இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை

நாள் கதிர் மற்றும் புத்தரிசி நாட்களிலெல்லாம் எங்களுக்காக தாத்தா கொடுத்த விடுப்புக் கடிதங்கள் 1980 வரை எங்கள் பள்ளியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று என் மகனிடம் 2018ல் சொல்லும் போது “இதுக்கெல்லாமா விடுப்பு தருவாங்க அட போங்கப்பா” என்று சிரிக்கிறான். ஆனால் கொடுத்தார்களே, அது உண்மைதானே.

இந்தப் பேச்சு ஆரம்பித்த இடம் சுவையானது. அண்மையில் கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பேரியாற்றின் கதை தேடுகையில் சேரமான் கோதையும், பிட்டங்கொற்றனும், பொலந்தார் குட்டுவனும் எதிர்பட்டார்கள். அப்பொழுது என் நினைவுகளைக் கிளறிவிட்டுச் சென்ற பிட்டங்கொற்றனே இதற்குக் காரணம். புறநானூற்றின் 168 வது பாட்டு பிட்டங்கொற்றனை கருவூர் கதப்பிள்ளை சாத்தனார் பாடியது. புறநானூற்றின் எல்லா படல்களுக்கும் கால வரையறை செய்யப்படவில்லையென்றாலும் இந்தப் பாடல் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு மறுப்புரை எதுவும் காணக்கிடைக்கவில்லை.

“அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி – 5
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி -10
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல் – 15

நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவி லம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் – 20

பாடுப வென்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே.” (புறநானூறு -168)
அருவி பேரிரைச்சலுடன் நீரூற்றும் அகன்றவிடத்து மூங்கில்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றின் மீது மிளகு கொடிகள் படர்ந்து நிற்கின்ற மலைச் சாரலில் காந்தள் பூக்கள் மலர்ந்து கிடக்கின்றன. காந்தட் செடியின் கொழுத்துச் செழித்தக் கிழங்கை காட்டுப்பன்றிகள் தன் கூட்டத்தோடு வந்து கிண்டித் தோண்டியெடுக்கின்றன. வெள்ளை வெளேரெனக் கிழங்கு மிளிர்கின்றதாம். அவை கிளறிவிட்டுச் சென்ற மண் ஏர் பூட்டி உழுதது போல் இருக்கிறது.

நன்னாள் வருவதை நோக்கி. பண்டைய தமிழர் மரபில் ஆட்டை தொடக்கமும், வேளாண்மைக்கான பாட்டமும் (விதைப்புக்கான நாட்களும்) பறையறைந்து அறிவிக்கப் பட்டிருக்கின்றன. இவை பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்கலாம். அப்படியொரு நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து, குறவர் தாம் உழாமல், பன்றிகள் கிளறிவிட்டுப் போன நிலத்தில் சிறிய தினையை விதைக்கிறார்கள். அது பெரிய தோகை விரித்து விளைந்து பருத்தக் கதிர் முற்றிக் கிடக்கிறது. அந்தப் புதுவிளைச்சலை அறுத்து, புதிது உண்ணவேண்டி திட்டமிட்டு வேலை நடக்கிறது.

முந்தைய நாள் மான் இறைச்சி வேகவைத்த,வெளிப்புறம் கழுவப்படாமல் வானின் கருவண்ணத்தில் இருக்கிற, புலால் நாறும் பானையில் காட்டுப் பசுவின் தீஞ்சுவைப்பால் கறக்கப்பட்டு நுரையுடனே அடுப்பிலேற்றப் படுகிறது. அதனுடன் தினையரிசியும் இடப்படுகிறது. விறகாகச் சந்தன மரத்துண்டுகள் எரிக்கப்படுகின்றன. சிறிது நேரத்தில் பாலும் தினையும் சேர்ந்து வெந்த புன்கம் (பொங்கல்) சமைக்கப் பட்டுவிட்டது.

அங்கே ஒரு அழகிய வெளி. “குளவி” தண்புதல் வளர்ந்து கிடக்கிறது. மிகச் சிறந்த நறுமணம் கொண்ட அதன் மலர்கள் பூத்துக் கிடக்கின்றன, இந்தக் குற்றுக் கொடிவகையச் சேர்ந்த தாவரத்தின் மலர்களிலிருந்து வீசும் மணம் புலவு நாற்றத்தைக்கூட விலக்கிவிடும் என்கிறது அகநானூற்றின் 268 ம் பாடல். அந்தப் புதரின் மீது படர்ந்து கவிந்து கிடக்கிறது “கூதளம்” எனும் கொடி. அதுவும் பூத்துக் குலுங்குகிறது. கூதளம், நறுமணம் கொண்ட குளவியின் மேல் படரும் என்பதை புறப்பாடலொன்று
நாறிதழ் குளவியொடு கூதளம் குழைய (புறம் 380) என சான்று பகர்கிறது. அப்படியொரு அழகிய நறுமணம் நிறைந்த முற்றத்தே வந்து அமர்கிறான் பிட்டங்கொற்றன்.

அவன் ஊராக் குதிரைக் கிழவன். ஊராக்குதிரை என்பது குதிரை மலை.

குதிரைமலை

(இன்று அந்தப் பகுதி “குதிரே முக்” என அழைக்கப்படுகிறது. குதிரை மூக்கு என்ற பழைய தமிழ்ப் பெயருடன் தென் கன்னடம் மாவட்டத்தில் உப்பினங்காடி வட்டத்தில் வழங்கி வருகிறது. இந் நாட்டில் மேற்கரை என்னும் தமிழ்ப் பெயர் மர்க்காரா என்றும், வடகரை, படகரா என்றும் வானவன் தோட்டி, மானன்டாடி என்று உருத்திரிந்தும் வழங்குகின்றன). பிட்டங்கொற்றன் குதிரைமலைத் தலைவன். சேரமான் குட்டுவன் கோதையின் படைத்துணைவன். பெருவீரன். பெருங்கொடையாளன்.
முற்றத்தில் இரும்பை அடித்து வடித்துச் செய்யப்பட்ட “வடிநவில் அம்பு” தோளில் சாற்றிய விற்போர் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே நறைக்கொடியின் நாரில் தொடுக்கப்பட்ட வேங்கைப்பூ மாலை அணிந்து, கூரிய வேல் தாங்கி அமர்ந்திருக்கிறான் பிட்டங்கொற்றன். குளவியும், கூதளமும் பூத்துக் குலுங்கிய கார்காலத்தில் (ஆவணி, புரட்டாசி) வந்த விருந்தினரும், குதிரைமலை மக்களும் சுற்றியிருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் கொழுத்துக் முதிர்ந்த வாழையின் அகன்ற இலைகள் போடப்படுகின்றன. அதிலே தீஞ்சுவைப் பாலில் வேவைத்த தினைப் புன்கம் சுடச்சுட விளம்பப்படுகிறது. எல்லோரும் மகிழ்வுடன் உண்கிறார்கள். பிட்டங்கொற்றன் முகமலர்ச்சியோடு அமர்ந்திருக்கிறான். கதப்பிள்ளைச் சாத்தனாரும் புன்கம் அருந்தியிருப்பார் போலும். அகமகிழ்ந்து பாடுகிறார்.
கையால் அள்ளியள்ளி வழங்கும் கொடைத்தன்மையுடைய கொற்றனே, உன் புகழை உலகத்து எல்லையுள் தமிழகம் கேட்க, பொய்யுரைக்காத நாவுடைய புலவர்கள் வாழ்த்திப் பாடுவர். அதைக் கேட்டு கொடாத வேந்தர் நாணுவர் என்று வாழ்த்திப் பாடுகிறார்.

அடடா. ஒரு பாடல் எத்தனைச் செய்திகளைத் தாங்கி நிற்கிறது. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகள் தாண்டியும் நிற்கின்ற ஒரு பண்பாட்டு நீட்சியை, எம் நிலத்தின் பரப்பை, நிலத்தின் பெயரை, உணவை, இயல்பை எடுத்தோதிக்கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் வரலாற்றின் அறிவுகொண்டு நோக்காமல், பள்ளிப் பாடங்களில் முழுமையாக வைத்திராமல், பண்பாடுகளின் வேர்களைத் தெரியாமல் நாமும் வளர்ந்து நம் மக்களையும் வளர்க்கிறோம். எங்கே தொலைந்தது நம் அறிவு? பண்பாட்டுக் கூறுகளைச் சடங்குகளுக்குள் புகுத்திச் சிதைத்து வைத்திருக்கிறோம்.
நன்றாக நினைவிருக்கிறது குமரி மாவட்டத்தில் எங்கள் வீட்டில் நடைபெறும் “நாள்கதிரும்” “புத்தரிசியும்”. அது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். 1970 முதல் 1980 வரை.

வாற வெள்ளியாச்ச நெறைக்கதுக்கு நல்லநாளு, அண்ணைக்கு நெறச்சரலாம் என்று தாத்தா அப்பாவிடம் சொல்லிவிடுவார். சித்தப்பாமார்களும், சித்திமார்களும் அவர்களின் பிள்ளைகளும் வியாழக்கிழமை அன்றே வந்துவிடுவார்கள். (இரண்டு சித்தப்பாக்களும் வேலையிலிருந்தவர்கள். அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வருவார்கள்). அன்று இரவில் சித்தி, அக்கா, தங்கை எல்லோரும் சேர்ந்து பச்சரிசியை ஊறவைத்து அரைத்தெடுத்த மாவில், தாத்தாவின் பழைய கைத்தறி வேட்டியிலிருந்து கிழித்தெடுத்த துணியை முக்கி வீடெங்கும் கோலமிடுவார்கள். (முற்றம் முழுவதும் நிறைந்திருந்த அந்த ஒற்றைக் கோலத்தைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது).

வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே எங்கள் எல்லோரையும் எழுப்பி குளிக்கச் சொல்வார்கள். பின்பு வயலுக்குச் செல்வோம். வரப்பில் வளர்ந்திருந்த சிறு புற்கள் கால் விரலிடுக்கில் கிச்சுகிச்சு மூட்டியதை, அவற்றின் மீதிருந்த சிறு நீர்த்திவலைகள் காலில் குளிரூட்டியதை இன்னும் மறக்கமுடியவில்லை.

தென் குமரியின் தாடகை மலை

நல்ல விளைந்த வயலின் வரப்பில் எங்களையெல்லாம் நிற்கச் சொல்வார்கள். தாத்தா ஒரு மூலையில் (வடகிழக்கு மூலையென நினைப்பு) இறங்கி சூரியனை வணங்கிவிட்டு கதிரருவாள் கொண்டு அறுக்கத் தொடங்குவார். இரண்டு மூன்று கை கதிர் அறுத்தவுடன் “இனி நீங்க அறுங்கப்பா” என்று கரையேறிவிடுவார். இரண்டு மூன்று பேர் தொடர்ந்து அறுக்கத் தொடங்குவார்கள். தாத்தா போதும் என்று சொல்லும் வரை கதிரை அறுத்து சிறு சிறு கட்டுகளாகக் கட்டிவைப்பார்கள். பின் அறுத்த தாளின் மீது வாழையிலையை விரித்து வீட்டிலிருந்து கொண்டுவந்த சாணத்தை பிடித்துவைத்து, அதைச் சுற்றிவருவார் தாத்தா.

பின் கையில் கதிர் கட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு அப்பாவை பேர்சொல்லி அழைப்பார். அவரும் சென்று தாத்தாவிடமிருந்து அந்தக் கட்டைப் பெற்றுக்கொள்வார். பின் சித்தப்பாமார்கள் பெரியவர்கள் என மூப்பு அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கதிர்க்கட்டு கிடைக்கும். எங்களுக்கும். எனக்கு ஏழெட்டு வயதாய் இருந்தபோது நெற்கதிர் என் நெஞ்சளவு உயரம் இருந்தது. கையில் பிடிக்கையில் நெல்மணிகள் தரையில் உரசாமல் இருக்க யாரேனும் முன்பக்கம் ஒரு முடிச்சிட்டுத் தருவார்கள். அத்தனை உயரமான நெற்கதிர்களை இப்பொழுது இணையத்தில் படங்களாய் மட்டுமே பார்த்துக் கொள்கிறேன்.

வயலிலிருந்து குளத்தங்கரை வழியாக வருவோம். பள்ளத் தெரு இறக்கத்தில், தலைச் சுமட்டில் கொண்டுவரும் ஏராளமான கட்டுகளை சுமந்து வந்தவர்கள் கோயிலை நோக்கி இறங்கிவிடுவார்கள். நாங்கள் நடந்து தெருவழியாய் வீட்டுக்கு வரும் போது ஒரு திருவிழாவின் மகிழ்ச்சி மனதில் ஓடும். வீட்டின் அரங்கில் கொண்டுவந்த கதிர்களை வைத்துவிட்டு, ஏதாவது தின்றுவிட்டு கோயிலுக்குச் செல்வோம்.

கோயிலில் படையலாக வைக்கப்படும் பாயாசத்தில், அறுத்துவரப்பட்ட புதுக் கதிரிலிருந்து நெல்மணிகள் உதிர்க்கப்பட்டு, கையால் தேய்த்து உமி நீக்கிய புதிய அரிசி ஒரு கையளவு சேர்க்கப்படும். இன்னொரு படையல் சருக்கரைப் பாகு சேர்த்து செய்யப்பட்ட அவல். வழிபாடு முடிந்து கோயிலில் இருந்தும் திரும்பும் அனைவருக்கும் படையல் பொருட்களும், ஒரு கதிர் கட்டும் வழங்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவோம்.
வீட்டில் அரங்கினுள் ஒரு பானை இருக்கும். “நாள்கருதுப் பானை” என்றே சொல்வோம். அதில் ஒவ்வொருவராய் (வயது மூப்பின் அடிப்படையில்) புதுக்கதிரில் ஒன்றிரண்டை எடுத்து வைப்போம். பின் “களம்”, பத்தயப் புரை என்று அறுவடை மற்றும் நெல் சேமிப்புத் தொடர்பான இடங்களில் கதிர் கட்டுவோம். இதையே நாள்கருது என்றும் நிறை என்றும் அழைப்போம்.
இது போன்றதொரு நிகழ்வே “புத்தரிசி” எனப்படும் புது அரிசி சமைக்கப் படும் நாள். விடுப்பு, உறவுகள், கோலம், மகிழ்ச்சி எல்லாம் “நாள் கருதின்” வழமை போலவே இருக்கும்.

அறுவடை முடிந்து ஒரு நாள் இரவில் புதுநெல் அவிப்பு நடக்கும். அந்தப் புழுங்கலைக் குத்தி அரிசியெடுத்து புத்தரிசி சமைப்பார்கள். அன்று கண்டிப்பாக வாழையிலை தான் விளம்புவார்கள். எல்லாக் கறிகளும் வைக்கப்பட்டிருக்கும். புத்தரிசி அன்று முதலில் விளம்பும் சோற்றில் தேங்காயும், சருக்கரையும் கலந்து சாப்பிடுவது வழக்கம். மொத்த குடும்பமும் ஒன்றாய் அமர்ந்து உண்போம். அன்று கழியடைக்காய் செய்வார்கள். அது கடையடைக்காய், சீடை என்றும் அறியப்படும்.
என்ன வியப்பு? வான்கே ழிரும்புடை கழாஅத பிட்டங்கொற்றனின் பானை போல இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பண்பாட்டின் நீட்சி என் இலையில் விளம்பப்பட்டிருக்கிறது. இடையே வந்துதித்த சாதி, மதக் தாக்கங்களைத் தாண்டி சில அடிப்படை பண்பாட்டுக் கூறுகள் இன்னும் நம் கருமயப் பதிவுகளில் இருக்கின்றன. இந்தத் தாக்கங்களிலிருந்து விடுபட இவை ஒருவேளை உதவலாம்.

மாந்த ஆய்வியலில் நான்கு கூறுகளில் பண்பாட்டியல் முகாமையானது. அதன் மற்றைய கூறுகளான தொல்லியல், சமூகவியல் ஆய்விற்குக் கூட பண்பாட்டியல் உதவும். பண்டு இருந்த மக்களின் கொடுக்கல்,வாங்கல் முறைகளும் அவர்கள் மதிப்பு மிக்கதாய்க் கருதிய பொருட்களையும் அறிதல் பண்பாட்டியலின் பணி. பண்பாடுகளை ஆராயாமல் மாந்தவியலை ஆராய முடியாது என மாந்தவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நான் தொழில்முறை ஆய்வாளன் இல்லையெனினும் இந்த நோக்கில் நண்பர்களிடமும், உறவுகளிடமும் கேட்டேன். முகநூல் வழியாகவும் வேண்டுகோள் விடுத்தேன். நிறைய நண்பர்கள் வேறு வேறு ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் தொடர்பு கொண்டார்கள். அவர்களிடமிருந்து கிடைத்தவை அறிவும், வியப்பும்.

பிட்டங்கொற்றனின் குதிரைமலையில் புன்கம் உண்டுவிட்டு காலாற நடந்து தென்குமரியின் அருகே தாடகைமலை அடிவாரத்தை அடைவதற்குள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. பண்பாட்டின் பெரும்பயணம் அது. வேர்கள் எவை என முழுவதுமாக அறிந்துவிட முடியவில்லை எனினும், விழுதுகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. வேர்கள் ஏதேனும் மலைமுகட்டில் இருக்கலாமென்றே தோன்றுகிறது.

“கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”
யல்லவா.

மருதம் தோன்றா காலத்தே குறிஞ்சியிலும், முல்லையிலும் வாளொடு, இரும்பொடு அல்லது பிட்டங்கொற்றனின் “வடிநவில் அம்பொடு வாழ்ந்த பழங்குடி அல்லவா. வானமலையின் முகடுகளில் எங்கேனும் புன்கத்தின் வேர்கள் இருக்கலாம். அல்லது தேவனேயப் பாவாணரும், கா.அப்பாத்துரையாரும் சொன்னது போல தென்கடலுக்குள் மூழ்கியிருக்கிற குமரிக் கோடு மலையின் முகடொன்றில் இருக்கலாம்.

ஆதிச்சநல்லூர் அரிசியே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். எனவே வேர்களைத் தேடுவது பெரிய வேலையே. ஆனால் விழுதுகளைக் கண்டறிவது நம்மால் இயலுகிற ஒன்றே. விழுதுகளைப் பிடித்து மேலேறினால் அவை கிளைகளை அடையும். கிளைகளில் தொடர்ந்தால், எல்லாக் கிளையும் ஒரு மரத்தினது என்பதறிவோம். எனவே விழுதுகளைத் தேடினேன். விழுதுகள் விளம்பியவை கீழே,
புலவர் வல்வில் ஓரி : ஆயக்காரன்பும். நாகப்பட்டினம் மாவட்டம். இது தென் பகுதியில் வேதாரண்யம் ஒன்றியத்தில் கடற்கரை ஊராகும். ஒன்றியத்தின் பெரும்பகுதியில் காவிரி பாசனம் கிடையாது. ஏனெனில் இது மேடான பகுதி. வடகிழக்கு பருவமழையின்போது, ஆவணி புரட்டாசி மாதங்களில் முற்காலத்தில் பள்ளமாக செய்கால் செய்யப்பட்ட வயல்களில் நேரடி விதைப்பு செய்து பருவமழையை எதிர்பார்ப்பர்.

நெல் விளைந்த காலத்தில் பொங்கலுக்குப் பிறகு “இன்று 9 மணிக்குமேல் 10 மணிக்குள் புதிர் எடுக்க நாள் உத்தமம்” என அந்த ஊர் ஐயர் அல்லது குருக்கள் வீடுவீடாக சென்று ஒரு தாக்கீது கொடுத்துச் செல்வார். அவருக்கு தட்சிணை உண்டு. குறிப்பிட்ட நாளில் வயலுக்குச்சென்று பாதி அல்லது முக்கால்வாசி முற்றிய கதிர்களை சேகரித்து வந்து அரிசி எடுத்து, பழைய பச்சரிசியுடன் சேர்த்து சர்க்கரைப்பொங்கல் செய்து வீட்டிலேயே குலதெய்வங்களுக்கு படையல் செய்வார்கள்! இவ்வழக்கம் 1975, 1980 வரையில் பெரும்பாலும் இருந்தது. தற்போது குறைவாக நடக்கிறது.
ராஜபாண்டியன்: நெல்லை- பாலாமடை.: நான் தேவேந்திர குலத்தில் வீரவளநாட்டார் பிரிவை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் அவ்வழக்கம் உண்டு. முதலாவது தேவேந்திரனுக்கு படையல் இட்டு குடும்பத்தில் மூத்தவனுக்கு குடும்பர் பட்டம் கட்டுவார்கள். படையலில் முக்கனிகள் இடம் பெற வேண்டும். நெல் , மஞ்சள் , வாழை , பனை அவசியம் இருத்தல் வேண்டும். தலைவாழை இலையில் படையலிட்டு ஒர் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடுவோம். ஆனால் தற்காலத்தில் அப்பழக்கம் மறைந்து வருகிறது.

ஈழவன் இநேசன்: இலங்கை .யாழ்பாணத்தின் தெற்கிலுள்ள ஒரு சிறிய கிராமம். அந்தக்காலத்தில், நெற்கதிர்கள் முற்றி எந்த நேரமும் அறுவடை செய்யலாம் என்ற நிலையை அடையும் போது நல்ல நாள்பார்த்து ஒரு நாள் எனது தந்தையார் ஒரு பிடி அளவு நெல்லை அறுத்து வந்து வீட்டிலுள்ள சாமிகள் வைத்திருக்கும் மாடத்தில் பூசைப்பொருட்களுடன் வைத்துவிடுவார். இதனை புதிர் எடுத்தல் என்போம். அதன்பின் எந்த நாளும் பாராமல் நாம் அறுவடையை ஆரம்பிக்கலாம் . அறுத்து எடுத்து வந்த நெல்லை மீண்டும் ஒருநாள் எடுத்து உரலில் இட்டு உமி நீக்கி புதுச்சோறு சமைத்துண்போம் உறவுகளுடன் சேர்ந்து.

ரமேஷ்: நெல்லை நன்னகரத்தை சார்ந்த பள்ளர்குலத்தவரான சுடலைமாடன் குடும்பத்தார் ஆண்டுதோறும் தென்காசி கோயிலுக்கு நாள்கதிர் கொண்டு செல்லும் வழமை இன்றுவரை நடப்பிலிருந்து வருகிறது.
கீர்த்தீசு கூடலூர்: கூடலூரின் பணியர் இன பழங்குடிமக்கள் “பூ புத்தரி” அறுவடைத் திருவிழா கொண்டாடுகிறார்கள். வயலில் குலச்சாமிக்கு விளக்கேற்றி, பத்து நாட்கள் நோன்பிருந்த இளைஞர்கள் கதிர் அறுத்துக் கோயிலுக்கு எடுத்துச் செல்கிறார்கள். நம்பாலக்கொட்டை “வேட்டைக் கொருமகன்” கோயிலில் படையலாக வைத்து வழிபட்டு பின் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். பின் வயல், வீடு, நெல் உலர்த்தும் களம் ஆகிய இடங்களில் கதிர் கட்டுகிறார்கள். இதில் முள்ளுக் குரும்பர், ஊராளிக் குரும்பர் இன மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

முத்துக்குமாரசாமி: சமயபுரம் பகுதியில் முதல் கதிர் அறுவடையின் ஒரு பகுதியை பள்ளத்தம்மன் கோயிலுக்குக் கொடுத்துவிடுவார்கள்.
பொன்னண்ணா ஜோயப்பா: குடகில் ஆண்களும், பெண்களும் இணைந்து “பட்டேதாரா” வின் (குடும்பத் தலைவர்) தலைமையில் வயலுக்குச் சென்று கதிரறுத்து மாவிலையால் கட்டி கத் (கட்டு) செய்கிறார்கள். அதை “அயின் மனே” (பரம்பரை வீடு) க்கு எடுத்துச் சென்று “பொலி பொலியே பா பா” என்று ஓங்கிக் குரலெழுப்புகிறார்கள். சிறுவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அன்று மதிய உணவு சிறப்பானது.

பன்றி இறைச்சி, கொழுக்கட்டை, அரிசிச்சேவை, பழமும் சருக்கரையும் கலவை, மீன் கறி முதலியவை முகாமையானது. கொடவா, அம்மா கொடவா, கௌடா, கன்னடிகா, துளுவா என எல்லா இனத்தவரும் குடகில் “புத்தரி” கொண்டாடுகிறார்கள்.குடகின் நாடாளுமன்ற உறுப்பினர் இதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

அணுராதா நாராயணசாமி, மலேசியா: நாகப்பட்டினம், புதுச்சேரி பக்கம் எடுக்கப்பட்ட புத்தரிசி படையல் தொடர்பான ஒளிப்படம்.
நெல்லை, குமரி மாவட்டக் கோயில்கள் பெரும்பாலானவற்றிலும், கேரளக் கோயில்களிலும் நிறை நாள் நடைபெறுகிறது. இலங்கையில் அரசே இந்த விழாவைக் கொண்டாடுகிறது.

தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளின் செய்திகள் அதிகமாய்க் கிடைக்கப்பெறவில்லை. அதனால் குறையொன்றுமில்லை. அத்தனைக்கு இது பேராய்வும் இல்லை. ஒரு தொடக்கமே. சரி, கிடைத்தச் செய்திகளின் ஊடே ஒரு நடை வருவோம்.

குமரியின் நாஞ்சில் நாட்டிலும், நெல்லையின் சில பகுதிகளிலும், ஈழத்திலும் நாள்கதிரும், புத்தரிசியும் வேறு வேறு நாட்களில் நடக்கின்றன. நாகை, கூடலூர், குடகு இங்கெல்லாம் இரண்டும் ஒரே நாளில் நடக்கின்றன.
குடகில் குடும்பத் தலைவரோடு (பட்டேதார) ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வயலுக்குச் செல்வர். கூடலூரில் நோன்பிருந்த இளைஞர்களோடு மற்ற அனைவரும் வயலுக்குச் செல்கிறார்கள். நாஞ்சில் நாட்டில் குடும்பத்தலைவரோடு ஆண்களும், குழந்தைகளும் வயலுக்குச் செல்கிறார்கள். நாகை, நெல்லை, ஈழம் போன்றவிடங்களில் குடும்பத் தலைவர் மட்டுமே வயலுக்குச் செல்கிறார்.

குடகு, கூடலூர், நாஞ்சில்நாடு பகுதிகளில் களம், நெல்சேமிக்கும் இடம், குலச்சாமி கோயில் மற்றும் வீட்டிலும் கதிர்காப்பு கட்டுகிறார்கள். மற்றவிடங்களில் வீட்டில் மட்டுமே.

நாகையிலும், ஈழத்திலும் “புதிர் எடுத்தல்” எனும் பெயரிலும் நெல்லை, குமரி பகுதிகளில் “நாள் கதிர்” எனவும் முதல் அறுவடை நாள் குறிக்கப் பெறுகிறது.
குடகு, கூடலூர், நாகைப் பகுதிகளில் ஊருக்குப் பறையறைந்தோ, வீட்டுக்கு வீடு சென்று சொல்லியோ நாள் அறிவிக்கும் முறை இருக்கிறது. நாஞ்சில்நாடு கேரளத்துடன் இணைந்திருந்தக் காலம்வரையில் விதைப்புக்கான நாளறிவித்தல் முரசறைந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. கதிர் அறுக்கும் நாள் பற்றிய முரசறைதல் குறித்து செய்தியொன்றும் கிடைக்கவில்லை.
நெல்லை பாலாமடைப் பகுதியில் “குடும்பர்” என்றும், குடகில் “பட்டேதாரெ” என்றும் குடும்பத்தலைவர் அழைக்கப்படுகிறார். திருச்சிராப்பள்ளி பகுதியில் இந்த “பட்டய தாரர்” என்ற சொல் வழக்கத்திலிருக்கிறது. “ஊர்க்குடும்பு” என்ற சொல் உத்திரமேரூர் கல்வெட்டில் ஊர்ப்பிரிவைக் குறிக்கிறது.

பிட்டங்கொற்றனின் தினை புன்கமும், நாகையின் புதுச்சோறும், நாஞ்சிலின் புத்தரிசியும் ஏறத்தாழ ஒரே கால அளவில், கார்காலத்தில் நடக்கின்றன. கூடலூர் குடகு பகுதிகளில் கூதிர்காலத்தில் நடக்கின்றன. குடகில் மட்டும் இது ஒரு சடங்காக மாற்றமடைந்திருக்கிறது. தலைவாழை இலையும், புன்கம் எனும் பொங்கலும் எல்லாவிடத்தும் இருக்கிறது. புத்தரி, புத்தரிசி, புதுச்சோறு என பெயரும் ஒன்றாகவே இருக்கிறது.

வேறுபாடுகளும், ஒற்றுமைகளும் பண்பாட்டு நீட்சியில் புதியவையல்ல. ஆனால், சில ஒற்றுமைகள் வியப்பளிக்கின்றன.
நாஞ்சில் நாட்டில் ஒரே சமூகத்தின் சில குடும்பங்களில் புத்தரிசி அன்று புலால் சமைப்பதில்லை. எங்கள் வீட்டிலும் இல்லை. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அத்தை வீட்டில் மீன், இறைச்சி என சமைப்பார்கள். இது குடகை ஒத்திருக்கும். அங்கும் மீன் மற்றும் புலால் சமைக்கப்படுகிறது.

குடகின் புத்தரியின் முகாமையான உணவு அவலும், சருக்கரையும், மலைப்பழமும், தேங்காயும் சேர்த்து செய்யப்பட்ட தம்புட்டு. எங்கள் ஊரிலும் சருக்கரையும், தேங்காயும், அவலும் சேர்த்து செய்யப்படும் இனிப்பு நாள் கதிர் அன்று கோயிலில் வழங்கப்படும். பக்கத்தில் கடுக்கரை போன்ற ஊர்களில் காலை உணவே சருக்கரை அவல் தான்.

வானமலையின் கடைக்கோடியில்தென்குமரியின் தாடகை மலையின் அருகிலும் அங்கிருந்து ஏறத்தாழ எழுநூறு கி.மீ க்கு அப்பால் வடக்கில் இருக்கிற குதிரைமலை அருகிலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்காக, ஒரே உணவு, அதுவும் மிக நீண்ட காலமாக என்பது பெருவியப்பே. குதிரைமலையிலிருந்து அறுநூறு கி.மீ. தென்கிழக்கில் இருக்கிற நாகப்பட்டினத்திலும் ஒரே மாதிரியாக ஊருக்கு அறிவித்து “கதிரறுத்தல் மற்றும் புத்தரியை” ஒரே நாளில் கொண்டாடுவதும் வியப்பே. ஏனெனில் இது பண்டிகையல்ல.

தானாக விளைந்த காய், கனி மற்றும் வேட்டையாடிய விலங்குகள் என உண்டு திரிந்த மாந்தன், விதைத்து, விளைத்து உண்ட போது உழைப்பின் பலனை மகிழ்வோடு தொடங்கியிருக்கலாம். மருத நிலத்தில் உழவு பற்றிய அறிவு இருந்த காலத்தில் தான் “கதப்பிள்ளைச் சாத்தனார்” பிட்டங்கொற்றனைச் சந்திக்கிறார். அதனால் தான்
“கடுங்கட் கேழ லுழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய” என்றெல்லாம் பாடுகிறார்.

உழுது விதைப்பதை அறிந்தவரே உழாது விதைத்த என்று பாட இயலும். எப்படிப் பார்த்தாலும் ஒரு புது விளைச்சலின் புதுவரவை மூத்த தமிழ்க்குடி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. இதை “வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப” என்று குதிரைமலையில் பாடியதிலிருந்து அன்றைய தமிழக எல்லையையும் அறிய முடிகிறது.

மொழி, அரசியல் மாற்றங்கள் காலப்போக்கில் எல்லைகளை மாற்றி இருக்கின்றன. குழுக்களுக்குப் பெயரிட்டிருக்கின்றன. ஆனால், பண்பாட்டுக் கூறுகள் மட்டும் இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானையாக எல்லோர் வீட்டுப் பரண்களிலும் கிடக்கிறது.

– சீராப்பள்ளி மகாதேவன்

Leave a Reply