தமிழர் உணவு முனைவர். பிரின்ஸ் தாஸ்

மனிதன் உயிர் வாழ முக்கியமானது உணவாகும். ஆதி மனிதனின் முதல் தொழிலே உணவு தேடலாயிருந்தது ஆதிகால மனிதன் இயற்கையிலேயே கிடைத்த காய், கனி, கிழங்குகளை உண்டான். பின்னர் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் சதைப் பற்றுள்ள பகுதிகளைப் பச்சையாக உண்டான். தீயை உண்டாக்கக் கற்றுக் கொண்ட பின்னரே விலங்கு இறைச்சியைத் ‘தீ’ யில் வேகவைத்து பக்குவப்படுத்தி உண்ணத் தொடங்கினான். ஆற்றங்கரைப் பகுதியில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கிய போது தான் மனிதன் தன் உணவினைத் தானே உற்பத்தி பிரியத் தொடங்கினான். நாகரீகப் படிநிலையின் காரணமாக ஏற்பட்ட சமுதாய வளர்ச்சியினால் தான் உணவு உற்பத்தியும் உணவுப் பழக்கங்களும் வளரத்தொடங்கின.

 

“மனித இனம், உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் மூன்றினை எவ்வாறு இயற்கையிலிருந்து பெற்று நுகர்கிறது என்பதைப் பொறுத்து அதன் நாகரீகப் படிநிலையைக் கணிக்கலாம். உணவு, உடை, உறைவிடம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை: ஒன்றை ஒன்று தீர்மானிப்பவை ஒன்றில் ஏற்படுகிற மாற்றங்கள் மற்றவற்றையும் பாதிக்கக்கூடியவை. ஒரு குடும்பத்தின், சமூகத்தின், நாட்டின், பிரதேசத்தின் ஒட்டு மொத்தமான நாகரீக வாழ்வின், அந்த வாழ்வின் முழுமையின் சமச்சீரான தகுதிகளைக் கொண்ட அங்கங்களாக அம்மூன்றையும் மதிப்பிடலாம்” என்கிறார் ராஜ்கௌதமன்.

“மனித சமுதாயம் உணவுக்காக எவ்வளவு போராட்டங்களைக் காலங்காலமாக நடத்திக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாம் சரித்திரத்தில் பல இடங்களில் பார்க்கலாம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் கூட்டங் கூட்டமாக இந்தியாவிற்கு உணவைத் தேடிவந்தனர். இந்தியாவின் உணவு வளத்தை முன்னிட்டு ஆரியர்களும் திராவிடர்களும் நீண்டகாலம் போரிட்டதையும் சரித்திரத்தின் வாயிலாக அறியலாம்” என்கிறார் சே.நமச்சிவாயம்.
பண்டைத்தமிழரின் உணவு முறைகளை அறிந்து கொள்ள எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் பெரிதும் துணை நிற்கின்றன. கீரைகள், கிழங்குகள், பழங்கள், நெல், ஊன், கள், மீன்கள், தானியங்கள், பால், தயிர், மோர், இளநீர், நுங்கு, அப்பம் எனப் பலவிதமான உணவுப் பொருட்களைப் பழந்தமிழர் உண்டு வாழ்ந்தனர்.

உணவு என்ற சொல்லினை உற்று நோக்கினால் உண் – உணா > என அமைகிறது. உணவு என்பதில் ‘உண்’ என்பது அடிச்சொல்லாக அமைகிறது. அடிச்சொல்லினடிப்படையில் உண்ணப்படுவது அனைத்தும் உணவு என எண்ணத் தோன்றுகிறது. உடல் நலம் குன்றியவனுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கஞ்சி’ பசி உணர்வு கொண்டவனுக்கு உணவாகப் பயன்படுவதால் உண்ணப்படுவனவெல்லாம் உணவாகாது. ஆகவே வாய் வழியாக உட்கொள்ளப்பட்டு உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைத் தரும் பொருளை உணவெனலாம். குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப்பாடும் புறப் பாடலொன்றில்

“நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்”
“உண்டி கொடுத்தோர் உயிர்க்கொடுத் தோரே”(புறம்.18:18-19) என உணவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

பண்ணன் என்ற வள்ளல் பலரது பசியைப் போக்கிய காரணத்தால் தான் ‘பிசிப்பிணி மருத்துவன்’ “பசிப்பிணி மருத்துவன் இல்லம்” (புறம்.173:13) என உயர்வாகக் குறிப்பிடப்படுகிறான்.

உறைவிடம், உடை, இல்லாமல் கூட வாழ முடியும். ஆனால் உணவின்றி வாழ்ந்தவர் இல்லை. ‘ஆற்றுக்குள் இருந்து அரகரா என்றாலும் சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கநாதன்’ என்பது பழமொழியாகும். கடவுளை மையமாகக் கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் மனித சமுதாயம் உணவு மட்டும் அனைவருக்கும் பொதுவான கடவுள் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. மனிதன் தன் அத்தனை நல்ல குணங்களையும் இழந்து மதி கெட்டுத் திரியும் நிலைமை உணவில்லாத சூழலில் தான் ஏற்படுகிறது. இந்நிலையைத்தான் தமிழ்ச் சான்றோர்கள் ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்று குறிப்பிட்டனர்.

நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்த பரதவ மக்கள் மீன்பிடித்தலை முதன்மையான தொழிலாகக் கொண்டிருந்ததால் இவர்களது உணவில் பல வகையான மீன்கள் இடம் பெற்றன. பரதவர் புரிந்த தொழிலுக்கேற்பவே அவர்களது உணவுப் பழக்கங்களும் அமைந்திருந்தது எனலாம். கடலில் மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தந்தைக்கு நெல்லினால் சமைத்த முரலாகிய வெண் சோற்றை அயிரை மீனையிட்டு ஆக்கிய கருவாட்டுடன் அவனுடைய இளைய மகள் அளித்ததை அகப்பாடலொன்றில் குடவாயிற் கீரத்தனார்.

“நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு உப்புநொடை நெல்லின் முதல் வெண்சோறு அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்” (அகம்.60:3-6) எனக் குறிப்பிட்டுள்ளார்.
நற்றிணைப் பாடலொன்றில் உலோச்சனார் மூதூர் பகுதி நெய்தல் நில மக்கள் கொழுமையான மீன்களைச் சுட்டு உண்டதை

“அழியா மரபின் நம் மூதூர் நன்றே
கொழுமீன் சுடு புகை மறுகினுள் மயங்கி ‘’ (நற்.311:5-6) எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவிரிப்பூம்பட்டினத்து மீனவர்கள் கடலில் பிடித்த இறாலைச் சுட்டும் வயலாமையை வேகவைத்துப் பக்குவம் செய்து உண்டதைப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
“கடலிறவின் சூடு தின்றும்
வயல் ஆமைப் புழுக்குண்டும்’’ (பட்.63-64) எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட்டினப்பாலையின் மற்றோர் இடத்தில் புகார் நகரில் மீன் பொறித்து விற்கும் கடைகள் இருந்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மீன்தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலிமுன்றில்” (பட். 176-177)

கள்:

பரதவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் கடின உழைப்பாளிகளாவர். ஆகவே அவர்கள் உடல் களைப்பு நீங்க கள்ளினைப் பருகினர். கள் பரதவர்களுக்குப் பேரின்பமும் புத்துணர்ச்சியும் தரும் பானமாக அக்காலத்தில் விளங்கியது. பனைமரத் தோப்புகளுக்கிடையே பரதவரது குடியிருப்பு அமைந்திருந்ததால் அவர்கள் அப்பனைமரங்களிலிருந்து கள்ளினை வடித்துப் பருகினர். நற்றிணைப் பாடலொன்றில் உலோச்சனார் பரதவர்கள் கரிய பனையினது இனிய கள்ளையுண்டு களித்ததை

“பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும்பனந் தீம்பிழி உண்போர் மகிழும்”” (நற்.38:2-3) எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்ந்த புன்னை மரங்களின் நிழலில் தங்கி தேன் மணம் கமழ்கின்ற கள்ளினைப் பரதவர்கள் தம் சுற்றத்தாரோடு பருகியதை நற்றிணைப் பாடலொன்றில் பெருங்கண்ணனார்.
“ஓங்கிரும் புன்னை வரிநிழல் இருந்து தேங்கமழ் தேறல் கிளையோடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன் ………….. ,,” (நற்.388:7-9) எனக் குறிப்பிட்டுள்ளார்.
வலிமை மிக்கத் தோளுடைய பரதவர்கள் வெப்ப முட்டும் மதுவை விரும்பி உண்டு குரவைக்கூத்தின் தாளத்திற்கேற்ப ஆடியதை புறப்பாடலொன்றில் மருதனார்,

“திண்டிமில் வன்பரதவர் வெப்புடைய மட்டுண்டு
தண் குரவைச் சீர் தூக்குந்து” (புறம். 24:4-6) எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவிரிப்பூம்பட்டினத்துப் பரதவர்கள் பனங்கள் அருந்தியதைப் பட்டினப்பாலை “பிணர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும்’’ (பட்.89) எனக் குறிப்பிடுகிறது. பட்டினப்பாலையின் மற்றோர் இடத்தில் காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வ மகளிர் மட்டு’ என்னும் இன்சுவைப் பானத்தை நீக்கி வேட்கையைத் தூண்டும் மது உண்டதை மட்டு நீக்கி மதுமகிழ்ந்தும்(பட்.108) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரதவர்களின் உணவுப் பழக்கத்தை உற்று நோக்கும் போது மீனும், கள்ளும் இவர்களது உணவில் முக்கிய இடத்தைப் பெற்றன எனலாம். இறால், வயலாமை, அயிலைமீன், கொழுமீன், போன்றவற்றைப் பக்குவப்படுத்தித் ‘தீ’ யில் சுட்டு உண்டதைப் பார்க்கும் போது வேக வைத்து உண்ணும் நாகரீக நிலையைப் பெற்றிருந்தனர் எனலாம். இறுதியாகக் கூறுமிடத்துப் பரதவர்கள் இறைச்சி உணவினை மிகுதியாக உண்டு வாழ்ந்தவர் என்பது தெளிவாகப் புலனாகிறது.

விருந்தோம்பல்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நானிலங்களில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்கேற்பவும், செல்வ நிலைக்கேற்பவும் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தம்மிடம் வந்த விருந்தினர் அனைவருக்கும் விருந்தளித்துள்ளனர். பழந்தமிழரது வாழ்வில் இடம் பெற்ற விருந்தோம்பல் என்னும் பண்பு இல்லறத்தின் நல்லறமாகவும், வாழ்வியற் கோட்பாடாகவும் அமைந்தது எனலாம். ஆற்றுப்படை நூல்கள், வேந்தர்களும், வள்ளல்களும், குடிமக்களும் விருந்தோம்பியதற்குச் சான்றாக விளங்குகின்றன.
“தின்பதற்கும் குடிப்பதற்குமான பல நல்ல பொருட்களுடன் கூடிய சிறந்த உணவு விருந்து; மனமகிழ்வூட்டுவனவும் விருந்தாகும்” என ஆங்கில அகராதி குறிப்பிடுகிறது.

“விருந்தினர்க்கு உணவு படைத்தல் விருந்தின் அடிக்கருத்தாகக் கருதப்பட்டுள்ளது” என்கிறார் பு. அரங்க இராதாகிருட்டிணன்.

சங்ககாலத்தில் கணவனும் மனைவியும் இணைந்து விருந்தினர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்துள்ளனர். தலைவன் விருந்தோம்பத் தேவையான பொருளீட்டி வருவதும், தலைவி விருந்தினர்களுக்கு விருந்து படைப்பதும் இல்லற நெறியாக இருந்தது. தலைவன் போரில் வென்று பரிசில் பெற்று விருந்தோம்பத் தேவையான பொருளீட்டி வருவான். அவனது மனைவி பாணர்களையும் அவர்களோடு வந்தவர்களையும் வரவேற்று விருந்தோம்புவாள். இதனைப் புறப்பாடலொன்றில் தங்கால் பொற்கொல்லனார்

“யாணர் நல்லவை பாணரொடு ஓராங்கு வருவிருந்து அயரும் விரும்பினள் கிழவனும் அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே” (புறம்.326:11-15) எனக் குறிப்பிட்டுள்ளார்.

இல்லற வாழ்வில் செல்வம் சேர்த்து வாழ்வதின் நோக்கம் விருந்தினரை உபசரித்து உதவி செய்வதற்குத் தான் இதனைத் திருவள்ளுவர்

“இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்.81) எனக் குறிப்பிட்டுள்ளார்.

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவ மக்களும் தங்கள் இல்லம் நாடி வரும் விருந்தினரை அன்புடன் வரவேற்று விருந்தோம்பி மகிழும் சிறந்த பண்பாட்டினைக் கொண்டிருந்தனர்.

பகற்பொழுதில் பெரிய மனைக்கு வந்த விருந்தினர்களை வரவேற்ற நெய்தல் நில மகளிர் அவர்கள் உண்ணுவதற்குக் கொக்கின் நகம் போன்ற வெண்சோற்றை அளித்தனர். பின்னர் வீட்டு முற்றத்தில் அச்சோற்றினை நிவேதித்துப் பலியாகப் போடுவர். அதனைக் காக்கைகள் உண்ணும். இச்செய்தியினை நற்றிணைப் பாடலொன்றில் நக்கீரர்,

“கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுக் திருவுடை வியநகர் வருவதிருந்து அயர்மார் பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்குகிர் நிமிரல் மாந்தி எற்பட
அகலங் காடி அசைநிழல் குவித்த” (நற்.258:3-7) எனக் குறிப்பிட்டுள்ளார்.

அளவுபடாத உணவுப் பொருட்களை இல்லிடத்தே வரும் விருந்தினர்க்குப் பகுத்தளித்து வாழும் தண்ணிய குடிவாழ்க்கையையுடைய நெய்தல் நில சீறூரை நற்றிணைப்பாடலொன்றில் கதப்பிள்ளையார்,

“வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தண்குடி தாழ்நர் அம்குடிச் சீறூர்” (நற்.135:3-4) எனக் குறிப்பிட்டுள்ளார்.

எயிற்பட்டினத்துப் பரதவமகள் களிப்பு மிக்கப் பழையக் கள்ளையும், சுட்ட குழல் மீனின் இறைச்சியையும் பாணர்க்கும் விறலியர்க்கும் கொடுத்து விருந்தோம்பியதை சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார்.

“மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து நுதி வேல் நோக்கின் நுளை மகள் அரித்த பழம் படு தேறல் பரதவர் மடுப்பக் … … … … … …
வறல் குழல் சூட்டின் வயின் வயின் பெறுகுவீர்” (சிறு. 157-163) எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டை நாட்டுக் கொடுமுடி வலைஞர்கள் குற்றாத கொழியல் அரிசியைக் கொண்டு கூழாகச் சமைத்த சுவையுள்ள உணவை, அகன்ற வாயுடைய முடைந்த தட்டிலே ஊற்றி ஆறவிட்டு, பாம்புப் புற்றிலே இருக்கும் புற்றாஞ் சோற்றைப் போலிருக்கின்ற மெல்லிய நல்ல நெல் முளையைச் சுவை உண்டாக்கக் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளையும் அரிக்காமல் வலிய வாய் உடைய சாடியில் நாற்றம் போக ஊற்றி வைத்து அது முற்றிய பின் விரல் வைத்து அரிப்பர். அங்ஙனம் அரிக்கப்படும் கள் செவ்விய நீர்மை உடையதாக இருக்கும் இப்படிப்பட்ட நறும்பிழிக் கள்ளைச் சுட்ட மீனோடு பாணர்க்குக் கொடுத்ததைப் பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

“அவையா அரிசி அம் களித் துழவை மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம் புற நல் அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வால் வாய்ச் சாடியின் வழைச்சு அறவிளைந்த வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி

“தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவீர்” (பெரும்.275-282) எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (மாமல்லபுரம்) வாழ்ந்த நெய்தல் நிலத்தார் நெல்லை இடித்து மாவாகிய உணவை ஆண் பன்றிக்குக் கொடுத்துக் கொழுக்க வைத்தனர். பின்னொரு நாள் ஆண் பன்றியைக் கொன்று அதன் கொழுத்த தசையை உணவாக்கி வெறியூட்டும் கள்ளுடன் பாணர்க்குத் தந்ததைப் பெரும் பாணாற்றுப்படையில்

“ஈர்ஞ் சேறு சூடிய இரும்பல் குட்டிப் பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது நெல் மா வல்சி தீற்றிப் பல் நாள் குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக் கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர்” (பெரும்.341-345) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply