தற்சார்புகோயில் திருவிழா ! – தீபக் வெங்கடாசலம்

தற்சார்பில் மிக முக்கியமான ஒன்று நம்ம ஊர் சந்தைகள்.

இச்சந்தைகள் பல வகைப்பட்டவை. வாரச்சந்தை, மாதச்சந்தை, வருடாந்திரச்சந்தை அதனுள் ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை, பழச்சந்தை, இரும்புப் பொருட்களுக்கானச் சந்தை என பல கிராமங்களுக்கு பொதுவான ஒரு இடத்தில் நடந்து வருகிறது !

ஒரு காலத்தில் இச்சந்தைகள் மட்டுமே நாம் நம் வீட்டிற்கு வெளியில் பொருட்கள் வாங்கும் இடமாக இருந்தது. ஒரு 10-15 வருங்களுக்கு முன். பின்னர் மெல்ல மெல்ல மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் ரசாயனம் கலக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டப் பொருட்கள் நெகிழியில் அடைத்து பல்பொருள் அங்காடிகளின் மூலம் நம் இல்லங்களை ஆக்கிரமித்து விட்டது.

இன்றும் பல ஊர்களில் இச்சந்தைகள் நடந்து வருகிறது. அந்த ஊரின் பூர்வகுடிகள் இன்னும் இச்சந்தைகளால் பயனடைந்து வருகிறார்கள் !

இச்சந்தைகள் நேரடியாக நடுத்தரகர்கள் இல்லாமல் விவசாய பொருட்கள் வாங்க ஓர் நல்லத் தளமாகும்.

சரி குருநாதர் சாமிக் கோயில் சந்தைக்கு வருவோம். இச்சந்தை வருடம் ஒரு முறை ஆகஸ்ட் மாதம் ஒரு வாரம் ஆரவாரமாக நடக்கும். இச்சந்தை குருநாதர் சாமிக் கோயில் தேர் திருவிழாவுடன் இணைந்து நடக்கும்!
இது தமிழகத்தில் ஏன் தென் இந்தியாவிலே மிக முக்கியமான ஒரு சந்தையாகும். தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா பாண்டிச்சேரி என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் நுகர்வோரும் சந்திக்கும் இடம் இது.

அப்படி என்ன சிறப்பு இச்சந்தையில்?

பல ஊர்களில் தனித் தனியாக நடக்கும் ஆடு, மாடு, கோழி, நாய், எருது, குதிரைச் சந்தை என அனைத்தும் சேர்ந்து நடக்கும் ஒரு இடமாகும். இது போகத் இவ்விலங்குகள் வளர்க்க மற்றும் மேய்க்க தேவையான அனைத்துப் பொருட்களும் இங்கு கிடைக்கும்.

இச்சந்தை முன் பகுதி கிட்டத்தட்ட சென்னை பல்லாவரம் வாராந்திரச் சந்தை போல் இருக்கும். ஒன்றில் இருந்து இரண்டு மைல் தூரம் மக்களின் தின வாழ்க்கைக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

இச்சந்தையில் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் இருந்துக் கொண்டு வரப்படும் பழங்கள் முக்கியமாக பலா மற்றும் பேரிக்காய் சிறப்பு.

நரிக்குறவர்கள் மலைவாழ் மக்கள் அருகாமை கிராமத்து மக்கள் என பலரும் கடைகளில் தங்கள் பொருட்களை விற்பதைக் காணலாம்.

இச்சந்தைக்கு இச்சுற்றுப் பகுதிகளான ஈரோடு பவானி அந்தியூர் கோபி சக்தி கவிந்தப்பாடி சித்தோடு பெருந்துறை ஊத்துக்குளி குன்னத்தூர் நம்பியூர் ஏன் திருப்பூர் கோவை சேலம் பகுதிகளில் இருந்து குறைந்தது தோராயமாக ஒரு லட்சம் பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

ஈரோடு, கவுந்தப்பாடி, கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர் பகுதிகளில் இருந்து இக்கோயில் திருவிழா நடைபெறும் நாட்களில் இச்சந்தைக்கு நேரடி அரசுப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

இயற்கைச் சார்ந்து தற்சார்பாக வாழ நினைக்கும் நாம் இது போன்ற சந்தைகளை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில் கூறுவார்கள் “The food that less travelled is the best food”. அதாவது மிகக் குறைவாக பயணப்பட்ட உணவே சிறந்தது மற்றவை கிடையாது என்பதாகும்.

இதை நாம் உணர்ந்து நெகிழியில் ரசாயனங்கள் கலந்து பதப்படுத்தி அடைக்கப்பட்ட உணவுகளையும் உணவுப் பொருட்களையும் வாங்குவதைத் தவிர்த்து, இது போன்ற சந்தைகளில் வாங்கினால் நம் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் நம் பொருளாதாரமும் செழிக்கும்

அடுத்தப் பதிவில் புகழ்பெற்ற குருநாதர் சாமிக் கோயில் திருவிழாவின் கால்நடைகள் சந்தைப் பற்றி பார்ப்போம் !

இயற்கையுடன் இணைந்து தற்சார்பான வாழ்க்கையை முன்னெடுப்போம்.

Leave a Reply