ஆரணி ஜாகிர் மாளிகை – திரு. சரவணன் இராஜா

பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர். இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த ஆரணி படைவீடு படிப்படியாய் தனது பெருமையை இழந்த நிலையில் விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.

   

விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. கி பி 1640-ல் ஷாஹஜி இறந்தபோது, கர்நாடக அரசரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள, ஷாஹஜி அவர்களின் நிரந்தர அதிகாரபூர்வ மரண சாசனத்தின் மூலம் வேதாஜி பாஸ்கர் பண்ட் அவர்களின் நீண்டகால மற்றும் உண்மையான ராணுவ சேவைக்கான பரிசாக பீஜப்பூர் சுல்தான் மூலம் ஆரணி ஜாஹிர் வழங்கப்பட்டது. இந்த ஷாஹஜி, சிவாஜி-ன் தந்தை ஆவர்.

செஞ்சி, வேலூர்-ஐ வெற்றிகொண்டபிறகு தஞ்சையையும் கைப்பற்ற நினைத்தார் சிவாஜி. அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் சிவாஜி படைஎடுப்புகளுக்கு உதவி செய்துவந்தார். அவரின் சேவைக்கு விருதாக அவரை ஆரணியின் ஜாகிர் என்று மீண்டும் (கி.பி .1677-1679)உறுதிப்படுத்தினார் சிவாஜி.

ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த வேலூர் திருவண்ணாமலையில் உள்ள,பூசிமலைக்குப்பம், புதுப்பாளையம், ஏ.ஏ. நகர் பகுதிகள். அந்த அடர்ந்த காட்டு பகுதிகளில் மனித நடமாட்டமே இருக்காது. யானை, நரி, காட்டெருமை என வனவிலங்கு வாழும் பகுதி. தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மன்னர்கள் ஆட்சி செய்த போது, கொடிய வனவிலங்குகள் வாழ்ந்த காட்டுப்பகுதி இது. இந்த காட்டின் நடுவே, கிபி 17ம் நூற்றாண்டின் நடுவில் இருந்து ஆரணியை மராட்டியர் ஆட்சி செய்தனர்.

கி.பி. 17ம் நூற்றாணடிற்கு பிறகு ஆரணிக்கு வடகிழக்கிலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் செய்யாறு சாலையில் கமண்டல நாகநதியின் வடகரையில் புதியதாக ஒரு நகரை அமைத்து அதற்கு சத்திய விஜய நகரம் என பெயரிட்டு அங்கிருந்து இன்றைய ஆரணி வட்டத்தை ஜாகீர் ஆட்சி செய்து வந்தார்.கி.பி.18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆற்காடு நவாப்பின் கீழும், மேற்படி ஜாகீரை ஆட்சி செய்தனர்.

ஆரணி ஜாகிர்தாருக்குத் தனிபடை இருந்தது, ஆரணி ஜாகிரில், 192 கிராமங்கள் அடங்கி இருந்தன, அவை 86 குழுக்களாக பிரிக்கப்பட்டு
6 வருவாய் அதிகாரிகளால் வரி வசூலிக்கப்பட்டது.

இவ்வாறான வசூல் செய்த தொகை 4,00,000 ரூபாய், இதில் ஆங்கில அரசுக்கு ரூ55,000/- வாரியாக கொடுத்துள்ளனர். 1948ல் ஜமீன் ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது,03-01-1951ல் தமிழக அரசு ஆரணி ஜாகிரை ஏற்று கொண்டது. அப்போதைய ( 13 வது) கடைசி ஜாகிர்தார் சீனிவாசராவ் (IV) 1956 ல் ரூ1,32,000 க்கு தமிழக அரசுக்கு இம்மாளிகையை விற்றுள்ளார்.

சுற்றிலும் மலை சூழந்த இயற்கை எழில் நிறைந்த இடத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே கட்டபட்ட பிரமாண்ட மாளிகை.ஆரணி ஜாகிர் சீனிவாச ராவ் (I)தன் ஆங்கிலேய காதலிக்கா கட்டிய அரண்மனை என கூறப்படுகின்றது,1860 ல் கட்டபட்ட இந்த மாளிகை உண்மையான வரலாறு பற்றிய விபரங்கள் ஆய்வுக்கு உரியவை.மாளிகை கலை பாணி இன்றைய கட்டிட கலைஞர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.

கண்ணாடி மாளிகை, வசந்த மாளிகை, வேட்டை மாளிகை, French Castle என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாளிகை கட்டிய காலத்தில் வைத்த பெயர் Shooting Box.

வேலூரில் இருந்து சுமார் 38கி.மி. ஆரணி செல்லும் சாலையில்,ஆதிமலை பட்டு கிராமத்தை கடந்த பின் இடதுபுறம் திரும்பி பூசிமலை குப்பம் கிராமத்தின் வழியே ஆள் ஆரவாரம் இல்லாத தார் சாலையில் நேராக 7 கி.மி. உள்ளே சென்றால், சிறுமூர் மதுரா SU வனம் (சீனிவாச யுத்தியா வனம்) ஊராட்சியின் உள்ளே இந்த மாளிகையின் முன்பு சாலை முடிகின்றது.

ஆங்கிலேயர்களுக்கு உரிய கலை நயத்துடன் கட்டப்பட்ட காலத்தில், கலர் கண்ணாடிகளாளும், வண்ண சுவர் காகித்தாலும், அழகிய பளிங்கு தரைகளும்,சுவர்கள் முழுவதும் சுண்ணாம்பு பூசி வழுவழுப்பாக இருந்துள்ளது.

மூன்று அடுக்கு மாளிகை, உள்ளே, வெளியே படிகள்,தரைதளத்தில் விசாலமான நான்கு அறைகள், எல்லா அறைகளில் கனப்பு அடுப்பு,புகை போக்கிகள், குளியல் அறைகள், வெளியே அமைக்கப்பட்ட வார்ப்பு தூண்கள் உட்புறம் வழியாக மேல் தளத்தில் உள்ள நீர் தரையில் வடியும் அமைப்பு வியக்க வைக்கிறது.

இந்த மாளிகை அருகே நீச்சல் குளம், பணிஆட்கள் தங்குமிடம், சமையல் கூடம்,தூது புறாக்களுக்கு தனி இடம் என ரசித்து கட்டியுள்ளனர்.ஜாகிர் காலத்தில் வேட்டைக்கும்,ஓய்வுக்காக தங்கிய விருந்தினர்களால் பரபரப்பாக இருந்திருக்க கூடிய மாளிகை இன்று சிதைந்து,அதன் பொலிவை இழந்து நிற்கின்றது.

அதன், தேக்குகதவுகள், ஜன்னல், மரபடிகள், இரும்புசட்டங்கள் என அனைத்தும் சமுக விரோதிகளால் களவடப்பட்டு இன்று வெறும் எலும்புகூடாக காட்சியளிக்கிறது.

இந்த மாளிகை மீட்டு மீண்டும் அதை பழைய நிலைக்கு கோண்டு வர நல்ல யோசனைகள் வேண்டும் என ஆர்வமாக சில நல்உள்ளங்கள் முகநூலில் அழைப்பு விடுத்திருந்தனர், வேலூர் கோட்டை நாணய சங்க சார்பாக அவர்களை ஊக்குவிக்க, எமது குழுவினர் நான்கு பேர்கள் சென்றோம், சுமார் 50 பேர்கள் வரை வருகை தந்து பல யோசனைகள் பரிமாறி கொள்ளப்பட்டது.

மாளிகை மீண்டும் அதன் அழகை பெற்று ஒரு அழகிய சுற்றுலதளமாக மாறவேண்டும் விரைவில்.

Leave a Reply