இராஜேந்திரன் ராத்திரி – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #9

சுவர்ணமுகி ஆற்றில் மணல் துகள்கள் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன. கதிரவன் கொஞ்ச நேரத்தில் மறைவிடத்தைத் தேடத் தொடங்கிவிடும். வட மேற்கில் விருஷபாத்ரி, நீலாத்ரி, அஞ்சனாத்ரி, சேஷாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளும் சூரியனுக்கு தஞ்சம் தர தயாராக இருந்தன.

“போவ்..ஆத்துல தண்ணி நெறிய ஓடிக்கும்ல முன்னாடி காலத்துல..” பூங்கோதை கேட்டாள்.

“ஆமாயமா..கலிகாலம். மானம் குடுக்குற மழயக் கூட, கேட்டு போட்டு பூட்டிக்கிறாங்க..இந்த மணல் எத்தினி நாளிக்கோ? அப்பறம் மன போட்டு, சதர அடிக்கு ரேட் சொல்வானுங்க..” சொல்லிக்கொண்டே குன்றின் அடி படிக்கட்டில் தேங்காய் உடைத்து காளத்தீஸ்வரனை வணங்கிக்கொண்டார் சங்கரண்ணன்.

“ஐயா ஒக்க சாரி குடிக்கி ஒஸ்தாரா?” கோயில் ஐயர் மேலேறிக் கொண்டே அழைத்தார்.

“ணோவ்..நீ கோயிலுக்குள்ள வந்து நாலு வர்சம் ஆச்சினா..நீ ஆசயா வளத்த நாகலிங்க மரம் பூக்கறதே இல்லணா..” பூக்கார பாயம்மா சொன்னாள்.

“உனுக்குதான் காளத்தீ சாமி புடிக்கும்ல? அப்பறம் இன்னாத்துக்கு கோயிலுக்குள்ள போமாட்டற?”

சங்கரண்ணன் வழக்கம் போல் பதில் சொல்லாமல், அனைத்தையும் புன்னகைத்துக் கடந்தார். சிலந்தியும், காளமும், அத்தியும் சிவனை வழிபட்ட சீகாளத்தி குன்று மெல்ல அவர்களின் கண்ணிலிருந்து மறையத் தொடங்கியது.

“போவ்..சுத்தி எந்த மலையும் இல்ல..இங்க மட்டும் எப்டி குன்னு வந்துச்சி? இதுக்கும் சிரிக்காம பதில சொல்லு..” பூங்கோதை ‘உர்’ ரென்று முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

“ஒரு வாட்டி, வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பெரிவங்கனு சண்ட வந்துச்சாம்..அப்ப, ஆதிசேஷன் கைலாச மலய நான் சுருட்டி வச்சுக்குறேன். நீ முட்ஞ்சா ரிலீஸ் பண்ணிக்கனு சவால் வுட்டுச்சாம். ஒரு பாம்பு உனுக்கே இவ்ளோ இர்ந்தா..நான் கடவுள், உன்ன வச்சுக்கறேன்னுட்டு..ஊதி ஊதி பாத்தாராம். ஆதிசேஷன் பாம்பு அசயவே இல்லயாம். இப்டியே பல வர்சம் போச்சு..வாயு பகவான் டயர்டு ஆயிட்டார். ஆதிசேஷன் பாம்பு ஒரு நாள் மெதுவா அசஞ்சுது..அப்ப பாத்து வாயு பகவான் வேகமா ஊதிட்டார். கைலாச மலைல மூனு பீஸ் ஒடஞ்சு அதுல ஒன்னு இங்க வந்து வூந்துருச்சாம்” சங்கரண்ணன் காளத்தி குன்று உருவான கதையைச் சொன்னார்.

நகிரிப்பேருந்தை பிடித்து மாலைக்குள் வீடு சேர்ந்தனர் இருவரும். அன்று இரவு, எல்லா தொலைக்காட்சி செய்திகளிலும், காளஹஸ்தி தான் செய்தியாக இருந்தது. சிவனுக்கு எந்த மாலை சாற்றினாலும் உடனே கருகிவிடுவதாகவும், கோயிலுக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென்றும், பத்து வருடங்களுக்கு முன்பு இடி தாக்கி கோபுரம் சிதைந்த கதை என ஒவ்வொரு சேனலும் ஒரு வகையாய் சொல்லிக்கொண்டிருந்தன.

“பாத்தீங்களா செய்திய..நமக்கு பண்ணதுக்கு, ஈசன் வந்துட்டான் பழிவாங்க..” நவநீதம்மா கோபத்தில் வெடித்தாள்.

சங்கரண்ணன் ஏதும் பேசாமல் போய்விட்டார். பூங்கோதைக்கு ஒன்றும் புரியவில்லை. தலையை அப்படி இப்படி உருட்டியும் எதுவும் புரிபடவில்லை. தூக்கமும் வரவில்லை. மறுநாள் ஊரெங்கும் இதே பேச்சாக இருந்தது. “காளாஸ்திரில மூலவருக்கு எந்த மாலய சாத்துனாலும் உடனே தீஞ்சு போதாம்” தேநீர்க் கடைகளில் பேசிக் கொண்டார்கள்.

“தர்மகத்தா குழுலேந்து நம்ம சங்கரண்ணன தூக்கனாங்கல்ல..அதான் சிவனுக்கே பொறுக்கல. நமசிவாய..நமசிவாய” தொண்டி கால்ணா மிகவும் உணர்ச்சி வசப்பட்டான்.

“அவுங்களுக்கு இப்போ வேற நாதியில்ல..பதநாயமா வருவானுங்க பாரு” கிண்டன் ஆரூடம் சொன்னான்.

அதே நேரம் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் சங்கரண்ணன் வீட்டு முற்றத்தில் குழுமியிருந்தனர்.

“சங்கரன்காரு எதோ ஜருகேதி ஜரிகி பொய்யிந்தி..வெங்கடப்பா தருப்புலோ மா அந்தரம் ஷமாப்பணம் அடுகுத்துன்னாம்..” முத்துகிருஷ்ண நாயுடு பேசினார்.

“இன்னாது நட்ந்துது நட்ந்து போச்சா? யாரு கட்ன கோயில் தெரிமா? இன்னாத்துக்கு எங்க வூட்டுக்கு மொத மரியாத தெரிமா?” தொண்டிக் கால்ணா எகிறினான்.

“ஏதோ லோபலா கொஞ்சம் ஈர்ஸ்யா..அந்துகே தேவுடு இலா திருவிளயாடல்னி சூபிஸ்த்துன்னாடு. தயிசேஸி, மீரு டிரஸ்டி பாத்யதா தீஸ்கொனி, வச்சே சிவுராத்ரி திருக்கல்யாணம்னி முந்து நிலபடி ஜரிப்பின்ச்சாலி..” வெங்கடப்பாவே எழுந்து நின்று கேட்டார்.

சங்கரண்ணன் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து, மீண்டும் கோயில் அறங்காவல் குழுவில் இணைந்து காளத்தீஸ்வரன் திருக்கல்யாணத்தை நல்லபடியாக முன்னின்று நடத்தித் தர சம்மதம் தெரிவித்தார். நவநீதம்மா உள்ளே ஓடிப்போய், நந்தாளி அம்மன் படத்திற்கு விளக்கேற்றி, “அம்மா தொணயிருக்கு..நம்முளுது நம்மள விட்டு போகாது” கண்ணீர் விட்டாள்.

“ஹல்லல்லோ நவ்நீத்..நீ இப்ப வெள்ளாத்தூரான் கூட்டம். நந்தாளி அம்மனலாம் கும்படக்கூடாது. எப்ப கல்யாணம் ஆச்சோ அப்பியே கூட்டமும் மாறிப்போச்சு” பூங்கோதை தன் அம்மாவை வம்பிக்கிழுத்தாள்.

“இங்க வாயாட்றத வுட்டுட்டு வெளில ஒங்கப்பன் பேசறத போய் கேளு..”

பூங்கோதையும், நவநீதம்மாவும் முன்வாசலுக்கு வந்தனர். முத்து கிருஷ்ண நாயுடு பேசிக்கொண்டிருந்தார். “சிவுடுக்கி, ஏம் மால வேசினா கருகுபோதுந்தி..இங்கொக்க நாலுகு ரோஜுல்லோ காளத்தீஸ்வருடு-ஞானபூங்கோதம்மா திருக்கல்யாண உற்சவம்.. மாக்கேமி அர்த்தங்காலா..அசலு ஏஞ்ஜருகுத்துந்தி? ஈ குடி சரித்தரம் ஏன்டி? மீரே செப்பாலி..சங்கரண்ணா”

சங்கரண்ணன் மெல்லப்பேசத் தொடங்கினார். “சரியா இன்னிக்கு ஆயரம் வர்சத்துக்கு முன்னாடி, இராஜேந்திர சோழ மகாராஜா பெரிய படயோட நம்ம காளாஸ்திரில தண்டு எறக்கானாராம். பெரிய படைன்னா, யானைங்க குதிரைங்க, ஆடுமாடுங்க, வண்டிங்க, லட்ச கணக்குல போர் வீரங்க..னு, காளாஸ்திரிலேந்து திருச்சானுர் வரிக்கும் படைங்கதானாம்.

அப்பலாம், நம்ம சொர்ணமுகி ஆத்துல எப்பியுமே தண்ணி ஓடுமாம். சோழனோட யானைங்க ஆத்துல எறங்கி வரிசயா குளிக்குமாம். சின்னப்பசங்க, யானைங்கள பாத்து குஷியா..ஆத்துக்கு இந்தாண்டயும் அந்தாண்டயும் யானைங்க முதுகுல தாவி தாவி ஓடுனாங்களாம். பின்னாடி, கங்கைல வெள்ளம் போறப்போ இராஜேந்திர சோழனோட தளபதிங்க இதே மாதிரி யானப்பாலம் கட்டி தாண்டிபோய் சண்ட போட்டாங்களாம்..

இராஜேந்திர சோழ மகாராஜா ஒரு சிவ பக்தன். வாயு ஸ்தலமான நம்மூரு சிவன் , அவனுக்கு ரொம்ப புட்ச்சு போச்சு. வடக்க போற தன்னோட படை ஜெயத்தோட வந்தா, இங்க பெரிய கோயில் கட்றதா வேண்டிகினானாம்.

ஒர் நா கூடாரத்துல, போர் பத்தி டிஸ்கஸ் பண்ணிகினு இருந்தப்ப, அரையன் இராஜராஜன்னு ஒர்த்தன் வேகமா உள்ள வந்தான். இராஜேந்திரன் தெகச்சு போய்ட்டான். ‘நால்மடி பீமம், சாமந்தா பரணம், வீரபூஷணம், எதிர்த்தவர் காலன்’ பட்டங்கள வாங்குனவரு..பதட்டத்துக்கே பதட்டத்த குடுக்கறவரு, இப்டி எதுக்கு ஓடி வராருனு நெனிச்சுகினு, அரையரே எதுக்கு பதட்டம்னு கேட்டுகீறான்.

ஒரு கனா வந்துச்சி. அதுல சிவன் வந்தாரு..அவரோட கோயில்ல, சதா சுத்தம் பண்ணி தொண்டு பண்ற காளத்திங்கறவனுக்கு கல்யாணம் பண்ணி வக்க சொல்லிட்டு..வடக்க போர் வெற்றிக்கு ஆசிர்வாதம் குத்துட்டு போனாருன்னு சொன்னான்.

இராஜேந்திர மகாராஜா குஷியாயிட்டான் வடக்க போர் வெற்றினு கடவுளே கன்ஃபார்ம் பண்ணதுல. சரிங்க அரையரே, ஒரு பொண்ண பாத்து கல்யாணத்த பண்ணிட்டு, சிவன கும்பிட்டு படைய கெளப்புவோம், ஏற்பாடு பண்ணுங்கனு சொன்னான்.

மறாநாளே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டான் அரையன் இராஜராஜன். ஆசிர்வாதம் பண்ண வந்த ராஜேந்திர மகாராஜாவுக்கு ஷாக்கா போச்சு. அரையரே..கைக்கோளப்படை உங்க கட்டுபாட்ல, ஒரு சிற்றரசர் தகுதில கீறவர், ஒங்க பொண்ணு ஞானப்பூங்கோதை ஒரு இளவரசி அந்துஸ்துள்ள பொண்ணு. ஊர்பேர் தெரியாத ஒர்த்தனுக்கு எப்டி கட்டித்தரீங்கனு கோவப்பட்டான்.

அரையன் பொறுமயா சொன்னான். பேரரசே, சோழத்தோட ஜெயத்த ஈசன் வரமா குத்துகீறார். அதுக்காக என்னால முஞ்சது, எம்பொண்ண தரேன்னு..

ராஜேந்திர மகாராஜா கண்ல தண்ணி. நெகுந்து போய்ட்டார். காளத்தி-ஞானப்பூங்கோதை கல்யாணத்த முடிச்ச கையோட படை கெளம்புச்சு. சோழ படைக்கு போன வழிலாம் ஜெயம். வெற்றியோட ரிட்டன் ஆகறப்ப, மகாராஜா அரையனுக்கு ஒரு வேல குத்தாரு. காளாஸ்திரி ஒரு கோயில கட்டச் சொல்லி..அரையனு தன்னோட படையோட காளாஸ்திரி வந்தார். ஊர்ல நெறிய கத சொன்னாங்க..கொஞ்ச நாள்ல காளத்தியும், ஞானப்பூங்கோதயும் ஒரு பெரிய யான மேல ஏறி பறந்து போனதாவும், காளத்தி சாட்சாத் சிவனேதான்னும், ஞானபூங்கோத தான் பார்வதின்னும் சொன்னாங்க. அரையனும் அவனோட கைக்கோளப் படையும், பார்வதியே தங்களோட வம்சத்துல பொறந்துருக்கான்னு அந்த பகுதிலயே செட்டில் ஆயிட்டாங்க.

கைக்கோளப் படைல நெறிய கூட்டம் இருந்துச்சு. அதுல ஒன்னுதான், அரையனோட வெள்ளாத்தூரான் கூட்டம். சிவனுக்கே பொண்ணு குத்ததால, அப்பிலேந்து, வர்சா வர்சம் சிவராத்ரில நடக்கற காளத்தீஸ்வரர்-ஞானப்பூங்கோதை திருக்கல்யாணத்துல வெள்ளாத்தூரான் வூட்டோடது தான் மொதுல் சீதனம், எங்க வூட்டுக்கு தான் மொதுல் மரியாதயும்..”

“இந்த்த பெத்த சரித்ரம் உந்தா மன குடிக்கி…தி கிரேட் வாரியர் ராஜேந்தரடு கட்டின்ச்சின குடியா இதி?” முத்து கிருஷ்ணன் வியந்தார்.

“ஆமா..சோழன் கப்பல் வருதுன்னா..அடிக்கிற புயல்கூட நவுந்து போய்டுமாம். ராஜேந்தரனோட படை ஓட்னா கூட, ஒரு எடத்த தாண்ட்றதுக்கு பதினஞ்சு நாள் ஆவுமாம். அவ்ளோ பெருசாம்..”

எல்லோரும் இராஜேந்திர சோழனின் பிரம்மாண்டத்தை வியந்து கொண்டே கலைந்தனர். ஒரு நாட்டுடன் போரிடுவதே பெரிது. இதில் கங்கை கடந்து, வரிசையாக அத்தனை நாடுகளுடனும் போரிட்டு வென்று வருவது எனில்…எல்லோர் மனதிலும் இராஜேந்திரன் ஒரு கதாநாயகனாக உயர்ந்தான்.

“போவ்..அதான் எனுக்கு பூங்கோதைனு பேர் வச்சியா? என்னயும் சிவனுக்கு கல்யாணம் பண்ணி குத்துருவியா?” பூங்கோதை சங்கரண்ணனின் தோளில் சாய்ந்து கொண்டே பயங்கலந்த குரலில் கேட்டாள். சங்கரண்ணன் சிரித்துக்கொண்டார்.

அடுத்த நாலாவது நாள், சிவராத்திரி. சங்கரண்ணன் வீட்டிலிருந்து பெண் வீட்டு சீதனம் புறப்பட்டது. காளத்தீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக தொடங்கியது. சங்கரண்ணன் காளத்தீஸ்வரருக்கு இட்ட மாலை கோயில் முழுக்க மணத்தைப் பரப்பியது. வியப்பு மேலிட அனைவரும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

வெங்கடப்பா ஓர் அறிவிப்பை வெளியிட்டார். வடபுல படையெடுப்பைச் சொல்லும் இராஜேந்திர சோழனின் கல்வெட்டினை படி எடுத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வெள்ளாத்தூரான் கூட்டம் சிவனுக்கு பெண் கொடுத்த கதை ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் கதாகாலட்சேபமாக நடத்தப்படும். இனி எல்லா சிவராத்திரியும், இராஜேந்திரன் ராத்திரியாகும்.

இத்தனை வருடங்களாக பூக்காத, நாகலிங்க மரம், நாகலிங்க பூக்களை மூலவர் விமானத்தின் மேல் உதிர்த்துக் கொண்டிருந்தது.

மு.ச.சதீஷ்குமார்

(மூலம்

காளத்தீஸ்வரர் கோயிலை கட்டியவர் இராஜேந்திரச் சோழர்

கோயிலில் இராஜேந்திரச் சோழரின் பன்னிரெண்டாம் ஆண்டு கல்வெட்டு, சோழரின் வடபுலத்து படையெடுப்பைத் தெரிவிக்கிறது.

இன்றும், சிவராத்திரியன்று செங்குந்தர் இனத்தை சார்ந்த வெள்ளாத்தூரான் கூட்டத்தின் சீர்வரிசையுடனே காளத்தீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது)

7 Comments

  1. மிக மிக சிறப்பு.. அறியாத விடயம் எல்லாம் அறிந்தது போல் எண்ணுகிறேன்

  2. ஒரு கோவிலின் வரலாற்றுப் பின்னணியை வட்டார வழக்கிலேயே நன்றாக எடுத்துரைத்துள்ளார் நண்பர் சதீசு. ஆன்மீகம், வரலாறு, ஒருஇனத்தின் பெருமை இவற்றினை இச்சிறுகதையின் மூலம் ஒருங்கே அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், வடதமிழக மக்களிடையே உள்ள வட்டாரத் தமிழ் உச்சரிப்பை மிக நேர்த்தியாக் கையாண்டுள்ளார். நல்ல முயற்சி. தொடரட்டும்.

  3. நேர்த்தியான கதையமைப்பு
    வட்டாரமொழி சொல்லாடல்
    இராசேந்திரனின் படைபலம்
    சோழர்கப்பல்படையின்
    மாட்சிமை சோழமன்னனின்
    கடவுள் நம்பிக்கை
    வெற்றி யின் சின்னங்கள்
    சிவதலங்கள்…. சோழவரலாற்றை
    முன்னெடுக்கும் தங்களின்
    ஆர்வம்… வரலாற்றுக்கதைக்களத்திலும்
    வெற்றிவாகைசூட வாழ்த்துகள்
    தலைவரே

Leave a Reply