துங்கபத்தரை ஆற்றங்கரைப் பயணம் – Ar. ரா. வித்யா லட்சுமி

ஹம்பி மரபு முகம் முடிந்து அடுத்த நாள் காலை விஜயநகரப் பேரரசின் இன்றைய ஹம்பியை சுற்றி ஒரு சிறிய நடை போகலாம் என்று விடுபட்ட சில இடங்களை மட்டும் பார்க்கவேண்டி கிளம்பினோம். காலை ஆறு மணி இருக்கும், கேமரா, கொஞ்சம் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு, விருபாக்க்ஷா கோவிலிற்கு எதிரில் இருக்கும் சந்தையையும், ஒற்றை கல்லில் செய்த நந்தியையும் தாண்டி வந்தோம்.

நேற்றைய பொழுது, அச்சுதராயர் கோவில் சென்ற போது, நண்பர் கார்த்தி துங்கபத்ரையின் கரை வழியே அக்கோவிலை அடைய இன்னொரு பாதை இருப்பதாய் சொன்னார். சரி, அவ்வழியில் செல்வோம் என்று, அந்த பாதையில் நடந்தோம். சில அடி தூரத்திலேயே துங்கபத்ரையின் கரை தெரிந்தது. மிக அழகிய காட்சி அது, நதியின் இருபுறமும் கற்குவியலாய் மலைகள், சில மண்டபங்கள் தூரத்தில் விருபாக்ஷா கோவிலின் கோபுரம் என்று மிக ரம்யமாய். அங்கிருந்து ஒரு கல் பாதை ஆரம்பித்தது.
அதில் மிதிவண்டியிலும் பயணிக்க தோதாக வடிவமைத்திருக்கின்றனர். அப்படியே ஒரு இரண்டு கற்களை சேர்த்து ஒரு வழி அமைத்து, தோரண வாயலுக்குள் செல்வதைப்போன்று ஒரு அழகிய பாதையை உருவக்கியுள்ளனர்.அங்கிருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய மண்டபமும், நதிக்கரையில் கிழே இறங்கி குளிக்கும் வசதியும் உள்ள ஒரு படித்துறை உள்ளது. அங்கு பாறையில் சிவலிங்கமும், அதை சுற்றி மனிதர்களின் கால் தடங்களும் வெட்டப்பட்டுள்ளது.

நதியின் கரையில் சிலர் அவர்களின் முன்னோர்களுக்கு இறுதி கடன்கள் செய்துக்கொண்டிருந்தனர். அங்கே குளிக்கவும் வசதிகள் இருந்தன. அப்படியே அங்கு அமர்ந்தோம், நம் இடப்பக்கமும் நதி, வலப்பக்கமும் நதி. அங்கு நதி வளைந்துச் செல்கிறது. அங்கிருந்து ஆற்றின் எதிர்க்கரையில் இருக்கும் ஒரு கோவில் தெரிந்தது. பரிசலில் செல்ல முடியும் என்று அறிந்தோம்.

அப்படியே அருகில் ஒரு கோவில் இருக்க, உள்ளே சென்றோம் அழகிய புடைப்பு சிற்பமாக ராமன், சீதை மற்றும் இலக்குவன். பத்து அடிக்கும் உயரமான சிற்பம். மிகுந்த அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தது. ஒரு பாறையில் வடித்ததை சுற்றி மண்டபம் எழுப்பி இருகிறார்கள். நிறைய குரங்குகள் இருந்தன. அங்கு இருந்த ஒருவர் மேலே அனுமன் கோவில் இருப்பதாக கூறினார்.

கோவிலின் அருகில் அதற்கான வழிசெல்ல, அங்கு முதலில் ஒரு சிவன் கோவில் இருந்தது. ஒரு சிறிய குன்றின் மேல் இருந்தது. ஆனால் அது ஒரு விஷ்ணு கோவிலாக வடிவமைக்கப்பட்டு சிவன் கோவிலாக பெயர் மட்டும் மாற்றி இருந்தது. அங்கு இருந்த சிலைகள் ஏதும் இப்போது இல்லை, தூண்களில் முழுக்க சங்கும், சக்கரமும், கிருஷ்ணரின் சிலைகளும் வடித்து வைத்துள்ளனர். அப்படியே கிழே இருந்த ஒரு மகிழ மரத்தின் கீழ் அமர்ந்து அங்கிருந்து தெரிந்த வாரஹர் கோவில், ரங்கநாதர் கோவில், அச்சுதராயர் கோவிலின் சந்தை யின் ஆரம்பம் எல்லாம் பார்த்துக்கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.

அங்கிருந்து ஒரு சிறிய முன்மண்டபமும், கருவறையும் கொண்ட ரங்கநாதர் கோவிலை அடைந்தோம். ஐந்து நிமிட நடைதான். அடித்தளத்தை உயர்த்தி கட்டி , முன் மண்டபத்தில் இருந்து நதிக்கரை தெரியுமாறு வடிவமைப்பு செய்துள்ளனர். உள்ளே அழகிய சிறிய ரங்கநாதர் சிலை. வௌவால்களால் அதிகம் சிதைந்துள்ள கோவில்.

அங்கிருந்து வராஹா சந்நிதி. கொஞ்சம் சிதைந்த ராஜகோபுரம், அதிகமாய் சிதைந்த சுற்றுசுவர் என்று மனதை வருத்தும் நிலையில் உள்ள கோவில். ஹம்பி முழுவதுமே அழிந்த நிலையில் இருந்தாலும், சில நேரங்களில் இது நிலையாக வழிபாட்டில் இருந்தபோது எவ்வளவு அழகாய் இருந்திருக்கும் என்ற எண்ணம் வாராமல் இல்லை.

அங்கிருந்து ஒரு பெயர்பலகை, விட்டலா கோவில் என்று எழுதி இருக்க, முத்தைய நாள், விட்டலா கோவிலுக்கு வண்டியில் சென்றோம், இப்போது இங்கு ஒரு பலகையில் அந்த கோவிலின் பெயர் இருந்ததும் கொஞ்சம் குழம்பிப் போனோம்.

அருகில் இருந்த ஒரு காவலாளியிடம் அதை பற்றி கேட்கவும், அதே விட்டலா கோவில்தான், நதிக்கரையின் வழியே செல்லும் பாதை என்று சொல்லி, வழியையும் சொன்னார். அப்படியே நடக்க துவங்கினோம் துங்கபத்ரையின் அழகில் மயங்கியபடி. அருகில் இன்னொரு சிறிய மண்டபமும், ஒரு பெருமாள் கோவிலும் இருந்தது.

மண்டபத்தின் மேல் இருந்து நதியும், விருபக்ஷர் கோவிலும் தெரிந்தது. மேலே சென்று பார்த்தால் இன்னும் நிறைய தூரம் தெரியலாம். அங்கிருந்து கொஞ்சம் அமர்ந்து இயற்கையை ரசித்துவிட்டு மீண்டும் நடந்தோம்.
சிறிது தொலைவில் கருப்பு நிற குரங்குகள் அதிக அளவில் காணப்பட்ட ஒரு மண்டபமும், பல சிதைந்த மண்டபங்களும் இருந்தது. அங்கிருந்து ஒரு நுழைவாயல் தெரிந்தது, சிதைந்த கோட்டை சுவர்கள் தெரிந்தன , விட்டால கோவிலும் தெரிந்தது.

கிட்டத்தட்ட ஒரு மூன்று , நான்கு கிலோமீட்டர் நடந்திருப்போம். அதன் வழியில் அரசரின் துலாபாரமும், விட்டலா கோவிலின் சுற்றுசுவரும் கடந்தோம். வழியே அழ்வார்களின் கோவில்களும், விட்டலா கோவிலின் சந்தைகளும் பார்த்துவிட்டு ஒரு மண்டபதினும் நுழைந்தோம்.
இராமாயண சிற்பங்களினால் அந்த மண்டபம் நிறைந்து வழிந்தது. நேரம் என்ன வென்று தெரியாத போதும், பசி வயிற்ரை கிள்ளியதால், அதிக நேரம் சுற்றிவிட்டோம் என்பது மட்டும் புரிந்தது. கடைசியில், மணி பன்னிரண்டு ஆனது என்று அருகில் இருந்தவரிடம் கேட்டுகொண்டோம். கோவிலின் அருகின் எந்த ஒரு சுற்றுலா வாகனமும் வர அனுமதியில்லை. அனைத்து வாகனங்களும் 1 கி. மீ தொலைவிலேயே நிறுத்தி வைக்கப்படும். கோவிலில் இருந்து மின்வாகனத்தின் மூலம் முக்கியச் சாலைக்கு வந்து, அங்கிருந்த ஆட்டோவின் மூலம் எங்களின் தங்குமிடம் வந்து சேர்ந்தோம். இனிதான அந்த

ஹம்பியின் பயணம் நிறைவுற்றது. ……

Leave a Reply