மரபு கட்டடக்கலைஞன் #2, லாரி பேக்கர்

அந்த காலகட்டத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக் கட்டுமான துறையில் புதிய கட்டுமான பொருட்களின் வருகை மக்களின் வீடு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனப் பலரும் நம்பினர். அதாவது புதிய தொழில்நுட்பங்களும், அதிக தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடங்களும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற எண்ணம் பெரும்பாலான கட்டிடக் கலை கலைஞர்களிடம் இருந்தது.

ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடுகளுக்கான தேவைகள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அதிகமானது என்று தான் சொல்ல வேண்டும். வீடு எனும் அமைப்பை அரசாங்கமும், கட்டிட துறை அமைப்புகளும் பெரும்பாலும் வியாபார நோக்கோடு அணுகினர். அதை ஒரு வியாபாரப் பொருளாகவும் அதிக அளவில் அதை உற்பத்தி செய்யவும் முயன்றனர். பல புதிய தொழில்நுட்பங்கள் இந்த காலகட்டத்தில் வந்தாலும் அவை அனைத்தும் பயன்படுத்த முடியாத அல்லது புதிய எண்ணங்களுக்கு வழிவகுக்காத கைகளிலேயே சிக்கித் தவித்தன. பெரும்பாலும் இந்த வகையான வீட்டு வசதிகளில் அங்கு வசிப்பவர்களது  வாழ்வியல் முறையோ அல்லது வசதியோ  கண்டுகொள்ளப்படவில்லை. இன்று வரை நாம் அப்படியான வீடுகளை உலகம் முழுவதிலும் காண முடியும். அதிலும் வளரும் நாடான இந்தியாவில் அரசாங்கம் அனைவருக்குமான வீடு என்ற முயற்சியில் பல நகரங்களில் அது ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வீடுகளை,  இந்த முறையில் கட்டுகிறது. இதனால் அங்கு உள்ள இடங்களுக்கும்,  அங்குத் தேவைப்படுகிற இடத்திற்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி உருவாகிறது. இந்த இடைவெளியை இந்த புதிய கட்டுமான தொழில் நுட்பங்களால் நிரப்ப முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

அதிக அளவில் வீடுகளைக் கட்டுதல், மக்களின் வாழ்க்கையை தரத்தை உயர்த்துதல் போன்றவை இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றது. ஆனால் அங்கு வாழும் மனிதர்களின் மனநிலை, அவர்களின் பழக்கவழக்கங்கள், அந்த வீடுகளின் அமைப்பைத் தீர்மானிக்க முடியவில்லை.இதனால் அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய வாழ்வியல் முறையிலிருந்து அவர்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத, அவர்களின் தன்மையை வெளிக்காட்டாத கட்டிடங்களுக்குள் அவர்கள் திணிக்கப்பட்டார்கள். இது அவர்களின் மனங்களில் மிகப்பெரிய  தாக்கத்தை உண்டாக்கியது.

இங்குதான் பேக்கர் வேறுபட்டிருக்கிறார். இந்த புதிய கட்டமைப்பு முறைகளிலிருந்து அவர் வடிவமைக்கும் கட்டிடங்கள், அங்கு வாழும் மனிதர்களை சார்ந்தும், அவர்களின் பண்பாடுகளைச் சேர்ந்ததாகவும், அவர்களின் வாழ்க்கையில் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு இடமாகவும் வீடுகள் இருக்கவேண்டும் என எண்ணினார். பேக்கர் அவர்களின் கட்டிடங்களைப் பார்க்கும்பொழுது உலகின் பல்வேறு இடங்களில் அப்போது கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை மறு ஆய்வு செய்திருக்க வேண்டிய அவசியத்தை உணர முடியும். 1960களில் மொத்த உலகமும் ஒருவகையான கட்டிடக்கலையைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அதை விடுத்து விட்டு சாதாரண மனிதனும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய வீடுகளை பேக்கர் அமைத்துக் கொண்டு இருந்தார்.உயர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தாலோ  அல்லது புலம் பெயர்ந்து வேறு ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கோ வீட்டு வசதி செய்து தர முடியாமல் பல அரசாங்கங்கள் தவித்து வந்தனர். உலகின் சில பகுதிகளில், இந்தியாவில் பேக்கர் என்ன செய்து கொண்டிருந்தாரோ,  அப்படியான கட்டிடங்களை பிற கட்டிடக்கலை கலைஞர்களும் வடிவமைத்துக் கொண்டு இருந்தனர். அவர்களில் சிலர் ஜான் டோனர் மற்றும் ஹஸன் பார்த்தி.

 

எப்படி உலகம் முழுவதும் புதிய கட்டுமான பொருட்கள், அதிகமான வீடுகள் என்ற கருத்துக்களின் பின் சென்றதோ  அதைப்போன்றே இன்னொருபுறம் பழைய கட்டுமான கொள்கைகளை எடுத்துக்கொண்டு புதிதாகச் சந்தையில் வந்துள்ள பொருட்களைப் பயன்படுத்தி நமது தேவைகளுக்கு ஏற்ப நம் வீடுகளை அல்லது கட்டிடங்களை வடிவமைக்கும் முறையும் நடந்து கொண்டிருந்தது இதை ” contemporary vernacular” என அழைக்கிறோம். அதிகப்படியான அலங்கார கலைகளை விடுத்து, தேவைக்கு என ஒரு வீட்டைக் கட்டும் பொழுது அதில் பொருளாதார நெருக்கடி நிலை குறைத்து, தொழில்நுட்ப வளர்ச்சிகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டு மனிதர்கள் வாழத் தகுதியான இடமாக மாற்றிக் கொள்ளுதல் பேக்கரின் கொள்கையாக இருந்தது. இத்தகைய ஒரு முயற்சியை மேற்கொள்ள இரண்டு விஷயங்கள் அவசியமாகிறது; ஒன்று அதன் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளுதல், மற்றொன்று அதை எப்படி மாற்றவேண்டும் என்ற புரிதல். இதன் மூலமாக நாம் பாரம்பரிய கட்டிடக் கலையின் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறோம். ஆனால் அதை அப்படியே பின்பற்றுவதில்லை.

” கான்கிரீட் சிமென்ட் கலவை” இந்த புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய கட்டுமானப் பொருளாகவோ இருந்தபொழுது பேக்கர் அதன் அதிக கனமில்லாத தன்மைக்காக நாட்டு ஓடுகளை அதனோடு சேர்த்துப் பயன்படுத்தினார். அதேபோலவே சுவர்களுக்கு செம்பறாங்கற்களும், செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. அந்த கட்டுமானத்திற்கு எங்கு, எந்த கல் தேவைப்பட்டதோ  அது பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் நம் பாரம்பரியம் பின்பற்றப்பட்டதாயும், புதிதாக நமக்குக் கிடைக்கப்பட்ட தொழில்நுட்ப துறையில் முன்னேறிய  கட்டுமான பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளும் பொழுது நம் தேவைகளைச் சரியாகப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். உலகின் பல மூலைகளில் நடைமுறையிலிருந்த கட்டிடக்கலை முறையிலிருந்து அவர்களின் கட்டிடக்கலை பெரிதும் மாறுபட்டு இருந்தது.

 

 இந்தியாவிலேயே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களும், அதற்கு பிறகான கார்பூசியர் அவர்களின் கட்டிடங்களும் பெரிதளவு  மக்களைத் தற்கால கட்டிடக் கலை அமைப்பை நோக்கி ஈர்த்தது எனலாம். ஆனால் இந்தக் கட்டிடங்கள் எவற்றிலும் இந்திய தன்மையோ, இந்தியாவின் வரலாற்றைப் பிரதிபலிக்கக் கூடிய அமைப்புகளோ அல்லது இங்கிருக்கும் சூழலியல் பிரச்சினைகளை மையப்படுத்திய கட்டிட மாற்றங்களோ எதுவும் வரவில்லை. ஒரே தன்மையான கட்டிடங்களை பல்வேறு இடங்களில்,பல்வேறு கட்டிடக் கலைஞர்கள் கட்டுவதைக் காணமுடிந்தது. அவர்கள் அந்த அமைப்பின் வரலாற்றைப் பேசினார்களே அன்றி கட்டிடக் கலையின் வரலாற்றைப் பேசவில்லை.  அதிக அலங்காரங்கள் செய்யப்பட்ட அடித்தளம் அல்லது வளைவு, வெளித்தோற்றத்திற்கு மட்டும் காட்டப்படும் தூண்களின் அலங்காரங்களும் வரலாற்றை நினைவுபடுத்துவதாக எண்ணப்பட்டது.  ஆனால் பாரம்பரிய முறையில் இயற்கையோடு சேர்ந்த வாழ்வியல் இடங்கள் முக்கியமானதாக கருதப்படவில்லை.

 

இந்த புதிய கட்டுமான முறையில் கட்டப்படும் கட்டிடங்கள் அதற்கான ஒரு தன்மையைக் கொண்டிருக்கவில்லை. மேலும் அது இடம், மக்கள், அவர்களின் வாழ்வியல் அல்லது அது அமைந்திருக்கும் இடத்தையோ,  சமுதாய பண்புகளையோ  வெளிப்படுத்தவில்லை.  அதைப் போலவே அந்த கட்டுமானத்தின் அமைப்பு வானிலை மாற்றங்கள், அங்கு இருக்கும் மரங்கள், இடம், மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் அமைக்கப்பட்டிருந்தது. இம்முறை மனிதனை இயற்கையிடம் இருந்து தூர தள்ளி வைக்கும் ஒரு முயற்சியாகவே பேக்கர் அவர்கள் பார்த்தார். அப்படியான இடங்களில் பேக்கரால் கட்டப்பட்ட ஒரு வீடு அதன் சுற்றுப் புறத்திலிருந்து மிகுந்த வேறுபட்டிருந்தது.

 

பேக்கர் அவர்கள் வெளிநாட்டுக் கட்டிடக்கலை அமைப்பை இந்திய கட்டிடங்களின் மேல் திணிப்பது இங்கிருக்கும் பொருளாதார நிலையை மேலும் தொய்வடையச் செய்யும் என்று எண்ணினார். அவர் கட்டிடம் ஏதாவது ஒரு வகையில் அது இருக்கும் இடத்தின் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அது கட்டுமான பொருளாகவோ,  கட்டிடங்களை வடிவமைக்கும் முறையோ அல்லது கட்டும் முறையோ ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஒவ்வொரு கட்டிடமும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும் என்பதைத் தீர்மானமாக வைத்திருந்தார்.

 

  2000 ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை ஒரு பில்லியின் அளவை தாண்டும்.‌ அப்போது குறைந்தபட்சம் அரை மில்லியன் மக்களுக்கு  அரசாங்கம் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டிய ஒரு சூழலில் இருக்கும். ஒரு சமூகம் நன்றாகச் செயல்படப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத் துறை சார்ந்த கட்டிடங்களும் தேவைப்படும்.  அப்போது கட்டிடக்கலை துறை சமுதாய நோக்கோடு பல முடிவுகளை எடுக்க வேண்டி வரும். அதற்கான முன்னேற்பாடாக இப்பொழுது  நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் கூடிய கட்டுமான பொருட்கள் மற்றும் மக்களின் வாழ்வியல் பற்றிய புரிதல்களை மேம்படுத்திக் கொள்ளும் பொழுது இந்த பிரச்சனையை எளிதாகச் சரி செய்ய முடியும்.

 

எந்த ஒரு சமுதாயத்திலும் மாளிகைகளும், தொழில்முறை சார்ந்த கட்டிடங்களும், சமுதாயக் கூடங்களும் அதிகப் பணம் கொண்டவர்களால் கட்டப்படும். ஆனால் அவற்றின் அளவு சாதாரண மக்களின் வீடுகளை ஒப்பிடும்போது குறைவானதாகவே இருக்கும். ஒருவேளை கட்டிடக்கலை ஒரு இடத்தின் பாரம்பரியத்தைச் சொல்லும் தன்மையை இழந்துவிட்டால் கட்டிடக்கலையில் கலைஞர்கள் இந்த சூழலியலுக்கு பெரும் பாதிப்பையும், ஏற்கனவே எங்கோ பழக்கத்தில் இருக்கும் கட்டுமான பாரம்பரியத்தையும் மாற்றியவர்கள் ஆவார்கள். அதிலும் இந்தியா போன்றதொரு நாட்டில் இது பெரும்பான்மையாக நடந்தது, ஏனென்றால் புத்தகங்களும், மாதாந்திர இதழ்களும் இந்த புதிய தொழில்நுட்ப கட்டிடங்களையும் கட்டுமான பொருட்களையும் பற்றியே அதிகம் பேசியது.   கலைஞர்களைப் பற்றியோ,  அவர்கள் உருவாக்கிய கட்டுமானங்களைப் பற்றியோ  பேசவில்லை. மேலும் இந்தியாவின் தன்மைக்கு ஏற்பதுவும், இங்கு வாழும் சாதாரண மனிதர்களின் வாழ்வியலைப் புரிந்துகொண்டும், அவர்களுக்கான அடையாளங்களை உருவாக்கவும் கட்டிடக்கலை முனையவில்லை.  ஒரு வீடு என்பது ஒரு சாதாரண மனிதனின் அடையாளம் என்பதை பேக்கர் திரும்பத் திரும்ப அவர் கட்டுமானங்களில் வெளிப்படுத்த முனைந்தார். 

#கலைஞன்

 மேற்கத்திய நாடுகளில் புதிய கட்டிடக் கலையைப் பாணிகளை தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் தீர்மானித்தன. அதிகப்படியான கட்டுமான பொருட்களை உருவாக்குவதில் தொழிற்புரட்சி மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறது. அதனால் அவர்களின் கட்டிடக்கலையியல் கலைஞர்கள் அவர்களுக்கு கிடைத்த கட்டுமான பொருட்களையும், வாடிக்கையாளர்களின் தேவையையும் மாற்றம் செய்துகொண்டு பல கட்டிடங்களைக் கட்டி முடித்தனர்.

அதேபோல எங்குக் கட்டிடக்கலை மாற்றத்தைப் பொருளாதார மற்றும் சமூக அமைப்புகள் ஏற்றுக் கொள்ளவில்லையோ அங்குக் கட்டிடக்கலையில் கலைஞர்கள் பல்வேறு விதமான கொள்கைகளை நிலைநிறுத்தி தங்களுடைய பயிற்சியை முன்னெடுத்துச் சென்றனர். அவர்களின் பல கட்டிடங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த கோட்பாடுகளை மேற்கோள்காட்டி இது இதைத்தான் வெளிப்படுத்துகிறது என்று கூறி  தங்களை பெரும் படைப்பாளிகளாகக் காட்டிக் கொண்டார்கள்.

 

இதற்கு மாறாக, பாரம்பரிய கட்டிடக்கலை அது அமைந்திருக்கும் இடத்தையும், பழக்கவழக்கங்களையும், நெடுநாட்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டதுமாக ஒரு கொள்கையைக் கொண்டிருந்தது. அதேபோல சமூக, பொருளாதார நிலைகளையும் அது வெளிப்படுத்தியது. வெறும் கொள்கைகளும்,  கோட்பாடுகளும் அதன் தன்மையாக இல்லை. கிடைக்கப்பெறும் கட்டுமான பொருட்களும், அதைக் கட்டும் முறைகளும் சொற்பமாகவே இருந்தது. ஆனால் அதை உருவாக்கிய கலைஞனின் அனுபவம் மிகப்பெரியதாக இருந்தது.

 

அதனால் ஒருவன் தன்னை கட்டிடக் கலை- கலைஞன் என்று நிலை நிறுத்திக் கொள்ள முடியுமென்றால், ஏற்கனவே உள்ள கோட்பாடுகள் கொள்கைகளிலிருந்து வெளியேறி, அவனுக்கான பாதையை அமைத்துக் கொள்ள முடியும். அவன் கட்டும் கட்டிடங்கள் அந்த இடத்தின் தன்மையைப் பிறருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைக்கப்படும். கட்டிடக்கலை என்பது மிக அழகிய முறையில் பாரம்பரியத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் விஷயமாக இருக்கும்.

 

அந்த வகையில் லாரி பேக்கர் அவர்கள் தாம் இருந்த இடங்களிலெல்லாம் ஓடுகள் வேய்ந்த கூறைகள், சூரிய தடுப்புக்காக உருவாக்கப்பட்ட செங்கல் சுவர்கள் போன்றவற்றை அவரின் அடையாளமாகப் பின்பற்றினார். உள்ளூர் கைவினைத் தொழில், பாரம்பரியம், பொருளாதாரம் போன்றவற்றை வெளிக்காட்டக் கட்டிடக்கலையை ஒரு தளமாகப் பயன்படுத்தினார். அவர் தன்னை ஒரு கைவினை கலைஞனின் இடத்தில் பொருத்திப் பார்த்து அதன் தன்மையைப் புரிந்து கொண்டார் . முன்பெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கலையை கற்று வைத்திருந்தனர்.  அதை எப்படி அவர்களின் கட்டிடங்களுக்குள் கொண்டு வருவது என்பதை அவர்களே தீர்மானித்தனர். அது சூரிய ஒளியை கட்டிடத்திற்குள் கொண்டுவர அமைக்கும் சுவர் ஆகட்டும் அல்லது அலங்காரத் தூண்கள் போன்றவையாகட்டும்.  அதைப் போலவே பேக்கரும்  இந்த பொருட்கள் எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதை தீர்மானித்தார்.  அதன் வீட்டின் உரிமையாளர் எது எப்படி எங்கு வரவேண்டும் என்பதைத் தீர்மானித்தார்.

 

ஒரு ஜன்னலோ, தூணோ,  எப்படி வரவேண்டும் என்பதைத் தீர்மானித்து,  அவ்வூரின் கட்டுமான பொருட்களின் நிலையை ஆராய்ந்து, எதில் செய்வது உபயோகமாகவும் விலை குறைவாகவும் இருக்குமோ, அதில் செய்யப்பட்டது.  அங்கிருந்த நிலப்பரப்பும், குறைவாகக் கிடைத்த  கட்டுமான பொருட்களின் நிலையையும்  கருத்தில் கொண்டாலும்,  பேக்கருக்கு அங்குக் கிடைத்த மனித சக்தி பெருமளவு அவர் வேலையை முடிப்பதற்கு உதவியாக இருந்தது.  அவர் வரையில் இந்தியக் கட்டிடக்கலை மரபு என்பது உள்ளூர் பொருளாதார நிலையையும்,  மக்களின் வாழ்வியல் பழக்கவழக்கங்களையும் பொறுத்தே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஒரு வடிவமைப்பாளராக, கட்டுமான ஒப்பந்ததாரராக, கலைஞனாக, கட்டிடக்கலை துறை நிபுணராக பேக்கர் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். அதேநேரத்தில் இந்திய நகரங்கள் வேறு மாதிரியான ஒரு கட்டிடக்கலை பாணியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அது பெரும்பாலும் அதிக அலங்காரங்கள் செய்யப்பட்ட,  முன்புற தோற்றங்களில் மேற்கத்திய நாகரிகங்களை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடக்கலை தொழில்நுட்பங்களைக் காண்பிக்கக் கூடிய பாணியாக இருந்தது. அதில் அலங்காரங்கள் இருந்தனவே தவிர அது இந்தியாவின் எந்த ஒரு தன்மையையோ, வரலாற்றையோ  இங்கிருக்கும் பொருளாதார, கலாச்சார கொள்கைகளையோ பிரதிபலிக்கவில்லை. பேக்கரின் கட்டிடங்கள் ஒரு இடத்தின் பாரம்பரிய மற்றும் பொருளாதார வரலாற்றை வெளிப்படுத்தியது. பாரம்பரிய முறையில் உள்ள முற்றம், மறைப்பு, ஜன்னல்கள், ஜாலிகள் முதலியவற்றை பேக்கர் அவர்களின் கட்டிடங்களிலும் நாம் காணமுடியும்.  அவர் ஒரு வினையாக்கியாக இந்த முயற்சிகளில் காணப்படுகிறார்.  பின்னால் வரப்போகும் கட்டிடக்கலையில் கலைஞர்களை இது ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

 கேரளத்தின் வெவ்வேறு ஊர்களில் அவர் கட்டிடங்கள் கட்டும் பொழுது, அந்த ஊரில் பயன்பாட்டிலுள்ள ஓடுகளையும், முற்றத்தின் அமைப்பையும், அங்கு இருக்கும் வானிலை மாற்றங்களையும், அதன் சூழலையும் கணக்கில் கொண்டு அவர் வடிவமைத்தார். இதற்கு அவர் தொடர்ந்து செய்துகொண்டு இருந்த ஆராய்ச்சிகளும், அதிலிருந்து அறிந்து கொண்டதைச் சரியாகக் கட்டிடங்கள் வடிவமைக்கும் பணியில் உபயோகித்தும் ஆகும்.

 

ஒரே கோட்பாட்டையும், பாரம்பரியத்தையும் பின்பற்றும் எண்ணம் கொண்டு அதைத் தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து, அதிக அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது பேக்கரின்  கோட்பாடு.  பல கட்டிடங்களை அமைத்த போதும் சில கோட்பாடுகளை அந்த கட்டிடம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டார். மாறிவந்த கட்டிடக்கலையில் மரபில் பாரம்பரியத்தையும் புதுமையையும் புகுத்தி அவருக்கான பாணியை பேக்கர் உருவாக்கியுள்ளார். 

 

Leave a Reply