அருகரின் பாதையில் – வேலுதரன்

சமணத்தின் எச்சங்களைத்தேடி ஒரு பயணம் வட ஆற்காடு மாவட்டத்தில்…

சென்ற வாரம் வள்ளி மலைக்குச் செல்லலாம் என்று முகநூலில் விருப்பம் தெரிவித்துப் பதிவிட்டபோது நண்பர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆற்காட்டில் இருந்து கூட்டிச் செல்வதாகக் கூறினார், மேலும் திருப்பான் மலையில் பல்லவர் மற்றும் சோழர் காலக் கல்வெட்டுக்களுடன் சமண மதத்தின் எச்சங்களையும், ஒரு பல்லவர்காலக் குடைவரை மண்டபத்தையும் காட்டுவதாகவும் கூறினார். மதியம் ஆக ஆக வெயில் அதிகமாகி மலைகள் ஏறச் சிரமப்பட நேரிடும், என்பதால் மதியத்திற்கு முன்பே இரண்டு மலைகளையும் பார்த்துவிடலாம் எனவும் அதற்குக் காலை 8 மணிக்குள் ஆற்காடு வந்து விடுமாறும் கூறினார். சென்னையிலிருந்து ஆற்காடு அடைந்தவுடன், காலையில் முதலில் என்னைத் திருப்பான் மலைக்கு அழைத்துச் சென்றார். சாதாரணமாகத் தமிழ் நாட்டில் 5 அல்லது 6 சன்னதிகளுடன் கூடிய குடைவரைக் குகையைப் பஞ்சபாண்டவர் கோவில் எனவும் அம்மலையைப் பஞ்சபாண்டவர் மலை எனவும் அழைப்பர். திருப்பான் மலை ஆற்காட்டிலிருந்து 8 கிமீ தொலைவிலும் வேலூரிலிருந்து 30 கிமீ தொலைவிலும் ஆற்காட்டிலிருந்து கண்ணமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது. திருப்பான் மலை உயரம் அதிகம் இல்லாமல், பாறைகளை அடுக்கி வைத்ததைப்போல இருக்கும் ஒரு மலை. மலையின் மீது சமணச்சின்னங்களும், குடைவரைக் குகை தரைமட்ட நிலையிலும் உள்ளன.

  

திருப்பான் மலை

பல்லவர் காலச் சமணத்தீர்த்தங்கரர், சமணர் படுக்கைகள் மற்றும் இயக்கி சிற்பம்

மலைமீது ஏறப் பாறையில் படிகள் செதுக்கப்பட்டு இரும்பு கைப்பிடிக் கம்பிகளுடன் மத்திய தொல்பொருள் துறையால் அமைக்கப்பட்டு இருந்தது. மலை ஏற்றம் அவ்வளவு சிரமமாகப்படவில்லை. மலையின் மேல் சிறிய அளவிலான நின்ற நிலையில் உள்ள ஒரு தீர்த்தங்கரர், ஒரு மிருகம் (சிங்கம் போன்று) புடைப்புச்சிற்பங்களாகக் காணக்கிடைக்கின்றன. மேலும் குகையில் சில வெட்டுவித்த படுக்கைகளும் காணப்படுகின்றன. அதே இடத்தில் தென்புறமாக இயற்கையாக அமைந்த நீர் நிலையின் மேற்பகுதியில் ஒரு பெண் அமர்ந்த நிலையிலும், அருகே நால்வர் நின்ற நிலையிலும் புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது. சமணர்கள், தீர்த்தங்கரர்களுக்குச் சேவை செய்த அம்பிகா, பத்மாவதி, சித்தாகியா, சக்கரேசுவரி, ஜூவாலாமாலினி போன்ற இயக்கியர்களைப் பெண் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். அவற்றுள் ஒரு இயக்கியருக்கான புடைப்புச் சிற்பமாகக் கருதப்படுகின்றது.

புடைப்புச்சிற்பத்துக்கு மேலே பாறையில் உள்ள 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்காலக் கல்வெட்டின்படி இயக்கிக்கு அருகே நிற்பவர் சமண துறவியான நாகநந்தியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. பல்லவர் கல்வெட்டு “நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது நாகநந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்”. இதன் படி நந்திப்போத்தரசன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்ற குரவருக்காக / துறவிக்காக நாரணன் என்பவன் பொன் இயக்கியை வெட்டுவித்தான் என்று பொருள் கொள்ளலாம். தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பத்தின் மேலே சோழமன்னன் இராசராசன் பெயர் கொண்டு ஒரு கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது. இக்கல்வெட்டு கூறும் செய்தி ”படவூர் கோட்டத்து பெருந்திமிரி நாட்டைச் சார்ந்த இந்த திருபான் மலையில் லாடராசன் வீர சோழன்” என்பானால் இச்சமணப் பள்ளிக்குப் பள்ளிச்சந்தமாகக் கொடை கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. இச்செய்தியின்படி ஒரு சமணப் பள்ளியும் கல்வி போதிப்பதற்கு நிறைய சமணத்துறவிகளும் இங்கு இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடிகின்றது.

தற்போதைய நிலை: இந்தச் சமணர் படுக்கைகள் இருந்த ஒரு பகுதியில் சமண மத வீழ்ச்சிக்குப் பின்பு 17ம் நூற்றாண்டில் இம்மலையில் வாழ்ந்த ஹசரத் சையத் ஸா மீரான் வலி பாபா என்ற இஸ்லாம் மத துறவியின் சமாதியும், அவரைச் சார்ந்த சிலரின் சமாதிகளும் இருக்கின்றன. இத்துடன் சமீபத்தில் ஒரு தர்காவும் கட்டப்பட்டு உள்ளது.

அடுத்து நாங்கள் சென்றது மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள குடைவரைக் குகை. இக்குகை ஆறு கருவறை, மண்டபம் எனக் குடையப்பட்டுள்ளது. 12 சதுர வடிவ தம்பங்களுடனும், 4 அரைத் தம்பங்களுடனும் குடையப்பட்டு உள்ளது. வேலைப்பாடு எதுவும் இல்லாத போதிகைகள் னண்களின் மீது காணப்படுகின்றன. கருவறைகளில் கடவுளர்கள் சிற்பமோ அல்லது வாயில் காவலர்களோ எதுவும் செதுக்கப்படவில்லை. வெளிப்புறம் மேலே ஒரு தீர்த்தங்கரரின் யோக நிலை புடைப்புச் சிற்பம் தெளிவாக இல்லாமல் காணப்படுகின்றது. முக்குடையும் காட்டப்படவில்லை. குகையின் தற்போதைய நிலையைக் காணும்போது இக்குகை முழுதும் முடிக்கப்படாத ஒன்று என்ற முடிவுக்கு வரமுடிகின்றது.

வள்ளி மலை – முதல் பாகம்.

முருகன் தரிசனத்திற்குப் பின்பு சமணர் குகை வழியாகச் செல்லும் படிகள் வழியாக இறங்கினேன். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்து ஒருபாதை சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிரமத்தை நோக்கியும் மற்றொரு பாதை சமணர் குகை வழியாகக் கீழ் நோக்கியும் இறங்குகின்றன. சென்ற முறை வந்த பொழுது, ஆசிரமம் செல்லாததால் இம்முறை சென்று வந்தேன். சமணர் குகை மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 150 படிகள்தான். சமணர் குகையை மட்டும் காண விரும்புபவர்கள் மலை அடிவாரத்தில் இருந்து இப்பாதையை உபயோகிப்பதே சாலச் சிறந்தது.

சமணர் குகை ஒரு இயற்கையாக அமைந்த தங்குமிடம் ஆகும். இதில் கங்கர் மற்றும் பாணர் காலத்தில் வெட்டப்பட்ட சமணர் படுக்கைகளும் தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. தீர்த்தங்கரர் புடைப்புச்சிற்பங்கள் இரு நிலைகளில் மூன்று தொகுதியாக வெட்டப்பட்டுள்ளன. மேல் நிலை, குகையின் உள் முகப்பில் 5 தீர்த்தங்கரர் புடைப்புச்சிற்பங்கள் ஒரே வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன. அதில் நடுவில் இருப்பவர் மட்டும் முக்குடையுடன் சற்று உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றார்.

அதன் கீழ் அந்தச் சிற்பங்களை வெட்டுவித்தவரின் பெயர்கள் கல்வெட்டாக வெட்டப்பட்டு உள்ளன. கீழ் நிலையின் ஒரு தொகுதியில் இரண்டு ஒரே மாதிரியான தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன. கீழே சிம்மாசனத்தில் சிங்க இலாஞ்சனம் இருப்பதால் இவர்களை மஹாவீரர் எனக்கொள்ளலாம். முக்குடை கீறலாகவும் சாமரதாரிகளும் காட்டப்பட்டு உள்ளனர். மூன்றாவது தொகுதியில் இரண்டு பார்சுவநாதர் சிற்பங்கள் அமர்ந்த நிலையிலும், இரு தீர்த்தங்கரர்கள் முக்குடையுடனும், மற்றும் பாண அரசரின் மத குருவான பவநந்தி அடிகளின் மாணவி தேவசேனாவின் புடைப்புச் சிற்பங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. இந்தப் புடைப்புச் சிற்பம் சமணத்துறவி ஆர்யநந்தியால் வெட்டுவிக்கப்பட்டது எனக் கல்வெட்டு மூலம் அறியப்படுகின்றது.

கல் படுக்கைகளும், புடைப்புச்சிற்பங்களும் அரசன் கங்க ராஜமல்லன் ( 816 – 843 கிபி) காலத்தில் வெட்டப்பட்டன எனக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது. மேலும் கல்வெட்டு வாசகங்கள் ராஜமல்லன், கங்க சிவமாறனின் ( 679 – 725 கிபி ) கொள்ளுப்பேரனும், சிறீபுருசனின் (725 – 788 கிபி ) பேரனும், ரன விக்ரமனின் மகனுமாவான் என்பதையும் தெரிவிக்கின்றது.
சமண மதத்தின் முக்கிய துறவிகளுள் ஒருவரான அஜ்ஜ நந்தி இங்கு செயல்பட்டு வந்த கல்விக்கூடத்திற்கு வந்ததாகத் தகவல். மேலும் இந்தச் சமணப்பள்ளியின் பெயராலேயே இம்மலை பள்ளிமலை என அழைக்கப்பட்டதாகவும் பிற்காலத்தில் சமணர் குகையில் முருகன் சிலையை நிறுவிய பின்பு வள்ளி முருகன் திருமணத்தைப் பின்னணியாகக் கொண்டு இம்மலை வள்ளி மலையாகப் பெயர் மாற்றம் அடைந்தது என்பதும் ஒரு செவி வழிச் செய்தி.

வள்ளிமலை 

வள்ளி மலையின் கீழ் நிலையில் இருந்த சமணத் தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்களையும், சமணர் படுக்கைகளையும் கண்ட பின்பு, அங்கு இருந்த ஒரு சாதுவிடம், இதுபோல சமணர் குகையும் சமணர் சிற்பங்களும் இதே மலையில் வேறு எங்காவது இருக்கின்றதா என்ற என் வினாவிற்கு விடையாக இதே மலையில் சுடுகாட்டைத் தாண்டி உள்ள மலைமீது உள்ளது என்று கூறினார். நானும் ரமேசும் இரண்டுமுறை தேடி மலையுச்சிவரை சென்று ஏமாற்றத்துடனே திரும்பினோம்.

சரி இன்றைய இப்பயணத்தை இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுக்கு வந்தோம். ஆனாலும் வலைத்தளத்தில் வேலூர் வரலாற்றுக் குழுவின் பதிவில் கண்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள் மனத்தை உறுத்திகொண்டே இருந்தன. காணாமல் செல்ல மனமும் ஒப்பவில்லை. கடைசியாக ஆடு மாடு மேய்ப்பவர்கள் மூலமாக வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோவிலின் அருகில் இருந்த இடையர் ஒருவரை அணுகி வழி கோர, அவர் கருணையுடன் வந்து வழி காட்ட, நன்றி தெரிவித்துவிட்டு நான் மட்டும் மீண்டும் மலை ஏறத் தொடங்கினேன்.

மலையின் உச்சிவரை சுண்ணாம்பால் அம்புக்குறி வரையப்பட்டு இருந்தது. பாறை சில இடங்களில் செங்குத்தாக ஏறுவதற்குச் சிரமமாகவும் சோதனையாகவும் இருந்தது. மலையின் முக்கால் பகுதியை அடைந்த உடனே நான் கண்ட காட்சி, மேலே ஏறி வந்த சிரமம், பசி, தாகம் அனைத்தையும் மறக்கடிக்கச்செய்தது. ஒரு நிமிடம் அப்படியே என்னை நகர விடாமல் உறைய வைத்தது. வார்தைகளால் வர்ணிக்க முடியாத கண்கொள்ளாக் காட்சி அது. கண்களையே நம்ப மறுக்கச் செய்த காட்சி எனலாம்.,..

மூன்று தொகுதி தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள் செங்குத்தானப் பாறையில் கிழக்கு நோக்கி செதுக்கப்பட்டு இருந்தது. முதற் தொகுதியில் யட்சி மரத்தின் அடியில் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டு இருந்தது. இருபுறமும் சாமரதாரிகள் காட்டப்பட்டு இருந்தனர். அடுத்துள்ள சிற்பத்தொகுதியில் மகாவீரர் அமர்ந்த நிலையிலும், இருபுறமும் இயக்கன் இயக்கியரும், சாமரதாரிகளும், மேலே தேவ னதர்களும் செதுக்கப்பட்டு இருந்தனர். கடைசி சிற்பத்தொகுதியில் நடுவே பார்சுவநாதரும் இருபுறமும் 4 தீர்த்தங்கரர்களும் மேலே இரு தேவர்கள் மாலையுடன் செதுக்கப்பட்டு இருந்தனர். தெற்குப்புற செங்குத்தான பாறையில் மகாவீரர் முக்குடையுடன் அமர்ந்த நிலையிலும், அருகே குறுஞ்சிற்பமாக பார்சுவநாதர் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டு இருந்தனர். இந்த புடைப்புச்சிற்பங்கள் மனிதர்களால் சுலபமாக அணுகமுடியாத இடத்தில் செதுக்கப்பட்டு இருந்ததால் சுமார் 1200 வருடங்கள் சென்ற பின்பும் மிகவும் நல்ல நிலையிலேயே உள்ளன.

குகையில் யட்சி அமர்ந்த நிலையில் திருப்பான் மலையில் கண்டதுபோலவே செதுக்கப்பட்டு இருந்தது. குகையின் உள்ளே சமண முனிவர்களுக்குப் படுக்கைகளும் வெட்டப்பட்டு இருந்தன. சமூக விரோதிகளால் குகையின் மேற்கு புறமும், கிழக்குபுறமும் கற்களால் சுவர் எழுப்பப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தது. இது சமணர்களும், வரலாற்று ஆர்வளர்களும் அவசியம் காண வேண்டிய ஒன்று.

நன்றி.. வேலுதரன்

Leave a Reply