திருவரங்கன் உலா

இந்த மழை காரணமாகத் தகவல் தொழில்நுட்ப கருவிகள் எதுவும் வேலை செய்யாமல் போகவே, என்ன செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் வருடக்கணக்கில் வாங்கி அப்படியே வைத்திருக்கும் புத்தகங்களை நோக்கிச் சென்றது மனம். நான்கு பாகங்கள், இரண்டே நாட்களில் படித்து முடித்துவிட்டேன். கதையின் சுவாரஸ்யமும், நிறைய நேரமும் கிடைத்தமையால் எந்த மாற்று சிந்தனையும் இல்லாமல், இனிதே திருவரங்கனோடு அவரின் உலாவில் சுற்றி வர முடிந்தது.

கதைக்களம் திருவரங்கம், அதைச் சுற்றி நடந்த சுல்தான்கள் படையெடுப்பு, விஜயநகர சாம்ராஜ்யத்தின் எழுச்சி. பெரிய சரித்திர ஆதரங்களை கொண்டு, ஆசிரியர் சீரிய ஒரு கதையையும், வரலாற்றையும் நம்மிடம் கொண்டு வந்திருக்கிறார்.

சுல்தான்களின் படையெடுப்பின்போது, உற்சவர் திருவரங்கனை அரங்க நகரிலிருந்து பாதுகாப்பாய் வெளியே அனுப்பி விடுகின்றனர். அவர் நாச்சியார்களையும் தனியே அனுப்பி விடுகின்றனர். அவர் பல இன்னல்கள் கடந்து, தன் ஆபரணங்கள் கவரப்பட்டு, ஆடைகள் இழந்து, நெய்வேதனம் இல்லாது, காடு, மலை, ஆறு என்று பல ஊர்களில் சுற்றி, சில நேரங்களில் கொண்டாடப்பட்டும், சில நேரங்களில் மறைந்தும் ஒரு நாற்பது வருடங்களுக்கு மேல் போராடி எப்படி மீண்டும் தன் அரங்க நகருக்கே வருகிறார் என்பததான் கதை.

கதையின் கதாநாயகர் குலசேகரன், அவர் மகன் வல்லபன், இவர்கள் இருவருமே எதிர்பாராமல் இந்தக் கதைக்குள் வந்து அவர்களின் வீர தீரத்தால் கதையின் நாயகன் ஆகிறார்கள். அதுபோகப் பல வைணவ குருக்களைக் கதை நமக்கு அறிமுகம் செய்கிறது.

அந்த உலா, அரங்க நகரில் தொடங்கி, அழகர் கோயில், எட்டயபுரம் வழியே நாகர்கோயில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு சென்று, அங்கிருந்து மேல்கோட்டை, சத்திய மங்களம் சென்று, திரும்ப மேல்கோட்டை வந்து, திருப்பதி சென்று, கண்ணனூர் வந்து மீண்டும் அரங்க நகரை வந்து அடைகிறது.

பல சரித்தர குறிப்புகள் தந்து, கதையை நகர்த்திருக்கிறார் ஆசிரியர். முதல் சில பக்கங்களிலேயே ஆசிரியரின் நடை நம்மைக் கவர்ந்து விடுகிறது.

அவரின் அரங்க நகர போர், கண்ணனூர் கோட்டை முற்றுகை, சுல்தான்களின் வாழ்க்கை முறை, தமிழகத்தில் அவர்கள் செய்த அடக்குமுறை, அந்தத் தலைமுறை மக்களின் எதிர்பார்ப்பு, விஜயநகர சாம்ராஜ்யத்தின் எழுச்சி, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களையும், மதத்தைக் காக்க அவர்களின் முயற்சி, காடுகள், அவற்றைச் சார்ந்த மனிதர்கள், அவர்களின் வாழ்வியல் முறை, கள்வர்கள், அவர்களின் வழக்கங்கள் என்று நிறைய செய்திகள் கொண்ட புத்தகம் இது.

காவிரியும், குலசேகரனும் நம்மோடு நிறைய பேசுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து நமக்கும் அரங்கன் படும்பாடு எப்போது முடிவிற்கு வரும் என்று எண்ணம் வரச்செய்யும் அளவிற்கு ஆசிரியர் கருத்துக்களை அழகாய் கோர்த்திருக்கிறார். ஒரு அழகிய பழைய தமிழ் படம் பார்க்கும் படி இருக்கிறது புத்தகம்.

மூன்றாம், நான்காம் பாகத்திற்கு ஆசிரியரின் பெரிய சரித்திர சான்று, “மதுரா விஜயம்” என்னும் நூல். இது கங்கா தேவி என்னும் ராணி இயற்றியுள்ளார். இவர், விஜயநகர சாம்ராஜியத்தை சேர்ந்த, குமார கம்பணன் அவர்களின் மனைவி ஆவர். இவரின் புத்தகத்திலிருந்து, பல குறிப்புகள் கதைக்கான தளமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

வரைப்படங்களும், சித்திரங்களும் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. திரு. கோபுலு அவர்கள் சித்திரங்கள் வரைந்துள்ளர்கள். அருமையான வரைபடங்கள் கொண்டு கதையும், திருவரங்கனும் எப்படி நகர்கிறார்கள் என்று சொல்வது புரிதலை அதிகமாக்குகிறது.

நாம் அதிகம் சரித்திர நாவல்களில் படித்திடாத ஒரு கதைக்களம். எப்போதும் அரசர்களும், அவர்களின் போர், அரசியல் சண்டைகள், குடும்ப பகை போன்றவையே எப்போதும் கதைக்கான கருவாக இருக்கும்.

ஆனால் இங்கு, ஒரு சிலை, அதுவும் அரங்க நகரை ஆட்சி செய்யும், ரங்கரின் சிலை, அவரே அதன் மன்னர், அவரின் கதை இது. ஆசிரியர் ஊர்களின் பெயரைக் குறிப்பிடும் போது, அதன் தற்போதைய பெயர் அதன் அந்நாளைய முக்கியத்துவம் என்று பல சான்றுகள் தருகிறார். ஒரு சரித்திர வரலாற்று நாவல் என்பதை மீறிப் புத்தகம் பல பல சரித்திர வரலாற்று புத்தகங்களின் பெட்டகமாகவே உள்ளது.

நேரம் கிடைத்தால், குல சேகரனையும், வாசந்திகாவையும், ஹேம லேகாவையும், வல்லபனையும், மதுராவையும், முக்கியமாகத் திருவரங்கனையும், விஜய நகரத்தையும் கண்டுவர “திருவரங்கன் உலா” படியுங்கள்.

வித்யா லட்சுமி

Leave a Reply