சகியர் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #18

வீரமாதேவி அந்தப்புறம்

எல்லாமும் தயாராகி விட்டது. நெருங்கிய ஆண், பெண் குழந்தைகள் என அத்தனை உறவுகளும் வாய் பொத்தி கண்கலங்கி பரிதவித்து நிற்கின்றன.  அவளுக்கு மிக அருகே நின்றிருந்த பணிப்பெண்களின் மேனியில் கூட அடுத்தவர் கண்டுக் கொள்ளும் அளவிற்கு  நடுக்கம், ஏதோ அடுத்த நொடி மரணம் தங்களுக்கானது என்பது போல. 

வீரமாதேவி! சோழர் குல திலகம் மாமன்னர் ராஜேந்திர சோழரின் நான்காவது பட்ட மகிஷி! உபதெய்வமாய் அந்தபுரத்தின் ஒரு மூலையில் கிடக்க வேண்டியவளுக்கும் தான் அவர் எத்தனை இடம் கொடுத்திருந்தார். பட்டத்து ராணியென முடி சூடி அழகு படுத்தி விட்டாரே, அந்தரங்கத்தில் இடம் கொடுத்து விட்டாரே! 

இவ்வளவுக்கும் வீரம்மாள் ஒன்றும் அரச குல தோன்றல் அல்ல. ஏதோ ஒரு சிறு கிராமம்… மூங்கில் துறை என்று அதற்கு அடையாளம். அங்கு பிறந்து வளர்ந்த ஒரு பேதைக்கு அரசரோடு அமரும் சரியாசனம். 

இருந்தாலும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்து விட முடியவில்லையே அவளால் அரசரோடு. 

தகுதியற்றவள் என தெரிந்தால், கீழ் மட்ட சமூகமே வாழ விடாதே… அரச குலம் மட்டும் விதி விலக்கா? 

அதிலும் அரச குடும்பங்களிலிருந்து  வந்தவர்கள் மூத்த ராணிகள்  மூவரிருக்க கிராமத்து காரிகை இவளா அரண்மனையில் வாழ முடியும்? அதுவும் பட்டத்து ராணியாக?

ஒவ்வொரு முறையும் மாமன்னர் இராஜேந்திர சோழர் படைகொண்டு செல்லும் போதெல்லாம், பரிதவித்து போகுமே வீரம்மாவின் பேதை உள்ளம். அவரது அருகாமை இல்லாவிடில் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகி விடுவாளே.. எந்த நேரத்திலும் அவளை நோக்கி ஆபத்து முன்னேற  ஆரம்பிக்குமே. 

கண்டவுடன் காதல் கொள்ளும் கண்களுக்கும் மனதுக்கும் ஏற்ற தாழ்வுகள் தெரிவதில்லை. ஆனால் சுற்றியிருக்கும் சமூகம் விட்டுவிடுமா? 

ராஜேந்திர சோழரின் அதீத அன்பிற்கு உரியவளாய் இருந்த காரணத்தால் இவளையும் அல்லவா பட்டமகிஷி என அங்கீகாரம் செய்து விட்டார், அதுவல்லவோ அவளுக்கு வாழ்நாள் துன்பமாகி விட்டது.

“அரசருக்கு அவள் மேல்தான் அத்தனை பிரியமும். அவளுக்கு மட்டும் ஆண் வாரிசு ஒன்று பிறந்து விட்டால், அவன்தான் பட்டத்துக்கு உரியவன் ஆகிவிடுவான், நானும், நீங்களும், அவளிடமும் அவள் பெற்ற பிள்ளையிடமும் கையேந்தி வாழ நேரிடம். இந்த அவலம் நடக்க நாம் அனுமதிக்க கூடாது.  

மூத்தவர்கள் மூவர் இளையாள் ஒருத்தி என வீரம்மாளுக்கு எதிராக சதியாலோசனை எத்தனையோ செய்திருக்கும் போது, அதில் ஒன்று கூடவா அவளுக்குத் தெரியாமல் போகும். 

அப்பொழுதே முடிவெடுத்தவள்தானே, மன்னவரோடு அங்கம் கூடி வாரிசு ஒன்று பெற மாட்டேன் என்று. 

வடநாட்டு போரெடுப்பின் வெற்றித் திருவிழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தை  நிர்மானிக்க மன்னவர் முடிவெடுக்க, அத்தனை கட்டுமான  கைங்கரியமும் வீரம்மாளின் உத்தரவின் பேரில் அல்லவா தடையின்றி நடந்தேறியது. 

கங்கை கொண்ட சோழீச்வரம் கோயிலை கோயிலாக மட்டுமின்றி கலைகள் மிளிரும் வண்ணம் சிற்ப செல்வங்களை அங்கே செதுக்கி வைக்க ஆவன செய்தவளாயிற்றே! ஆக, கோயில் நகரம் கலை நகரமும் ஆகியதே அவளின் மேற்பார்வையில்! அதனைத்தானே தனது தலைநகரமாக்கிக் கொண்டார் மன்னவ பெருமான்!. 

ஆக, கோயில் நகரம், கலைநகரம், தலைநகரம் என முப்பெரும் பெருமைகளை பெறத்தக்க அளவிற்கு கண்டோர் போற்றும் வண்ணம் உரிய நேரத்தில் கட்டுமான பணிகளை முடித்து திறப்பு விழாவை கோலாகல விழாவாக செய்ததின் பின்புலத்தில் வீரம்மாளின் விவேகம், செயல்வடிவம், கலை நயம் எல்லாமும் அடங்கியிருந்ததே!

இராஜராஜன் பெற்ற மைந்தனோ, வட நாட்டு போரெடுப்பின் வெற்றி களிப்போடு வந்தார், வெற்றி விழா கொண்டாடினார். மீண்டும் கடார படையெடுப்பு குறித்த ஆலோசனையிலும் செயல் வடிவத்திலும் தன்னை மறந்து போனாரே! எத்தனையோ இரவு பகல் வேண்டியிருந்ததே அவருக்கு  அந்த கடல் கடந்த போரேடுப்பின் செயலாக்கத்தை திட்டமிட்டு வடிவமைக்க!   

அந்த காலங்களில் ஏற்பட்ட பிரிவு துயரும், ஏக்கமும், மனதில் தோன்றியதை பேசித் தீர்க்க பக்கத்தில் மன்னவர் இல்லையே எனும் வெறுமையும் எத்தனை அயர்ச்சி கொடுத்திருக்கும் அவளுக்கு! 

அதையெல்லாம் விடவா தன்னைத் தானே தீக்குள் வைத்துக் கொள்வது  கொடுமையாகிவிடும்?!

*************

பரவை நாச்சியாரின் மாளிகை 

சேதி கேட்ட நொடியில் தூணோடு சரிந்தவள்தான். இன்னமும் எழுந்துக் கொண்டபாடில்லை.

அவளை வளர்த்தவளும் உடனிருக்கும் மற்றவர்களும்தான் விடாமல்  முணுமுணுத்து மாளிகையில் மனிதர்கள் உண்டு என நிரூபிக்கிறார்கள்.

“எத்தனை வயதானாலும் என்ன நடந்தாலும் பொட்டழிப்பது நமக்கு விதிக்கப்பட்டதில்லை.”

“என்னதான் கழுத்தில் தாலி என்ற ஒன்றை அணிவித்திருந்தாலும்   கைம்மை நோன்பெல்லாம் இங்கே கூடாது. அது நமது குல கடமை அல்ல.”

அந்த கும்பலில் இருந்த மூத்த கிழவி ஒருத்தி சட்டமியற்றுவது போல ஒவ்வொன்றாக அறிவித்துக் கொண்டிருந்தாள்.

“இனி வரும் காலங்களில் வெள்ளையாடை உடுத்திக் கொள்வாள் போல் தெரிகிறாளே…” 

யாரோ ஒருத்தி எடுத்துக் கொடுக்கிறாள்.

“அதெல்லாம் நமது குல தர்மத்திற்கு உட்பட்டதல்ல. எப்பொழுதும்  நிறைந்தவர்களாகவே வாழ கடமை பட்டுள்ளோம் நாம். இறைவனுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொண்ட பின்னர் நாம் வாழ்நாள் முழுவதும் நித்திய சுமங்கலிகள்தான்.” 

“தாழம்பூ, தாமரைப்பூ, இராக்கொடி, அடுக்குமல்லி பூவிலிருந்து கொண்டைத்திருகு சந்திரபிரபை, சடைநாகம் வரை கூந்தல் அலங்கார அணிகளை கழட்டி வீசி விட்டாள்! அவிழ்ந்த கூந்தல் இன்னமும் அள்ளி முடியாமல் இருக்கிறது. இது நமது குலத்துக்கே கேட்டை விளைவிக்கும்.”

“தோடு, கொந்திளவோலை, கன்னப்பூ, என காதலங்கார நகைகளையும் அணிகளையும் நெத்திசுட்டி, தாலிக்கொடி, கொத்து, மருந்தங்காய் மாலை, கண்டமாலை, கோதைமாலை, என கழுத்து மாலைகளையும், கரங்களில் கிடந்த காப்பு, கொந்திக்காய்ப்பூ போன்றவற்றையும், கால்களில் ஒலியெழுப்பிக் கிடந்த மாம்பிச்சு கொலுசுகளையும் ஒன்று விடாமல் கழற்றி வீசி விட்டு ஆள் அண்டா கோயிலின் அம்மனாக கிடப்பது ஒன்றும் நியாயமேயில்லை.” 

“மெட்டி, நல்லணி, பாம்பாழி அனைத்தும் கால் விரல்களிலிருந்து நழுவி கிடக்கின்றன.”

“கைவிரல்களும் மூளியாகி வெகு நேரமாகிவிட்டது. சிவந்திப் பூ, வட்டப்பூ, மோதிரம் எல்லாம் இனிதான் ஒவ்வொன்றாக எங்கே கிடக்கின்றன எனத் தேடி வைக்க வேண்டும்.”

ஒவ்வொருத்தியும் பரவை நாச்சியாரின்  அணிமணிகள் கேட்பாரற்றுக் கிடந்தாலும் தங்களுக்கு அவை கிடைக்காது என்பதையெண்ணி பெருமூச்சு விட்டபடி வரிசையாக ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள்.

“இவள் கிடக்கும் கிடையை பார்த்தால் இனி புறப்பாட்டின் போது ஆட வர மாட்டாள் போலிருக்கிறதே.”

பின் வரிசையிலேயே இது வரை ஆட வாய்ப்பு வழங்கப்பட்டவளுக்குள் ஏதோ ஓர் எதிர்ப்பார்ப்பு!

“போகட்டும். இனியாவது இளைய மகள்கள் ஆடட்டும்”

அவளுக்கு யாரோ ஒத்தூதினார்கள்.

“நிறுத்து! அவள் ஆடினால்தான் நமக்கு நிரந்தர வருமானம் என்பதாக ஒப்பந்தம். இவள் நிறுத்தி விட்டால், எல்லாம் போச்சு. நாமும் கைவிடப்பட்ட கோயிலின் ஆள் அண்டா தெய்வத்தினைப் போல நைவேத்தியத்துக்கும் நாதியத்து போய் விடுவோம். கவனத்தில் வையுங்கள்.”

அந்த குலத்தில் மூத்தவர்களின் பட்டறிவே அறிவு! 

“இப்பொழுது என்ன செய்வது”?

“அவளை மெல்ல தேற்றி எழுப்புங்கள். உண்ண அருந்த எதையாவது வற்புறுத்தி கொடுங்கள். அங்கே அரண்மனையில் காரியங்கள் முடியட்டும். அதன் பின்னர் இவளை வழிக்கு கொண்டு வரலாம்.”

மாளிகையின் அந்தப்புரத்தில் பேசும் பேச்சுக்கள் எதுவும் காதில் விழவில்லை. மாறாக கண்களில் நிறைந்த  அந்த ஒற்றை உருவத்தோடுதான் தூணோடு சரிந்தவள் பேசிக் கொண்டிருக்கிறாள் இன்னமும். 

“இனி நான் என்ன செய்வேன் சுவாமி? என் பலம் பலவீனம் இரண்டுமே நீங்கள் அல்லவா? சக்தியற்ற ஜீவனாக்கி விட்டீர்களே என்னை… உங்களோடு நான் வந்து கலப்பது இனி எவ்வாறு? உங்களோடு உடன் கட்டை ஏற எனக்கு அனுமதி மறுக்கப்படுமே. தளிச்சேரி பெண்ணுக்கு ஏது அந்த மேன்மை? நான் என்ன செய்வேன்..? என்ன செய்யட்டும்..? சொல்லுங்கள்… சொல்ல மாட்டீர்களா…? பேச மாட்டீர்களா…? உங்கள் திருவாய் மலர்ந்து என்னோடு ஒரு சொல் இனி பேச மாட்டீர்களா?

அவள் புலம்பிக் கிடக்க, அதை கேட்ட செவிகள் தாவி பாய்ந்து ஓடியது அந்தப்புரத்திற்கு.

**************************

வீரமாதேவி அந்தப்புறம்

மதுராந்தக பரகேசரி வேளான். இவன் சோழர் படை சேனாதிபதி. எத்தனையோ படையெடுப்புகளை முன்னின்று நடத்தியவன்தான். போர்க்களங்களின் எத்தனையோ மரணங்களை கண்டவனும் கூட. அவ்வளவு ஏன்?  எத்தனையோ எதிரிகளின் தலைகளை தன் வாளால் வெட்டியெறிந்தவனும் கூடத்தானே!

ஆனால், அவன் உடன் பிறந்தாள் எடுத்திருக்கும் உறுதியான இறுதி முடிவில் இன்று மனம் தாளாது தவிக்கிறான். மரண பயம் அவனை அல்லவா இன்று சுற்றி சூழ்ந்துக் கொண்டிருக்கிறது!

கண்களில் கரைபுரண்டோடும் கண்ணீரை தடுக்கவும் ஆற்றலின்றி, அந்த தங்கத்தட்டை தன் உடன் பிறந்த இளைய சகோதரி முன் நீட்டுகிறான். 

கை நீட்டி அதை வாங்க முற்பட்ட பணிப்பெண்ணை ஒரு விரலசைவில் தடுத்துவிட்டு, மிக உறுதியோடு அதை வாங்கிக் கொள்கிறாள் வீரம்மா!

அந்த தட்டையே அனைத்து விழிகளும் நோக்குகின்றன. 

என்ன இருக்கிறது அதில்?

ஒரு மஞ்சள் வண்ண ஆடை. நீண்ட அங்கியென்பதா அல்லது சேலை என்பதா என்பதில் குழப்பத்தை தரும் வண்ணம் எட்டு கெஜத்திற்கும் அதிகமான நீளம் கொண்டது அந்த ஆடை. அதன் மேல் ஒரு கண்ணாடியும் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நீர்க்குடமும் அதிலிருக்கிறது.

இனி அவள் புறப்பட்டு விடலாம். ஆனால் அதற்கு முன்பும் வேறொரு முக்கிய நிகழ்வு இருக்கிறதே. 

உயிரையே  துச்சமென தீர்மானித்து விட்டவள் மேனிக்கு பட்டாடை எதற்கு? பொன்நகை அலங்காரங்கள் எதற்கு? தீ தின்பதற்கா? 

அதெப்படி முடியும்? சுற்றி நிற்கும் சொந்தங்கள் விடுமா? அல்லது வேதியர்கள்தான் அனுமதிப்பார்களா?  

மனம் ஏற்றாலும் மறுத்தாலும், அத்தனைப் பேரும் அதற்காகத்தானே காத்திருக்கிறார்கள்.

அரசர் தனக்கென தனிப்பட்ட முறையில் அளித்த அத்தனை அணிமணிகளையும் வீரம்மாள் தன் முன் பரப்பினாள். தன் மேனியை அலங்கரித்த அத்தனை பொன்னாபரணங்களையும் தன் மூத்த சகோதரன் கொண்டு வந்த அந்த பொன் தட்டில் கழற்றி வைத்தாள். 

சுற்று முற்றும் ஒரு பார்வை பார்த்தாள்.

சகோதரன் குடும்பம் நிற்கிறது. அண்ணனை மணந்து கொண்டவள், அவள் பெற்ற பிள்ளை செல்வங்கள், ஏனைய சகோதர சகோதரிகள், தாய் வழி உறவுகள், தந்தை வழி உறவுகள், அவளின் மேலான அந்தரங்க பணிப்பெண்கள் என ஒரு கூட்டமே நிற்கிறது போதிய இடைவெளி விட்டு. 

கைக்கு கிட்டிய ஒவ்வொரு அணிகலன்களையும் பெயர் சொல்லி அழைத்து ஒவ்வொரு உறவுக்குமாய் வழங்கினாள். 

தன் பெயரில் அரசர் வழங்கியிருந்த நிலங்களையும், உறவுகளுக்கும் அந்தணர்களுக்கும் பகிர்ந்தளித்தாள். அணிகளோடு பட்டாடைகளும் தரப்பட பெற்றுக் கொண்ட கரங்களும் மனங்களும் குளிர்ந்து போயின. 

இனி என்ன,,,?

ஆ… தட்டில் சில்லறையாய் சில சிறிய அணிகலண்கள் இன்னமும் மிச்சமாய் கிடக்கின்றன. கட்டி, தெய்வ உத்தி, பொற்பூ போன்ற தலை அணிகள் சில சிதறிக் கிடக்கின்றன சீந்துவார் அன்றி. மகரக்குழை இரண்டும், முத்து வடங்கள் சிலதும் கூட இருக்கின்றன. 

தன் அந்தரங்க பணிப்பெண்ணை அருகில் அழைக்கிறாள்.

“என் கூந்தலுக்கு நறுமண தைலம் பூசி, நோகாமல் சிக்கெடுத்து தினம் ஒன்றாக அலங்காரம் செய்து குழல் முடிப்பாயே, உன் அலங்காரங்களுக்கு உதவிய அத்தனை அணியும் இதோ… இந்த தட்டில் கிடக்கிறது பார். உனக்கு அதில் என்ன வேண்டுமோ அதை நீ எடுத்துக் கொள்!”

பூம்பாவை எனும் பெயர் கொண்ட அந்த பெண் கதறி அழுகிறாள். அவளின் துக்கம் எல்லாரையும் பற்றிக் கொள்கிறது.

“அழாதே பூம்பாவாய்! உன் தலைவியின் உத்தரவை மட்டும் நீ மேற்கொண்டால் போதுமானது. எடுத்துக் கொள். வேண்டுமானால் தட்டிலிருக்கும் அனைத்தையும் நீயே எடுத்துக் கொள். இது என் கட்டளை!”

அவள் சூரிய சந்திர பிரபைகளை மட்டும் நடுங்கும் கரத்தால் எடுத்துக் கொண்டு தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்.

வீராம்மாதேவியோ தன் சகோதரன் கொண்டு வந்த சீரில் இருக்கும் தட்டொளி எனும் கண்ணாடியில் இறுதியாக தன் முகத்தைப் பார்த்துக் கொள்கிறாள். அது மரபு!

*****************************

பரவை நாச்சியார் மாளிகை 

“கோயிலில் ஆண்டவன் முன்னால் ஆட வந்தவளை உங்கள் முன்னர் ஆட வைத்தது யார்? விதியா? என் பொல்லா வினையா? நான் உங்கள் விழிகளில் விழாமலேயே போயிருக்கக்கூடாதா? 

உங்களின் ஜென்ம நட்சத்திர கோலாகலத்தில் முன் வரிசையில் நடனமாட கிடைத்த வாய்ப்பை நான் ஏற்றிருக்கக் கூடாதோ. ஒரு நாளும் இல்லாத திருநாளாக அன்று நான் என்னை மறந்து துள்ளியாடியதும் தவறோ?

பொல்லாத விதிதான் அப்படி விதித்ததோ?“

ஏதோ நிஜமாகவே யாரோ எதிரில் நிற்பது போலவே கேட்டுக்  கொண்டிருக்கிறாள் அவள். 

ஆனாலும் உண்மைதான். 

மன்னவரின்  பிறந்த நாள் விழா எப்பொழுதுமே கோலாகலமாக கொண்டாடப்படும் நாடு முழுவதும்!  அன்றைய நாளில் ஆறு கால பூஜைகளும் சிறப்பு பூஜையாகவே நடைப்பெறும்  கோயில்களில்.  மாலை மரியாதைகள் ஒரு புறம் இருக்க, பூரண கும்ப மரியாதையோடும் நடன மணிகளின் சதிராட்டத்தோடும் மன்னர் கோயிலுக்குள் வரவேற்கப்படுவார். 

அப்படி ஒரு வரவேற்பில்தான் பரவையின் கால்கள் துள்ளிக் குதித்தாடின. விழியிரண்டும் கயலென கதை பேசின. இடை ஒடிந்து விடுமோ என மன்னவரே அச்சம் கொள்ளும் வண்ணம் ஆடிய அவளது கால்கள் வலித்திருக்குமோ… இடை நொந்திருக்குமோ…. 

தெரியவில்லை. 

ஆனால், அரங்கில் ஆடிய கால்கள் நாடாளும் மன்னவர் கண்களில் நடனமாடியது நிஜம். ஒடிந்து வீழ்ந்து விடுமோ என்று அவர் அச்சம் கொண்ட அவளது இடை பின்னர் அவர் கரங்களில் தஞ்சம் கொண்டாடிக் கொண்டது. அவளது மைபூசிய கண்களும் அவரின் கூரிய பார்வையும் பின்னர் பேசிக் கொண்ட கதைகள் ஏராளம். 

அந்தரங்க சகி என்பதற்கு மேலாக, அவர் சுகிப்பதற்கென்றே தனிமைப்படுத்தப்பட்டவள் எனும் சிறிய அபஸ்வரத்துக்கும் அப்பால், அவருக்கு அவள் யார் என உலகிற்கு தெரியாது.

அதையெல்லாம் இப்பொழுது நினைக்கும் பட்சத்தில் நெஞ்சம் விம்முகிறது. ‘நான் வெறும் ஆசை நாயகி அல்ல’ என்று அலற வேண்டும் போல் இருக்கிறது அவளுக்கு!.

உண்மையும் அதுதானே.

அன்றொரு நாள் அவளது மாளிகையில் நடந்தது இந்த பழைய கதை.

மயில் இறகால் மெல்ல வருடிக் கொடுத்தார் அவளது வலது உள்ளங்கையை. தோளில் சாய்ந்தபடி அவருக்குள் புதைந்துக் கிடந்தவளுக்கு அந்த வருடல் பெரும் சுகமாய் தாலாட்டு பாடியது. 

“என்ன மந்திரம் அது? எனக்கு சொல்வாயா கண்ணே?”

காதோடு அவர் கோரிக்கை வைக்க, கலகலவென சிரித்தாள் அவள்!

“இதில் மந்திரம் என்ன, மாயம் என்ன?”

“பின்னர் எப்படி, என் முன்னால் மின்னல் கொடியாய் சுழன்றுக் கொண்டிருப்பவளுக்கு மடப்பள்ளியின் வாசனை தெரிந்தது?”

“ஆஹா..! என்னதான் ஆட்டத்தில் மும்முரம் காட்டினாலும் நானும் பெண்தானே… எனக்கும் பசிக்கும் இல்லையா..? 

“அதற்குத்தான் எத்தனையோ பணியாளர்கள் உண்டே, சுவையோடு பால் அன்னமும் பருப்பு சோறும் அதில் நெய்யும் கலந்து பக்குவமாய் தருவதற்கு..”

“யார் இல்லையென்றார்கள்?”

“பின்னே, கொதி நிலையில் இருந்த தாளகத்தை உள்ளங்கையில் விட சொல்லி அதில் உப்பிருக்கிறதா இல்லையா என்று நீ அறிந்ததுதான் என்ன விதம்? இன்னமும் பீடிகை போடாமல் உண்மையை சொல்.”

வாள் பிடியை அழுந்த பிடிக்கும் அவரது வலிய விரல்கள் அவளது கன்னத்தை இதமாக தடவிக் கொண்டிருக்க, தன் சகியிடம் ரகசியம் கேட்கிறார் பாராளும் மன்னர். 

அந்த தொடு சுகத்தை அவள் மனது மிகவும் விரும்பும். அவரிடம் அவள் விரும்புவது அவரது அண்மை தவிர வேறொன்றில்லை!

“கொதி நிலையில் இருக்கும் குழம்பில் போதுமான உப்பிருந்தால், உள்ளங்கையில் விடும் போது சுடாது. அன்றி உப்பில்லை என்றால் கடுத்த மணம் வரும். மேலும், உள்ளங்கையில் விடும்போது புண்ணாக்கிவிடும் கையை.”

“ஓ! இப்படி ஒரு வித்தை தெரியுமா உனக்கு..?”

“எனக்கு என்ன, மடப்பள்ளியில் இருக்கும் பெண்டாட்டிகள் அனைவருக்கும் தெரியுமே…”

“சரி!. ஆனால், உப்பில்லாத உணவில் விஷம் இருப்பதை  நீ அறிந்த விதம் எங்ஙனம்?”

“அது இறைவனின் திருவுளம். விஷத்தை அவள் இடும்போது நான் கண்டு விட்டுத்தான் அவளை நெருங்கினேன். ஆனால் அது விஷமா அல்லது உப்பா என்பதில் எனக்கும் ஒரு ஐயப்பாடு எழுந்தது! ஆனால், என் உள்ளங்கையில் விட்ட சொட்டு குழம்பின் சூடு தாங்காமல், கை  சிவந்து கொப்பளித்த வேகத்தில் அதில் துளி உப்பைக் கூட அவள் சேர்க்கவில்லை என்பதனையும் உணர்ந்துக் கொண்டேன். சில விஷங்களுக்கு உப்பே முறிவு மருந்து. அந்த குழம்பில் அவள் உப்பிட்டிருந்தால், அதில் அவள் விஷத்தை கலப்பது வீண்! உப்பு விஷத்தை முறியடித்திருக்கும்!.”

பாண்டியர் தொல்லை ஒரு புறம். மற்றொரு திசையில் சாளுக்கியர் தொந்தரவு. ஆக ஒவ்வொரு நொடியும் எதிரிகளின் சதிகளை எதிர்நோக்கி கொண்டிருந்த சோழ அரசின் அரண்மனைக்குள்ளேயே எதிரியின் ஒற்றன் ஊடுருவியிருப்பதாக ஒற்றர்கள் சேதி சொல்ல, தலைமை காவல் அதிகாரி, தலை வாசல் காவலன் அந்தப்புரத்தை காவல் கொள்ளும் பெண் காவலர்கள் என எல்லாரும்தான் ஆளாளுக்கு ஆராய்ந்து விட்டார்கள். புதிதாக எந்த ஆணும் அங்கு ஊடுருவியிருப்பதற்கான தடயமே தென்படவில்லை. 

மனச்சோர்வும் குறுகுறுப்புமாக பரவையைத் தேடி வந்தவர், அவளிடம்தான் எதிரியின் ஒற்றன் பற்றிய சேதியை சொன்னார். கூடவே ஒற்றனை கண்டு பிடிக்க இயலாத தனது காவலர்களின் தோல்வியைப் பற்றியும்.

மன்னர் விடை பெற்று சென்றதும், அரண்மனை தலைமை காரியக்காரரை அழைத்தாள். அரண்மனைக்குள்  புதிதாக வந்திருக்கும் பணியாளர்கள் யாரென கேட்டுத் தெரிந்துக் கொண்டாள். குறிப்பாக பெண் பணியாளர்கள்.

மறுநாள் மன்னரின் முத்திரை மோதிரம் கையிலிருக்க பயமின்றி ஒரு காவலனை போல  மடப்பள்ளிக்குள் புகுந்து ஒவ்வொரு பெண்டாட்டிகளையும் ஊடுருவிக் கொண்டிருக்கும் போதுதான், அவள் அந்த பாண்டிய நாட்டு பெண் அரசருக்கு தயாராகிக் கொண்டிருந்த உணவில் விஷத்தை கலப்பதைக் கண்டு, கூச்சலிடாமல் தன் கையில் கொதிக்கும் குழம்பை விட சொல்லி, கலக்கப்பட்டிருப்பது விஷமே என ஊர்ஜிதம் செய்து குற்றவாளியை பிடித்து தலைமை காவலனிடம் ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறாள். 

சேதி கேள்வி பட்டு, ஆனந்தத்தில்  ஓடி வந்திருக்கிறார் மன்னவர். 

மாறு வேடத்தில் போனது இவள்தான் என்பதை தலைமை காவலன் கண்டுக் கொண்டு மன்னரிடம் கூறியிருந்தான். 

அன்றிலிருந்துதானே, அவளை வெறும் காதலியாக பார்க்காமல், தனது அரசியல் காரியங்கள் யாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளும் அந்தரங்க மனப்பேழையாக நினைக்க ஆரம்பித்திருந்தார். 

பரவை நாச்சியார் என்பவள் ஊருக்குத்தான் தளிச்சேரி பெண். ஆனால், அவளுக்கிருந்த அரசியல் ஞானமும், கற்பூரமாய் மன்னவரின் உள்ளக்கிடக்கையை புரிந்துக் கொண்டு செயலாற்றும் திறனும் யாருக்குமே தெரியாது. ஏன் அவளை சுற்றியிருக்கும் பெண்களுக்கே அது பற்றி ஏதும் தெரியாதே.

ஆனால், அத்தனை தைரியம், புத்திசாலித்தனம், அரசியல் ஞானம் அத்தனையும் ஒரு நொடியில் அவளை விட்டு போனது போல ஆகிவிட்டாள், இராஜேந்திர சோழன் எனும் அவளது அந்தராத்மாவின் மரண செய்தி கேட்ட நொடியிலிருந்து. 

இனி அவள் யாருக்காக வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? இனி அவளிடம் இதை செய், அதை செய் என கட்டளை இடத்தான் யாரிருக்கிறார்கள்? இனி அவள் உயிர்பிழைத்துக் கிடப்பதிலும்தான் பயன் என்ன?

************************

தகனமேடை

சுமார் ஆறடி மேடையது. சந்தனக்கட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அமைக்கப்பட்ட தகன மேடை!. அதன் நடுவில் கங்கை கொண்ட சோழன், சோழர் குல அணி, கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்ட சோழன்  என்றெல்லாம் போற்றிப் புகழப்படும், பேரரசராம்  ராஜ ராஜ சோழனின் அருந்தவ புதல்வன், இராஜேந்திர சோழனின் திரு உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. தகனமேடையின் அடி கட்டையில்  இப்பொழுதுதான் தீ பற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. கூடவே வேத முழக்கமும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

உறவுகளும், பணிப்பெண்களும் சூழ நடந்து வருகிறாள் வீரமாதேவி. சாதாரண கிராமத்து பெண்ணாய் பிறந்து அரசரின் அன்பிற்கு அடிபணிந்து வாழ்ந்தவளுக்கு அவருக்கு பின்னர் உயிர் வாழ விருப்பமில்லை. உயிர் துறக்க உடன் கட்டை ஏற ஏக மனதாய் முடிவெடுத்து வந்திருக்கிறாள்!

அதெப்படி வாழ விருப்பமின்றி போகும். ஆம்! வாழத்தான் விருப்பமில்லை. பிறரின் ஏவலுக்கு உரியவளாக. மன்னவர் இருக்கும் போதே அவளது நெஞ்சை கடுஞ்சொல் கொண்டு  சொருகி, குருதி கசிய விடுபவர்கள், அவர் இல்லாத நாட்களில் அவளை என்னதான் செய்ய மாட்டார்கள். அப்படி ஒரு அவல நிலை வேண்டுமா என்ன அவளுக்கு? 

மேலும் அவர் காட்டிய பெருந்தன்மைக்கும், அன்பிற்கும் அவரோடு உடன் சேர்ந்து மரணத்தை கட்டித் தழுவுவதில் அவளுக்கொன்றும் ஆட்சேபனையே இல்லை. இந்த முடிவும் கூட அவளின் தீர்க்கமான முடிவுதானே! 

வாழும் காலம் வரை, மன்னவர் அருகில் இல்லாத  போது, அரசாங்க காரியங்கள் தடையின்றி நடப்பதை உறுதி செய்தவள். கோயில்கள் எழுப்பியவள். தனக்கு அளிக்கப்பட்ட செல்வங்களை கோயில்களுக்கு நிவந்தம் செய்தவள். அப்படி விருப்பு வெறுப்பின்றி வாழ்ந்த ஒரு மகாராணியின் இறுதி விருப்பம் இப்பொழுது நிறைவேறப்போகிறது.

மஞ்சள் நிற நீண்ட துணியால் அவள் தனதுடலை சுற்றிக் கொண்டிருக்கிறாள். விரித்த கூந்தல். அத்தனை பொன்னாபரணங்களையும் ஏற்கனவே அகற்றியிருப்பதால், மூலியாக இருக்கிறது அவளது அவயங்கள் அனைத்தும். வலக்கையில் மட்டும் ஒரு நீர்குடுவை. 

அந்த தகன மேடையை அவள் சுற்றி வர வேண்டும் மூன்று முறை. அந்த நேரத்தில் கையிலிருக்கும் நீர்க்குடுவையிலிருந்து மெல்ல நீரை சிந்திக் கொண்டே வரவேண்டும்.

இதோ, மேலும் மேலும் நெய்யை அள்ளியள்ளி  ஊற்றி அனல் பறக்க செய்கிறார்கள் ஏற்கனவே கொழுந்து விட்டு எரியும் நெருப்பை. 

வேத கோஷம் பிறரின் அழுகுரல்களையும் அவலக்குரல்களையும் பின்னுக்கு தள்ளியிருக்கிறது. 

மூன்றாவது சுற்று முடிந்ததும், மேடைக்கருகே அமைக்கப்பட்டிருக்கும் ஏணியின் வழியாக மேலே ஏறி சென்று அமர்கிறாள். மன்னவரின் சிரசை தாங்கி தன் மடி மேல் வைத்துக் கொள்கிறாள். கொழுந்து விட்டெரிந்த  தீக்குள் சிறிது நொடிக்குள் அவர்கள் இருவரும் மறைந்து போனார்கள் தங்கள் பெயர்களை மட்டும் விட்டுவிட்டு! 

உடன் பிறந்தவளின் பிரிவால் பொங்கி வந்த துக்கத்தை மறைத்துக் கொண்டு, அவ்விரு ஆத்மாக்களின்  வெட்கை தாகம் தீர்க்க ஊருக்குள் தண்ணீர் பந்தல் அமைக்கும் பணியினை ஆரம்பித்தான்  வீரம்மாளின் அண்ணனும் சேனாதிபதியுமான மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளான்!

**************************

பரவை நாச்சியார் மாளிகை

பரவைக்கு செய்தி எட்டியது,  மன்னவரோடு வீரம்மாளும் உடன்கட்டை ஏறி இருவரும் சிவகதி அடைந்தார்கள் என்று! கூடவே தண்ணீர் பந்தல் அமைக்கும் செய்தியும் கிடைத்தது.

அந்த ஒரு நொடியில்தான் இத்தனை நாளும் ‘இனி நான் என்ன செய்வேன்..’ என புலம்பிக் கிடந்த பரவைக்குள் ஒரு ஒளி தோன்றியிருக்க வேண்டும் போலும்!

வீழ்ந்துக் கிடந்த இடத்திலிருந்து எழுந்தாள். தலைக்கு நீர் ஊற்றி ஆற்றினாள். வெள்ளாடை கொண்டு வரச்சொல்லி அணிந்துக் கொண்டாள். அவள் அறையிலிருந்து வெளிப்பட்ட போது, கழுத்தில் மெல்லிய உருத்திராட்சமும், நெற்றியில் விபூதி பட்டையுமே இருந்தது.

மூத்தவர்கள் முதியவர்கள் அனைவரும் முகம் சுளித்துக் கொண்டார்கள் அவளின் கைம்பெண் கோலம் கண்டு!

மெல்ல பேசி அவளை தங்கள் வழிக்குள் கொண்டு வந்து விட முடியும் என மூத்த கிழவி இன்னமும் மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள்!

மாளிகையின் பிரதான அவைக்குள் வந்தவள், எல்லாரையும் பெயரிட்டு அழைத்தாள்! அவள் கரங்களில் ஏதோ ஏடுகள்! எல்லார் பார்வையும் அந்த பனை ஏடுகள் மேல்தான். 

என்ன சொல்லப் போகிறாள் இவள்?!

ஒவ்வொரு ஏடாக எடுத்து உரியவர்கள் கையில் கொடுத்தாள்!. வாங்கிக் கொண்டவர்கள் விழிகளில் வியப்பு, மகிழ்ச்சி, சந்தேகம், கேள்விகள் எல்லாமே இருந்தன.

“தெய்வத்திற்கு முன்பு நான் ஆடியதற்காக எனக்கு வழங்கப்பட்ட ஊதியமும் மானியங்களும் என் தேவைக்கு போக மிஞ்சியவை, என் சேமிப்பில் இருந்தவை அனைத்தையும் உங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளித்திருக்கிறேன். அதற்கான அனுமதி ஓலைகளே இவை! இனி உங்களின் அன்றாட தேவைகளுக்காக நீங்கள் அச்சப்பட தேவையிருக்காது,  என்னை உங்களின் ஆசைக்கு அடிபணிய வைக்கவும் அவசியம் இருக்காது. ஆனால் மன்னவர் எனக்கென தனிப்பட்ட முறையில் அளித்திருந்த பொன்னும் பொருளும் நிலங்களும் உங்களுக்கு உரியவை அல்ல! அவை அனைத்தையும்  என் மன்னவருக்கே வழங்கி விடப் போகிறேன்!”

மீண்டும் குழப்புகிறாள்! மரணித்து விட்ட மன்னவருக்கு இவள் எவ்வாறு இவற்றை மீண்டளிக்கப் போகிறாள்?!

அளித்தாள்! இராஜேந்திர சோழரின் பால் அவள் கொண்டிருந்த அன்பும் காதலும் என்றென்றும் அழியா வண்ணம் திருவாரூர் திருக்கோயிலை எழுப்பி அங்கே நடராஜர்  திருமண்டபமும் எழுந்தருள செய்து தன் காலம் உள்ளவரை அக்கோயிலில் திருத்தொண்டாற்றி தான் ராஜேந்திர சோழனின் ஆத்மார்த்த சகியென  நிரூபணம் செய்துக் கொண்டாள்!  

*************************************************************************************************

நிறைவுற்றது

மங்களகெளரி பெருமாள் (சிதனா)

Leave a Reply