தாராசுரம் (நேரிசை ஆசிரியப்பா) -கவிஞர். வெண்கொற்றன்

குடந்தை மாநகர் குடபுறம் தாரா
சுரமெனும் பதியில் சொல்லுக் கடங்கா
வடிவுடை சிற்பக் கடலினைக் கல்லில்
ஐரா வதீசர் அழகுத் தளியெனச்
செய்ராச ராசன் சிந்தை ஊறிய…………………5

அழகியற் காதலை அணுவினும் சிறிதாய்
அறியவும் நமக்கு ஆவ தாமோ?

பெரிய கோயிலின் சிறிய வடிவாய்
அரிய கலையின் அன்னை மடியாய்
அளவில் உயர்வு ஆக்கி டாது ……………….10

விளையும் அழகில் விண்ணை முட்ட
காணும் இடமெலாம் கண்ணைக் கவரும்
மேன்மைச் சிலைகள் மேவிட வைத்தான்
உத்தரம் தாங்கும் உன்னத தூண்களில்¢
சித்திரம் போலச் செதுக்கினன் கந்தன் …….15

தோன்றிச் வரனைத் தொலைத்த கதையை
நுண்ணிய படிமம் நூற்றுக் கணக்கில்
எண்ணி வியக்கும் எழிலொடு சமைந்தவத்
னண்கள் நிறுத்தித் னக்கிய மண்டபம்
சேணக் குதிரை சேருந் தேர்போல் …………..20

மாண்புற வடித்து மயங்க வைத்தான்
சுவரில் யாளி சுற்றி வைத்தான்
தவத்தர் கலைபயில் சமர்த்தர் பூதர்
கிங்கரர் பாணர் கேளிக்கை ஆடுநர்
சிங்கங்கள் காளை சீறு நாகங்கள …………..25

என்றுபல உருவும் எழிலுற அமைத்து
நின்றுநாள் முழுதும் நேத்திரம் வாயாய்க்
கலையைப் பருகிக் களிக்கும் வண்ணம்
வளவன்தான் செய்த வனப்புடை கோயிலைக்
கால நதியில் கரையா தெனவே ……………..30

சீலத் தோடு செய்தனன் கல்லில்
ஆயினும் இன்றோ அப்பெருங் கோயில்
தேய்ந்து வனப்பில் சற்றே சிறுத்துக்
காணும் உளத்தில் கவலை தோற்றிச்
செம்பியன் இதனைச் செய்தவந் நாளே…35

முன்பிருந் தாவல் முழுதும் தணிய
மெருகு குறையாத மேன்மையைக் கண்ணால்
பருகிடும் வாய்ப்பு படைத்தி லோமே
என்று மெல்ல எழுப்பிடும் வருத்தம்,
இன்று காணும் இதுவே பேறெனும் ……40

உண்மை உணர்ந்துளம் ஈசன்
தண்டளிர்ப் பாதம் தான்தொழு திடுமே!

முன்னுரை:

இவ்வாண்டு கோடை விடுமுறையில் தாராசுரம் போவது என்று முன்பே முடிவுசெய்திருந்தோம். அவ்வாறே கடந்த மே மாதம் 19ம் தேதி காலை தாரசுரம் சென்றடைந்தோம் (அதீத ஆர்வத்தால் விடிகாலை (நள்ளிரவு?!) 2.30 மணிக்கே அங்கு சென்று சேர்ந்துவிட்டோம், அது தனி கதை!) பார்வதி கோயிலையும் ஐராவதீசுவரர் கோயிலையும் எங்கள் ஊனக்கண்களாலும் இயந்திரக்கண்களாலும் உள்வாங்கிக் கொண்டே இருந்தோம் மணிக்கணக்காய்! ஊனக்கண் உள்வாங்கியப் பதிவுகளை நேரிசை ஆசிரியப்பாவாக இயந்திரக்கண் உள்வாங்கியவற்றோடு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறோம்!

அடிகள் 1 – 7:

குடைந்தை – கும்பகோணம், குடபுறம் – மேற்குத் திசை, தளி – கோயில், ராசராசன் – இரண்டாம் இராசராசன், சிந்தை – எண்ணம்.

கும்பகோண மாநகரின் மேற்குத் திசையில் ’தாராசுரம்’ எனும் இடத்தில், ஐராவதீசுவரர் கோயிலை அழகான கோயிலாக, வடிவமிக்க சிற்பங்களின் கடல் என்னும்படி செய்தமைத்த இராசரானின் மனத்தில் ஊறிய அழகியல் காதலை அணுவைவிடச் சிறிய அளவினும் உணர நம்மால் ஆகுமோ? (ஆகாது!)

அடிகள் 8 – 13:

பெரிய கோயில் – தஞ்சைப் பெருவுடையார்க் கோயில்.

தஞ்சையில் உள்ள பெருவுடையார்க் கோயிலின் சிறிய மாதிரியாய், ஆனால் அதனைப் போல அளவில் உயரத்தை வைக்காது, கோயிலில் அமையும் கலையின் அழகில் விண்ணை முட்டும் உயரத்தை எட்டும்படி, அரிய ஓவியச் சிற்பக் கட்டிடக் கலைகளின் அன்னைமடி என்று புகழும்படி, காணும் இடமெல்லாம் கண்ணைக் கவரும் சிறப்புமிக்க சிலைகள் பொருந்தும்படி வைத்து கோயிலை கட்டியுள்ளான்!

அடிகள் 14 – 16:

உத்தரம் – விதானம் / மேல்தளம், உன்னதம் – உயர்வு, சித்திரம் – ஓவியம், சித்திரம் போல சிற்பம் செதுக்கினர் என்பது புடைப்புச்சிற்பம் என்பதை உணர்த்தி நின்றது (கோயிலையும் சிற்பங்களையும் தச்சர்களும் சிற்பிகளும் செய்தனர் எனினும் அவர்களைச் செய்ய வைத்தவன் என்பதாலும், அவர்களை அச்செயலில் புரந்தவன் என்பதாலும் இராசராசனே கட்டினான், செதுக்கினான் என்று புகழ்ந்து உரைக்கப்பட்டது!), கந்தன் – முருகன்.

விதானத்தைத் தாங்கும் பெருமைமிக்க தூ‡கO™ கந்தபுராணக் கதை புடைப்புச் சிற்பமாய் வடிக்கப்பட்டுள்ளது.

அடிகள்: 17 – 21:

நுண்ணிய – மிகச் சிறியனவாய், படிமம் – புடைப்புச் சிற்பம், எழில் – அழகு, சமைந்த – அமைந்த, சேணக் குதிரை – சேணம் இடப்பட்ட குதிரை, மாண்பு – பெருமை, வடித்து – கல்லில் வடித்து (செதுக்கி).

எண்ணியெண்ணி வியக்கும்படியான அழகோடு நூற்றுக் கணக்கான நுண்ணிய சிற்பங்கள் அமைந்த அந்தத் தூ‡களா™ தூ‚A நிறுத்தப்படும் அம்மண்டபத்தைக் குதிரைகள் இழுக்கும் ஒரு தேரைப் போல அமைத்து காண்பவர் மனத்தை கவரும்படிச் செய்தான்.

அடிகள் 22 – 26:

தவத்தர் – யோகியர்/ முனிவர், கலைபயில் சமர்த்தர் – ஆடல் பாடல் போன்ற கலைகளில் திறன்மிக்கவர், பூதர் – பூதப் படைகள், கிங்கரர் – இசைக்கருவிகள் வாசிக்கும் குறுமனிதர், பாணர் – இசைவல்லுனர், கேளிக்கை ஆடுநர் – வித்தைகள் காட்டுபவர், நாகம் – பாம்பு / யானை.

கோயில் சுவர்களில் சுற்றிலும் யாளி, முனிவர், கலைவாணர், பூதர், கிங்கரர், பாணர், வித்தைக்காரர் போன்ற உருவங்களையும், சிங்கம், காளை, நாகம், (யானை) போன்ற உருவங்கள் பலவற்றையும் பலவிதமாக அழகுடன் அமைத்துவைத்து…

அடிகள் 27 – 29:

நேத்திரம் – கண், களிக்கும் வண்ணம் – மகிழும்படி, வளவன் – சோழன் (இராசராசன்), வனப்பு – அழகு.

(பலவகையான சிற்பங்களையும் கோயில் முழுக்க அமைத்து) கண்களே வாயாக (மனமே வயிறாக) நாள் முழுதும் நின்று அவ்வழகை உண்டு களிக்கும்படி சோழன் தான் அமைத்த அழகுடைய கோயில்…

(நாள் முழுதும் நின்று அழகைப் பருகினாலும் அவ்வேட்கை தீராது என்ற குறிப்புடையது இவ்வடிகள்! கண்கள் வாயாக உருவகிக்கப்பட்டதால் மனம் வயிறாகக் கொள்ளப்பட்டது, இது ஏகதேச உருவகம்!)

அடிகள் 30 – 34:

சீலம் – அழகு / ஒழுக்கம்.

(சோழன் தான் அமைத்த கோயில்) காலமென்னும் நதியின் ஓட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடக்கூடாது என்று அதனை அமைவோடு கல்லில் (கருங்கல்லில்) செய்து வைத்தான், ஆனாலும் இன்று அப்பெருங்கோயில் (கால ஓட்டத்தில்) சற்றே தேய்ந்து தன் அழகில் கொஞ்சம் குறைந்து நிற்கிறது, அதனைக் காணும் உள்ளத்தில் கவலையைத் தோற்றுவிக்கிறது…

அடிகள் 35 – 39:

செம்பியன் – சோழன், செய்தவந்நாளே – கோயிலைக் கட்டிய அக்காலத்திலேயே, முன்பிருந்து – (கோயிலின் முன்பாக இருந்து), ஆவல் – கலைவேட்கை, தணிய – அடங்குவரை, மெருகு – (புதியதாய் இருப்பதன் வனப்பு), படைத்திலோமே – பெறவில்லையே, மெல்ல – இலேசாய்.

(கோயிலின் தேய்மான தோற்றுவிக்கும் கவலை என்னவென்றால்:) சோழன் இக்கோயிலைக் கட்டிய அக்காலத்திற்கே சென்று இதனைக் காணும் வாய்ப்பை நாம் பெறவில்லையே! அவ்வாறு பெற்றிருந்தால் புதுமெருகு குறையாத இக்கோயிலை அதன் மேன்மை முழுதும் விளங்க ஆவல் தணியும்வரை கண்ணால் பருகிக் களித்திருக்கலாமே (என்பதாகும்!)

(கோயிலின் அழகில் முதலில் மயங்கிப் பின் மெல்ல அதன் தேய்மானத்தைக் காண்கையில் இதனை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே காணும் வாய்ப்பு பெற்றிலோமே என்ற கவலையும், இதே நிலையில் இக்கோயில் இனி வருங்காலத்தில் என்னவாகுமோ என்ற கவலையும் காணக் காண ஆழமாய் உணரப்படுவதால் ”மெல்ல” வருத்தம் எழுப்பிடும்’ என்று உரைக்கப்பட்டது!)

அடிகள் 40 – 42:

பேறு – பாக்கியம், ஈசன் – ஐராவதீசுவரர், தண்டளிர்ப் பாதம் – (தண்மை+தளிர்+பாதம்) குளிர்ந்த மென்மையான (மலர்போன்ற) பாதங்கள்.

(முன்பே கண்டிலோமே என்ற கவலை தோன்றவும், இனி இக்கோயில் எதிர்காலத்தில் என்னவாகுமோ என்ற வருத்தம் எழும்பவும்) இன்றேனும் இதனைக் காணும் பாக்கியம் பெற்றோமே அதுவே பெரிது என்னும் உண்மை உள்ளத்தில் உணரப்பட்டு, உள்ளம் ஈசனின் குளிர்ந்த மலர்போன்ற பாதங்களைத் தொழுதிடும்!

இத்தனைக் கலையையும் கொட்டிவைத்ததன் காரணம் இறைவன் மீதான பக்தியை ஊட்டவே அன்றோ? அப்பயன் எய்தியதாய் உள்ளம் ஈசனைத் தொழுதது என்று பாடல் நிறைவுறுகிறது!

Leave a Reply