ஸ்ரீ மகாரதம் கலைச் செந்நூல் (ஸ்ரீ மகாரதம் சிற்ப சாஸ்திரம்) – திருமழிசை தா. கஜேந்திரன்

560

இந்நூலின் கண் அசையும் தேர்கள், அசையாத தேர்களைச் சுட்டுவதோடு ஆழித்தேர் முதலான தேர்களுடன், ரதங்களின் விரிவான அமைப்பு, இலக்கணம்,நுணுக்கங்கள் அனைத்தும் மிக விரிவாகக் காணப்படுகின்றன. அவற்றைக் கற்று உணருங்கால் அந்தச் சிற்பங்களை, தேர்ச்சிலைகளை, இறை உருவங்களை, இரதங்களின் அமைப்புகளை நேரில் கண் எதிரே தரிசித்த உணர்வு மேலோங்கி நிற்கும். இந்நூலின் கருத்துக்களுக்கு நூலாசிரியரே பொறுப்பேற்று முன்வந்ததன் அடிப்படையில், அனைவரும் படித்துப்பயன் பெறும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நம்முடைய ஆலய வழிபாட்டு முறையில் கருவறையில் நிலைபெற்ற இறை சக்தியை தேரில் ஏற்றிவைத்து நகரை வலம்வரும் மரபு பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். மனிதர்களாகிய நாம் நமது உள்ளமெனும் ஆகாசத்தில் உறைகின்ற பரம்பொருளை நமது தேகமாகிய இரதத்தில் சடாதாரம் என்ற ஆறு சக்கரங்களால் சுமந்து செல்லும் ரதங்கள் என்றால் அது மிகையாகாது. ஆலயத்தில் இறைவன் உறைகின்ற கருவறை மற்றும் விமானத்தை இறைவனின் வடிவமாகச் சிற்பிகள் உருவாக்கியதுபோல் உலகத்துயிர்களைத் தேடிச்சென்று அருள்புரியும் தேரையும் இறைவனின் வடிவமாகக் கருதினர்.

மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. தேர்களின் வகைகளாக மணிமேகலையில் நெடுந்தேர், பொற்தேர் கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் எனப் பலவகையானப் பெயர்கள் காணப்படுகின்றன.

தேர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும். இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடிகொடிகள் ஆகியவற்றின் உருவங்களும் ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது.

தேர் பற்றி திருக்குறளிலும் பல்வேறு செய்திகள் உண்டு. உதாரணமாக “உருள்பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார்” (குறள்: 667) என்று வள்ளுவர் உவமை கூறக் காணலாம். எனினும் இரதம் என்ற சொல்லாட்சி பொலிவும் விரைந்த செயலும் உள்ள அனைத்தையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. வானில் பறக்கும் விமானங்களை ஆகாசாதம் என்றும் மனவியல் கற்பனைத்திறனை மனோரதம் என்றும்; அறிவாற்றலை ஞானரதம் என்றும்; சிறந்த தர்க்கத்தை வாதரதம் என்றும் கூறுவர். எருதுகளால் இழுக்கப்படுவதை ‘கோரதம்’ என்றும் குறிப்பிடுவர்.

ஒளவையார் தேர் செய்ய வல்லவர்கள் பற்றி தனது ஒரு பாடலில்,

“களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே!

என்று பதிவு செய்கிறார்.

இது போலவே பரிபாடலில் சிவபெருமான் முப்புரம் அழிக்க, பூமியாகிய தேரில் வேதக்குதிரைகள் பூட்டி நான்முகச்சாரதியுடன் மேரு மலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் கொண்டு சிரிப்பால் எரித்தழித்தமை குறிப்பிடப்படுகின்றது. சங்ககாலத்திலேயே வேத புராண மரபுடன் தமிழிலக்கியம் பின்னிப்பிணைந்திருந்தது என்பதையும் செம்மொழித் திறனையும் அக்காலத்தில் தேர்த்திறன் பற்றியிருந்த எண்ணப்பாங்கையும் வெளிக்காட்டுகிறது.

இந்நூலின் கண் அசையும் தேர்கள். அசையாத தேர்களைச் சுட்டுவதோடு ஆழித்தேர் முதலான தேர்களுடன், ரதங்களின் விரிவான அமைப்பு, இலக்கணம்,நுணுக்கங்கள் அனைத்தும் மிக விரிவாகக் காணப்படுகின்றன. அவற்றைக் கற்று உணருங்கால் அந்தச் சிற்பங்களை, தேர்ச்சிலைகளை, இறை உருவங்களை, இரதங்களின் அமைப்புகளை நேரில் கண் எதிரே தரிசித்த உணர்வு மேலோங்கி நிற்கும். இந்நூலின் கருத்துக்களுக்கு நூலாசிரியரே பொறுப்பேற்று முன்வந்ததன் அடிப்படையில், அனைவரும் படித்துப்பயன் பெறும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

பதிப்பாசிரியர்

 

Weight 1 kg