சோழர் காலத்தில் கிழவர் என்பது யாரை குறித்தது?

 கிழமை என்றால் உடையது என்பது பொருள். ஞாயிற்றுக்கு உடைய நாளை ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். நிலம் சொந்தமாக உடையவர்களைக் கிழவர் என்று குறிப்பிடும் வழக்கமுள்ளது. இதனால் தான் பெரும் நிலா உடைமையாளர்களைச் சங்க காலம் முதல் நிலக்கிழார் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
 
லெய்டன் சோழர் செப்பேடுகள் படி, “கிழவர்” எனக் குறிப்பிடப்படுவது, ஊர்களை பிரம்மதேய தானமாக அளிக்கப்பட்ட பிராமண நில உடைமையாளர்களைக் குறித்துள்ளது. பிராமணர்களை “பிரம்மதேய கிழவர்” என்றும் ஊர் பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் “நாட்டார்” என அழைக்கப்பட்டுள்ளனர். கிராமத்தை சேர்ந்தவர்களை ஊர் நாட்டான் என்று அழைக்கும் சொல் இதிலிருந்து உருவான ஒன்றாகும்.
நாட்டார் என்போர் பொதுவுடைமையில் நிலத்தை தங்களுக்குள் பங்கிட்டுப் பயன்படுத்தியவர்களாகவும், கிழார் என்போர் தனியுடைமைவாதிகள் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். பிரம்மதேயங்களுக்கு வரி இல்லை என்பது தவறான கூற்றாகும். நிலவரியில் முதல் ஆண்டு வரியில் கால் பங்கும், இரண்டாம் ஆண்டு பாதி பங்கும், மூன்றாம் ஆண்டு முக்கால் பங்கும், நான்காம் ஆண்டிலிருந்து முழு வரியும் பிரம்மதேயங்களுக்கு விதிக்கப்பட்டது.
 
அதே செப்பேட்டில் கிழான் என்றும் கிழவன் என்றும் அரையர்கள் எனும் அதிகாரிகளைக் குறித்துள்ளது. கிழவர் என்றால் “உரிமைக்குரியவர்” அல்லது “Lord” என்ற பொருள் உண்டு. தலைவர் என்ற பொருளிலும் குறிப்பிடப்படுகிறது.
 
படம்: சோழர்கால எழுத்தில் கிழவர். “ர்” லில் புள்ளி வராது.
Digital எழுத்து ஆக்கம்: ராஜசேகர்