சியோல் கொரியப் போர் நினைவகத்தில் இந்தியக் கொடி – பொற்செல்வி ஜெயபிரகாஷ்

“தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்தத் தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த எங்கள் மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப் படுத்துகிறது”.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரியப் போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளே இவை.

2014ம் ஆண்டு, தென் கொரியாவில் இருந்த எங்கள் மகள் மாப்பிள்ளையைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தோம். அப்பொழுது அங்கிருந்த மிகப் பெரிய கொரியப் போர் நினைவகத்தைப் (The War Memorial of Korea) பார்த்தோம்.
அங்குச் சரித்திரக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து கொரியாவில் நடந்த போர்கள், அவற்றில் பயன்படுத்திய ஆயுதங்கள், அயல் நாட்டினர் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டவர்களின் வீரச் செயல்கள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்திருந்தனர்.

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க் கருவிகள், கப்பல்கள், மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் கப்பல்கள், விமானங்கள், டாங்கிகள் போன்றவற்றின் மாதிரிகள் இருந்தன.முப்பரிமாண மற்றும் மிக நவீனத் தொழில் நுட்பங்களின் உதவியுடன் நாமே போர் நடக்கும்போது, கப்பலில், விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

மேலும் கப்பல் போன்றவற்றை நாமே குறிபார்த்துச் சுடுவது, படகை ஓட்டுவது போன்ற நிகழ்ச்சிகள் சிறுவர்களும் உற்சாகமாகப் பங்கேற்று, போரைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப் பற்றை ஊட்டும் வகையிலும் அமைக்கப் பட்டிருந்தன.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஜப்பானுக்குக் கீழ் இருந்த கொரியா, வடகொரியா, தென்கொரியா என்று பிரிக்கப்பட்டது. 1950இல், ரஷ்ய சார்பு வடகொரியா, தென்கொரியாவை ஆக்கிரமிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பல நாட்டுப் படைகள் தென்கொரியாவிற்கு உதவுவதற்காகச் சென்றிருக்கின்றன. அவர்களுக்கு நன்றி செலுத்தும்விதமாகத்தான் முதலில் குறிப்பிட்ட வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
தெரியாத ஒரு தேசத்தையும், அங்கிருக்கும் அறியாத மக்களையும் காப்பதற்கு வந்த பல நாட்டவர்களையும் நினைத்து, எங்கள் மகன்கள், மகள்கள் என்று அழைத்து, அவர்களை மரியாதை செய்கிறோம் என்று பெரிய அளவில் எழுதி வைத்திருந்தது என்னை மிகவும் கவர்ந்தது.

அப்பொழுது இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து 329 பேர் கொண்ட மருத்துவ உதவிக் குழுவினர் சென்று உதவியிருக்கின்றனர். 20.11.1950லிருந்து 23.2.1954வரை பணியாற்றி இருக்கின்றனர். நமது கொடியையும் வைத்து, அனைத்து விவரங்களையும் படங்களுடன் வைத்துள்ளனர்.

அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இந்தியரும் படம் எடுத்துக் கொண்டிருந்தார். துஷார் என்ற அந்த இளைஞர், தன் தந்தை ஜெனரல் ராஜன்சௌத்திரி அந்தக் குழுவில் பணியாற்றியதாகவும், தற்பொழுது ஆக்ராவில் இருப்பதாகவும் கூறினார்.

அமெரிக்காவில் இருக்கும் அவர் பணி நிமித்தமாக சியோல் வந்திருப்பதால், தந்தை கூறியபடி, இந்த நினைவகத்தைப் பார்க்க வந்திருந்தார்.

எங்கேயோ இருக்கும் சியோலில் பார்த்த அந்த வார்த்தைகளும், நம் இந்தியக்கொடியும், நமது பங்களிப்பும், அதில் பங்கேற்ற ஒருவரின் மகன் துஷார் என்பவரைப் பார்த்ததும், மனத்தைச் சிலிர்க்க வைத்தது. உலகம் எவ்வளவு சிறியதாகிக் கொண்டு வருகிறது!!

 

Leave a Reply