முனைவர். ஆர்.சம்பகலக்ஷ்மி மறைவு

இரங்கல்: தென்னிந்திய வணிக ஆய்வுகளில் முன்னோடி முனைவர். ஆர்.சம்பகலக்ஷ்மி மறைவு.

எனது வணிகக் குழு ஆய்வுகளுக்கு பெரிதும் உதவும் நூல்களை உருவாக்கிக் கொடுத்தவர். அவரின் மறைவு தென்னிந்திய வணிகப் பொருளாதார வரலாற்றுத் துறைக்கு பேரிழப்பு.

ஆங்கிலத்தில் வந்த இவரின் Trade Ideology and Urbanization: South India 300 BC To AD 1300 என்ற நூல் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு, “வணிகம் கருத்தியல் நகர்மயம்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

Heritager.in expresses Deep condolences at the demise of renowned historian Professor R. Champakalakshmi, who passed away yesterday. Prof. Champakalakshmi (born in 1932) was an Indian historian and social scientist who had specialized in South Indian history. Her main areas of research were religion and society, trade, urbanization and state formation, and art and architecture. She served as a Professor in the Centre for Historical Studies, Jawaharlal Nehru University (JNU) and President of the Indian History Congress. She has authored numerous books including Trade, Ideology and Urbanisation: South India 300 BC To AD 1300; Religion,Tradition and Ideology : Pre Colonial South India; Vaisnava Iconography in the Tamil Country; Early Indian Architecture; Tradition, Dissent and Ideology: Essays in Honour of Romila Thapar (co-edited); State and Society in Pre-modem South India, Kerala (co-edited); The Hindu Temple: Sacred Sites (Co-author).

அன்னாரை பற்றி வெளிவந்த செய்தி:

வரலாற்றாய்வுக்கு வாழ்நாள் முழுவதும் போராடிவந்தவர். தமிழக வரலாற்றாய்வுக்கு உதவும் வட நாட்டறிஞர்களின் ஆய்வு நூல்களைத் தமிழில் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டினார். தமிழ் வரலாறு, தொல்லியல், சமயம், பக்தி இயக்கம், அரசியல் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமைபெற்றவர். அந்த வகையில், அவர் தன்னுடைய ஆய்வியல் நெறியில் புதுப் புதுக் கோட்பாடுகளைக் கண்டவர். தொடக்கத்தில் அவர் வெளியிட்ட ‘Vaishnava Iconagraphy in Tamil Country’ என்கிற நூல் குறிப்பிடத்தக்கது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, அங்கேயே பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது. அவர், அவரிடம் பயிற்சிபெற்ற மாணாக்கர்களான பேராசிரியர் ஏ.சுப்பராயலு, பேராசிரியர் பூசண்முகம், தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் ஆகியோர் தொல்லியல் துறையில் போற்றுதலுக்குரியவர்கள். அவருடைய மாணாக்கர்கள் சிலருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சம்பகலட்சுமி தன் மாணாக்கர்களை அன்பு காட்டி வளர்த்தெடுத்த முறையைப் பற்றிப் பெருமையுடன் பேசுவர்.  அந்த மாணாக்கர்களில் ஒரு சிலர் என்னுடன் பணியாற்றியவர்கள். அவர்கள் பல நேரங்களில் அவரைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்கள்.

ஒருமுறை நண்பர் கி.ஸ்ரீதரனுடன் சம்பகலட்சுமியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரதுஎம்.லிட் ஆய்வேட்டினை வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்றிருந்தேன். அப்போது நான் கல்வெட்டியல் பட்டயப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். பயிற்சியின்போது மாணவர்கள் ஓர் ஆய்வேட்டினை அளிக்க வேண்டும். அதற்கு எங்கள் ஊரையே எடுத்துக்கொண்டிருந்தேன். சமணப் பள்ளி இருக்கும் வரலாறு கொண்டது எங்கள் ஊர். சம்பகலட்சுமி தென்னிந்தியச் சமணம் பற்றி எம்.லிட் முடித்திருந்தார். அதனால்தான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவரிடம் அந்த ஆய்வேடு இல்லை. இருப்பினும் அந்த ஆய்வேட்டில் உள்ள செய்திகளை விரிவாகக்கூறினார். அந்தச் செய்திகள் எனக்குப் பயன்பட்டன.

சங்க கால ஆய்வு: பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தை விட்டுடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். அந்தக்காலகட்டத்தில் அவருடைய ஆய்வியல் நெறிமுறையில் மாற்றம் நிகழ்ந்தது. சமூக வரலாற்றுப் பின்னணியில் அவருடைய ஆய்வுகள் நிகழ்ந்தன. 1980களில் வெளிவந்த Trade Ideology and Urbanization’ என்கிற அவரது நூல், சங்க கால அரசியல் பற்றிய மிகவும் அரிய ஆய்வுரையைக் கொண்டது. இவ்வுரை ஆலமர வித்து போன்றது. சங்க காலத்திலிருந்த அரசு பற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. அக்காலத்தை அரசு உதயகாலம் என்று அரசு ஆக்கத்துக்கு முற்பட்ட நிலை (Pre State) என்றும் பலவாறாகக் கருதப்பட்டுவந்தது. ஆனால், சம்பகலட்சுமி இதை வேளாட்சி (Chiefdom) என்று கருதினார். வேந்தரும் ‘Chiefdom’ என்று கருதும் நிலையிலேயே இருந்தார்கள் என்பது அவர் கருத்து. சங்க கால அரசியல் மெய்யியல் பின்புலம் எப்படியிருந்தது என்பது பற்றியும் இவர் ஆராய்ந்துள்ளார்.

2011ஆம் ஆண்டு ‘Religion, Tradition, and Societies Pre Colonial South India’ என்கிற நூல் அவரால் வெளியிடப்பட்டது. இந்த நூல் இடைக்கால மக்கள் வாழ்வில் சமயம், பக்தி இயக்கம் ஆகியவை மக்களை ஒன்றிணைக்க எடுத்துக்கொண்ட முயற்சியைப் பற்றி விரிவாக ஆய்வுசெய்கிறது. பக்தி இயக்கம் பல படிநிலையில் நிலைபெற்றிருந்த சமூகத்தை, ஒரு சமயத்தின் கீழ் கொண்டுவந்து அரசுக்குப் பணிந்துசெல்ல வழிசெய்தது. அவர்கள் மக்கள் பாடல் வடிவங்களைச் செய்யுளாக்கிமக்களுக்குப் புரியும் வகையில் கொண்டுசென்றனர். அதனால் பக்தி இயக்கம் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. தென்னிந்தியாவில் ‘மட்டுமின்றி வட இந்தியாவிலும் செல்வாக்குப் பெற்றது. இந்த நிலையைப் பற்றி ரொமிலா தாப்பர் கூறும்போது ‘பக்தி இயக்கம் வட இந்தியாவுக்குத் தென்னிந்தியா அளித்த கொடை’ என்று கூறுவார். பக்தி இயக்கம், சைவம், வைணவ சமயங்கள் ஒன்றுபட்ட சமூகத்தைக் காண விழைந்தது. இந்த இயக்கம் வெற்றியும் பெற்றது. இந்த நிகழ்வுகளைச் சம்பகலட்சுமி ஆழமாக ஆய்வுசெய்துள்ளார்.

முன்னோடி முயற்சி: அவருடைய தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பினைப் பின்னர் பெற்றேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய
நிறுவனம் கல்வெட்டு அகராதி ஒன்றை உருவாக்க நிதிநல்கை அளித்தது. அந்தப் பணி சம்பகலட்சுமி தலைமையில் நடந்தது. அவருக்குக் கீழ் பேராசிரியர் ப.சண்முகம், முனைவர் பா.ரா.சுப்ரமணியம் ஆகியோர் பணியாற்றினர். நானும் என்னுடைய மாணாக்கர்களும் தொகுப்பாளர்களாகப் பணியாற்றினோம்.
இந்த அகராதி மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது (கல்வெட்டு சொற்களின் பொருட்புலம்). இதுவரையில் வெளியிடப்பட்ட கல்வெட்டு அகராதிகளை மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகராதி சமயம், வரலாறு, சமூகம், பொருளியல் ஆகிய உள்பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு தலைப்பின் கீழும் தொகுக்கப்பட்ட சொற்கள் தனித்து வைத்துப் பார்க்கப்படுவதால் தெளிவான பொருளைப் பெறமுடிகின்றது.

சம்பகலட்சுமி இந்த அரை நூற்றாண்டில் பல்வேறு தேசியக் கருத்தரங்குகள், மாநிலக் கருத்தரங்குகள், பன்னாட்டுக் கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறப்பான ஆய்வுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவர் பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

இந்த நூல்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது நினைவுகூரத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆய்வறிஞர்கள் பலரது உண்மைத் திறமும் பெருமையும் நாம் முழுமையாக உணராத ஒன்று. அந்த வகையில், பொது சமூகத்தின் வெளிச்சம் படாதவராகவே சம்பகலட்சுமி இருந்தார். அதேநேரம், வரலாற்று ஆய்வுப்புலத்திலும் ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் அவரது பங்களிப்பு முன்னுதாரணம் இல்லாதது.

– ர.பூங்குன்றன் தொல்லியல் ஆய்வாளர்

 

==========

வணிகம் கருத்தியல் நகர்மயம் – தென் இந்தியா: கி.மு.300 முதல் கி.பி.1300 வரை

ஆசிரியர்: ஆர். சம்பகலக்ஷ்மி
தமிழில்: வேட்டை எஸ். கண்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்

https://www.heritager.in/shop/trade-ideology-and-urbanization-south-india-300-bc-to-ad-1300-tamil/

#Champakalakshmi