்கை மலையகத் தேயிலைத் தோட்டங்களில் திரட்டப்பட்டவையாகும்.

தென்னிந்தியாவின் திருச்சி, சேலம், மதுரை, வேலூர் போன்ற பகுதிகளின் கிராமப்புறங்களிலிருந்து இலங்கையின் மத்திய பகுதிகளில் குடியேறிய தமிழர்கள், அங்குத் தாம் பின்பற்றிய தமது பூர்வீக பண்பாட்டுப் பாரம்பரியங்களையே இங்கும் தொடர்ந்து பின்பற்றலாயினர். அப்பண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தொடர்ந்து பேணுவதற்குரிய சாதகமான சூழ்நிலை மலையகப் பெருந்தோட்டங்களில் நிலவின. குறிப்பாக, தமிழ் நாட்டிலிருந்து கூலி உழைப்பிற்காக அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டமுறை, பெருந்தோட்டங்களுக்கு உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை, குடியிருப்புக்களின் அமைவு, அமைப்பு, பிறந்த இடத்திலிருந்து பெற்றுக்கொண்ட சாதித் தொடர்ச்சி, இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கூடிய பெருந்தோட்ட நிர்வாக அமைப்பு, தொழில், தொழிற்சங்கம் தொடர்பான தொழில் ஒழுங்கமைப்பு, அரசியல் தனிமைப்பாடு, மக்களின் சமூக பொருளாதார நிலைப்பாடு, அடிக்கடி இந்தியா சென்று வரச் சாதகமாக அமைந்த புவியமைவு போன்றன மலையகத் தமிழரின் பூர்வீகப் பண்பாட்டின் தொடர்ச்சியான நிலைப்புக்குக் காரணங்களாக அமைந்தன (சிவத்தம்பி, கா (க.ஆ) : 1985, வேல்முருகு, ந : 1993).

இவ்வாறு குடியேறியவர்கள் பெரிதும் இந்துக்களாகவே இருந்த காரணத்தால் இந்துப்பண்பாட்டுப் பாரம்பரியங்களே இங்கும் பின்பற்றப்பட்டன. தென்னிந்திய பூர்வீகத் தொடர்ச்சியும் இலங்கையில் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்க்கை முறையும் அம்மக்களிடையே மதநம்பிக்கையை மேலும் வளர்க்கலாயின. குறிப்பாக, பாதுகாப்பற்ற கடல் பயணம், நீண்ட தூர நடைப்பயணம், வறட்சி, வெப்பம், மழை, குளிர் போன்றவற்றால் பரவிய தொற்றுநோய்கள், காடு வெட்டி பெருந்தோட்டங்கள் அமைத்தபோதும் ரயில் பாதைகள் அமைத்தபோதும் ஏற்பட்ட அனர்த்தங்கள், பெருந்தோட்டங்களுக்குள்ளேயே முடக்கப்பட்ட வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பூர்வீக மதநம்பிக்கைகள் அம்மக்களிடையே கூடுதல் அழுத்தம் பெற்றன. இதனால் ‘அவர்கள் வந்திறங்கிய துறைமுகங்களிலும், பிரயாணம் செய்யும்போது ஓய்வெடுத்த இடங்களிலும், நிரந்தரமாகத் தங்கிக் குடியிருப்புக்கள் ஏற்படுத்திய இடங்களிலும் இந்து வழிபாட்டிடங்கள் நிறுவப்பட்டதுடன், பல்வேறு சமூக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன’ (சிவத்தம்பி, கா (ப.ஆ), 1993 : 08).

தமது பூர்வீக வழிபாடுகளை இங்கும் பின்பற்றிய அவர்கள், புதிதாகத் தோன்றிய பெருந்தோட்ட உற்பத்திமுறைக்கு ஏற்ப தமது கடவுள் வழிபாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அதனால் புதிய கடவுளர் பலர் தோற்றம் பெற்றதோடு அவர்களுக்கான பிரத்தியேக வழிபாட்டு முறைகளும் மேற்கிளம்பின. அவ்வழிபாடுகள் தென்னிந்திய பூர்வீக வழிபாட்டு மரபுகளைப் புதிதாகத் தோற்றம்பெற்ற தொழில்நிலைமைகளுடன் இணைவுபடுத்தியதால் தோன்றியவை எனலாம். அவ்வகையில் தேயிலை உற்பத்தியுடன் இணைந்த வகையில் மேற்கொள்ளப்படுகின்ற வழிபாடுகளைப் பின்வருமாறு நோக்கலாம்.

01. தவறணைமுனி

தவறணைமுனி வழிபாடானது தேயிலைக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. தேயிலைக் கன்றுகள் நாற்றுமேடையிட்டு வளர்க்கப்படும் இடமே தவறணை எனப்படுகின்றது. அத்தவறனையில் பணியாற்றுவோரின் பாதுகாப்பு மற்றும் வளத்தினைப் பெருக்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வழிபாடானது குறிப்பிட்ட தவறணையில் தொழில்புரியும் ஆண் தொழிலாளர்களின் தலைமையில் அவர் தெரிவுசெய்யும் காலப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் உயிர்பலி இட்டு (சேவல்) கள்ளு, சாராயம், சுருட்டு போன்றன படைக்கபடும். இன்று சிலர் பொங்கல் வைத்தும் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

02. கொழுந்துசாமி

தேயிலைக் கொழுந்து செழித்து வளர வேண்டும் என்ற நோக்கில் வளம் வேண்டிக் கொழுந்துசாமி வழிபடப்படுகின்றது. இவ்வழிபாடு வருட ஆரம்பத்திலும் வறட்சிக் காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வழிபாடு பெண்களின் தலைமையில் நடைபெறுவதோடு தேயிலைச் செடி ஒன்றுக்கு மாலையிட்டு அதனைக் கடவுளாக உருவகித்து வழிபாடியற்றுகின்றனர். இவ்வழிபாட்டில் பலியிடல் வழக்கில் இல்லை. பொங்கல், வெற்றிலை, பாக்கு, பழம், பால், பச்சை அரிசி, துள்ளுமா (நீரில் ஊற வைத்த சிவப்பு பச்சை அரிசியில் சீனி, தேங்காய் ஆகியவற்றைக் கலந்த உணவு பச்சை அரிசி. நீரில் ஊற வைத்த சிவப்பு பச்சை அரிசியை உரலில் இட்டு இரண்டொன்றாக குற்றி, சீனி, தேங்காய் ஆகியவற்றைக் கலந்த உணவு துள்ளுமா) போன்றனவே படைக்கப்படுகின்றன.

03. கவ்வாத்துசாமி

கவ்வாத்துசாமி அல்லது கவ்வாத்துமுனி வழிபாடானது ஆண்டுதோறுமன்றி காலத் தேவைக்கேற்ப ஆண்களால் மேற்கொள்ளப்படுகின்றது. (கவ்வாத்து வெட்டும் காலப்பகுதியில் மட்டும் மேற்கொள்ளப்படும். ஆனால், ஆண்டுக்கு ஒரு தடவைக்கு மேல் வழிபாட்டினை நிகழ்த்துதல் வழக்கில் இல்லை). கவ்வாத்து வெட்டுதல் என்பது ஒரு தொழில்நிகழ்வாகும். தேயிலையின் விளைச்சலைப் பெருக்கவும், கொழுந்து பறித்தலை இலகுபடுத்தவும் தேயிலைச் செடிகளின் நுனி (உச்சி ஆட்சி) ஆண்களைக் கொண்டு வெட்டுவிக்கப்படும். இந்நிகழ்வு தொடங்கும் காலங்களிலேயே இவ்வழிபாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெறுகின்றது.

கவ்வாத்து வெட்டும்போது தொழிலாளர்களுக்கு எவ்வித அனர்த்தங்களும் ஏற்படக்கூடாது என கவ்வாத்துசாமிக்கு நேர்த்தி வைத்து, கவ்வாத்து வெட்டி முடிந்ததும் அத்தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆடு (சில வேளைகளில் ஆட்டுடன் சேவல்) பலியிட்டு, சாராயம், கள், சுருட்டு போன்றவற்றைப் படைத்து நேர்த்திக்கடனைக் கழிக்கின்றனர். நேர்த்திக்காக பலியிடப்பட்டவை யாவும் அவ்விடத்திலேயே சமைத்து உண்ணப்படுவதோடு அவற்றை வீடுகளுக்கு எடுத்துச்செல்வதோ பெண்களுக்கு வழங்குவதோ இல்லை. கவ்வாத்துசாமிக்கெனத் தனித்த வழிபாட்டுத் தலங்கள் எங்கும் இல்லை. தேயிலைச் செடிகளுக்கு இடையிலோ மலையடிவாரங்களிலோ நீரூற்று இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆல், அரசு அல்லது சவுக்கு போன்ற மரங்களுக்கடியில் முக்கோண வடிவிலான கல்லினை வைத்து வழிபடுவதே மரபாக உள்ளது.

04. மட்டத்துச்சாமி

கவ்வாத்து வெட்டுதல் என்பது போலவே மட்டம் வெட்டுதல் என்பதும் ஒரு தொழில் நிகழ்வாகும். தேயிலைச் செடிகளைக் கவ்வாத்து வெட்டியபின் புதிதாக துளிர்விடும் தளிர்கள் ஒரே சீராக வளர்வதற்காகப் பெண்களைக் கொண்டு வெட்டுவிக்கப்படும். இதனைத் தொழிலாளர்களின் வழக்கில் மட்டம் வெட்டுதல் என்பர். மட்டம் என்பது மேடுபள்ளம் இன்றி சீராக அமையும் நிலையைக் குறிக்கின்றது. அத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆயுதங்களால் தமக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாதவாறு தமக்குப் பாதுகாப்பு வேண்டி இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

இவ்வழிபாடானது ஆண்டுதோறுமன்றிக் காலத்தேவையின் பொருட்டே செய்யப்படுகின்றது. கவ்வாத்துமுனியைப் போல இவ்வழிபாடும் வருடத்திற்கு ஒருதடவைக்கு மேல் நிகழ்த்துதல் வழக்கில் இல்லை. இவ்வழிபாட்டிலும் தேயிலைச் செடியொன்றுக்கு மாலையிட்டு அதனைத் தெய்வமாக உருவகித்துக்கொள்வதோடு பலியிடல் ஏதும் இன்றிப் பொங்கல், வெற்றிலை, பாக்கு, பால், பழம், பச்சை அரிசி போன்றனவே படைக்கப்படுகின்றன.

05. கம்பிமுனி

முன்னைய காலத்தில் கம்பிமுனி எனும் வழிபாடும் மலையகப் பெருந்தோட்டங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் விருத்தியடையாத முன்னைய காலங்களில் பறிக்கப்பட்ட கொழுந்தினை மூட்டைகளில் கட்டி, மலையுச்சிகளில் இருந்து பாதை இருக்கின்ற இடத்துக்கு அல்லது தேயிலைத் தொழிற்சாலைக்குக் கம்பிகள் மூலம் அனுப்பினர். மலையுச்சியில் இருந்து கொழுந்து சென்றடைய வேண்டிய இடத்துக்குத் தொடுக்கப்பட்ட கம்பிகளில் கொழுந்து மூட்டைகள் அனுப்பப்பட்டன. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட தொடுக்கபட்ட கம்பிகள் பயன்பாடற்ற நிலையில் இன்றும் பல தோட்டங்களில் காணப்படுகின்றன. இந்தக் கொழுந்து மூட்டைகளை அனுப்பும் தொழிலில் ஈடுபட்ட ஆண்களால் அக்கம்பி தெய்வமாகக் கருதப்பட்டு, பாதுகாப்பு கருதிக் கம்பிமுனி வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கும் இரத்தப்பலி கொடுத்து வழிபாடியற்றப்பட்டுள்ளது. இன்று இக்கம்பிகளின் தேவை அற்றுப்போனதால் இவ்வழிபாடும் வழக்கிறந்துபோய்விட்டது.

06. றோதைமுனி

பெருந்தோட்டத் தொழிற்துறைக்கே உரிய வழிபாடுகளில் றோதைமுனி வழிபாடு மிகவும் பிரசித்தமானதாகும். தேயிலைத் தொழிற்சாலையுடன் இணைந்ததாக விளங்குகின்ற இவ்வழிபாடானது, தொழிற்சாலைகளில் இயந்திரங்களுடன் தொழில்புரியும்போது இயந்திரங்களினால் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படாதிருப்பதற்காக வருடத்திற்கு ஒருமுறை நிகழ்த்தப்படுகின்றது. இவ்வழிபாட்டினை முறையாக நிகழ்த்தாவிடின் றோதைமுனி இரத்தப் பலி, உயிர்ப்பலி எடுத்துவிடுவான் என்ற நம்பிக்கை அத்தொழிலாளர்களிடையே வழக்கில் உண்டு.

ஒவ்வொரு தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலும் றோதைமுனிக்கென வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தலங்கள் பெரியளவிலான கட்டடங்கள் ஏதுமின்றிச் சிறிய பீடமொன்றும் அதில் சூலம் அல்லது வேல் நடப்பட்டிருக்கும். சில இடங்களிலேயே பீடத்திற்கு மேலே கூரை அமைக்கப்பட்டுள்ளது. வழிபாட்டின்போது அத்தொழிற்சாலையில் தொழில் புரியும் அனைத்து ஆண்கள் (சாதாரண தொழிலாளிமுதல் தோட்டத்தின் பெரிய துரைவரை) உட்பட அத்தொழிற்சாலையுடன் இணைந்த தோட்டங்களில் தொழில்புரியும் ஆண்களும் வழிபாட்டில் கலந்து கொள்வர். பெரும்பாலும் ஆடு (சில இடங்களில் ஆட்டுடன் சேவலும்) பலியிடப்படுகின்றன. பலியிடப்பட்டவையாவும் அவ்விடத்திலே சமைத்து உண்ணப்படுவதோடு அவ்வுணவைப் பெண்களுக்கு வழங்குவதோ வீடுகளுக்கு எடுத்துச் செல்வதோ இல்லை.

றோதைமுனி வழிபாட்டின் தோற்றம் பற்றி மலையகத் தமிழரிடையே வாய்மொழிவழக்காக ஒரு கதை கூறப்படுவதுண்டு. அதாவது, தேயிலைத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டபொழுது, கொழுந்தினை (தேயிலையை) அரைப்பதற்காகச் சில்லுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. சில்லினையே மலையகத் தமிழ் வழக்கில் றோதை என்கின்றனர். இச்சொல் சிங்களமொழியில் சில்லினைக் குறிக்கப் பயன்படுத்துகின்ற ‘றோதய’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும். மின்சாரத்தினால் இயந்திரம் (றோதை) இயங்குவதை அறியாத தொழிலாளிகள் அதனை ஒரு பிசாசு அல்லது ஒரு பெரும் சக்தி இயக்குவதாக நம்பினர். அதனால் றோதையை இயக்குகின்ற சக்தியை றோதைமுனி என வழிபடத்தொடங்கினர் என்ற வாய்மொழி வழக்குப் பெரும்பாலான தோட்டங்களில் வழக்கில் உண்டு.

றோதைமுனி என்ற பெயருக்கான காரணத்தை அடியொட்டியதாக அமைந்துள்ள இவ்வழக்கானது இயந்திரத்தின் அமைப்பையும் அதன் இயக்கத்தினையும் அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளதைக் காணலாம். இவ்வாறு இயந்திரத்திலிருந்து பாதுகாப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தோற்றம் பெற்ற இவ்வழிபாடானது பின்னர் அந்நிலையிலிருந்து மேலும் விரிவடைந்து முழுத் தேயிலைத் தொழிற்சாலையின் காவல் தெய்வ வழிபாடாக நிலைபெற்றுவிட்டது.

முடிவுரை

இவ்வழிபாடுகள் யாவும் தொழிலின்போது நிகழும் அபாயங்கள், அனர்த்தங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்தல் மற்றும் வளத்தினைப் பெருக்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவையாவும் தேயிலை உற்பத்தி முறையோடு இணைந்தவகையில் அமைந்துள்ளதைக் காணலாம். அதாவது நாற்று நடுதல், கொழுந்து பறித்தல், கவ்வாத்து வெட்டுதல், மட்டம் வெட்டுதல், கொழுந்தினைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லுதல், தொழிற்சாலையில் கொழுந்தினைத் தேயிலைத் தூளாக்குதல் எனும் செயற்பாடுகளை மையமிட்டதாக அமைந்துள்ளன.

அத்துடன் அத்தொழிலில் ஈடுபடுபவர்களின் பால்நிலைக்கு ஏற்ப வழிபாட்டு முறைகள் மாறுபட்டு அமைந்துள்ளமையைக் காணலாம். குறிப்பாக தவறணைமுனி, கவ்வாத்துமுனி, கம்பிமுனி, றோதைமுனி ஆகிய வழிபாடுகள் ஆண்களால் மட்டும் நிகழ்த்தப்படுகின்றன. கொழுந்துசாமி, மட்டத்துசாமி ஆகியன பெண்களின் தலைமையில் இடம்பெறுகின்றன.

பெண்களின் தலைமையில் இடம்பெறும் வழிபாட்டில் ஆண்கள் சிலர் இணைந்து கொள்வது வழமை. இவ்வேறுபாடு தொழில் பகுப்போடு தொடர்புடையதாகும். தொழிற்சாலை வேலைகள், கவ்வாத்து வெட்டுதல், தவறணைத் தொழில்கள் போன்றன ஆண்களினாலும் சில இடங்களில் ஆண்களின் தலைமையில் சில பெண்களும் இணைந்தும் தொழில்புரிகின்றனர்.

இதனால் அத்தொழில்களோடு இணைந்த வழிபாடுகள் ஆண்களால் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறே கொழுந்து பறித்தல், மட்டம் வெட்டுதல் என்பன பெண்களால் முன்னெடுக்கப்படுவதால் அத்தொழிலோடு இணைந்த வழிபாடுகள் பெண்களின் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆண் – பெண் இயல்புகள், அவர்களின் வாழ்வியல் முறை என்பனவற்றுக்கேற்ப அத்தெய்வங்களின் வழிபாட்டு முறைகளும் வடிவம் பெற்றுள்ளன. பெண்களால் முன்னெடுக்கப்படும் வழிபாடுகள் ஆண்கள் தமது தொழிலின் நிமித்தம் நிகழ்த்தும் வழிபாடுகளிலிருந்து பல்வேறு வகைகளில் வேறுபட்டுள்ளன. குறிப்பாக, கொழுந்துசாமி, மட்டத்துசாமி வழிபாடுகளில் பலியிடலோ மது, சுருட்டு முதலியன படைக்கப்படுவதோ இல்லை.

பதிலாக பொங்கல், கடலை, பச்சரிசி அல்லது துள்ளுமா, பால், பழங்கள், வெற்றிலை, பாக்கு முதலியனவே படைக்கப்படுகின்றன. அத்தோடு அவற்றினை ஆண், பெண் இருபாலாரும் உண்பதோடு வீடுகளுக்கும் எடுத்துச் செல்வர். ஆண்களின் வழிபாட்டில் படைக்கப்படும் உணவு வீடுகளுக்கு எடுத்துச் செல்வதோ பெண்களுக்கு வழங்குவதோ இல்லை.

இதன்படி தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்த தமிழர்கள் தமது பூர்வீக வழிபாட்டு மரபுகளைப் புதிதாகத் தோன்றிய பெருந்தோட்டத் தொழில்முறைகளோடு இணைவுபடுத்தியதால் மேற்கூறிய புதிய கடவுளர்களும் அவர்களுக்கான வழிபாட்டு முறைகளும் தோற்றம்பெற்றுள்ளன.

தேயிலை உற்பத்தியில் நாற்று நடுதல்முதல் தேயிலைத் தூள் உருவாக்குதல்வரை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு கடவுளர்கள் உருவாக்கம் பெற்றுள்ளதோடு அக்கடவுளர்களுக்கான பிரத்தியேக வழிபாட்டு முறைகளும் ஏற்பட்டுள்ளன. எனவே, ஒரு சமூகம் எவ்வகையான உற்பத்திமுறையினைச் சார்ந்திருக்கிறதோ அதற்கேற்ப அச்சமூகத்தின் கடவுளர்களும் அக்கடவுளர்களின் வடிவமும் குணமும் மாறுபட்டு அமையும் எனலாம்.

 – எம்.எம். ஜெயசீலன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

Leave a Reply