இராயபுரத்தின் தோற்றமும் மாற்றமும் – வேலுதரன்

முந்தைய நாளிலிருந்தே வானம் மேக மூட்டமாக இருந்தது. இரவில் இருந்தே இடைவிடாமல் நச நச வென மழை தூறிக் கொண்டு இருந்தது. காலையில் 7மணிக்கு ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து ராயபுரம் பகுதி மரபுச் சின்னங்களைக் காண நிவேதித்தா லூயிசால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மரபு நடைக்கு வேளச்சேரி வீட்டில் இருந்து மழைக்கோட்டு குடை சகிதமாகக் காலை ஐந்து மணிக்கே கிளம்பியாயிற்று.

சென்னை நகரின் ஒவ்வொரு இடமும், அதில் இருக்கும் சில கட்டிடங்களும் அதனதன் நூறு, ஆயிரம் ஆண்டு கால வரலாறுகளைத் தன்னுள் புதைத்துக்கொண்டு இருக்கின்றன. வெறும் செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கட்டடங்கள் அல்ல அவை. அவை நமக்கு பொக்கிசங்கள். நம் முன்னோர்களின் வரலாறு, நாகரீகம், வாழ்வியல் முறை, அவர்களின் கட்டடக்கலை என பலவற்றை இன்றும் கம்பீரமாக நின்று கற்றுத்தரும் கல்விக்கூடங்கள் அவை. அழியும் நிலையில் உள்ள சில மரபு சின்னங்கள் மனதில் சிறிது வலியை ஏற்படுத்துகின்றது.

அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைத்தான் இன்றைய மரபு நடையில் காணப் போகின்றோம். நாம் காணும் இடங்கள் கொஞ்சம் தூரம் தூரமாக இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்வதே சிறந்தது. இருசக்கர வாகனங்கள் இல்லாதவர்கள் மற்றுத்திறனாளிகள் நடத்தும் “மாஉலா” வின் சேவையையும் பயண்படுத்திக் கொள்ளலாம். மழைத் தூறலுடன், சகதியான தெருக்களில் பயணிக்க வேண்டும். கவனமாக வாருங்கள் ஒன்றாகப் பயணிப்போம்.

இராயபுரம் இரயில் நிலையம்

நாம் முதலில் கூடும் இடம் ராயபுரம் இரயில் நிலையம். இந்தியாவில் மிகப் பழைமையானதும் தென்னகத்தின் முதன்மையானதுமான இரயில்வே நிலையம் இதுவே. 1845ல் மெட்ராஸ் இரயில்வே கம்பெனி என ஆரம்பிக்கப்பட்டு மெட்ராஸையும் இரானுவ நகரமான ஆற்காடு மற்றும் வாலாஜாவையும் இணைப்பதற்கான இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டன. 246000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ராயபுரம் இரயில் நிலையம் பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது இரயில் நிலையம். 1856ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் மற்றும் தென்மராத்தா இரயில்வேயின் தலைமையிடம் 1922 லில் எழும்பூருக்கு மாற்றப்படும் வரை இங்கு தான் செயல்பட்டு வந்தது. இலண்டனில் இருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்களுடன் பெட்டி சென்னை சிம்சன் தொழில் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது.
முதல் புகைவண்டி ஆமூர் வரை சென்றதாக செய்தி. பிரின்ஸ் ஆப் வேல்ஸ் 1875லும், பின்பு எட்வர்டு VII வந்து இருக்கின்றனர்.

இங்கிலாந்து அரசர்கள் வந்தபோது அவர்களுக்கு தங்கத்தினாலான நாற்காலி போடப்பட்டதாகவும், தேவதாசிகள் நடனம் ஆடியதாகவும் தகவல் கிடைக்கின்றது, இது பற்றிய கடைக்கால் கும்மி என்ற குஜிலிப்பாடல் ஒன்று இரயில் இஞ்சினை யானை போலவும் கிளம்பும்போது கீச் என்று சப்தமிட்டுச் சென்றதாகவும் 21 துப்பாக்கி வெடித்த சத்தத்தையும் விவரிக்கின்றது. மெட்ராஸ் சென்ரல் இரயில் நிலையம் 1907ல் ஆரம்பிக்கும் வரை முக்கிய போக்கு வரத்துக்களுக்கு இந்த இரயில் நிலையம் மட்டுமே. பயன்படுத்தப்பட்டது. இதை அடுத்து நாம் செல்ல இருப்பது புனித பீட்டர் தேவாலயம்.

புனித பீட்டர் தேவாலயம்

இந்தப் புனித பீட்டர் தேவாலயத்தின் பின்னனியிலும் ஒரு வரலாறு உண்டு. புனித பீட்டருக்கு இராயப்பர் என்றொரு பெயரும் உண்டு. அவர் பெயராலே உருவான இப்பகுதி இராயப்ப புரம் என்று அழைக்கப்பட்டதாகவும் அதுவே மறுவி தற்போது இராயபுரம் என அழைக்கப் படுகின்றது என்று கூறுகின்றனர். 1731களில் துர்கராயப்பட்டினத்தில் இருந்து வந்த குருகுல வம்ச வருணகுல முதலியாரைச் சார்ந்த 4 பிரிவினருக்கு சேப்பாக்கம் நவாப் கார்டனில் 45 ஏக்கர் நிலம் அவர்கள் வசிக்க ஒதுக்கப்பட்டது.

அவர்களது முக்கிய தொழில் கப்பலில் இருந்து வரும் சரக்குகளை முசூல் எனும் படகுகள் மூலம் தரைக்குக் கொண்டு வருவது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். சுங்க துறையும், மாஸ்டர் உதவியாளர்கள் அலுவலகமும் எஸ்பிளனேடை விட்டு கருப்பு நகருக்கு ( தற்போதைய உயர்நீதி மன்ற சாலைக்கு வடக்கே கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது) மாற்றப்பட்ட பிறகு, அவர்களை துறைமுகத்தின் வடக்கு வாயிலில் இருந்து சுமார் 300 கஜ தொலைவில் உள்ள இப்பகுதிக்கு 1799 களில் மாற்றப்பட்டனர்.

அவர்களுக்கு 60 ஏக்கர் நிலம் வீடுகளைக் கட்டிக் கொள்ளக் கொடுக்கப்பட்டது. குடிசைகளை பிரித்துக் கொண்டு வரவும் அவைகளுக்கு ஈட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. இப்போதுள்ள தேவாலயம் 1825ல் ஆரம்பிக்கப்பட்டு 1829ல் கட்டி முடிக்கப்பட்டது. தேக்கு மரங்களே கதவு ஜன்னல்களுக்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.

இவர்களே இரண்டு பிரிவுகளாகி ஒரு பிரிவு புனித அந்தோனியார் என்ற தேவாலயத்தைக் கட்டி அங்கு தொழ ஆரம்பித்தனர் ( மதர் தெரசா மெட்ராசுக்கு வரும்போது இங்குதான் தங்கியதாகக் கூறுவர்). தனி நபர்களால் நிர்வாகிக்கப்பட்டு வந்த புனிதபீட்டர் தேவாலயம் உட்பூசலால் 1925ல் இருந்து 1934 வரை வழிபாடு இன்றி மூடப்பட்டு கிடந்தது. நீதி மன்றத்தின் தலையீட்டால் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக முறையாக மாற்றப்பட்டு வழக்கமான வழிபாடுகளும் பண்டிகைகளும் தற்போது கொண்டாடப் படுகின்றன.

பார்சி இனத்தவரின் நெருப்பு கோவிலும், மெட்ராசுக்கு அவர்களின் பங்களிப்பும்.

அடுத்து நாம் செல்ல இருப்பது இயற்கையையே வழிபடும் பார்சி இனத்தவரின் நெருப்பு (பயர்) கோவில். மெட்ராஸின் வளர்ச்சியில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவர்களது வாடியா நிறுவனமே இரயில்வேயின் தலைமை செயலகம் கட்டுமானத்திற்கு வேண்டிய கற்கள் போர்பந்தரில் இருந்து கொண்டு வந்தது. முதலில் இவர்கள் மேற்குக் கடற்கரை நகரங்களுக்கு வந்தாலும் மெட்ராஸுக்கு ஆறு பார்சிகளும் இரண்டு பூசாரிகள் மட்டுமே 1795 களில் வந்தனர். வந்த நூறு வருடம் கழித்து அஞ்சுமன் அல்லது அவர்களின் பஞ்சாயத்து மூலம் வசூலிக்கப்பட்ட பணத்தில் கோவில் கட்ட முயற்ச்சித்தனர்.

கிளப்வாலா என்பரின் நன்கொடை மூலம் பெறப்பட்ட நிலத்தில் 1910களில் கோவில் கட்டப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. இக்கோவிலில் ஒரு நாளைக்கு 5 முறை தீ வளர்க்கப்படும். அது அணையாமல் இருக்கவே இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய கப்பல் எம்டனின் குண்டு வீச்சுக்குப் பயந்து மக்கள் ஊரைக் காலி செய்த போது கூட பெஸோடன் டாஜி என்ற பூசாரி கோவிலை விட்டு அகல மறுத்து விட்டதாகக் கூறினர்..
பார்சி இனத்தைச் சார்ந்த மேரி கிளப்வாலா ஜாதவினுடைய தொண்டு போற்றுதலுக்கு உரியது. இளம் வயதிலேயே தன் கணவனையும் மகனையும் இழந்த இவர் மத்திய அரசால் கௌரவிக்கப்படும் விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றவர். அவர் செய்த சேவை பல பொது நல நிறுவனங்களை (சுகாதார மையங்கள், சக்கர வண்டிகளில் சாப்பாடு வினியோகம், கிராம முன்னேற்றம், காதுகேளாதவர் பள்ளி, சேவா சமாஜம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளி ) நடத்தியது, இராணுவத்தில் மருத்துவம், சாப்பாடு போன்ற சேவை செய்து “டார்லிங் ஆப் ஆர்மி” என ஜெனரல் கரியப்பாவால் அழைக்கப்பட்டார், முதல் பெண்மணி மெட்ராஸ் செரீப்பாக பதவி வகித்தது, கௌரவ நீதிபதியாக சிறார் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணி புரிந்தது, மெட்ராஸ் ஸ்கூல் ஆப், சோசியல் ஒர்க், போன்ற பல சாதனைகளைப் புரிந்தவர். 1952ல் யுஎன் கவுன்சிலில் குற்றங்கள் புரிபவர்களின் மறுமலர்ச்சி தூதுவராகவும் பணிபுரிந்துள்ளார்.

கல்மண்டபம் மார்கெட்

அடுத்து நாம் செல்லவிருப்பது 1818ல் சுப்பையா ஆச்சாரியால் 17000 அடி பரப்பளவில் கட்டுவிக்கப்பட்ட கல் மண்டபம் மார்கெட். முதலியார் வகையறாக்கள் கட்டினர் என்றும் கூறுகின்றனர். காய்கறி, இறைச்சி, மீன் அங்காடிகள் செயல்பட்டு வந்தன. தற்போதைய உரிமையாளர் கோட்டீஸ்வர ராவ் என்பவருக்கும் முந்தைய உரிமையாளருக்கும் இடையே நடக்கும் பூசலால் பராமரிப்பு எதுவும் இன்றி பரிதாபமாக காட்சி அளிக்கின்றது.

ஓட்டுக்கூரைகள் விழும் தறுவாயில் இருக்கின்றன. இடம் மிகவும் மோசமாக இருப்பதால் வாடிக்கையாளர்களும் வருவது குறைந்து விட்டது எனக் கூறி வியாபாரப் பெண்மணிகள் வருத்தப்பட்டனர். இதையும் விட்டு விட்டால் பிழைப்புக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் முதிய பெண்கள் அங்கேயே தங்கி இருக்கின்றனர் நல்ல விடிவு வரும் என்ற நம்பிக்கையில்.

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில்

அடுத்து கல்மணடபம் என்று பெயர் வரக் காரணமாக இருந்த கல்மண்டபமும், அங்காள பரமேஸ்வரி கோவிலும். இது 1818களில் சுப்பையா ஆச்சாரியால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகின்றது. மெட்ராசில் விஷ்வகர்மாக்களின் கட்டுப்பட்டில் இருக்கும் 5 கோவில்களில் இதுவும் ஒன்று. மக்களிடயே வலம் வரும் நம்பிக்கைகளில் ஒரு கதை.. சிவன் பிரம்மாவின் ஆனவத்தை அடக்க அவருடைய 5வது தலையைக் கொய்ய அத்தலை சிவனின் கையுடனே ஒட்டிக்கொண்டது.

அத்துடனே சிவன் பிக்ஷாடனராக பிச்சை எடுத்துக் கொண்டு செல்கையில் மாயவரத்தை அடுத்த வள்ளம்புத்தூரை வந்தடைகின்றார். சிவனைத் தவறாக புரிந்து கொண்ட பாவாடைராயன் என்ற அந்த ஊர் பொருப்பாளர் சிவனை சிறையில் அடைக்கின்றார். சிவன் தன்சுயரூபத்தைக் காட்ட, பாவாடைராயர் மன்னிப்பும் பாப விமோசனமும் கோருகின்றார். பனஞ்சாலையில் இருக்கும் அங்காள பரமேஸ்வரியைத் தொழ அறிவுறுகின்றார்.

பாவாடைராயர், அம்பாளை பனைமரத்தடியில் அரூபமான காட்சியைத் தரிசித்து அந்த இடத்திலேயே கோவில் கொள்ள வேண்டுகின்றார். ( அம்மன் பிரன்னமாக ஒரு சிறுவன் மூலாமாக ஊத்துக்காடு பாஞ்சாலர் மூலமாக கோவில் கட்டும் படி ஆணையிட, அவர்கள் மகா சிவராத்திரி மட்டும் தாங்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டு அம்மன் சிலை மற்றும் கல் மண்டபத்துடன் கோவிலும் கட்டிக் கொடுத்ததாக கூறுகின்றனர். )

பாவாடை ராயருக்காக அம்பாள் தங்கிய பனஞ்சோலையே பின்னாட்களில் ராயபுரம் என அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். தற்போது கோவில் புரணமைக்கப்பட்டு பழைமை எதுவும் காணப்படவில்லை. கோவிலின் ராச கோபுரம் எதிரே கற்களால் ஆன தூண்களும் கூரையும் கொண்ட மண்டபம் ஒன்று இருக்கின்றது இப்பெயராலேயே இவ்விடம் கல்மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. தற்போது கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

CSI ரெய்னி ஆசுபத்திரி

CSI ரெய்னி ஆசுபத்திரி தான் நாம் அடுத்து செல்ல இருக்கும் இடம். Women’s mission Hospital என்றும் அழைக்கப்படுகின்றது. 1890 களில் 12 படுக்கைகளுடன் Dr Alexandira Matilda MacPhail ( 1860 -1946 ) அவர்களின் சொந்த பங்களாவில் ஆரம்பிக்கப்பட்டது இவர் லண்டனில் மருத்துவப்பட்டம் பெற்ற பின்பு 1887ல் மெட்ராஸ் வந்தார். 1911ல் மெட்ராஸ் கவர்னர் லார்ட் ஆர்தர் லாவ்லியால் அடிக்கல் நாட்டப் பெற்று புதிய ஆசுபத்திரி பல சிறப்பு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகின்றது. ரெய்னி என்று அழைக்கப்படும் MacPhail 1928 வரை பணிபுரிந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 1950 களில் இந்த ஆசுபத்திரி சிஎஸ்ஐ யின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சுழல் மெத்தை

அடுத்து சுழல் மெத்தை என அழைக்கப்படும் இடம் தான் நாம் செல்லப்போவது. NVS பட்டினம் பொடி நிறுவனத்தாரால் தங்களுடைய நிறுவன விளம்பர உத்திக்காக 1930ல் கட்டப்பட்டது தான் இந்த கட்டிடம், இந்தோ சார்சனிக் அமைப்பில் கட்டப்பட்ட இது பர்சியா மற்றும் அரேபியா கட்டிடக் கலையாளர்களால் வடிவமைக்கப்பட்டது. ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. தற்போது அடிக்ஷன் சிந்தூர் என்ற ஆயுத்த ஆடையகம் செயல்பட்டு வருகின்றது.

மேல் கோபுரம் இரண்டையும் அப்படியே விட்டு விட்டு இரண்டு தளங்களையும் புதியதாக மாற்றி அமைத்து உள்ளனர். பழைமையும் புதுமையும் கலந்து.

குணங்குடி மஸ்தான் தர்கா.

அடுத்து நாம் காணவிருப்பது குணங்குடி மஸ்தான் தர்கா. 18-19 நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு முகமதிய சித்தர். இவர் இராமாநாதபுரம் தொண்டிக்கு அருகே உள்ள குணங்குடி என்ற சிற்றூரில் நயினார் முகமதுவுக்கும் பாத்திமாபீபிக்கும் மகனாக 1792ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் சுல்தான் அப்துல் காதர். இளமையிலேயே அல்லாவின் மீது பக்தி கொண்டு பாடல்களை இயற்றியவர்.

17வது வயதில் கீழக்கரை அப்துல் காதர் லெப்பை ஆலன் என்ற ஞானியிடம் பயின்று, பின்பு திரிசிரபுரம் மௌலவி ஷாம் சாகிப்பிடம் 1813 தீட்சை பெற்று ஞானபோக அறநெறியில் ஆழ்ந்தார். பின்பு திருபரங்குன்றம், அறந்தாங்கி அருகே உள்ள கலகம், சதுரகிரி, நாகமலை, புறாமலை ஆனைமலை போன்ற பகுதிகளில் தவம் இயற்றினார். பல சித்துக்களும் கைவரப் பெற்றார்.

இவருடைய சித்துக்களைக் கண்ட மக்கள் இவரை மஸ்தான் என்று அழைத்தனர். ஏழு ஆண்டுகள் தவத்திற்க்குப் பிறகு வட நாட்டில் சில காலம் இருந்து விட்டு மெட்ராஸ் ராயப்பேட்டையை வந்தடைந்தார். இவரின் மகிமையை உணர்ந்த பாவா லெப்பை இவருக்குத் தனியாக ஆசிரமம் அமைத்துக் கொடுத்தார். அங்கேயே தவமியற்றி பலருக்குத் தீட்சை அளித்து உள்ளார். தீட்சை பெற்றவர்களுள் ஆற்காடு நவாப்பும் ஒருவர். நவாப்பின் அரண்மனையில் இருந்து பல்லக்கில் கொண்டு வந்து விட்டதாகச் செய்தி.

தன் வாழ்நாளில் பல பாடல்களை இயற்றி உள்ளார். தன்னுடைய இறுதி நாளை உணர்ந்த அவர் பாவா லெப்பையின் கனவில் கூறிவிட்டு, அதற்கேற்ப அடுத்த நாள் காணும் போது தன்மீது துணி போர்த்திக் கொண்டு முக்தி அடைந்து இருந்தார். மஸ்தான் சாகிபு இவ்வுலக வாழ்வைத் துறந்தது நாற்பத்து ஏழாவது வயதில் 1838ஆம் ஆண்டு. இன்றும் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் இவரின் சமாதியை நாடி வருகின்றனர் அவருடைய அருளை வேண்டி.

ராபின்சன் பூங்கா.

1944ல் பெரியாரின் ஆதரவாளர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பிரிந்து, பெரியார் திராவிடக் கழகம் என்ற புது கட்சியைத் துவங்கினர். இதற்கு உறுதுணையாக இருந்தவர் அண்ணாத்துரை.

1949ல் பெரியார் மணியம்மையை மணந்து கொண்ட காரணத்திற்க்காக அண்ணாத்துரையும் அவர்களச் சார்ந்தவர்களும் தனியே பிரிந்து 17 செப்டம்பர் 1949ம் வருடம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பதுக் கட்சியை ஆரம்பித்து அதை 18ந்தேதி இந்த பூங்காவில் தான் அண்ணாத்துரையால் கட்சியின் துவக்கம் கொள்கைகளுடன் அறிவிக்கப்பட்டது.

தென்னக இரயில்வேயின் பயணச்சீட்டு தயாரிக்கும் இடம்.

கடைசியாக நாம் செல்லவிருப்பது தென்னக இரயிவேயினரால் குறைந்த தூர சாதாரண பயண இரயில் வண்டிகளுக்கு வழங்கப்படும் அட்டை பயணச்சீட்டு தயாரிக்கப்படும் தொழிற்கூடம். ஒரு சில இயந்திரங்களைத் தவிர, 1892 களில் ஆரம்பிக்கப்பட்டு என்ன முறைகளை கையாண்டார்களோ அதே முறையைத் தான் இன்றும் கையாளுகின்றனர்.

1927ஆம் ஆண்டு உபயோகிக்கப்பட்ட இயந்திரம் தற்போது காட்சிப்பொருளாக உள்ளது. ஹெச்எம்டியால் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களில் 92 பயனச்சீட்டுகள் கொண்ட அட்டை அதிக பாதுகாப்புடன், அச்சடிக்கப்படுகின்றது. அச்சடிக்கப்பட்ட அட்டை தனித் தனியாக வெட்டப்பட்டு 250 பயணச் சீட்டுகளாக கட்டப்படுகின்றது.

1000 பயணச்சீட்டுகள் ஒரு பெட்டிக்குள் அடுக்கப்பட்டு ஒரு நாளைக்கு சுமார் 15000 முதல் 18000 பயனச்சீட்டுகள் வரை வெளியே அனுப்படுகின்றது. இவை அனைத்திற்¢கும் மனித சக்தியே பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் தற்போது இது போன்று மூன்று அச்சுக்கூடங்களே இயங்கி வருகின்றது. அனுமதி கொடுத்த தெற்கு இரயில்வே துணை மேளாளருக்கு நன்றி.

என்னுடன் இந்த மரபு நடையில் பயணித்த அனைத்து மரபு ஆர்வளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் பிரிதொரு மரபு நடையில் சந்திப்போம் நண்பர்களே அதுவரை காத்திருங்கள்.

Leave a Reply