இராவணனே அஞ்சியதாக கூறப்படும் பாண்டிய மன்னன்

பாண்டியர் என்ற சொல் பழமையானவர் எனக் குறிக்கும் “பண்டு” எனும் சொல்லிலிருந்து பிறந்தது என்பர். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுள் தமிழை, சங்கம் அமைத்துப் போற்றிய பெருமை பாண்டியரையேச் சாரும்.

பாண்டியர்கள் சைவ நெறியைப் பின்பற்றியதோடு, வைணவ, வேள்விகளை வளர்க்கும் வைதீகத்தையும், சமண நெறிகளையும் போற்றியுள்ளனர் என்பது இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், கோவில்கள் மூலம் நாம் அறியலாம். தமிழக வரலாற்றைத் தமிழ் மொழிமூலம் அறிவதில் கல்வெட்டுகள் எவ்வாறு முக்கிய பங்கு கொள்கிறதோ, எண்ணிக்கையில் குறைந்தாலும் அரசர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் அதே போலப் பங்காற்றுகின்றன.

பெரும்பாலும் அரசர்கள் அளித்த தானங்களைப் பற்றிக் கூறும், செப்புப் பட்டயங்கள் என்று அழைக்கப்படும் இவை, வடமொழி பகுதி, தமிழ் பகுதி என இரண்டு பாகங்களை உடையதாக இருக்கும். வடமொழி பகுதி பாடல் வடிவில் பெரும்பாலும், மன்னனைப் போற்றி புகழ்வதாகவும், தமிழ் பகுதி மன்னரைப் பற்றிக் கூறினாலும், எதற்காகச் செப்பேடு உருவாக்கப்படுகிறதோ, அதற்கான காரணத்தை நேரடியாக உரைக்கும் பகுதியாக உள்ளது.

இந்தியப் பெருநில பரப்பில் இருக்கும் மன்னர்களைப் போலவே தென்னகப் பகுதியில் பல்லவர்களும், சோழர்களும், பாண்டியர்களும், இப்பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். வேள்விக்குடி செப்பேடு,  ஸ்ரீவரமங்களம் சாசனம், சின்னமனூர் சிறிய சாசனம், தளவாய்புரம் சாசனம், சின்னமனூர் பெரிய செப்பேடுகள், சிவகாசி செப்பேடுகள் போன்றவை பற்றி “பாண்டியர் பட்டயங்கள் பத்து என்ற” நூல் விரிவாகக் கூறுகின்றன.

Our Website: http://heritager.in/
To Join Our Telegram: https://t.me/heritager

பாண்டிய நாடான, தற்போதைய மதுரை மாவட்டத்தில், பெரியகுளம் அருகே உள்ள சின்னமனூர் கிராமத்தில் உள்ள கோவிலில் மடப்பள்ளி கட்டுவதற்காக அகழும்பொது இரண்டு செப்பேடு தொகுதிகள் கிடைத்தன, அவை முறையே சின்னமனூர் சிறிய மற்றும் பெரிய செப்பேடுகள் எனப்பட்டன.

இரண்டாம் இராஜசிம்மப் பாண்டியனின் (கி.பி. 900-925) சின்னமனூர் பெரிய செப்பேடு, பாண்டிய மன்னர்களுக்கு அகத்தியர் புரோகிதராக இருந்ததை பற்றி உரைக்கின்றது. மேலும் பாண்டிய மன்னன் ஒருவன் ராவணனை சமரசம் செய்ய அழைத்ததை பற்றிக் கூறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர். இது இராமாயணப் போரைத் தடுக்க ராமனுடன் சமாதானமாக போக பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கை என சில அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் பிரம்மாஸ்திரம் வைத்திருந்த பாண்டியர்களுக்குப் பயந்து அவர்களோடு ராவணன் சமாதானம் செய்துகொண்டார் எனக் காளிதாசரின் ரகுவம்சம் குறிப்பிடுகிறது.

மகாபாரதத்திலும், போருக்கு இரண்டு பக்கமும் படைகளை அனுப்பியது பற்றியும், பாண்டவர்களுக்கு யானைப் படை அனுப்பியது எனப் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் கூறப்படுகின்றன.

பாண்டிய மன்னன் சங்கம் அமைத்து தமிழை வளர்த்தது பற்றி இச்செப்பேடு கூறுவதோடு,

“மாபாரதந் தமிழ்ப்படுத்து,
மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என

வடமொழி இலக்கியமான மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்க்கச் சங்கம் அமைத்தது பற்றியும் சின்னமனூர் பெரிய செப்பேடு கூறுகிறது. இது கி.பி எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

செப்பேடுகள் மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக இதிகாசக் கதைகளுடன் ஏற்றிக் கூறுவதாக அமைந்தாலும், இலக்கியங்கள், மற்றும் வாய்வழி கதைகளின் தொன்மையைப் பற்றி அறிய உதவுகின்றது.

Please Like, Share and Comment on the Post
Follow our Page @: Thali Heritager Magazine
Website: http://heritager.in/
Telegram: https://t.me/heritager

இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி..

Leave a Reply