தெற்கிருந்த நக்கர் கோவில் – கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் (ப.நி)

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. சிறப்பு மிக்க இந்நகரில் வரலாற்றுச் சிறப்புகள் மிக்க பல திருக்கோவில்கள் உள்ளன.

காஞ்சி மாநகரின் நடுநாயகமாக விளங்கும் காமாட்சி அம்மன் திருக்கோவில் அருகில், வடக்கு மாடவீதியில் கலையழகு மிக்க கற்றளி திருக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்காகப்பட்டு வரப்படுகிறது. இக்கோவில் “சொக்கீஷர் கோவில்” என்றும் “கௌசிகேசுவரர் கோவில்” என்றும் அழைக்கபடுகிறது.

இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை உமாதேவியார் வழிபட்டு கருமை நிறம் மாறி பொன்னிறம் அடைந்ததால், இக்கோவில் இறைவன் கௌசிகேஸ்வரர்என அழைக்கப்படுவதாக புராண வரலாறு கூறப்படுகிறது.

கல்வெட்டு செய்தி:

இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில், கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு 15 வது எனத் துவங்கி, உத்தமசோழன் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது. மூத்தவாள் பெற்ற கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் என்பவனுக்கு காஞ்சிபுரம் மாநகரத்தார் நிலம் ஒன்றினை விற்றுள்ளார்.

அந்நிலம் இக்கோவிலில் உள்ள “கரிகாலச் சோழ பிள்ளையார்” வழிபாட்டிற்காகக் கொடையாக அளிக்கப்பட்டது. இக்கோவிலில் வழிபாட்டில் இருந்த கரிகால சோழப் பிள்ளையாருக்கு சந்திய விளக்கு ஒன்று வைக்க சிவப்பிராமணர்கள் மூன்று பழங்காசுகள் பெற்றுக்கொண்டதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.

திருக்கோவில் அமைப்பு:

இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் வாயலில் நந்தி பெருமான் எழுந்தருளியுள்ளார். கருவறையில் எழுந்தருளியுள்ள இறைவன் தொன்மையான சிவலிங்க வடிவிலே காட்சித் தருகிறார். நாள்தோறும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. கருவறையின் வெளிப்புறச் சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன.

தெற்குப் பகுதியில் முதலில் தேவக்கோட்டதில் விநாயகரின் வடிவம் வழிப்பட பெறுகிறது. பத்ம பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். அங்குசம், பாசம் ஏந்தியுள்ளார். துதிக்கைப் பகுதி மட்டும் சிதைந்துள்ளது.

பீடத்தின் கீழே மூஷிக வாகனமும், இரு பூதகணங்களும் அழகாகக் காட்சி அளிக்கின்றன. இக்கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கரிகால சோழப் பிள்ளையார் என்ற வடிவம் இவரே ஆகலாம் எனக் கருத வாய்ப்பு உள்ளது. மற்ற தேவகோட்டங்களில் தொன்மையான சிற்ப வடிவங்கள் இல்லை.

இக்கோவில் முன்பு மிகவும் பழுதடைந்து, சிதைந்து விளங்கியது. சிதைந்த நிலையில் இருந்த இக்கோவிலைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை உரிய முறையில் பழுதுபார்த்துப் பாதுகாத்தது. எவ்வாறு இக்கோவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது என்பதைத் தொல்லியல் துறை வெளியிட்ட தமிழகம் டிசம்பர் 1970 இதழ் 36-ல் நிழற்படங்களுடன் வெளியிட்டுள்ளது.

திருக்கோவில் அதிட்டானம் முதல் சிகரம் வரை கற்கோவிலாக விளங்குகிறது. அதிட்டானம் பாதபந்த வகையிலான அமைப்புடன் விளங்குகிறது. உபானவரி தாமரை மலர் இதழ் போன்று அமைந்துள்ளது. அதனை அடுத்து ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டிகை என்ற கட்ட அமைப்புகளுடன் விளங்குகிறது.

சுவர் பகுதி அரைத்தூண்களுடன் காட்சி தருகிறது. சுவர் பகுதியில் காணப்படும் தேவகோட்டங்களின் அமைப்பு சிறப்பானது. முதல் தேவகோட்டம் தவிர மற்ற நான்கு தேவகோட்டங்களின் மேற்பகுதியில் கபோதகம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

மகர தோரண சிற்பங்கள்:

முதல் தேவகோட்டத்தின் மேற்ப்பகுதியில் மகர தோரணத்தின் நடுவே காணப்படும் புடைப்புச் சிற்பம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இறைவனது மடியில் வீற்றிருக்கும் உமாதேவியை சாந்தப்படுத்தும் நிலையில் ஊடல் தீர்க்கும் நாயகராகக் காட்சி தருகிறது. அடுத்து நடனமாடும் நிலையில் விநாயகர் காட்சி தருகிறார்.

அடுத்து மரத்தினடியில் எழுந்தருளியுள்ள இலிங்க வடிவிலான இறைவனை உமாதேவியார் வழிப்படுகிறார். அவரது காலுக்கு கீழே தூபம், சங்கு, தீபம், மணி, ஆகிய பூஜைப் பொருட்கள் காணப்படுகிறது.

காஞ்சிபுரத்தின் தல வரலாற்றை இச்சிற்பம் எடுத்துக்காட்டுகிறது. மூன்று சிற்பங்களும் இத்தேவகோட்டத்தின் மேலே கபோதம் போன்ற அமைப்பு அமைக்கப்படவில்லை எனலாம்.

அடுத்த தேவ கோட்டத்தின் மேற்பகுதியில் தக்ஷிணாமூர்த்தியின் அமர்ந்த கோலத்தையும், எதிரே தேவி பணிவுடன் நின்று கொண்டிருக்கும் கோலத்தையும் காணலாம்.
அடுத்துள்ள தேவகோட்டங்களில் சிற்பக்காட்சி ஏதுமில்லாவிட்டாலும் அதற்குரிய தெய்வங்கள் வாகனங்கள் காணப்படுகிறன. மேற்கில் தாமரை, வடக்கில் அன்னம், அடுத்துள்ள துர்க்கை தேவகோட்டத்தின் மேலே சிம்மத்தின் மீது தேவி அமர்ந்திருக்கும் காட்சி காணப்படுதிறது.

கருவறையின் உத்திர பகுதி கபோதகதின் கீழே பொதுவாக சிவகணங்கள் காட்டப்பெறும். ஆனால் இங்கு தாமரை மறை வேலைப்பாடுகளுடன் காணப்படுவது தனிச்சிறப்புடன் விளங்குகிறது.
கபோதகத்தில் உள்ள நாசிக்கூடுகளில் நடுவே சிறுசிறு சிற்பங்கள் அழகாகக் காட்சி தருகின்றன.

லிங்கத்தை வழிபடும், கௌஷிகி என்ற காளி , அம்பாள், மயில், நாரை, குரங்கு வழிபடும் காட்சிகள், லிங்கத்தின் மீது பால் சொரியும் பசு, காலஹஸ்தி தல வரலாறு, லிங்கத்திருமேனி மூன்றாக காட்சி தரும் திரியம்பகேஸ்வரர் போன்ற சிற்பங்கள் கருத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. கூரைப்பகுதியான கபோதகத்தின் மொத்தம் 24 நாசிக்கூடுகள் அமைந்துள்ளன.

விமானம் ஏகதள விமானமாக அமைந்துள்ளது. கழுத்துப் பகுதியில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் யோகநரசிம்மர், வடக்கில் பிரம்மா ஆகிய சிற்ப வடிவங்கள் அமைந்துள்ளன.
அருகில் நந்தியின் வடிவங்களும் அமைந்துள்ளன. அருகில் நந்தியின் வடிவங்களும் உள்ளன. வட்ட வடிவான விமானம் முழுவதும் கல்லால் ஆனது. ஸ்தூபியும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் அமைந்துள்ள கீர்த்திமுக மகா நாசிக்கூடுகளில் நடுவே ஏகதள விமானத்தின் அமைப்பினைக் காண முடிகிறது.

சிறிய கோவிலாக விளங்கினாலும், அழகிய சிற்பங்கள் அடங்கிய இக்கோயில் முற்கால சோழர் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.

வரலாற்றுச் சின்னமாக தமிழக அரசு தொல்லியல் துறை போற்றி பராமரித்து வருகிறது. காஞ்சிபுரம் செல்லும் பொழுது இக்கோவிலை அவசியம் சென்று பார்த்து வருவோம்.

Leave a Reply