தமிழகத்தின் சப்த கன்னியர்களும் சப்த மாதர்களும்

நாட்டார், கிராம தெய்வ வழிபாடு சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் தொடர்ந்தது. கிராமங்களில் இன்றும் வழிபாட்டில் இருக்கும் கன்னிமார் சாமிகளின் தொடர்ச்சியே வைதீக காலத்தில் சப்தமாதர் வழிபாடு. குடும்பங்களில் இறந்த கன்னிப்பெண்கள் கடவுளாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாகவே வணங்கப்பட்டனர். இவர்களே பின்னாட்களில் சப்த கன்னியர்களாக மாறினர் என்ற கருத்தும் உள்ளது.

சங்ககால மக்கள் பல தெய்வத் தொகுதியில் நம்பிக்கை உடையவர்கள். அத்தெய்வங்களின் உருவங்களைச் சித்திரங்களாக எழுதியே வணங்கி வந்தனர். அதுவே பின்னாட்களில் உருவ வழிபாடாக மாற்றம் பெற்றது. என அறிஞர்கள் கூறுகின்றனர். இத்தெய்வங்களை வணங்கிய மக்களின் பண்புகளுக்கும் இத்தெய்வங்களுக்கும் தொடர்பு இருந்தது. சங்கப் பாடல்களில் கடவுள், தெய்வம் என்ற இரு சொற்களும் ஆண் பெண் என்ற இனப்பாகுபாடின்றி எல்லா சாமிகளையும் குறிப்பனவாகவே இருந்தன.

அத்தெய்வங்களைப் பலியிட்டும் இசைக் கருவிகள் இசைத்தும் வழிபட்டனர். சங்ககால ஆண் தெய்வமான முருகனையும் இவ்வாறே வழிபட்டனர்.சங்க காலத்தின் இறுதியில் வைதீக சமயத்தின் தாக்கம் பண்டைய வழிபாட்டில் பல நிலைகளில் மாற்றத்தை உண்டாக்கியது. சிலம்பு காலத்தில் கொற்றவை சமஸ்கிருத வயப்பட்ட தெய்வமாகக் காட்டப்பட்டாலும் நாட்டுப்புற வழிபாட்டு வழக்கை இழக்கவில்லை.

சப்த கன்னிகைகளில் ஒருவரான பிடாரி, இறைவனைக் கூத்தாட வைத்தவள், தாருகனைக் கொன்றவள் எனும் புராணப் பண்புகள் இவளுக்கும் ஏற்பட்டன.

நற்றிணை எழுதப்பட்டக் காலத்தில் தனி தெய்வமாக இருந்த கொற்றவை, எவ்வாறு வைதீக காலத்தில் (சிலப்பதிகார காலத்தில்) மகிஷ மர்த்தினி ஆகி பின்பு அவளே துர்கையாகக் கோட்ட தெய்வமாக, சிவனின் அம்சமாகப் பார்வதியா ஆனாளோ அதே போலத்தான் சப்த கன்னியர்களும் வைதீக சமயத்தின் தாக்கத்தால் சப்த மாதாக்கள் ஆகின்றனர்.

சப்த கன்னியர்கள் இரண்டு கைகளுடன் காட்டப்பட்டவர்கள் சப்த மாதாக்களாக மாற்றம் பெறும்போது மேல் இரண்டு கைகளில் அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு கீழ் இரண்டு கைகளும் அபய வரத ஹஸ்தங்களுடன் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்டப் பெறுகின்றனர். சப்த மாதாக்களின் வழிபாடு குஷானர் காலத்தில் வட மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் பல்லவர் காலத்தில் தான் கோயில்களில் அமர்த்தப்பட்டனர் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். இவர்களைத் தொடர்ந்தே சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இதையே வழக்காக்கிக் கொண்டனர்.

சப்த மாதாக்களாக மாறும்போது அவர்கள் பிராமி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி மற்றும் சாமுண்டியென அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆண் தெய்வங்களுக்கு நிகரான பெண் தெய்வங்களாகவே கருதப்பட்டனர். இவர்கள் எழுவரும் ஆதியில் ஒரே பலகைக் கற்களில் வடிக்கப்பெற்று பின்பு தனித் தனி தெய்வ சிலைகளாக அமைக்கப்பட்டனர். சப்த மாதர்களின் இரு புறமும் வீரபத்திரரும், விநாயகரும் காவல் தெய்வங்களாகக் காட்டப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டது.

ஆகமங்களில் இந்தச் சப்தமாதர் தொகுதியின் இருபுறமும் காட்டப்படும் வீரபத்திரர் மற்றும் விநாயகர் அமைப்பு சிவன், அம்பிகை, அய்யனார், மற்றும் கிராம தேவதை கோயில்களில், அந்த அந்த ஆகமத்திற்கு தகுந்தாற்போல மாற்றம் அடைகின்றது. உதாரணமாக வீரபத்திரர் கருப்பண்ண சுவாமியாகவோ அல்லது பூர்ண புஸ்கலையுடன் அய்யனாராகவோ மாற்றம் பெறுகின்றனர்.

பின்னாட்களில் எழுவர் எட்டு மாதர்களாகவும்/ அஷ்ட சக்திகளாகவும் பின்பு அவர்களே ஒன்பது மாதர்களாக, நவ சக்தியாகச் சில இடங்களில் வழிபடப்படுகின்றனர். இதில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி விநாயகர் விக்னேஸ்வரி / விநாயகியாகவும் வீரபத்திரர் வீரபத்திரை ஆகவும் ஆக்கப்படுகின்றனர்.

சப்தமாதர் சன்னதிகள், பிரதான கோயில்களின் ஈசான மூலையிலேயே அமைக்கப்பட்டது. ஈசான மூலை என்பது சிவன் சுடலைப் பொடி பூசிக் கூத்தாடும் ஈமக்காடுகளைக் குறிக்கும். சப்த கன்னியர் கோயில்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலேயே அமைக்கப்படுவது மரபு.

சப்தமாதர்களுக்கு அமைக்கப்படும் கருவறை செவ்வக வடிவமாகவே இருந்தது. இக்கருவறை மீது அமைக்கப்பெறும் விமானமும் மற்ற தெய்வங்களுக்கு அமைக்கப்பெறும் விமானத்திலிருந்து மாறுபட்டு ராஜகோபுரத்தைப்போன்றே ஏழுகலசங்களுடன் அமையப் பெற்றன. எழுவர் ஒருவராக மாரியம்மனாகவோ அல்லது செல்லி அம்மனாகவோ, மாற்றம் அடைந்தாலும் விமானம் மட்டும் எந்த வித மாற்றத்தையும் காணவில்லை.

சோழர்கள் காலம்வரை சப்தமாதர் தனிக்கோயில் கொண்டு வழிபடப்பட்ட வழக்கு பின்பு அருகிவிட்டது. சென்னை தண்டீஸ்வரத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட சப்தமாதர் கோயில் தற்போது பிடாரி திரு செல்லி அம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது.

தஞ்சைப் பெரிய கோயில் எனப்படும் ராஜராஜேசுரத்தில் இருக்கும் வாராகி அம்மன் சன்னதி, ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்ட சப்தமாதர் தொகுதியின் எச்சமே என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.

12 ஆம் நூற்றாண்டுவரை தனிக்கோயிலாகக் கொண்டு இருந்த சப்த மாதர்கள் தனித்தன்மையை இழந்த காரணம் அறியக் கூடவில்லை. ஆனாலும் பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், முகமதியர்கள், பிரித்தானியர்கள் ஆட்சி மாற்றங்களால் சப்தமாதர்கள் தனித்துவத்தை இழந்து இருக்கலாம்.

– வேலுதரன்

Leave a Reply