திருவள்ளூர் மாவட்டக் கோயில்கள் – 2 – பெ. தாமரை

எங்களது திருக்கோயில்கள் உலாவின் இரண்டாவது தவனையில் நாங்கள் மேலும் சில திருவள்ளூர் மாவட்டக் கோயில்களைத் தரிசித்தோம்.

 

ஞாயிறு கோயில்:

பொன்னேரி வட்டம், ’ஞாயிறு’ என்னும் இடத்தில் அமைந்துள்ளது புஷ்பரதேஸ்வரர் கோயில் (ஞாயிறு கோயில்). செங்குன்றத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பொன்னேரியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது இது. கோயிலுக்குச் செல்லப் பேருந்து வசதி உள்ளது. நாங்கள் பொன்னேரியிலிருந்து இருசக்கரவாகனத்தில் தச்சூர் கூட்டுச்சாலை, காரனோடை செல்லும் சாலையில் சென்றோம். நாங்கள் பெரும்பாலும் கூகுள் வரைபடத்தை நம்பியே பயணிப்போம். காரனோடை மேம்பாலம் அருகில் உள்ள கிளை வழிச்சாலையில் இருந்து 10 கி.மீ எனக் காட்டவும், ’இன்னும் இவ்வளவு தூரமா!’ என்றே இருந்தது. ஆனால் செல்லச் செல்ல ’இன்னும் தொலைவு நீளாதா’ என்று ஏங்கும் அளவிற்குக் கண்களுக்குக் குளுமையாகவும், மனத்திற்கு அலுக்காத பயணமாகவும் சுற்றிலும் பசுமை… பசுமை… பசுமைதான்!

கோயிலை நெருங்குகையில் முதலில் நம்மை வரவேற்பது குளம்தான், அதையடுத்துதான் கோயில்! கோயில் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கோயிலினுள் நுழைந்ததும் கோயில் பல புணரமைப்புக்குட்பட்டது என அறிந்துக்கொள்ள இயல்கிறது. இருந்தும் உள்ளேயும் பசுமை நிறைந்து அழகாக நம்மை ஈர்க்கிறது. கருவறை கீழ்பகுதி கற்றளியாகவும் விமானம் சுதையாகவும் உள்ளது.
மூலவர்: புஷ்பரதீஸ்வரர்
அம்மன்: சொர்ணாம்பிகை
தலமரம்: நாகலிங்கம், திருவோடு, செந்தாமரை

கருவறை வெளிச்சுற்று சுவர்களில் மிகவும் சிதிலமடைந்த கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இங்குள்ள கல்வெட்டுகள் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரப்பாண்டியன் மற்றும் விஜயநகர மன்னர் காலத்தன. தலவிருச்சங்களில் ஒன்றான திருவோடு மரத்தையும் இங்கு பார்க்கமுடிகிறது.

இங்குதான் சுந்தரரின் இரண்டாவது மனைவி சங்கிலி நாச்சியார் அவதரித்ததாக கூறப்படுகிறது. அவருக்குத் தனி சன்னிதியும் இங்கு உள்ளது. கருவறை, முகப்பு மண்டபம் தவிர்த்து பிற சன்னிதிகள் சமீபத்தியனவாக உள்ளன.

இது சூரியனுக்கானப் பரிகாரத்தலமாக உள்ளது. கருவறையின் உட்சுவரில் உள்ள சூரியக் கடவுளிற்குச் சிறப்பு வழிபாடு நடைப்பெற்று வருகிறது.
இந்த அழகிய கோயிலில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் சுற்றினோம். கல்வெட்டுகளில் எதையாவது படிக்க முடிகிறதா என்று பார்த்து (மிகவும் சிதைந்துள்ளது, கல்வெட்டு எழுத்துக்களைத் தேடி உற்றுப் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குக் கிடைக்கும், அவ்வளவு மங்கியுள்ளது!), திருவோட்டு மரத்தை வியந்து, மிகப்பெரிய நாகலிங்க மரத்தை நாலைந்துமுறை வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியான மனநிலையுடன் திரும்பினோம்.

திருவலிதாயம்:
பாடி அருகில் உள்ள சிவாலயம், பாடல் பெற்ற தலம். ‘பாடி சிவன் கோயில்’ என்றே பெரும்பாலும் அறியப்படுகிறது. கோயில் கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோயிலின் வெளிப்புறம் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், கருவறையும் அதன் வெளிப்புறச்சுவரும் பழைமையைக் காட்டுகின்றன. கல்வெட்டுகள் சில இடங்களில் மங்கியிருந்தாலும், பெரும்பாலும் படிக்கக்கூடியதாகவே உள்ளன. மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டுகள் மற்றும் விஜயநரக மன்னர்களின் கல்வெட்டுகளும் உள்ளன. புதிதாக கல்வெட்டுகள் படிக்கப் பயில்வோரைக் கண்டிப்பாக ஈர்க்கக்கூடிய கோயில்.

இறைவன்: வலிதாயநாதர்
இறைவி: தாயம்மை
கருவறை தூங்கானை மாட வகையைச் சார்ந்தது. கோயிலினுள் நுழைந்ததும் வலப்பக்கத்தில் குருவிற்குத் தனி சன்னிதி உள்ளது. இக்கோயில் குருவிற்குப் பரிகாரத்தலமாக உள்ளது. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (இக்கோயிலில் முருகனுக்குத் தனி சன்னிதி உள்ளது), இராமலிங்க அடிகளார் ஆகியோரால் பாடப்பெற்றத் தலமாகும்.

வடதிருமுல்லைவாயில்:
பாடியிலிருந்து பத்து கி.மீ தொலைவில் சென்னை-ஆவடி செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து உள்ளடைந்து திருமுல்லைவாயில் என்னுமிடத்தில் மாசிலாமணீஸ்வரர் கோயில் உள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது, நடந்தே சென்றுவிடலாம்! கோயிலினுள் நுழைவதற்கு முன் மிகப்பெரிய மதிற்சுவரும் அழகிய குளமும் கண்கவர் சிற்பங்களைக் கொண்ட பதினாறுகால் மண்டபமும் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. வருத்தமான விஷயம் என்னவென்றால் நாங்கள் சென்றிருந்தபோது கோயில் சீரமைப்பு பணியில் இருந்ததினால் கோயில் கோபுரம், விமானங்கள் மூடப்பட்டும், சாரங்கள் நிறைந்தும் அவற்றின் அழகை முழுக்க இரசிக்க முடியாத நிலையில் இருந்தன. இக்கோயில் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. நுழையும் போதுள்ள விநாயகருக்குப் பின்னால் சுதையாலான தலவரலாற்றுச் சிற்பம் உள்ளது. இக்கோயிலின் கருவறை விமானமும் தூங்கானை விமான வகையைச் சேர்ந்தது. இக்கோயில் மூன்றாம் இராஜராஜன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாமென்றும், அவன் காலத்தில் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மிக அழகிய அர்த்தமண்டபமும், கருவறைச் சுற்றுச்சுவர் பட்டிகளில் கல்வெட்டுகள் நிறைந்தும் காணப்படுகின்றன.

இறைவன்: மாசிலாமணீஸ்வரர்
இறைவி: கொடியிடையம்மன்
கருவறைக்கு முன் இரு எருக்கத்தூண்கள் பூணிடப்பட்டு உள்ளன.
தலமரம்: முல்லை
சுந்தரர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகளாரால் பாடப்பெற்றத் தலம்.

மண்ணாரீஸ்வரர் பச்சையம்மன் கோயில்:

மீஞ்சூர் திருவுடையம்மன் கோயில் அருகே உள்ளது போன்றே, இங்கேயும் கொடியிடையம்மன் கோயிலிற்கு முன்பே இந்தக் கோயில் உள்ளது. இக்கோயிலிலும் மிகப்பெரிய அய்யனார், குதிரை சிலைகள் உள்ளன. இந்தக் கோயில் குலதெய்வ வழிபாட்டில் உள்ளக் கோயில். இங்குள்ள அம்மனுடைய உற்சவ சிலை மிகமிக அழகானது. சிலையைப் பார்த்த பின் அதிலிருந்து பார்வையைத் திருப்புவது மிக சிரமமானது. அத்தனை அழகு.

தொடர்புடையதாகக் கருதப்படும் கொடியிடை, வடிவுடை, திருவுடை ஆகிய மூன்று அம்மன் கோயில்களில் இரண்டு கோயில்களுக்கு அருகில் மண்ணாரீஸ்வரர் – பச்சையம்மன் கோயில் அமைந்திருப்பதைப் பார்த்ததும் மூன்றாவதான திருவொற்றியூர் கோயிலின் அருகிலும் மண்ணாரீஸ்வரர் கோயில் உள்ளதா என்று அறியவும், அவ்வாறு இருப்பின் இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று அறியவும் ஆவல் தோன்றியது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மற்றும் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள, நாங்கள் கண்டு இரசித்த இக்கோயில்களை நீங்களும் காண விழைவீர்கள் என்றே நம்புகிறோம். பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் காலவௌ¢ளத்தின் ஓட்டத்தில் பட்டும்படாமலும் இருக்கும் இவ்வரலாற்று ஆன்மிகச் சின்னங்களைக் காண யாருக்குத்தான் ஆவல் எழாது? கண்டு வந்தால் உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள். நன்றி!

Leave a Reply