கிரேக்க பாகவதன் – பிரதிக் முரளி

இன்றைய மத்திய பிரதேசத்தில், “பேஸ்” என்கிற கிராமம் அமைந்துள்ளது. இங்கு கிரேக்கனான “ஹீலியோடோரஸ்” என்பான் நிறுவிய கருடக்கம்பம் உள்ளது. மிகவும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட, பல சிந்தனைகளை தூண்டக்கூடிய வண்ணம் அவனது கல்வெட்டும் இந்த கம்பத்தில் கிட்டுகிறது.
அதில்,கூறுவதாவது, “இந்த தேவதேவனான வாசுதேவனின் கருடதுவஜம், ஹீலியோடோரஸால் நிறுவப்பட்டது” என்பது.

இவன் யார் ? காலம் யாது ?

அவனை பற்றிய தகவல்களும் இதே கல்வெட்டில் கிடைக்கின்றன. “தியோனின் புதல்வனும், தக்ஷசீலத்து வாசியும், கிரேக்க மஹாராஜா அந்தியல்கிடஸ் என்பானின், காசிப்புத்ர பாகவதனுக்கான தூதுவன்” என்ற அடைமொழிகள் ஹீலியோடோரசுக்காவன.

இந்த தகவல்களைக்கொண்டும், பிராமி எழுத்தமைதியைக்கொண்டும், அறிஞர்கள் இதனை போயுமு 2ஆம் நூற்றாண்டாக கணக்கிடுகின்றனர்.
இங்கு கிடைக்கும் மற்றொரு கல்வெட்டு துண்டு, ஒரு இந்திய அரசன் விஷ்ணு ஆலயம் அமைத்ததை அறிவிக்கிறது. திரு.பண்டாரக்கர் அவர்கள், இந்த அரசனான மஹாராஜா பாகவதன், சுங்க வம்சத்தவன் என்று கூறுகிறார்.

ஹீலியோடோர்ஸின் வைணவம்

ஒரு ஐயம் எழுகிறது. ஹீலியோடோரஸ் விதிஷா (மத்திய பிரதேசம்) வந்து வைணவம் ஏற்றானா? இல்லையெனில், அவனது ஊராக கூறிக்கொள்ளும் தக்ஷசீலத்திலேயே வைணவம் இருந்து அவனும் அதனை தழுவினானா என்பது.

இதற்கு அலெக்ஸ்சாண்டரின் போரை சற்று நோக்க வேண்டிய அவசியம் உள்ளது. உலக புகழ் பெற்ற அலெக்ஸ்சாண்டர் போரஸ் போரில், போரஸின் படைக்கு முன்பு “ஹெரக்கிள்ஸ்” என்ற தெய்வ உருவை எடுத்துச்சென்றதாக குறிப்பு கிடைக்கின்றன.

இது யாது என்கிற கேள்விக்கு கிரேக்க மெகஸ்தீன்ஸ் (போயுமு 350-290) பதிலளிக்கிறான்.

“சௌரசேனையால் வழிபடப்படும் இந்த தெய்வம் இரண்டு நகரங்களில் பிரசித்தி பெற்றது; மெதோரா மற்றும் கலைசோபரா. இரண்டும் ஜோபர்ஸ் என்ற நதிக்கருகில் அமைந்துள்ளன” என்பது அவனின் குறிப்பு.
இதில் மெதோரா மற்றும் கலைசோபரா, மதுரா மற்றும் கிருஷ்ணபுரம் ஆகியன ஆகும். ஜோபர்ஸ் என்கிற நதி யமுனை ஆகும்.

ஆக, ஹீலியோடோர்ஸின் நகரமான தக்ஷசீலத்திலேயே (இன்றைய பாகிஸ்தான் பஞ்சாப்) விஷ்ணு வழிபாடு மிக பிரசித்தமாக இருந்ததால், அவன் முன்னமே வைணவனாக இருந்திருக்க சாத்தியம் உண்டு.

வர்ண தர்மமும் யவனனும்

ஒரு கிரேக்கன் (யவனர்), அதாவது, இந்துவாய், நால்வர்ணத்தில் பிறந்திலாத ஒருவன் வைணவனாக, இந்துவாக இயலுமா ?

பல வெளி நாட்டவர்கள் இந்திய மதத்தை ஏற்றிருக்கிறார்கள் என்பது பலபடிகளால் தெளிவுறுகிறது.உதாரணமாக, கோண்டோபார்ஸ் என்கிற அரசனின் நாணயம் சிவபெருமானை சூலபாணியாக கொண்டுள்ளது. மேலும் இவன் தேவவ்ர்தன் என்றும் அழைக்க பெற்றான்.

ஏறத்தாழ ஹீலியோடோரஸின் காலத்தில் வாழ்ந்த பதஞ்சலி, யவனர்களை “அநிரவசிதர்” என்கிறார். அதாவது, அவர்கள் தொட்ட பொருட்கள் கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம். தொட்டு விட்டால் தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை.

மனு, பதஞ்சலிக்கு ஒரு படி மேல் செல்கிறார். அவரோ, யவனர்கள், பஹலவர்கள், சீனர்கள் ஆகியோர் க்ஷத்திரியர்களாக இருந்ததாகவும், வேத கிரியைகளை விட்டு விட்டதால் தாழ்ந்தவர்கள் ஆனதாகவும் சொல்கிறான். ஆக, நால் வர்ண தர்மத்தில் இவர்களை தாழ்ந்தோராக இருப்பினும், நால்வருள் ஒருவராக ஏற்றுக்கொண்டிருந்தபடியால், வாசற்கதவு திறந்திருந்தது என்று திரு.ராம்பிரசாத் சந்தா கருதுகிறார். இவர்கள் தனது ஸ்தானத்தால் க்ஷத்திரியர்களாக கூட பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம்.

ஏன் இந்த வழக்கம் ஒழிந்திருக்கும் ?

இங்கு வந்து, இந்த பழக்கங்களை தமதாக்கிக்கொண்ட யவனர்கள் ஒரு புறமிருக்க, பின்னர் முகம்மதியர்கள் தங்கள் புத்தகத்தை திணித்தபடியால், வெளிமதத்தவரை “நிரவசிதர்” (தீட்டுக்காரர்) ஆக்கி இருக்கக்கூடும். பொயு 1030ல் பாரதம் வந்த அல் பெருனி, மிலேச்சர்களோடு இந்துக்கள் தொடர்பு வைப்பதில்லை என்றும்,அமர்வதோ, உண்பதோ, பேசுவதோ கூட இல்லை என்றும், இவற்றை இந்துக்கள் பாவமாக நினைப்பர் என்றும் குறிப்பில் தெரிவிக்கிறார்.

பொயு 4ஆம் நூற்றாண்டில் உண்டான வாத்ஸ்யாயன நியாய சாத்திர உரையில், ஆப்த வசனம் (நம்பக்கூடிய சொல்) மிலேச்சனிடம் இருந்தும் இருக்கலாம் என்றிருந்த பாரதம், அல் பெருனி காலத்தில் அவனோடு பழகுவதைகொடிய பாவமாக்குகிறது.

பெருனியே, வராஹமிஹிரரை மேற்கோள்காட்டி, அவர் கிரேக்கர்களை அவர்களது அறிவியலுக்காக மதித்து போற்ற சொல்கிறார் என்று கூறுகிறான். ஆனால் பெருனி காலத்து இந்துக்கள் அப்படி இல்லை என்றும் எழுதுகிறான்.
துருக்கர்கள் படையெடுத்து, மூலஸ்தானத்தில் (பாகிஸ்தான்- முல்தான்) உள்ள சூரியனாருக்கு கோமாம்ச மாலை அணிவித்தது போன்ற எதிர்ப்புகளால், இந்திய பிரஜையும் அவர்களை விலக்கினார்கள் என்பது ஒரு ஒப்புக்கொள்ளத்தக்க வாதமாக அமைகிறது.

இருப்பினும், ஒரு கிரேக்க மன்னன், தன்னை பாகவதன் (பகவந்தாவின் பக்தன்) என்று அழைத்து புட்கொடியுடைய கோமானின் ஆயதனத்திற்கு அழகூட்டி ஸ்தம்பம் நிறுவிய வரலாறு வியக்க தான் வைக்கிறது.

Leave a Reply