தமிழகத்தில் ராவணப் பெருவிழா

இந்தியப் பெருநிலத்தில் பல இடங்களில் ராவணவதம் என்பது விமர்சையாகக் கொண்டாடப்பட்டாலும், இன்றும் சில இடங்களில் ராவண வழிபாடுமுறை பழங்குடி மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தென்னிந்தியா மட்டுமல்லாது மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசம்வரையிலும் ராவண வழிபாடு பரவியுள்ளது. கோண்டு, பில்லா போன்று எழுபது பெருநிலப் பழங்குடி மக்கள் இன்றும் ராவண வழிபாட்டைத் தங்களின் மூதாதையர் வழிபாடாகக் கொண்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள மண்டவர் ராவணின் மனைவி மண்டோதரி பிறந்த ஊர் என்று கூறப்படுகிறது. இந்த ஊரின் மருமகன் என்பதால் இங்கு ராவணனுக்கு 35 அடி உயரமுள்ள சிலை வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. ராஜஸ்தானிலும் இவ்வாறு ராவண வழிபாடு உள்ளது. ஆனால் இங்கு உள்ள உள்ளூர் பிராமணர்களால் மட்டும் விழா எடுக்கப்படுகிறது என்பது சிறப்புத் தகவல். தசரா பண்டிகையின்போது இவர்கள் ராவணனுக்குப் பிண்டத்தை வைத்து முன்னோர்களுக்குச் செய்யும் பித்ரு காரியத்தைச் செய்கின்றனர்.

மகாராஷ்டிரா கோடிச்சிரோளில் உள்ள கோண்டு இன மக்கள் ராவணன், மேகநாதன் ஆகியோர் விழாவைப் பழங்குடி விழாவாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் வால்மீகி எழுதிய இராமாயணத்தில் ராவணனைத் தீயவன் என்று கூறவில்லை என்றும், துளசிதாசரே ராவணன் கொளரன் என்ற கருத்தை முன்வைத்தார் என்றும் கருதுகின்றனர். ஆரியர்களுடனான போரில் இறந்த நினைவாக இம்மக்கள் ராவணனைக் கொண்டாடி வருகின்றனர்.

 

ஹிமாச்சலப்பிரதேச கங்க்ரா பகுதியில் வாழும் மக்கள் ராவணனின் சிவபக்தியின் ஏற்றத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில்தான் ராவணனுக்கு அதிக அளவு கோவில்கள் உள்ளது. கோலார் மற்றும் மாண்டியா மாவட்டங்களில் ராவணனைச் சிவ வழிபாட்டின் ஒரு பகுதியாக விழா எடுத்துக் கொண்டாடிவருகின்றனர்.

அனைத்து வடமொழிக் குறிப்புகளும் தென்னிந்தியா முழுவதும் காடுகளால் நிரம்பியுள்ளது என்றும், அவை பூதங்களால் பாதுகாக்கப்படுகிறது என்றும் குறிப்பிடுகின்றன. இது பொதுவாகத் தண்டகாரண்யம் என அழைக்கப்படுகிறது.

பெருந்தெய்வ வழிபாட்டுத் தொடர்புடைய தெய்வங்களின் பெயர்கள் பொதுவாக வடமொழிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், பூர்வீகக் குடிகளின் தெய்வங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் உள்ளது.

இன்றும் இவை கிராம தெய்வங்கள் என்றும் இதனை மக்களே பெரியவர்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடு நடத்தியும் வருகின்றனர். பொதுவாகத் தென்னகத்தினர் சிறுதெய்வ அல்லது குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்தும் அளிப்பவராக உள்ளனர்.

தமிழகத்திலும் சிவ வழிபாட்டோடு ராவண வழிபாடு பல்லாயிரம் ஆண்டுகள் தொன்றுதொட்டு வந்துள்ளது. அதன் நீட்சியே பத்துத் தலை ராவண வாகனங்களை இன்றும் கோவில்களில் காண முடிகிறது.

காலனி ஆதிக்கத்துக்குள் இந்தியா வந்த பிறகு சென்னை மாகணத்தின் தன்மைகள் பற்றிய நிர்வாகக் கையேட்டை 1885ம் ஆண்டு அன்றைய ஆங்கிலேயே அரசு வெளியிட்டது. அதில் அப்போது கொண்டாடப்பட்டு வந்த ராவண விழா பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

“சாணர்கள் எனப்படும் ஈழவர்கள், 100 ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் தேதியைச் சாணர்களின் தேசிய விழாவாகக் கொண்டாடி வந்துள்ளனர். இவர்கள் கிராம தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தனர்” என்று குறிப்பிடப்படுகிறது.

ராவணன் சீதையைக் கவர்ந்து வந்த நாளை, ராவணனின் வெற்றி விழாவாகவும், சீதையைப் பிரிந்த ராமனின் துயரை மகிழ்ச்சியுடனும், நினைவு கூறும் விழாவாகவும் அவர்கள் கொண்டாடினர்.

ராவணின் முதல் அமைச்சர் மகோதரா என்பவரும் சாணர் இனத்தை சேர்ந்தவர். அசுர/பூத வழிபாட்டை எதிர்த்தவர்கள் மீதான பல்லாயிரம் வருடப் பகையின் வெளிப்பாடாக இந்த விழாவினைச் சாணர்கள் கொண்டாடினர்” எனக் கையேடு குறிப்பிடுகிறது.

பூர்வீகக் குடிகளின் சக்தி வழிபாடும், சைவ வழிபாடும் இணைந்த முக்கிய நிகழ்வாக தக்ஷனின் யாகம் குறிப்பிடப்படுகிறது. புராணக்கதைகளின் படி வீரபத்திரன் மற்றும் பத்திரக் காளி தலைமையில், பூத (சிறு தெய்வ) வழிபாடு செய்த பூர்வக்குடிகளுடன் இணைந்து தேவர்களுடன் நடந்த போராக இது சுட்டப்படுகிறது.

சாணர்கள் பத்ரகாளியைத் தங்களின் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர் என வாய்வழிச் செய்தியாகக் குறிப்பிடப்படுகிறது. பத்ரகாளி வழிபாடு பூர்வீகக் குடிகளின் பூத / அசுர (Demon) வழிபாட்டோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

கோவிலில் நுழைய எதிர்ப்பு இருந்த அக்காலத்தில் “காளியின் பிள்ளைகள்” என்று சொல்லும் சாணர்கள் மகிமை என்று தங்கள் பொது நிதியிலிருந்து அம்மனுக்குக் கோவிலும், குளமும் அமைத்துத் திருவிழாக்களை நடத்தி வந்துள்ளனர். இக்கோவில்களில், பிராமணர் அல்லாத பட்டார்கள், சாணர் இனப் பூசாரிகள் பூஜைகளை நடத்தி வந்துள்ளனர்.

ஆடி முதல் தேதியைச் சாணர்களின் தேசிய விழாவாக கொண்டாடி வந்த “ராவண பெருவிழா”, அச்சமுதாயம் ஏற்றம் பெற்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் அடிச்சுவடு இல்லாமல் மறைந்து போனது.

1. சென்னை மாகாண நிர்வாகக் கையேடு. (1885)
2. The Nadars of Tamilnad, By Robert L. Hardgrave
3. The Tinnevelly Shanars: A Sketch of Their Religion, and Their Moral Condition and Characteristics, Robert Caldwell.
4. Madras District Gazetter, Tinnevelly Vol 1, Vol 2
5. Walker of Tinnevelly Amy Wilson Carmichael

Leave a Reply