காணிக்காரர்கள் – 3

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள  மாநிலங்களின் தென்கோடியில், மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றனர். கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர்.

இவர்களைப் பற்றிய பல வாழ்வியல் முறைகளைப்  பற்றி  கடந்த இரு இதழ்களில் கண்டோம்..

வாழ்க்கைவட்ட சடங்குகள்:

திருமணம்:

ஆண்மகன் விருப்பத்தைத் தந்தையின் மூலம் மூட்டுக்காணியிடம் தெரிவிக்கப்படுகிறது. ஆணின் தாய் தன் அண்ணனிடம் (தாய்மாமன்) வெற்றிலை பாக்கு பீடி, கருவாடு வைத்துக் கட்டுச்சோறு செய்து மகனுக்குத் திருமணம் செய்ய அனுமதிகோருகிறாள்.

ஆரம்ப காலத்தில் நிச்சயதார்த்தம் பாட்டப்பரையில் நடைபெற்றது. இப்போது மணமகள் இல்லத்தில் நடைபெறுகிறது. மணமகள் இல்லத்திற்கு புறப்படும் முன்பு ஞாயிறு வழிபாடு நடைபெறுகிறது. மணமகள் வீட்டில் மணமகன் கொடுக்கும் புத்தாடையை மணமகள் நான்கு திசையும் வணங்கியபின் பெற்றுக்கொள்கிறாள். பின் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்தில் பூப்படையல் வைத்துச் சாமியிறக்கி ஆசியுடன் திருமணம் நடைபெறுகிறது. ஒலிட்டி நாரில் 7 குச்சிக்காய்களை கோர்த்து தாலியாகக் கட்டப்படுகிறது. திருமணத்தில் நூரை, கவல, நெடுவ, நூலி கிழங்குகளை அவித்துக் காந்தாரி மிளகாயை அரைத்து விருந்து பரிமாறப்படுகிறது.

விருந்தில் மணமக்களுக்கு ஒற்றை மூங்கி வாழைப்பழம் கொடுப்பர்.குழந்தை திருமணம் வழக்கத்தில் இல்லை.

மறுமணம்:

மணமகன் ஒரு ஜோடி புத்தாடையை பெண்ணுக்கு வழங்குவதன் மூலம், பெண்ணின் வீட்டில் உள்ள ஆண் உறுப்பினர்களின் அனுமதியோடு தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.

சூல் விருந்து (வளைக்காப்பு):

கருவில் வளரும் குழந்தைக்குக் கெட்ட ஆவிகளால் துன்பம் ஏற்படாதிருக்க பெண் கருவுற்ற 7 வது மாதம் வியாக்குடை எனும் சடங்கு நடைபெறுகிறது. 7 பானைகளில் மூலிகைகளை போட்டுச் சூடாக்குகின்றனர்.கர்ப்பிணி பெண்ணை அப்பானைகளை சுற்றி வந்து வணங்குகின்றனர். இந்த ஏழு பானைகளும் பேறு காலத்தில் காக்கின்ற மருத்துவமுத்திமார் என்ற தெய்வங்களைக் குறிக்கின்றன. குழந்தை பிறந்தபின்பு சிறுத்தேன் குழந்தையின் நாக்கில் அத்தை முறையுள்ள பெண் தடவுகிறாள். மகப்பேறு காலங்களில் முதல் 10 நாட்களுக்குப் பத்திய சாப்பாடு கொடுக்கின்றனர். 11 நாளில் துணி துவைத்தல் போன்ற கடினமான வேலைகளைக் கொடுக்கின்றனர்.

பெயர் வைத்தல்:

ஆண் குழந்தைக்கு மாமன் அல்லது தாய்வழி தாத்தாவின் பெயரும் பெண்குழந்தைக்கு குமாரி அல்லது தாய்வழி பாட்டியின் பெயரும் சூட்டப்படுகிறது.

பூப்பெய்தல்:

பெண் பூப்பெய்த செய்தி முதலில் தாய்மாமனுக்கும் பின் ஊராருக்கும் அறிவிக்கப்படுகிறது பூப்படைந்த பெண்களை விளைநிலத்தில் தனிக்குடில் அமைத்து ஏழு நாட்கள் தங்க வைப்பர். அப்போது காவலாக இருக்கும் பெண்கள் திரட்டு பாடல் எனும் பாடல்களைப் பாடுகின்றனர். பூப்படைந்த பெண்ணைத் தாயாரும் நாத்தனாரும் அழைத்து வருகின்றனர்.

7ம் நாள் தீட்டுக்கழித்தல் சடங்கைத் திரட்டு கல்யாணம், மாவுக்கல்யாணம் என அழைக்கின்றனர். 7ம் நாள் பெண்ணின் தலையில் எண்ணெய் தேய்த்து ஏழு நிற பொட்டு அணிவிக்கின்றனர்.

இறப்பு சடங்கு:

இறந்தவரை நல்ல ஆடை அணிவித்து மூங்கில் பட்டை அல்லது புதிய பனம்பாயில் படுக்க வைத்துச் சுருட்டிகட்டிய பின் தலைமாட்டில் செம்பில் நீர் எடுத்துத் துளசியால் இறந்தவரின் கால் புறத்திலிருந்து மேலாக இறந்தவரின் மீது தெளிப்பர். இன்னொரு செம்பில் தேங்காய் கலந்த பச்சை அரிசியும் வைக்கின்றனர்.

இறந்தவரின் மனைவியைத் தவிர அனைவரும் வாய்க்கரிசி போடுகின்றனர். இறந்தவரின் மீது பூக்கள் தூவி பின் மூன்று தடவை சுற்றி வந்து வாய்க்கரிசி போட்டுத் தேங்காய் பால் ஊற்றுவர். பின் இறந்தவரைப் புதைத்து விடுகின்றனர்.துர்மரணங்களை எரிப்பர். இறப்பு வீட்டிற்கு வந்தவர்களுக்குக் கிழங்கு அல்லது கஞ்சி போன்றவற்றை கொடுக்கின்றனர்.

இறந்து 7ம் நாள் தளிக்குழி எனும் சடங்கு செய்யப்படுகிறது. தாழிச்செடி சாணப்பால் தர்ப்பை புல் வைத்து மச்சான் மச்சான் இருவரும் குழியில் ஊற்றிவிட்டு இறுதியில் குளிப்பர். வாழ்வின் அனைத்து நிகழ்வுகளில் பாடல்கள் பாடப்படுகின்றன.

தெய்வங்கள் காணிக்காரர்கள் இறந்து போன தங்களின் முன்னோர்களை வழிபடுகின்றனர். அவர்களைச் சாவு அல்லது பேய் எனக் கூறுகின்றனர். தம்புரான் கடவுள் அனைத்து இல்லங்களுக்கும் பொதுவான கடவுள்.

பாறைச்சாவு, புலிச்சாவு, இசக்கி, ஆயிரவல்லி, முருத்துவ காலாட்டுப்பேய் அல்லது காலாட்டு முத்தன், அடகாரு இத்திரம், பெருமிளச்சாவு, வறமலைச்சாவு எனும் ஆண் தெய்வங்களும் அப்பாண்டி தேவதை, கருமாண்டி அம்ம, வனகாளி, சோலஞ்சியாயன் (சோலைகள்), மஞ்சளியாயன் (பனி மூட்டம்), கதிர்ஒளியாயன் (சூரியன்) எனும் பெண் தெய்வங்களும் உள்ளன.

மந்திரங்கள்: சிறுத்தை கரடி , காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் மனிதர்களைத் தாக்காமல் இருக்கவும் விளைநிலங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும் வாய்க்கட்டு மந்திரங்கள் பூசைகள் செய்கின்றனர்.

அவை, 1. பூஞானியன் கட்டும் மந்திரம் 2. பட்டி , கடுவா கட்டும் மந்திரம் 3. குளிரு பிடிக்கும் மந்திரம் 4. வாதக்கட்டும் மந்திரம் 5. நயாட்டு மந்திரம் 6. பச்சி பிடிக்கும் மந்திரம் 7. ஈசல் பிடிக்கும் மந்திரம் 8. மஞ்சி கட்டும் மந்திரம் 9. வயிற்று வலி மந்திரம் 10. கம்பேறு தோசம் 11. லச்சை கட்டுதல் 12. ஏவல்புரங்கட்சி கட்டுதல் 13. பயப்பாடு தீர்க்கும் மந்திரம்.

வழிபாட்டு முறைகள் ஊர்க்கொடுதி:

காணிக்காரர்களுக்கு உருவ வழிபாடு இல்லை. கற்களை வைத்துத் தான் வழிபடுகின்றனர். வழிபாடு கொடுதியென அழைக்கப்படுகிறது. வழிபாட்டு தளம் கொடுதிகளம் எனப்படுகின்றது. தெய்வங்களாக 7 கற்கள் நடப்படுகின்றன. அவற்றுக்குக் குயவு எண்ணெய் கல்விளக்குகள் காலாட்டுத்தம்புரான் முத்தனுக்கு ஒற்றைத்தட்டுமாடம், ஆளைத்தெங்கு கள், முழு வாழைத்தார், கமுகங்கூந்தல் சுருட்டு, பூப்படையல், இரட்டை பந்தம் வைக்கப்படும்.10 இல்ல தேவதைகளுக்கு ஏழு தட்டுமாடங்கட்டி அவல் பொறி பழங்கள், வெற்றிலை பாக்கு, சாற்றுப்பாட்டு பாடி செண்டை மேளம் ஒலித்துச் சாமி துள்ளி அருள் வாக்கு சொல்வர்.ஒரே நாளில் கொடுதி முடிந்து விடும்.

கோயில் கொடுதி: 48 குடியிருப்புகளும் சேர்ந்து காணி மண்டபத்தில் முதன்மை தெய்வமாக வனசாஸ்தா, வன் துர்க்காவும் மற்ற தெய்வங்கள் வனதேவதைகளை வணங்குவர். தலைக்காணி மண்டபம் (குறுவணி) இடைக்காணி மண்டபம் (உரப்பாறை) அடிக்காணி மண்டபம் (அரகநாடு) என மூன்று காணி மண்டபங்கள் காணப்படுகின்றன.

கவங்குச்சி,  ஈத்தல்குச்சிகளால்  தட்டுமாடம்  செய்யப்பட்டு, குருத்தோலை தொங்கவிடப்படுகிறது.கொடுதியில் இரவில் விளக்குகட்டு நடனம் நடைபெறுகிறது.

பூப்படையலில் தென்னம்பூ பொறி, வெல்லம், வாழைப்பழம், வெற்றிலை, மல்லிகை பூப்படைக்கப்படுகிறது. இலைப்பாடு எனும் படையலில் பழங்கள் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் படைக்கப்படுகிறது. சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்ய்யப்படுகிறது.வனதேவதைகளுக்கு கார்த்திகைக்கொடுதி நடத்தினால் கொள்ளைநோய்கள் அண்டாது.

மழைச்சடங்கு: மழைச்சடங்குகளை பெரும்பாலும் பெண்கள் தான் செய்கின்றனர். காடுகளிஞ்சான், காடுதிருத்தான் எனும் மழைகள் பெய்யாதபோது மழைக்கொடுதி நடத்தினால் மழைபெய்யும் என நம்புகின்றனர்.  மழை பெய்யாதபோது மலை உச்சியில் உள்ள முன்னோர்களின் நினைவிடங்களில் பூஜை செய்து அருகே உள்ள நீர்நிலைகளைச் சகதி தெரியுமாறு கலக்குவர் இது குளம் கலக்கும் சடங்கு எனப்படும்.

மலை உச்சியிலிருந்து பாறைகளை உருட்டுவர். பின் கரையான் புற்றை இடித்துத் தண்ணீர் ஊற்றுவர். இந்த சடங்குகளைச் செய்து வீட்டுக்கு வரும் முன்னரே மழை பொழியும் என்பது ஐதீகம்.

அம்மானை பாடல்: தாங்கள் இறைவனாக வழிபடும் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கதைப்பாடலாக ஒப்பாரி ராகத்தில் பாடுகின்றனர்.கல்லனை பேய் கதை, கண்ணகி கதை, கரும்பாண்டியம்மன் கதை போன்றவை பாடப்படுகின்றன.

கொக்கறை காணிக்காரர்கள் மத்தியில் கொக்கறை’ என்ற பெயரில் ஒரு இசைக்கருவி உண்டு. இதை “கோக்ரா”’ என்றும் சொல்வர். இக்கருவியை அகத்தியர் இவர்களுக்கு வழங்கியதாக நம்புகிறார்கள்.

அக்காலத்தில் காணிக்காரர்கள் எந்நோய்க்கும் மருத்துவர்களை நாடுவதில்லை. உடல்நலமில்லாத ஒருவரை வனதேவதை முன் கிடத்தி, சாற்றுப்பாட்டு’ என்ற பாடலைப் பாடுகிறார்கள். பாடலுக்கு இசையாகக் கொக்கறையை வாசிக்கிறார்கள்.

சாற்றுப்பாடலும், கொக்கறை இசையும் தெய்வீகத் தன்மை பொருந்தியது என நம்புகிறார்கள். தமிழும் மலையாளமும் கலந்த சாற்றுப்பாடலை கொக்கறை இசையோடு இரவு முழுதும் பாடுவார்கள். மறுநாள் காலை உடம்பிலிருந்து நோய் சொல்லாமல் ஓடிவிடும் என்பது நம்பிக்கை.

கொக்கறை அமைப்பு:

கொக்கறை, ஒன்றரை அடி நீளம் கொண்ட இரும்புக்குழல். இதன் மேல்பகுதியில் குறுக்குவாட்டத்தில் பல கோடுகள் கிழிக்கப்பட்டிருக்கும். அக்குழலோடு சங்கிலியால் ஒரு இரும்புக்கம்பி பிணைக்கப்பட்டிருக்கும். குழலைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தக் கம்பியால் கோட்டுப்பகுதியை உரசும்போது ஒருவித இசை எழும்புகிறது. இந்த இசைக்குத் தாளக்கட்டுப்பாடுகள் இல்லை..

சாற்று பாடலின் வகைகள், வழிபாடுகள், மருத்துவம் கொண்டாட்டம் என எல்லா நிகழ்வுகளிலும்

சாற்றுப்பாட்டுகள் இடம்பெறுகின்றன. ராயி சாற்று , கற்றுச்சாற்று மதிலுவச்சு சாற்று ,தீவு சாற்று , பியப்பு சாற்று , பொங்கல் சாற்று , மணத்தரை சாற்று தெய்வ சாற்று , கொடுதி சாற்று , துடிச்சாற்று எனப் பலவகைப்படும். நோய்களைக் குணப்படுத்த , வசியம் செய்ய , விளைச்சல் பெருக வழிபாட்டு சடங்குகளுக்குத் தீட்டுக்கழிக்க ஆயுளை அதிகப்படுத்தப் போன்ற காரணங்களுக்குக் கொக்கறை இசைக்கப்படுகிறது. நோய்களை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டறிய நாடி பிடித்தல் , சோழியை கூழாங்கற்கள்) உருட்டிப்பார்த்து கண்டறிகின்றனர்.

தொன்மங்கள்:

1) தென்பகுதியில் கடல் புறத்தை பிரம்பால் விலக்கிக் கொண்டு குஞ்சிதேவி, காந்தாரி எனும் இரு சகோதரிகள் வந்தனர். அவர்களில் குஞ்சிதேவிக்கு பிறந்தவர்கள் நுளையர். காந்தாரிக்கு பிறந்தவர்கள் காணிக்காரர்கள் நுளையர் கடலுக்கு அரசனாகவும் காணிக்காரர்கள் மலைக்கு அரசனாகவும் வாழ்ந்தனர்.மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நுளையரும் காணிக்காரர்களும் இணைந்து வழிபாடு செய்வதாகவும் நுளையர் கடல்புறத்திலிருந்து கடல்படுபொருட்களையும் காணிக்காரர்கள் மலைபடுபொருட்களையும் படைத்து வழிபடுவதாகக் கூறுகின்றனர்.

2) அகத்திய முனிவர் மருத்துவத்தையும் கொக்கறை கருவியையும் தன் சீடர்களான காணிக்காரர்களுக்கு கற்றுக்கொடுத்ததாகக் கூறுகின்றனர்.

3) திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா வுக்கும் எட்டுவீட்டு பிள்ளைமார்களுக்கும் நடந்த மோதலில் காணிக்காரர்கள் மன்னருக்கு ஆதரவாக நடந்ததால் மன்னர் காணிக்காரர்களுக்கு மலைப்பகுதியை வரியின்றி தானமாகக் கொடுத்ததாகவும் அதன் செப்புப்பட்டா நகல் இப்போதும் இருப்பதாகக் கூறுகின்றனர்.

(முற்றும்)

K. வருசக்கனி, ஆய்வு மாணவர், நாட்டுப்புறவியல்

Leave a Reply