தமிழர்களின் வரலாறு என்ன? ஒரு பருந்துப் பார்வை

தமிழ் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்குவது. தமிழ், மொழியும் சரி மக்களும் சரி, அறிந்த ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்தியவர்கள். ஆவணம் இல்லாமல் எப்படி வரலாற்றுக்கு முந்தியது என்று ஒன்றைச் சொல்ல இயலும்? கிடைக்கும் சான்றுகளை வைத்து, அதற்கு முன் என்ன / எப்படி இருந்திருக்கும் என்று ஊகிப்பதன் மூலம் அது சாத்தியம். அப்படிக் கிடைக்கும் ஒரு சான்று தமிழின் முதல் மற்றும் கிடைப்பதிலேயே பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் ஆகும். ஒரு மொழிக்கான இலக்கணம் என்பது அதன் இலக்கியங்களின் சாரம் ஆகும். தொல்காப்பியம் போன்ற ஒரு இலக்கணம் ஒரு நீண்ட இலக்கிய மரபின் மூலமே சாத்தியப்படும். தொல்காப்பியரே பல இடங்களில் ஒரு வரையறையையோ மரபையோ குறிப்பிடும் போது ‘என்மனார் புலவர்’, ‘என்ப’ என்று குறிப்பிடுகிறார், இது அவருக்கு முன் இருந்த இலக்கிய இலக்கணங்களின் வழியே அவரது இலக்கணம் அமைந்துள்ளது என்பதற்கான சான்றாகும்.

தொல்காப்பியத்தின் காலம் பொ.மு.200 முதல் பொ.மு.500 வரை பலவாறாக நிறுவப்படுகிறது. எப்படியும் அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குக் குறையாமல் பழமையானது. எனில், அதன் மூலமாக அமைந்த இலக்கிய மரபு அதைவிட பலநூறு ஆண்டுகள் பழமையானதாக அமைய வேண்டும் அல்லவா? தொல்காப்பியத்தையும், அதனையொத்த சங்க இலக்கியங்களையும் நோக்கினால் அவற்றில் அமைந்த மொழியின் சீரமைந்த தன்மை அம்மொழியின் பழமையை தெளிவாக உணர்த்தும். சங்க இலக்கியங்கள் உலகின் பழமையான செவ்விலக்கியங்களுள் ஒன்று. தமிழுக்கு மூன்று சங்கங்கள் இருந்ததாக ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் நூலிற்கு இருக்கும் நக்கீரரின் உரை சாற்றுகிறது. நமக்குத் தற்போது கிடைப்பவை பெரும்பாலும் மூன்றாவதான கடைச்சங்க நூல்கள். என்னதான் இந்த உரை உண்மையை அதிகப்படியாய் உரைத்தாலும், அதில் இருக்கும் அடிப்படையான உண்மையை மறுக்க இயலாது. எனவே முதல், இடைச் சங்கங்கள் காலத்தால் மிகவும் முற்பட்டவை என்பதும், அவற்றிற்கு அடித்தளமாகிய தமிழ் மொழியும், தமிழர் நாகரிகமும் மேலும் பழமையானவை என்பதும் உணரப்படும். (ஆனால், இவற்றை அறுதியிட்டு நிறுவுவது கடினம்!) சங்க இலக்கியங்களின் மூலம் பண்டைய தமிழ் நாட்டைச் சேரர், சோழர், பாண்டியர் என்ற முப்பெரும் வேந்தரும், அவருக்கு கீழே பல நூறு சிற்றரசரும் ஆண்டனர் என்பதை அறிகிறோம். சங்க இலக்கியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பதினெட்டு நூல்களின் தொகுப்பு. எட்டுத்தொகையில் புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறத்திணை நூல்கள். எனவே இவற்றின் மூலமே நாம் பெரும்பாலான வரலாற்றுச் செய்திகளை அறிகின்றோம்.

பதிற்றுப்பத்து பத்து சேர அரசர்களின் மேல் பாடப் பட்ட பாடல்களின் தொகுப்பு, எனவே இது அந்த சேர அரசர்களைப் பற்றி மட்டுமே அறிய உதவுகிறது. புறநானூறு பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு ஊரையும் வகுப்பையும் சேர்ந்த பற்பல புலவர்கள் பாடிய நானூறு பாடல்களின் தொகுப்பு. எனவே, இதுவே சங்ககாலத்தைப் பற்றி அறிய நமக்கு முதன்மையான கருவிநூலாக இருக்கிறது. பிற எட்டுத்தொகை நூல்கள் அகத்திணை நூல்கள், காதல் பற்றிப் பேசும் அவற்றின் பாடுபொருள் நேரடியாக வரலாற்றுக் குறிப்புகளைத் தராது என்றாலும் ஆங்காங்கே சில வரலாற்றுத் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன. பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் அரசர்களைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பட்ட ஆற்றுப்படை நூல்கள், ஆகையால் இவையும் அவ்வவ்வரசர்களைப் பற்றி நமக்குத் தகவல்களைத் தருகின்றன. இவ்வாறாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஏறத்தாழ பொ.பி. 200 வரையான தமிழ்நிலத்தின் வரலாற்றை ஒருவாறாக நாம் இவ்விலக்கியங்களின் மூலம் அறிகின்றோம். சங்க இலக்கியங்களுக்கு இணையாக, அதே காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகளும் கிடைக்கின்றன.

தமிழின் (ஏன், இந்தியாவின், உலகின்) பழமையான கல்வெட்டுகளில் பல மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலைகளிலும் குன்றுகளிலும் கிடைக்கிறது. சமண முனிவர்கள் தங்கிய பாழி/பள்ளி / படுக்கை எனப்படும் குடைவரை குகைகளும், திருமால் சிவன் ஆகிய கடவுளர்க்கு உரிய குடைவரைக் கோயில்களும் கிடைக்கின்றன. இவற்றில் உள்ள கல்வெட்டுகள் தமிழி அல்லது தமிழ்-பிராமி என்று சொல்லப்படும் தொல்தமிழ் எழுத்துகளில் அமைந்துள்ளன, இவ்விடங்களை அமைத்துக்கொடுத்த வள்ளர் யார், இங்கே தங்கியிருந்தவர்கள் யார் போன்ற செய்திகளே இவற்றில் பெரும்பான்மை, இவற்றின் மூலம் அக்காலத்திய வரலாற்றை நாம் சிறிது அறிகின்றோம். தற்போது கிடைப்பதிலேயே பழமையானது மாங்குளம் என்ற இடத்தில் இருக்கும் குடைவரையும் கல்வெட்டுந்தான் – இது பொ.மு. 300 – 200 ஆகிய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்கும் பழமையான தமிழ் எழுத்துகள், பானை ஓடுகளிலும், முதுமக்கள் தாழி என்று அறியப்படும் ஈமச்சாடிகளிலும், பழங்காசுகளிலும் கிடைக்கின்றன. தமிழகமெங்கும் இது போன்ற சான்றுகள் கிடைக்கின்றன. தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடுகளும், காசுகளும் உலகெங்கும் கிடைக்கின்றன. இவை பண்டைய தமிழரின் உலகளாவிய வணிகத்தையும், நட்புறவையும் காட்டுகின்றன. ஆம், கடல்கடந்து பிற கண்டங்களுக்குச் செல்ல தமிழர்கள் கொலம்பசுக்கோ, வாஸ்கொட காமாவிற்கோ காத்திருக்கவில்லை! சங்க காலத்திற்குப் பின்னர் வந்த சில நூற்றாண்டுகள் ‘இருண்ட காலம்’ என்று அழைக்கப்பட்டது. இது சங்கம் மருவிய காலம் என்றும் அழைக்கப்பட்டது.

இக்காலத்தில் தமிழகத்தை களப்பிரர் (களபரா) என்ற இனத்தினர் ஆண்டதாக நமக்குத் தெரிய வருகிறது. இக்களப்பிரரைப் பற்றித் தொடக்கத்தில் அதிக தகவல் இல்லாத காரணத்தினால் ‘இருண்ட காலம்’ என்று அறியப்பட்ட இக்காலம் சில தனி நபர்களின் ஓயாத ஆய்வினால் வெளிசத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவர்களுள் முதன்மையானவர் மயிலை. சீனி. வேங்கடசாமி என்ற அறிஞர் (அவரது ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ நூலைக் காண்க!) எங்கிருந்து வந்தனர், எப்படி வந்தனர் என்று அறியப்படாத களப்பிரர் சமண மதத்தை ஆதரித்தவராகவும், தமிழின் கலை இலக்கிய வளத்தை அழித்து ஒழித்து பாலி பைசாசம் போன்ற மொழிகளை வளர்த்தவராகவும் முதலில் கருதப்பட்டது (எனவேதான் ‘இருண்ட காலம்’ என்ற பெயர்!) ஆனால், பின்னர் வந்த ஆய்வுகளும் சான்றுகளும் களப்பிரர் சமண மதத்தோடு சைவ வைணவ மதங்களையும் போற்றியுள்ளனர் என்றும், தமிழ் இலக்கியங்களையும் வளர்த்துள்ளனர் என்றும் காட்டுகின்றன (பெரும்பான்மையான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன என்று கருதப்படுகிறது!) எனினும் இக்களப்பிரர் யார், எங்கிருந்து வந்தனர், அவர் வெளிநாட்டவரா அல்லது சேர சோழர்களின் வம்சத்தில் வந்த ஒரு பகுதியினரா போன்ற கேள்விகள் உறுதியான விடை கிடைக்காமலே இருக்கின்றன.

தோராயமாக பொ.பி. 6ம் நூற்றாண்டளவில் இக்களப்பிரர் வீழ்த்தப்பட்டனர். தமிழகத்தின் வடபகுதியில் பல்லவராலும் (சிம்ம விஷ்ணு) தென்பகுதியில் பாண்டியராலும் (கடுங்கோன்) களப்பிரர் வீழ்த்தப்பட்டனர். பொ.பி. 600 முதல் பொ.பி. 900 வரை தமிழகம் பெரும்பான்மையாக பல்லவர் ஆளுகையிலேயே இருந்தது. இக்காலத்தில் இருந்த சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி அதிகமான தகவல்கள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பெயர்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், பல்லவர் முழுமையாய்த் தமிழகத்தை ஆண்டனர் என்றும் சொல்வதிற்கில்லை. தொண்டைமண்டலம் என்று அறியப்படும் பகுதியே (இன்றைய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இதில் முதன்மையாக அடங்கும்) இவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது எனலாம். இன்றைய கேரள பகுதிகளைச் சேரரும், தென்பகுதியான திருச்சி, மதுரை போன்றவற்றை பாண்டியரும் ஆண்டனர் என்று கொள்ள இடம் இருக்கிறது, எனினும், இவர்கள் பல்லவர்க்கு அடங்கியோ அல்லது அவருடன் சில உடன்படிக்கைக்கு உட்பட்டோ இயங்கினர் என்றே கொள்ளல் தகும். பல்லவ வழியில் வரலாற்றில் முதன்மை இடம் பெற்றவர் இருவர். முதலாம் மகேந்திரப் பல்லவரும், அவர் மகனான மாமல்லர் முதலாம் நரசிம்ம பல்லவருமே அவர்.

தமிழ் எழுத்துகளை மாற்றியதிலும் (தமிழ்ப் பிராமியின் வழிவந்த வட்டெழுத்திற்குப் பதிலாய் தென்பிராமியின் சாயல் கொண்ட தமிழ் எழுத்துக்களைக் கையாண்டு, இன்றைய தமிழ் எழுத்துகளுக்கு வித்திட்டவர் பல்லவரே), குடைவரை, ஒரே கல்லாலான சிற்பம் (மாமல்லபுரம்) முதலியவற்றை தமிழ்நாட்டில் நிறுவியதிலும் இவருக்கு பெரும் பங்கும் பெருமையும் உண்டு. பொ.பி. 9ம் நூற்றாண்டில் அரசியல் சிக்கலில் தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பைச் சரியாய்ப் பயன்படுத்திக்கொண்டு பல்லவரை வீழ்த்தி சோழரின் கையோங்க வித்திட்டான் விஜயாலயச் சோழன் என்ற சோழ அரசன். அடுத்தடுத்து வந்த அவன் மரபினர் சோழ ஆட்சியைத் தமிழகத்தைத் தாண்டி வெகுதொலைவிற்கு விரிவாக்கினர். கிட்டத்தட்ட 13ம் நூற்றாண்டுவரை சோழ ஆட்சியே நிலைபெற்று நின்றது. விஜயாலயன் விதைத்த விதை ஆலமரமாய் கிளைப்பரப்பியது. அதில் வேரூன்றிய இருபெரும் விழுதுகள் இராஜராஜனும் அவன் மகன் இராஜேந்திரனும் ஆவர். இவர் இல்லாமல் இன்று தமிழகமும் இல்லை, தமிழக வரலாறும் இல்லை. சோழ ஆட்சியை விந்திய மலைக்கு வடக்கிலும், குமரிக்குத் தெற்கிலும், வங்கக் கடலுக்கு கிழக்கிலும் விரிவாக்கிய பெருமை இவருக்கே உரியது. 13ம் நூற்றாண்டில் மூன்றாம் இராஜேந்திரன் வீழ்த்தப்பட்டபோது தமிழகம் மீண்டும் பாண்டியரின் ஆட்சியைக் கண்டது.

சடையவர்மன் (ஜடவர்மன்) சுந்தரபாண்டியன் அரியணை ஏறி அகிலமே வியக்கும் வண்ணம் அரசாண்டான், சோழர் விட்டுச்சென்ற தமிழரின் புகழை மேலும் பெரிதாக்கினான். ஆனால், பாண்டிய வம்சாவளி பலக் குழப்பங்கள் நிறைந்தது. பலக் கிளைகளாக பலர் ஆட்சிக்கட்டிலுக்குச் சொந்தம் கொண்டாடினர் (இது எப்போதும் இருக்கும் ஒன்றுதான், இம்முறை அதிகமாக இருந்தது) இக்குழப்பமே இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது. ஆட்சியைப் பிடிக்க அந்நிய சக்திகளின் உதவியை நாடினர் சில பாண்டியர், அதுவே அவர்களுக்கு இறுதிபயத்தது. பாண்டியருக்குப் பின் விஜயநகரப் பேரரசைச் சார்ந்த நாயக்கர்களின் கைக்குச் சென்றது தமிழகம். பின்னர் முகலாயர் வருகையையும், அதன் பின்னர் ஐரோப்பியர் வருகையையும் கண்டது தமிழகம்.

எடுப்பார் கைப்பிள்ளையாய் பல கைகள் மாறியது ஆட்சியும் அதிகாரமும். (14 முதல் 20ம் நூற்றாண்டு வரையான வரலாறு பல கோணங்களும், சம்பவங்களும், முனைகளும் குழப்பங்களும் கொண்டது. அதனை ஒரு சில வரிகளில் இதற்கு மேல் கூற இயலாது!) ஒட்டுமொத்த பாரதமும் ஐரோப்பியர் ஆட்சியை எதிர்த்து விடுதலைக் குரல் கொடுத்த போது அதன் ஒரு பகுதியான தமிழகமும் தள்ளி நிற்கவில்லை (அப்போது தமிழகம் ‘மதராஸ பட்டணம்’ அல்லது ‘மெட்ராஸ் பிரெசிடென்சி’ என்று அறியப்பட்டது, இன்றைய கேரளாவும், ஆந்திரமாநிலத்தின் தென்பகுதியும் உள்ளடக்கியது அது) பல நூறு ஆண்டுகள் அந்நியர் ஆட்சியில் இருந்துவிட்டு 1947 விடுதலைப் பெற்றது தமிழகம் (இந்தியா!). இதன் பின்னர் ஜனநாயக அரசியல் தொடங்கியது. காங்கிரஸ் (காமராசர் போன்ற உண்மையான தலைவர் இருந்தும்) முதலிய தேசியக் கட்சிகளின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட தமிழகம் மாநிலக் கட்சிகளின் பிடிக்குச் சிக்கியது. நீதிக் கட்சி என்று இருந்தது பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் தலைமையில் திராவிடக் கழகமாகி ஆட்சி பொறுப்பேற்றது. இனி அரசியல் வேண்டா என்று பெரியார் முடிவு செய்த போது தி.க. தி.மு.க. என்ற குழந்தையை ஈன்றது (திராவிட முன்னேற்றக் கழகம்). அண்ணாத்துரையின் தலைமையில் தொடங்கிய இக்கட்சி அவருக்குப் பின் கருணாநிதியின் கீழ் வந்து இன்றுவரை அவரது தலைமையிலேயே இயங்குகிறது. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்.ஜி.ஆரின் தலைமையில் அண்ணா திராடவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) உருவாகியது. எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெ. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அக்கட்சி அண்மையில் அவரை இழந்து அடுத்து என்ன என்று எதிர்காலத்தைக் கேள்விக்குறியோடு நோக்கி நிற்கிறது (தமிழகமும்தான்!) விடுதலைக்குப் பின் திமுகவும் அதிமுகவும் மாற்றி மாற்றி ஆட்சியைப் பிடித்துத் தமிழகத்தை தேசியக் கட்சிகளின் கரங்களுக்கு எட்டாக்கனியாகவே செய்துவிட்டன.

இது நன்மைக்கா தீமைக்கா என்ற விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், இன்றுவரை தமிழகம் பல விடயங்களில் இந்தியாவின் முதல் பத்து மாநிலங்களின் பட்டியலில்தான் இருக்கின்றது என்பது மறுக்க இயலாத உண்மை! இதுவே இந்தியாவிற்குள்ளான தமிழகத்தின், தமிழரின் வரலாறு. தமிழர்கள் இந்தியா மட்டுமின்றி இலங்கை (சிரீ லங்கா), மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உள்ளனர். இலங்கைத் தமிழர் அண்மையில் கொடூரமான ஒரு வெளியேற்றத்தையும் இனவழிப்பையும் எதிர்கொண்டனர். அவர்கள் சென்ற சில நூற்றாண்டுகளில் அங்கு குடியேறியவர்களே என்று சொல்லப்பட்டாலும், சங்க காலம் முதலே இலங்கையில் தமிழர் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. (இலங்கையின் மகாவம்சம் என்ற நூலே ‘ஏறாளன்’ என்ற பண்டைய தமிழ் அரசனைக் குறிப்பிடுகிறது!) மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர் பண்டைய நாள்களில் ரப்பர் உற்பத்தித் தொழிலில் ஈடுபட வேலையாட்களாயச் சென்றவரும், அண்மைக் காலங்களில் சென்றவரும் என உள்ளனர்.

துபாய், அபுதாபி போன்ற மத்தியகிழக்கு நாடுகளிலும் தமிழர் பல தலைமுறையாய் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். வேலைக்காக இன்றைக்கும் அங்கு செல்லும் தமிழ் இளைஞர் பலர். கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் பெரும்பான்மையும் அண்மைய ஒரு சில தலைமுறையாய் அங்கு குடியேறியவரே. பெரும்பான்மையும் இவர்கள் மென்பொருள் நிறுவன பணியாளர்கள். முன்னர் குறிப்பிட்டதைப் போல அறியப்படும் வரலாற்றிற்கும் முற்பட்டது தமிழ் வரலாறு – எனவே இதனை ஒட்டுமொத்தமாய் ஒரு சில பத்திகளில் முழுமையாய்ச் சொல்லிவிடுவது என்பது ஒருவனால் இயலாத காரியம்.

இங்கு தரப்பட்டது ஒரு சுருக்கம் மட்டுமே. அதுவும் எனக்குத் தெரிந்த அளவிலான சுருக்கமே! வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதும், அறுதியிட்டு நிறுவுவதும் எளிதான செயல் அல்ல. அது நமக்கு முன் இருக்கும் மிகப் பெரிய புதிர்களில் ஒன்று. மேலும், வரலாற்றை ஆய்வதிலும், ஆவணப்படுத்துவதிலும் பல்வகையான சுயச்சார்புகளும், நோக்கங்களும் குறுக்கிடுவது என்பது தவிர்க்க இயலாதது. எனவே, உண்மையான வரலாறு என்பது அரிதான ஒன்று. கிடைக்கும் சார்புடைய நூல்களில் அதைத் தேடி எடுப்பது இன்னுமொரு பெரிய புதிர்தான். எனவே, யான் இங்கு குறிப்பிட்டுள்ள சில செய்திகள் பிழையாக இருக்கலாம், பிழை என்று ஒரு சாரரால் கருதப்படலாம், அல்லது பிழை என்றோ வேறுவிதமாகவோ இனி வரும் ஆய்வுகள் நிறுவலாம்.

எது எப்படி இருந்தாலும், உலகின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று, உலகின் முதல் மாந்தர்களில் தமிழரும் ஒருவர் என்ற உண்மைகள் உறுதியானவை. யார் கண்டது, உலகின் ஆகப் பழைய மொழி தமிழாகவே இருக்கலாம், ஆகப் பழைய இனமும் தமிழினமாகவே இருக்கலாம், வாய்ப்புகள் நிறையவே உள்ளன! நன்றி!

கட்டுரை: கா. விஜயநரசிம்மன்

Leave a Reply