இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு விதமான கட்டிடக்கலையிலை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தந்த ஊரின் தட்பவெப்ப அமைப்பும், புவியியல் அமைப்பும், கிடைக்கும் பொருட்களும், வந்து செல்லும் வணிகர்களும், உள்ளூர் கலைஞர்களும், பொருளாதார நிலையும், அரசர்களின் ஆர்வமும் கட்டிடகலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் ஒரு வகையில் கட்டப்படும் கோவிலோ, வீடோ, கேரளத்தில் வேறு விதத்திலும், மகாராட்டிரத்தில் வேறு வகையிலும், காஷ்மீரத்தில் வேறு விதத்திலும் அமைகிறது.
இதுவரை நாம் அதிகம் அறிந்திடாத ஆனால் பல அரிய வரலாற்று தரவுகளையும், கட்டிக்கலையின் கோணங்களையும் அறிந்துக்கொண்டோம் ஒரு பயணத்தில். ஜம்முவின் பயணமே மிக நீண்டு இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு, இரண்டரை நாட்கள் பயணம். புதிய ஊர்களில் எப்போதும் நம்மை பயமுறுத்துபவை மொழியும், உணவுமே. மற்றபடி பயணங்கள் இனிமையானவை.
ஜம்மு அந்த மலை முகட்டின் இந்த பக்கம் உள்ளது. அந்தப்பக்கம் காஷ்மீர். ஒரு மலை அந்த இரண்டு ஊர்களையும் பிரிக்கிறது, உணவு,தட்பவெப்ப சூழல், அமைப்பு, கட்டிடக்கலை எல்லாவற்றையும் மாற்றி உள்ளது.
ஜம்முவின் கட்டிடக்கலை பல வித கோவில்களையும், மசூதிகளையும், கோட்டைகளையும், அரண்மனைகளையும், பயண சத்திரங்களையும் கொண்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இவ்வூர் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ஊர்களின் கட்டிடக்கலை சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆரம்பம் முதலே இவ்வூர் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும், காஷ்மீரில் இருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் செல்லும் வழி தடத்தில் அமைந்துள்ளதால் பல்வேறு வணிகர்கள் வந்து செல்லும் தலமாக இருந்துள்ளது. அதன் காரணமாக இது ஒரு மலை பிரதேசமாக இருந்தாலும் தனித்த ஊராக இயங்காமல், உலகின் பல்வேறு கலைகளை தன்னகத்தே கொண்டு வளர்ந்துள்ளது.
ஜம்முவின் கோவில்கள் கட்டிடக்கலை அமைப்பில் ஒரிசா, ஹிமாசலம், காஷ்மீரம், இந்திய-இஸ்லாமிய பாணியை ஒத்திருக்கிறது. இங்கு கோவில்களை கற்கள், செங்கற்கள், மரம் போன்ற பொருட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளன. அதே சமயத்தில் அரண்மனைகள், கோட்டைகள், பயணியர் தங்கும் மண்டபங்கள் போன்றவை கிரேக்க-ரோமானிய பாணி , இந்திய-இஸ்லாமிய பாணி மற்றும் ஐரோப்பிய பாணிய கொண்டுள்ளன.
ஜம்முவின் வரலாற்றை பார்க்கும் போது அது சிந்து சமவெளி நாகரிகத்தோடு, அதாவது 2500 -1750 பொது யுகத்திற்கு முந்தைய காலமாக உள்ளது. ஆனால் இதுவரை சிந்து சமவெளி காலத்தின் சின்னமாய் எந்த கட்டிடமும் ஜம்முவில் இந்திய தொல்லியல் துறையினரால் கண்டறியப்படவில்லை. ஆனாலும் சிந்துசமவெளிகே உண்டான சிகப்பு – கருப்பு பானை ஓடுகள், பாத்திரங்கள் , கோப்பைகள் , செம்மண் பொருட்கள், அன்புகள் மாண்டா , அக்னூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. செனாப் ஆறு , ஹிமாச்சல பிரதேசத்தில் இமயமலையின் பள்ளதாக்குகளில் ஆரம்பித்தாலும் அக்னூரில் மட்டுமே ஆறு சற்று சாந்தம் அடைந்து கடக்க ஏதுவாக உள்ளது.
இதன் காரணமாக இவ்வூரும், அதனை சுற்றி உள்ள இடங்களும் மர வாணிகத்தில் சிறந்து விளங்கியது. ஒரு படகுத்துறை அக்னூரில் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த துறை மூலமாக மரப்பலகைகள் பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும் ஹரப்பா நாகரீக மக்கள், சுட்ட செங்கற்களை கொண்டு தங்கள் வீட்டை கட்டியும், முகப்புகளை மரங்கள் கொண்டும் அலங்கரித்துள்ளனர். மரங்கள் மட்டுமல்லாது அக்னூரின் மண், செங்கற்கள் செய்யவும் ஏதுவாக உள்ளன.
ஆரியர்களின் படையெடுப்புக்கு பின்பு இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் தொடர்ச்சியாக வடகிழக்கு பகுதி மக்களிடம் இருந்து, அலெக்சாண்டர், குசானர்கள் ஹுன் , முகலாயர்கள் என்று பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன.
இதன் காரணமாக அக்னூர் பலதரப்பட்ட கலாச்சாரங்களை கொண்ட கூட்டமைப்புகளால் ஒரு சிறந்த வளர்ச்சியடைந்த நகரமாக உருபெற்றது. இதுவரை குசானர்களின் நகர எச்சங்களாக நூறு தளங்களுக்கு மேல ஜம்முவில், தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன. செனாப் ஆற்றங்கரை ஓரமாக அதிக தடயங்கள் உள்ளன. கனிஷ்காபுரம்,ஹுஸ்காபுரம், ஜஸ்காபுரம் போன்ற ஊர்களும் குசான அரசர்களின் பெயர்களை தழுவியே இடப்பட்டுள்ளன. இங்கு செய்யப்பட்டுள்ள அகழ்வாய்வுகளும் குசானர் காலத்தில் காஷ்மீரத்தில் நடைபெற்ற புத்த சங்கங்களின் தடயங்களை தருகின்றன.
க்ரிமாச்சி பகுதியில் குசானர்களின் குடியிருப்புகளின் மிச்சங்கள் உள்ளன. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டு கோவில்களும் , குடியுருப்புகளின் மிச்சங்களும் சமீபத்தில் நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஜம்மூ மற்றும் அதன் சுற்று புறங்களில் புத்த மதம் தழைத்ததற்கான தடயங்களை இந்திய தொல்லியல் துறை 2002-2005 ஆண்டுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வில் கண்டுபிடித்துள்ளது. மேலும் இவ்வாய்வில் அக்னூர் பொது யுகம் ஏழாம் நூற்றாண்டு வரையில் வாணிகத்தில் சிறந்து விளங்கியதையும் கண்டறிந்தனர்.
ஜம்முவின் கலாச்சார அட்டவணையை இவ்வகழ்வாய்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
குசானர்களுக்கு முந்திய காலம் (2nd -1st Century BC)
குசானர்களின் காலம் (1st -3rd Century AD)
குசானர்களுக்கு பிந்தைய குப்தர்களின் காலம் (4th -5th Century AD)
குப்தர்களுக்கு பிந்தைய காலம் (6th -7th Century AD)
குசானர்களின் காலத்தில் செங்கற்கள் கொண்டு ஸ்தூபிக்கள் கட்டப்பட்டுள்ளன. ஸ்தூபியின் உள்ளே கூழாங்கற்கள் நிரப்பப் பட்டுள்ளன. சுடுமண் பொம்மைகளின் தலைகள் பல இடங்களில் கிடைத்துள்ளன.
நான்காம் நூற்றைண்டை சேர்ந்தவையாக இவை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அடுத்த இதழில் காந்தார கலைப்பள்ளியின் கட்டிடக்கலையை பற்றி பார்ப்போம். (தொடரும்…)