ஐங்குறுநூறு: நெய்தல் / Aiṅkuṟunūṟu: Neytal

700

சங்கத் தொகை நூல்களாகிய எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு ஒன்றாகும். இந்நூல் முழுமையும் அகப்பொருள் குறித்தது. இந்நூல் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறடிப் பேரெல்லையையும் உடைய ஐந்நூறு குறும் பாக்களைக் கொண்டமையின் ஐங்குறுநூறு என்னும் பெயர் பெற்றது. இந்நூலுள் திணைக்கு நூறாக ஐந்து திணைக்கும் ஐந்நூறு செய்யுட்கள் உள்ளன. இந்நூலின் திணை ஒவ்வொன்றினையும் புலவர் ஒவ்வொருவர் பாடியுள்ளனர்.

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்

கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய

பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே

நூலையோ தைங்குறு நூறு (உ.வே.சா., ஐங்., முகவுரை, 1920, ப. 2)

திணைக்கு நூறு பாடல்கள் எனப் பாடும் முறை ஐங்குறுநூற்றிலேயே முதற்கண் காணக் கிடைக்கின்றது. திணைக்குப் பத்தாக, பதினான்காக, முப்பதாகப் பாடும் முறையைக் கீழக்கணக்கிற் காணலாம். (ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது). அகநானூற்றில் பாலைத்திணை குறித்து இருநூறு பாடல்கள் இருப்பினும் அவை ஒருவராற் பாடப்பட்டில என்பது கருதத்தக்கது. மேலும் ஐங்குறுநூற்றின் திணை ஒவ்வொன்றும் பத்துப் பத்தாகப் பிரிக்கப் பெற்று அவற்றுக்குரிய கூற்று அல்லது அவற்றிற் பேசப்பெறும் கருப்பொருள் அடிப்படையில் அப்பத்துகளுக்குப் பெயரிடப்பட்டு அமைந்தமை காணலாம். பத்துப் பத்தாகப் பாடும் முறை பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றது. உரிப்பொருள் அல்லது கருப்பொருள் அடிப்படையில் பத்துப் பத்தாகப் பாடுவதைப் பிற்காலத்தே திருவாசகம் பெற்றிருக்கக் காணலாம்; இஃது ஐங்குறுநூற்றின் மரபெனலாம். நாயன்மார்களும் ஆழ்வார்களும் பத்துப் பத்தாகப் பாடியிருப்பதும் இம்மரபின் தொடர்ச்சி எனக் கருதலாம். இந்நூலின் நெய்தல் திணையிலமைந்த தொண்டிப் பத்து அந்தாதித் தொடையில் அமைந்தது. சங்க கால அகத்திணைப் பாடல்கள் நாடகப்பாங்கின. ஐங்குறுநூற்றுப் பாடல்கள் அளவிற் சிறியவாயினும் அவையெல்லாம் நாடக ஒருமொழி (Dramatic monologue) யாகவே அமையும் தன்மையுடையன. இந்நாடகத் தன்மையை மேலும் தெளிவுபடுத்துவதாகக் ‘கூற்று’ என்னும் செய்யுட்குப் புறத்ததான உறுப்பு அமைந்துள்ளது. பாடத் தேர்வுப் பகுதியில் பாடங்களை அறிவியல் முறைப்படி (Scientific method) ஆய்ந்து இறுதியாக்கப்பெற்ற மூலமே இப்பகுதியில் தரப்படுகிறது.

பத்துக்களின் தலைப்பை எழுதுதல், ‘பத்து முற்றும்’ என்று, மூலத்தின் இறுதியில் புலவர் பெயர் குறிக்கும் முறை ஆகியன ஓலைச் சுவடி முறையாதலால், அவை மட்டும் இப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ளன; பாடல் விளக்கத்திற்காகத் தரப்படும் உள்தலைப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

பாடல்கள் யாப்பு, புணர்ச்சி, சந்தி விதிகளுக்கு உட்படுத்தப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன; கூற்றுகளும் தமிழ்ச் சொற்புணர்ச்சி விதிகளுக்கு ஏற்பவே இப்பகுதியில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சந்தி பிரித்துப் பதிப்பது செம்பதிப்பின் (Critical edition) நோக்கமல்ல என்பது குறிப்பிடத்தகும்; சந்தி பிரித்துப் பதிப்பிப்பது செவ்வியல் தமிழை (Classical Tamil) முழுமையாகத் தருவது ஆகாது. முந்தைய பதிப்புகளில் கூற்றுகள் யாவும் சந்தி பிரித்தே அச்சிடப்பெற்றுள்ளன; இச்செம்பதிப்பில் சந்தி பிரிக்காமல், பழந்தமிழ் இலக்கண மரபைப் பேணும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக் காரணத்திற்காகவே கூற்றின் தொடக்கத்தில் ஓலைச் சுவடியில் உள்ளது போன்றே ‘என்பது’ என்பதைக் குறிக்கும் ‘எ-து ’ என்ற சுருக்க எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ளன.

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.